TAMIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TAMIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 11, 2013

பட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் !

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன ?
( நவம்பர் 4 - 2013 தி இந்து நாளிதழில்ஜெயமோகன் எழுப்பிய வினாவின் எதிரொலி  )

கூடுவிட்டு கூடு பாயும் வித்தை 

வில்லவன் கோதை

இந்த ஜெயமோகனின் அபத்தமான ஆலோசனைகளை தமிழ் இந்து பத்திரிக்கை  பிரசுரித்து  தன்னிடம் திறன் மிக்க ஆசிரியர்குழுவொன்று   தற்போதைக்கு இல்லை என்ற தகவலை பறையடித்து சொல்லியிருக்கவேண்டாம்.
அவர் எழுப்பிய ஆலோசனை  விவாதத்துக்குறிய விஷயமே  அல்ல.  அடிப்படையிலேயே  உதறத்தகுந்தவை.
எப்போதுமே படைப்பாளிகளைக் காட்டிலும் பதிப்பாளர்கள் அடிப்படையில் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தாண்டி எந்த  அபத்தங்களும் இப்படி அச்சுக்கு வந்ததில்லை.
முன்பெல்லாம் பத்திரிக்கை ஆசிரியர்களும் பதிப்பாளர்களும்    பிரசுரிக்கப்பெறும் விஷயங்களில் எப்போதும்  தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒன்றிரெண்டு களவாடப்பட்ட படைப்புகள் கூட அன்றைக்கெல்லாம் அத்தனை எளிதாக அச்சுக்கு வந்துவிட முடியாது.
இன்று நிலமை அப்படியில்லை.
பத்துப்பதினைந்து நூல்கள் எழுதி பதிப்பித்தவர்கள் அனுப்புகிற சரக்குகளை பிரித்துப்பார்க்க   அலுப்புற்று நேராக அச்சுக்கு அனுப்புகிற பத்திரிக்கைகளும்  இருக்கிறது.ஒருசில நூல்கள் எழுதியதாலேயே அவர்கள் அந்த தகுதியை பெற்றுவிடுகிறார்கள்.
பிரபலமான எழுத்தாளரின் லாண்டரி கடை கணக்குகள்கூட  அச்சுக்குப்போன கதையை சுஜாதா சொல்லி கேட்டிருக்கலாம்.
இந்த யோசனைகளை உதிர்த்த ஜெயமோகன்  -
நிரம்ப உழைப்பவராகவும்  எதையாவது மிகுதியாக வாசிப்பவராகவும் எத்தகைய கருத்துக்களுக்கும் உடனடியாக பதிலளிப்பவராகவும் நட்புக்கினியவராகவும்  நான்  அறிந்திருக்கிறேன்.
 வளைந்து நெளிந்து செல்லும்அருவியைப்போன்ற வேறுபட்ட நடையில் எம் தமிழை கையாளுவதை கண்டுருக்கிறேன்.
இன்றைக்கு  எழுதுகிற அத்தனை நவீன எழுத்தாளர்களின் ஆரம்பப் பாடசாலையாயிருந்த திராவிட இயக்கங்களை அவர்களைப்போலவே சபிப்பவராகவும்
சவமேடைகளில்கூட சம்மந்தப்பட்டவரிடம் காணநேர்ந்த குற்றங்குறைகளை கருத்துத் தளங்களில் நின்று துணிவோடு பேசுபவராகவும்  பார்த்திருக்கிறேன்.
அண்டைமாநிலத்தின் ஓரத்தில் அவர் வாழுகின்ற வாழ்க்கை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த இரட்டை குடியுரிமை அவர் பேச்சிலும் எழுத்திலும் ஊடுருவிக்கிடப்பது எனக்குத் தெரிகிறது..
இவருடைய  எழுத்தின் வீச்சுக்கு  நான் நேசிக்கிற தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ  இன்னும் தேசபிதா காந்தியோ விலக்கில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.
ஆனால் -
மேற்கிளையில் அமர்ந்து அடிக்கிளையைக்கூட அவரால் வெட்ட முடியும் என்பதை  இப்போதுதான் பாற்கிறேன்.
இப்படியொரு அபத்தமான ஆலோசனைகள் பாரம்பரியமிக்க இந்துவின் பார்வையில் எப்படி நழுவிற்று.
நினைத்தாலே நன்றாக சிரிக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.
ஒருவர்  ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் புத்தகங்களின் படைப்பாளி.
இன்னொன்று இன்றைய தமிழ் வாசகர்களின் பரவலான எதிர்பார்ப்பைப் பெற்ற  பாரம்பரியம்மிக்க தி இந்து  நிறுவனம்.
இருவருக்குமே ஒருவகையில் செலவுக்கு கைகொடுக்கும் சமாச்சாரம்.. சோறுபோடும் மொழி என்று சொல்லமாட்டேன்.
இப்படியொரு கூற்றைக்கூட  விவாதிக்கவேண்டிய கருத்தென்பது எத்தனை அபத்தம்.
மொழி உயிரென்றால் எழுத்துரு உடலல்லவா. எழுத்துரு இருந்தால்தானே இலக்கியமும் இலக்கணமும்  வரும். இலக்கணமும் இலக்கியமும் இருந்தால்தானே மொழி தொடர்ந்து  வாழும்.
துருக்கி மொழியும் மலயா மொழியும்  முறையான எழுத்துக்கள் அற்றபோது  கூடுவிட்டு கூடு பாய வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிற்று.   துருக்கி மொழியும் மலாய் மொழியும்  எடுத்த நிலைப்பாடு தமிழுக்கு தேவையற்து. உறுப்புக்கள் இல்லாதவனுக்கும்  உறுப்புக்களை இழந்தவனுக்கும்தாமே மாற்று உறுப்புக்கள் பொருத்தப்படுகிறது.
