வெள்ளி, அக்டோபர் 29, 2010

இசை ஞாநியும் இசை முட்டாளும்                           பாண்டியன்ஜி
இந்த மாதம் 16 ஆம் தேதி.      சனிக்கிழமை மாலைப் பொழுது. சென்னை நகரின் பெரும் பகுதிகளில் ஆயுதபூசைக் கொண்டாட்டங்கள் பெருமளவில் முடிவுக்கு வந்திருந்த சமயம்.       கே.கே நகர் முனுசாமி சாலையிலிருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகநாழிகை பதிப்பகத்தின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.        இலக்கிய ஆர்வலர்களும் இணையதள வலைப்பூ சொற்சிற்பிகளும் பெருமளவில் புத்தக அரங்கில் குழுமியிருந்தனர். சி.சரவணகார்த்திகேயன் அவ்வப்போது எழுதிய புதுக்கவிதைகளை தொகுத்து அகநாழிகை பதிப்பகம் நேர்த்தியாக அச்சிட்டு விற்பனைக்கு வெளியிட காத்திருந்தது.     பரத்தைக் கூற்று என்ற கவிதை நூலை சமகால எழுத்தாளர் சாருநிவேதா வெளியிட்டு உரையாற்றினார்.    சமீப காலங்களில் ஊடகங்களிலும் தமிழ் பத்திரிக்கைகளிலும் மாறுபட்ட கோணங்களில் இடம்பிடித்திருந்த சாருநிவேதாவை பெயரளவில் மட்டுமே நான் அறிந்திருந்தேன். அவருடைய எழுத்துக்கள் எதனையும் நான் படித்ததில்லை.    படித்ததில்லை என்ற வார்த்தையை நான் மிகுந்த கர்வத்துடனோ அல்லது பெருவாரியான ஏக்கத்துடனோ உச்சரிக்கவில்லை.   கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மின் அணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புத்தகங்களிடையே மிகுதியும் நாட்டம் கொண்டிருந்தேன் என்பதன்றி வேறு தனியாக காரணங்கள் எதுவுமில்லை .
நிகழ்ச்சி முடிவுற்று பேரூந்தில் திரும்பிக்கொணடிருக்கிறேன்.    பரத்தைக் கூற்று
நூலை வெளியிட்டு சாருநிவேதா ஆற்றிய உரையின் சில கருத்துக்கள் என் சிந்தனையை பெரிதும் கிளறியதை உணர்கிறேன்.  இது போன்ற எண்ணங்களை சாரு மட்டுமே கொண்டிருக்கவில்லை.
சமீபகாலங்களில் நான் வாசிக்க நேர்ந்த ஒருசில அரசியல் மற்றும் மொழிசார்ந்த திறனாய்வுக்கட்டுரைகளும் இதே கோணத்தில்தான் எழுதப்பட்டிருந்தன.   அதன் விளைவாக என் எண்ணங்களில் எதிரொலித்த சில கருத்துக்களை இந்த இடுகையில் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
சாருநிவேதா எழுப்பிய கருத்துக்களும் அதன் விளைவான எதிரொலித்த என் எண்ணங்களும்.
1 )   பாலியல் தொழில் முழுவதுமாக தடை செய்யப் பெற்ற தமிழகத்தில் பரத்தயர் எண்ணங்களை எப்படி எழுத முடிந்தது.    மும்பாய் கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் கிடைக்கின்ற அனுபவங்கள் ஏதுமின்றி இப்படியொரு நூலை நிச்சயமாக படைக்க முடியாது.
ஓர் பரத்தையின் அவலத்தை எழுப்ப பரத்தையர் சார்ந்த பல்வேறு சூழல்களை அறிந்திருப்பது அவசியம்தான். அதில் ஒன்றும் அய்யமில்லை.எழுத்தாளர் கல்கியிலிருந்து எழுத்தாளர் வாசந்திவரை தங்கள் கருத்துக்கு வலு
சேர்க்க அந்தந்த மண்ணில் சுற்றித்திரிந்ததைப் படித்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் புதினத்துக்காக எழுத்தாளர் கல்கி ஈழம் வரை பயணம் செய்தது நினைவுக்கு வருகிறது.
கள்ளிப்பால் கொடுத்து செய்யப்படும் பெண் சிசுக்கொலைகளைப்பற்றி எழுத மதுரையைச்சார்ந்த ஆண்டிப்பட்டி கிராமங்களில் சுற்றித் திரிந்த வாசந்தியை படித்திருக்கிறேன்.  புகையும் குடியும் மனிதனை எப்படிச் சீரழிக்கிறது என்ற கருத்தை வலியுறுத்த சம்மந்தப்பட்டவர்களோடு பல நாட்கள் நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் சிவசங்கரி.
இவையனைத்தும் ஒரு பக்கமே.
வங்கத்தில் ஒடும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்
செய்குவோம்.    என்று வருங்காலத்தேவைகளை மனதில் நிறுத்தி நாளை நனவாக வேண்டிய கனவுகளை அன்றே கண்டவன் மகாகவி பாரதி.