ாங்கிலத்தில் இப்போது இருக்கிற எழுத்துருக்கள் ஆங்கிலத்துக்கே சொந்தமற்றபோது   அதற்கு மாறச்சொல்வது  எத்தனை பேதமைதானே.
எம்மொழியும்தோன்றாத காலத்தே இலக்கிய இலக்கணங்களோடு வாழ்ந்து ஒவ்வொரு கால கட்டங்களிலும்  தன்னைத்தாதானே செதுக்கிக்கொண்டு இன்றும் சீரிளமையோடு நிற்கின்ற செம்மொழியல்லவா எம் தமிழ்.
எம் தமிழோடு   கலக்கும் தைரியம் இன்றுவரை வேறெந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை.`
2000 ஆண்டுகளுக்கு மேலாக ஏரக்குறைய சீரான எழுத்துருக்களுடன் எம்மொழியின் கலப்பின்றி  தனித்து நிற்கும்  எம்மொழியா கூடுவிட்டு கூடு பாயவேண்டும்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து வெளியில் காணப்பட்ட கல்வெட்டுக்கள்  சொன்னதென்ன.,
அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பெற்ற  பிராமி கல்வெட்டுகள்  
அதைத்  தொடர்ந்த பௌத்தர்களின்   தாக்கம்  அத்தனையும் கடந்துதானே எம்தமிழ் வந்திருக்கிறது.
ப்ராமி முறையில்காணப்பட்ட எழுத்துருக்கள் தமிழ் ஒலிகளை ஏற்க இயலாமற் போனபோது பிறந்ததுதானே தமிழ் ப்ராமி ..
அடுத்து
கல்வெட்டுப்பதிவுகளைத்தாண்டி ஓலைகளில் எழுதப் பட்டபோது தமிழ் வட்டெழுத்து முறைக்கு மாறுகிறது.
ஏரக்குறைய பதினோராம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து முறை முற்றிலுமாக ஒதுக்கப்பெற்று பல்லவர்களால் மேலும் சீரமைக்கப் பெறுகிறது.பல்லவர் காலத்திலேயே இன்றையதமிழின் நெருங்கிய தோற்றத்தை எம்மொழி பெற்றுவிட்டது  எம்மொழிக்கும் கிட்டாத பேரங்கீகாரம் அல்லவா.
பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கிருத்துவமத பிரச்சாரத்துக்கு வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர்  அன்னை தமிழுக்கு பொட்டிட்டு ( எழுத்துருவுக்கு புள்ளி சேர்த்து  இலக்கணங்கள் தந்து ) அணிகலன் படைத்து அணி சேர்க்கிறார்.
உலகிலேயே எம்மொழிக்குமில்லாத வரலாறு கொண்ட , எம்மொழியிலும் காணக்கிடைக்காத இலக்கணங்களும் இலக்கியங்களும் நிறைந்த   தாய்தமிழை கற்பதற்கா எம்மக்கள் அல்லலுறுகிறார்கள்.
இன்றைய குழந்தைகளுக்கு இவை ஒரு பொருட்டே அல்ல.அவர்களின்  விரிந்த  பார்வைக்கு விருந்தளிக்க நவீன யுகத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன.அதனால் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அறிந்து கொள்கிற திறனும் கையாளுகிற நேர்த்தியும் மிகுதியாக நம் குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்.
அவர் சொல்லுவது போல இரண்டு எழுத்துருக்களைக் கற்க அவர்களுக்கு தேவையான இரண்டு மூன்று வருடங்கள்  அவர்கள் கல்வி வாழ்க்கையில் மிகமிகக் குறைவானவையே. நெடுங்காலம் மும்மொழியை கற்ற அனுபவமும் எம் குழந்தைகளுக்குண்டு. இன்றும் வேற்றுமாநிலங்கள் பலவற்றில் மூன்று மொழிக்கு குறைவின்றிதானே கல்வி கற்பிக்கப்படுகிறது.
மிருகங்களையும் பறவைகளையும் வித்தை என்ற இலக்குக்காக பழக்கியபின்  அவைகள் நிகழ்த்தும் சாகசங்கள் வியக்கத்தக்கவை.பிள்ளைப்பிராயத்தில் பயிற்றுவைத்தால்  குழந்தைகளும்  அப்படித்.தான்.
கற்பதில் சிரமமும் கையாளுவதில் சங்கடங்களும் ஏற்படும்போது  மொழியை மேலும்மேலும் சீரமைப்பது காலத்தின் கட்டாயம் .அதைத்தான் இதுவரை கண்டிருக்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் அது தவிற்க முடியாதவைதான்.ஆனால் இலக்குஒன்றாகத்தான் இருக்கும்
அப்படி வளர்ந்து வளர்ந்துதான் தமிழ்மொழி இப்போது கணினிக்குள்ளே நுழைந்திருக்கிறது.
பதிமூன்றாண்டுகாலம் ஆங்கிலத்திலேயே தமிழை தான் தட்டச்சு செய்த சாகசத்தை சொல்லும் ஜெயமோகன் ஒன்றை கவனிக்க வேண்டும். அது கணனிக்குள் தமிழ் கால் வைத்த காலம்.
தட்டச்சே அறியாத நான் இன்று அவர் பேசும் வேகத்தில் தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன்.இதைக்கற்க எனக்கு ஒருநாள்கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