கவிஞன் எனபவன் அவன் காலத்தில் விளையும் அத்தனை அறிவுகளுக்கும் சொந்தக்காரனாய் இருத்தல் வேண்டும்.  கடந்து போன கால சரித்திரங்களையும் வருங்காலம் பற்றிய தொலைநோக்கு சிந்தனைகளையும் ஒரு சேரப் பெற்றிருக்க வேண்டும்.   இவையனைத்தும் சரிவரக்கிடைக்கும் போது கவிஞனுக்கு நிகழுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கண்டுதான் எழுதவேண்டுமென்ற கட்டாயம் ஏற்படுவதில்லை.     உயர்ந்த கவிஞன் ஒவ்வொன்றையும் உணர்வுபூர்வாய் அனுபவித்து கவி எழுத முடியும்
இன்று ஈழம் இருக்கும் திசைகூட அறியாதோர் ஈழத்தில் சொட்டும் இரத்தத்தின் அவலத்தை சித்தரிக்கவில்லையா.    தடை செய்யப்பெற்ற கருத்துக்களையும் வசன இலக்கியத்தில் எழுதக்கூசும் சொற்களையும் கவிஞன் தன் கவிதை வரிகளில் இலகுவாக நுழைப்பதை காண முடிகிறது. அவனுக்குள்ளே துளிர்த்திருக்கும் கவித்துவம் அவனுக்குஅத்தனையும் சாத்தியமாக்குகிறது.எனவே பரத்தையின் அவலத்தை எழுத அப்படியொரு அனுபவம் இருந்துதான் தீரவேண்டுமென்று தோன்றவில்லை.
2 )    தமிழகத்தில் மட்டுமே அடைமொழியிட்டு அழைக்கும் முட்டாள்தனமான பழக்கம்
மிகுதியாக உள்ளது. வைரமுத்து கவிப்பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சிற்றரசுகளா.    இளையராஜா இசைஞானியென்றால் எம்.கே தியாகராஜபாகவதர் இசை முட்டாளா.
இதே போன்ற கருத்தை சில நாட்களுக்கு முன் தினமணி எழுதிய தலையங்கத்திலும் கண்ணுற்றேன்.  அடைமொழி நமக்கெல்லாம் மொழி கொடுத்த வரப்பிசாதம் என்றே எண்ணுகிறேன்.
அடைமொழியிட்டு அழைப்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல.    சங்ககாலத்திலிருந்து சமீபகாலம் வரை ஒரு பொருளை ,   ஒரு செயலை மிகுதியாக உயர்த்திக்காட்ட அடைமொழி பயன்பட்டே வந்திருக்கிறது.   பிறந்த மழலையை கண்ணே மணியே என்றும் பெண்ணினத்தை மானே மயிலே என்றும் அடைமொழியிட்டு அழைப்பதில்லையா.   மற்றோரிடமிருந்து காந்தியை உயர்த்திச் சொல்ல காந்திக்கு மகாத்மா என்ற அடைமொழி பயன்பட வில்லையா.   சுதந்திரமண்ணில் களைகளாக துளிர்த்திருந்த சமஸ்த்தானங்களை தரைமட்டமாக்கிய படேலுக்கு இந்தியாவின் இரும்புமனிதர் என்ற அடைமொழி எத்தனை பொருத்தமானது.
அண்ணாவின் பேராற்றலை வியந்து இதோ ஒர் பெர்நாட்ஷா என்று கல்கி கூவவில்லையா.
ரா.பி சேதுப்பிள்ளைக்கு சொல்லின் செல்வரும் சோமசுந்ரபாரதிக்கு நாவலர் பட்டமும் எத்தனை பொருத்தமானது.     பாரதியை மகா கவி என்றழைக்க மறுத்த கல்கி பின்நாளில் பாரதி மகாகவிதான் என்று உணரவில்லையா.
எம்.கே.தியாகராஜபாகவதர் அவர் காலங்களில் அபூர்வ கவிதான்.   அதேபோல் இளையராஜாஅவருடைய காலங்களில் இசைஞாநிதான்.   இன்னாளில் வைரமுத்து கவிப்பேரரசுதான் அதில் ஒன்றும் அய்யமில்லை.   எவரையும் எவரும் அடைமொழியிட்டு அழைப்பதில் தவறேதுமில்லை.     இவையனைத்தும் காலச்சூழலுக்கு ஈடு கொடுத்து எத்தனை தூரத்துக்கு நிற்கப்போகிறது என்பதே முக்கியம்.
இவற்றில் எல்லாம் நாம் காணும் குற்றம் ஒன்றுதான். உலகளாவிய கலாசார
சிதைவினால் போற்றுவோரும் போற்றப்படுவோரும் மிகுதியாக தரத்தில் தாழ்ந்திருப்பதே.