ஒருவேளை ஜெயமோகன் கூற்று நிகழ்ந்து விட்டால்   குழந்தைகள் அவர் சொல்வதுபோல் வேகமாக வாசிக்கக்கூடும் ஆனால் அவருடைய படைப்புகளையோ  எம் கவிஞர்கள்  உணர்வுகளையோ அவை பிரதிபலிக்கக்கூடும் என்று தோன்றவில்லை.   இப்போதே இயல்பாக மொழிமாற்றம் செய்யப்பெற்ற எத்தனையோ இனிய தமிழ் நூல்கள்  உயிரின்றி உடலோடு உலாவுவது வெளிப்படை
என்னதான்  z h போட்டு எழுதினாலும் ழகரத்தை உச்சரித்தறியாதோர் பட்டியலில் நம் இனமும்  சேரும்.
பெரியாரை வெருப்பவர்கள்கூட மொழிக்கெதிராக முணுமுணுக்கும்போது  அவரை சேர்க்கத்தவறுவதில்லை.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வில் முன்னுரிமை கொடுத்தது உயர்வு தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கே. அவருக்கு மொழி அடுத்தபட்சமாகவே இருந்திருக்கிறது.
தமிழில் காணப்படுகிற எழுத்துகளின் எண்ணிக்கைய குறைத்து  எம்குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டுமென பெரியார் பேசியது உண்மைதான்.
அதை வலியுறுத்தவே  மொழியின் உடலையே மாற்றிய துருக்கி கமால் பாட்சாவை அவர்தான் நினைவூட்டினார்.
எழுத்துருவை இழக்கும்போது தமிழின் கதி  –
எண்ணி ப்பாற்கவே  ஏதோ விபரீதம் புலப்படுகிறது.
கூடுவிட்டு கூடு பாய்த்த பட்டி விக்ரமாதித்தன்  கதைகளை படித்தவர்கள் ஜெயமோகனின்  கூடுவிட்டு கூடு பாயும் யோசனைகளில் இருக்கும் விபரீதத்தை  உணரக்கூடும்.
இந்த ஆலோசனைகள்  அவர்  குறிப்பிட்டதைப்போல அபத்தமாகவும் அதீதமாகவும்தான்  இருக்கிறது. மேலும் யோசிக்க யோசிக்க  அது  நிரூபணமும் ஆகக்கூடும்.
எல்லா மாற்றங்களும்  முதலில் அபத்தமாகத்தான் தோன்றும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஜெயமோகன் தமிழும் ஆங்கிலத்தை மீறி சகல துறைகளிலும் ஒளிரும் என்பதை  ஏன் ஏற்கக்கூடாது.
கிளியின் உடலில் கூடு பாய்ந்த விக்ரமாதித்தன்  கிளியாக வாழலாமே தவிற விக்ரமாதித்தனாக  முடியாது.

________________________________________________________________________

இடுகை  0108
- வல்லமை   இணைய இதழ்

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

பாவேந்தருக்கு பிறந்த நாள் !


புரட்சி கவிஞர் பாரதிதாசன்
( 29 . 04 . 1891 -- 21 . 04 . 1964 )
புரட்சிக்கவிஞரின் பாடல்களை படிக்கும்போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன. உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது. படிக்கின்றோம் , பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல ; காலத்தையே மாற்றியமைப்பவர் ; புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம்கவிஞர் உயர்கவி , உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி , எளிய மக்களின் தசையையும் பிய்க்கும்படியான புரட்சிக்கவிஞரின் புதுக்கவிதைகளைப் படிக்க வேண்டும் , பாட வேண்டும் , பயன் பெற வேண்டும் ; புதுக் கவிதைகளைப் புரட்சிக்கவி போல் பாடிட முன் வரவேண்டும் .
                                                         ---  பேரறிஞர் அண்ணா 1945
இடுகை 0051

புதன், ஜனவரி 26, 2011

எழுத்துச் சுரண்டல் !

                                பாண்டியன்ஜி
கடந்த 17 ஆம் தேதி முடிந்துபோன 34 வது சென்னைப்புத்தகக் காட்சியில் நான்கய்ந்து புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கினேன். பெரும்பாலும் உலக வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் புத்தகங்கள்தாம். இயல்பாகவே மண்ணின் சரித்திரங்களையும் மொழியின் எழுச்சியையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவனாகவே இருந்திருக்கிறேன்.புதினங்கள் மீது நான் கொண்டிருந்த மிகுதியான ஆர்வமே கூட என் ரசனைக்கு தலையாய காரணமாக இருக்கக்கூடும்.
நான் வாங்கிய நூல்களில் இரண்டு சென்னையைச்சேர்ந்த கிழக்கு பதிப்பகம் வெளியிட்டவை. இரண்டுமே நான் மிகுதியாக அறிந்து கொள்ள ஆவலைத்தூண்டிய தனிமனித சாகசங்களை அடிப்படையாக கொண்டவை.ஒன்றை ரைட்டர் முகிலும் மற்றொன்றை ரைட்டர் மருதனும் எழுதியிருந்தார்கள். ஏரத்தாழ 180 பக்கங்களில் எழுதப்பட்ட அந்த நூல்கள் இரண்டுமே என் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.   மிகுந்த எமாற்றத்தையே அளித்தது.இந்த நூல்கள் இரண்டுமே அயல் மொழிகளில் சுயமாக எழுதப்பெற்ற படைப்புகளின் மொழிபெயற்பாக இருக்கக்கூடும் என்றே எண்ணியிருந்தேன்.இந்த நூல்களைப்பார்த்த பிறகு படைப்பிலக்கியத்தில் தவறான ஒரு பாதை காட்டப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது போன்ற நூல்களை வேறு பல பதிப்பகங்களும் பதிப்பித்திருக்கக்கூடும்.
இந்த புத்தகத்தின் நான்காவது பக்கத்தில் பதிப்பு சார்ந்த தகவல்களுடன் வழக்கமாக அச்சிடப்பெரும் வாக்கியங்களும் இடம் பெற்றிருந்தது.

all wrights relating to this work rest with the copyright holder.except for reviews and
quotations,use or republication of any part of this work is prohibited under the copyright act,without the prior written permission of the publisher of this book

பெரும்பாலும் இது போன்ற மிரட்டல்கள் மற்றவர்களுக்குத்தான்.  மற்றபடி இதில் சொல்லப்பட்டநேர்மை நூலைப்படைத்த ஆசிரியற்கல்ல என்பதை அறிந்தே இருக்கிறேன். பக்கங்களைப் புரட்டி இறுதிக்கு வரும்போது.. அங்கேயும் சில சான்றுகள் தரப்பட்டிருக்கின்றன.   அதாவது அவர்
ஆக்கிய நூலுக்கு அடித்தளமாக அமைந்த இருபதுக்கு மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களின் பெயர்கள் அதன் சுய படைப்பாளிகளின் நாமத்துடன் தரப்பட்டிருந்தது.   இதுமட்டுமன்றி பல்வேறு 
இணையதள முகவரிகளும் இணைக்கப்பட்டிருந்தது.
முன்னால் தரப்பட்டிருக்கும் எச்சரிக்கைக்கும் இறுதியில் இணைக்கப்பெற்ற தகவல்களுக்கும் இடைப்பட்ட பக்கங்களில் படைப்பாளி கதை புனைகிறார். பின்னிணைப்பில் இடம் பெற்ற படைப்பாளிகள் எவரும் தம் வரிகளுக்காக ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது என்பதை ஆசிரியர்
நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
பல்வேறு நூல்களிலிருந்து தகவல்களைத்திரட்டி ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்ல எழுதப்பட்டு கல்லூரிகளிலும் ஆய்வரங்கங்களிலும் சமர்ப்பிக்கப்பெரும் ஆய்வுக் கட்டுரைகள் பற்றி கேட்டிருக்கிறேன்,
அதுமட்டுமன்றி..
ஒரு நூலின் பல்வேறு பகுதிகளை தனித்தனியாக பிய்த்தெடுத்து அணுவணுவாக ஆய்ந்து எழுதப்பெரும் திறனாய்வுக்கட்டுரைகளை கண்டிருக்கிறேன். 
சரித்திரத்தில் பதிந்துவிட்ட இரண்டொரு தடங்களைப்பற்றி கதைகள் புனையப்படுவதை படித்திருக்கிறேன்.
அயல் மொழியில் ஆக்கப்பெற்ற மொழிச்செல்வங்களை தன் மண்ணுக்கு கொணர வேர்கள் சிதையாமல் அசலுக்கு ஊறு நேராமல் மொழி பெயற்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.
அந்த வகையில் இந்த நூல்களை எந்த வகையில் சேர்க்கக்கூடும். இதுவும் ஒரு வகைச் சுரண்டலல்லவா.  மகாகவி பாரதி தன் கனவுகளில் ஒன்றாக உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அயல் மொழிச்செல்வங்கள் வேருடன் கொணர வேண்டுமென்பதும் ஒன்று.  அப்படிக் கொண்டுவருவது கஜினி முகமது போல் கெள்ளையடித்தல்ல என்பதை உணர வேண்டும். 
தமிழ்த்திரைப்பட உலகில் ஒருகாலத்தில் இது போன்ற வழிமுறை ஜெமினி பிக்சர்ஸ் மற்றும் தேவர் பிலிம்ஸ் நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தது. தனியொரு எழுத்தாளனின் கதையை படமாக்கும்போது என் கதை உன்கதை என்று வழக்குகளை வீணாக சந்திக்க நேருவதைத் தவிற்கவோ என்னவோ தாங்களே அய்ந்தாறு கதைசொல்லிகளை கதை இலாக்காவாக வைத்து கதைகளை உருவாக்கியதைக் கண்டிருக்கிறேன்.  இவ்விலாக்காகளின் கதையை எதிர்த்து எவரும் வழக்கு எதனையும் போடமுடியாமற் போனதையும் பார்த்திருக்கிறேன்.
வழக்கமாக உரையாடல்களில் வெளிப்படும் கருத்துக்களும் தின வார மாத இதழ்களில் பிரசுரிக்கப்பெரும் கூற்றுகளும் அழுத்தமான ஆதாரங்களைக் கொண்டவையல்ல.   அதே சமயம் அச்சிட்டு 
வெளியிடப்பெரும் நூல்களின் நிலை அப்படியல்ல.
நூல்களில் நிரம்பியிருக்கும் கருத்துக்கள் அதிகாரபூர்வமான ஆவணங்களாகவே கொள்வதற்கு சாத்தியமாயிருந்தது. அதற்கான மூலகாரணம் பதிப்பாளர்களின் மொழியறிவும் நேர்மைத்திறனுமே.
பெரும்பாலான பதிப்பாளர்கள் அன்நாளில் கேடு விளைவிக்கும் நூல்களுக்கும் திருடப்பட் எழுத்துக்களுக்கும் வாய்ப்பு வழங்கியதே இல்லை. புத்தகங்களின் தரம் காப்பாற்றப்பட்டே வந்திருக்கிறது.அதற்கான தகுதியும் திறனும் பெரும்பாலான பதிப்பாளர்கள் பெற்றே இருந்திருக்கிறார்கள்.ஆனால் இன்று ..
நூல்கள் சார்ந்த பரந்த அறிவும்,சமூகம் சார்ந்த கண்ணியமும் இன்றைய பதிப்பாளர்களிடம் காண்பது அறிதாகவே இருக்கிறது அல்லது அறிந்தே பெருவணிகம் கருதி மரபற்ற செயல்களை ஊக்கிவைக்கிறார்கள் என்றே கருதுகிறேன். ஓரளவு தமிழில் சுயமாக எழுதவும் கணிசமான ஆங்கில அறிவும் இருக்கிற போது இது போன்ற நூல்களை வெளியிட போதுமானது என்றே கருதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.
சமீபத்தில் இன்னொரு உரையாடலையும் படிக்க நேர்ந்தது.

நான் என்றுமே படைப்பாளிகளின் உரிமையில் குறுக்கிட்டதில்லை. ஒரு சமயம் பத்திரிக்கை நிறுவனமொன்றில் பணியாற்றியபோது இன்றைய சாகித்திய அகாதமியின் பரிசு வென்ற படைப்பாளி
நாஞ்சில் நாடனின் சிறுகதையை வாசிக்காமலேயே அச்சுக்கு அனுப்பி விட்டேன்.  அதற்காக அந்த நிறுவனத்தின் கடுமையான கண்டனத்துக்குள்ளாக நேர்ந்தது...

கவிஞரும் உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு மனுஷ்யபுத்திரனின் சுயவிமர்சனமே அந்த உரையாடல். வாசிக்காமல் ஒரு படைப்பை அச்சுக்கு அனுப்பியது எத்தனை பெரிய தவறு என்பது என்னால் உணர முடிகிறது.  படைப்பாளிகளின் படைப்புக்களில் குறுக்கிடுவதில்லை என்பது உயர்ந்த விஷயமே .  இருந்தபோதும் படைப்பாளிகளின் படைப்பு சுயமானதென்றும் கண்ணியமிக்கதென்றும் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்துக்கு ஊறு தராதவை என்பதும் படைப்பை படித்தறியும்போது மட்டுமே அறியமுடியும்.
நீங்கள் கொண்டிருக்கும் உயரிய நோக்குதான் சமீப காலங்களில் உயிர்மை இதழில் ஒருசில வக்கிரமான எண்ணங்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களை நுழைக்கிறது என்றே கருதுகிறேன்.
.......................................
இடுகை 0039 

வியாழன், டிசம்பர் 23, 2010

ஈரோட்டு வலைப்பதிவாளர் சங்கமம்

வாழ்த்தும் வேண்டுதலும் !

இன்னும் இரண்டே நாட்கள்தான் மிச்சமிருக்கிறது ! வருகிற டிசம்பர் 26 தேதி தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அந்த பகுதியைச் சார்ந்து ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் இணையத்தின் பதிவாளர்கள் அத்தனைபேரும் ஒன்று கூடி புதிய சங்கமம் ஒன்றை நிகழ்த்தப்போகிறர்கள். வலைப்பூ குழுமம் ஒன்றும் ஏற்படப்போகிறது. வலைபூ வளற்சிக்கும் இணையத் தமிழுக்கும் தடையாயிருக்கிற பெருங்கற்களை நாள் முழுதும் கூடி பொறுக்கப் போகிறார்கள். நினைத்தாலே நெஞ்சம் முழுதும் பூரிக்கிறது ! உண்மையிலேயே வலைப்பூக்களின் வசீகரத்தை உணர்ந்தவர்கள்தாம் இப்படி ஒரு பூரிப்பை உணர முடியும். என்னுடைய இயல்பான பூரிப்புக்கு காரணம் அது மட்டுமல்ல. என் கடந்த கால வாழ்வுக்கு ஈரோடு நகரமே ஆதாரமாய் இருந்திருக்கிறது.அந்த பசுமையான நினைவுகளை பின்னர் எழுதப்போகிறேன்.
நடக்கப்போகிற சங்கமத்துக்கு ஈரோட்டு பதிவாளர்கள் எப்போதோ தயாராகி விட்டதை ஈரோடு கதிரின் பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது. எத்தனை தூரம் விழுந்து விழுந்து ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து எழுதப்படும் பதிவுகளில் காண முடிகிறது. விழா நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வடிவமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளித்திருப்பதை காணும்போது சங்கமம் அடையப்போகும் சிகரத்தை இப்போதே பார்க்கமுடிகிறது. நாள் முழுதும் நிகழப்போகும் ஆய்வுகளுக்கிடையில் வயிற்றுக்கும் ஈய அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி பிரமிக்கத்தக்கதாய் இருக்கிறது. தொலைவிலிருந்து வரவிருக்கும் பதிவர்கள் வசதிக்காக பிரத்தியோக பதிவர்களை நியமித்திருப்பது திட்டமிடலின் சிறப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னையில் இதுபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த எடுத்துக்கொள்ளப்பட் முயற்சி
முளையிலேயே முறிந்து போனது ஒருவகைஏமாற்றமானதுதான். இதற்கு தலையாய கரணம் வலைப்பூக்களுக்கு உலகளாவிய அங்கிகாரமும் வானளாவிய சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமேதான்.
வலைபூ என்பது ஒரு எண்ணியலில் எழுதப்படும் நாட்குறிப்பே . அதில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். யாரையும் கட்டுப்படுத்தாது.-- என்ற போக்கில் ஒரு சக பதிவர் எழுதியதையும் படித்திருக்கிறேன்.
வலைப்பூ எண்ணியல் நாட்குறிப்பாக இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் எழுதலாம், நீங்கள் மட்டுமே படிக்கிற வரையில். அடுத்தவர்மேல் உரசாத வரையில்.நாட்குறிப்பு சி. பி. அய் வசம் சிக்காத வரையில். கட்டுப்பாடற்று பாய்வது காட்டாறு என்று கூரக்கேட்டிருக்கிறேன்.மனித இனம் அத்தகயதன்று. ஒருவகைக் கட்டுபாட்டுடன் சுதந்திரத்தை நுகர்வதே மனிதகுலத்தின் உயர்வு. ஒவ்வோரு தனிமனிதற்கும் தனித்தனியே சுய சிந்தனைகள் உண்டு.அவரவர் போக்கில் பயணிப்பதும் உண்டு.வானளாவிய உரிமை பெற்ற அத்தனை பதிவர்களையும் ஒரு கூண்டுக்குள் சிறையிடுவது என்பது ஊசி முனையில் ஒட்டகத்தை நுழைப்பதற்கு சமமானது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.இருந்தபோதிலும் இந்த தேசத்தை மாறுபட்ட பல்வேறு கட்சிகள் துணையோடு குறைந்தபட்சக் கருத்தொற்றுமையுடன் ஆட்சி செய்த பாரதீயஜனதாவைப் போல பல்வேறு மாறுபட்ட கட்சிகளோடு இணைந்து இன்றும் ஆளுகின்ற மன்மோகன் அரசைப்போல குறைந்தபட்ச கருத்தொற்றுமையுடன் அனைத்து பதிவர்களும் இணைந்து செயல்படுவது மண்ணுக்கும் மொழிக்கும் அவசியம் என்றே கருதுகிறேன்.எழுத்தின் போக்கில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. தனித்தமிழில் எழுதுவது. வட்டாரவழக்கில் வரைவது.நகைச்சுவையோடு எழுதுவது. கனவுகளை கவிதைகளாக வடிப்பது.அவலத்தை அள்ளித்தருவது. காரசாரமாக எழுதுவது . ...கண்டபடி எழுதுவது. இவற்றில் உங்கள் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒன்றை மட்டும் கவனியுங்கள்.உங்கள் எழுத்துக்களை பொன்போன்ற காலத்தைச் செலவிட்டு எத்தனையோ நாடுகளில் வாசிக்கிறார்கள். உங்கள் வலைதளம் நீங்கள் மட்டுமே வாசிக்கின்ற எண்ணியல் நாட்குறிப்பல்ல .
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு நெருப்பாயிருங்கள் ! அவர்கள்தம் சுயவாழ்வை விமர்சிப்பதைத் தவிருங்கள்..ஏனெனில் அவர்கள் மண்ணில் தோன்றிய மகாத்மாக்கள் அல்ல .அவர்களும் நம்மைபோன்று சாதாரண மனிதர்களே.நம்மைவிட சில துறைகளில் பளிச்சிடுகிறார்கள்.அவ்ளவுதான்.
இன்று நாம் உச்சியில் வைத்து கொண்டாடும் பெரும்பாலானவர்கள் சுயவாழ்வில் மிகவும் ஒழுக்கமற்றவர்களே.
அடுத்து பாலுணர்வு ஊட்டும் எழுத்துக்களை மட்டுமே திரும்பத்திரும்ப எழுதுவதைத் தவிற்த்து மண் மற்றும் மொழி சார்ந்த பெருமைகளையும் இன்னும் முடிவுகள் கிட்டாத அவலங்களையும் சித்தரியுங்கள்.
கூகுளின் தேடுதலில் தமிழ் எழுத்துக்களை பொறுத்தியவுடன் அது பிதுக்கித் தள்ளுகின்ற அத்தனை வார்த்தைகளும் அன்னை தமிழுக்கு அணி சேர்ப்பதாயில்லை. இந்த தேசத்தின் செல்வங்கள் இதைத்தானா தேடின என்ற வருத்தம் என்னைவிட்டு இன்னும் அகலவேயில்லை.. இந்த தீராத தலைகுனிவுக்கு தமிழ் இணைய வல்லுநர்களின் வழிதான் என்ன.ஈரோடு சங்கமம் சரியான பாதையை சுட்டிக்காட்டட்டும்.
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து....
23 12 2010
--------------------------------
இடுகை 0034 

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !
Dear Sir, You are 100% correct. Please try to come to Erode sangamam.
By அமர பாரதி on ஈரோட்டு வலைப்பதிவாளர் சங்கமம் on 24/12/10

அன்பிற்கும் பகிர்ந்தமைக்கும் நன்றிங்கசங்கம நிகழ்வுகளை இங்கே காணலாம். http://www.erodekathir.com/ அன்புடன் ஆரூரன் விசுவநாதன்