பெரும்பாலும் 80 களுக்குப் பிறகே இதுபோன்ற போக்கை மிகுதியாக காணமுடிகிறது.
3 )     நான் அன்பே சிவம் திரைப்படத்துக்கு திறனாய்வு எழுதியபோது நடிகர் கமல்ஹாசன் எனக்கு நண்பரானார்.    ஆனால் உன்னைப்போல் ஒருவனுக்கு திறனாய்வு செய்தபோது அந்த நட்பை இழக்கநேரிட்டது.   நாளை எந்திரனுக்கு எழுதப்போகும் கடுமையான விமர்சனம் சங்கரின் நட்பை பறிக்கக்கூடும்.
முதலில் திரையுலக வணிகர்கள் கமல்ஹாசனும் இயக்குநர் சங்கரும் உங்கள் மீது கொண்டிருந்தது நட்பல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்.   தங்களுடைய பணம் குவிக்கும் முதலீீடுகளுக்கு உங்கள் எழுத்துக்கள் துணைபுரியும்போது உங்கள் பார்வையை நேசிக்கிறார்கள்.    உங்கள் மதிப்பீடு அதற்கு மாறாக அமையும்போது உங்களைத் தவிற்கிறார்கள்.     அதுதான் உண்மை.நட்பு என்ற உறவுக்கு வள்ளுவன் வகுத்திருக்கும் வரயறை இதனைத் தெளிவாக உணர்த்தும்.    இன்று திறனாய்வுத்துறை இது போன்ற தள்ளாட்டங்களுக்கிடையே சிக்கித்திணருவதால்தான் தரமற்றோர் அனைவரும் உச்சியிலே வைத்து பூஜிக்கப்படுகின்றனர்
குற்றங்களை சுட்டிக்காட்டிகுரல் எழுப்ப தகுதிமிக்கோர் இல்லாத காரணத்தால்தான் இன்று மொழி இலக்கியம் கலை அரசியல் அனைத்திலுமே தகுதியற்றோர் முதலிடத்தை பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இசை விமர்சனத்தில் ஒரு சுப்புடுவும் திரைவிமர்சனத்தில் குமுதம் ஜாம்பவானும் வீற்றிருந்த இருக்கைகள் இன்னும் காலியாக இருப்பதாகவே நினைக்கிறேன்.
திறனாய்வு செய்யும்போது திறனாய்வுக்குரிய பொருளை முதலில் திரட்டியும் பின்பு பகுத்தும் இறுதியில் மதிப்பீடு செய்தலே முறையானது.    இடையே வேற்று நினைவுகளுக்கு இடமளிக்கும்போது திறனாய்வின் திசை மாறிப்போக நேரிடுகிறது. தேவைப்பட்டால் இக்கால நீதியரசர்கள் தீர்ப்பகளுக்கடியில் தங்கள கருத்துக்களைப் பதிவு செய்தல் போன்று நீங்களும் உங்கள் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திவிட்டு செல்லுங்கள்.
கோடிகளைக் கொட்டி எடுத்த படம் குப்பைக்கு போனது.      என்பது போல.
நட்பு , தகுதி என்றெல்லாம் பேசப்படும்போது என் நினைவில் நிற்கும் ஒரு நிகழ்வு.
மொழி மீதும் கலைமீதும் தீரா வெறி கொண்டு சென்னை வீதிகளில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்கள் ஒரு மாலைப்பொழுதில் சென்னை மெரீனா கடற்கரையோரத்தில் இலவசமாக தென்றலை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.    கையிலோ தேங்காய் மாங்கா பட்டாணி சுண்டல்.
' உன்னிடம் ஒளிந்திருக்கும் அபார திறமைக்கு இந்த சிங்காரச்சென்னையில் அழியாத சிலை எழுப்புவேன் '
' அடேங்கப்பா ! முதலில் நாளைக்கு வழியைப் பார்.   நீ எனக்கு சிலை வடிக்க நான்
முதலில் இந்த மண்ணில் ரொம்ப ரொம்ப உச்சிக்குப்போக வேண்டும் .   சிலையெழுப்பும் நீயோ அதைவிட ஒசரத்தில் இருக்கவேண்டும்.   அப்பத்தான் அது நடக்கும். '
வரண்டுபோன நகைப்புடன் பதிலளிக்கிறான் இரண்டாவது இளைஞன் பின்னாளில் அது  நிகழப்போகிறது என்பதறியாமல் .
இன்றைய முதல்வர் கலைஞருக்கும் மறைந்த நடிகர் திலகத்துக்குமிடையே அன்று நிகழ்ந்த உரையாடல் பின்நாளில் நிஜமானது.
-----------------------------------------------------------
இடுகை 0032 (17 10 2010 )

4 கருத்துகள்:

 1. அஜ்மல் கான், திருவாரூர்.செவ்வாய், டிசம்பர் 14, 2010 1:02:00 AM

  சாரு நிவேதிதா என்பவர் ஒரு சுய விளம்பரப் பிரியர் என்பதை நான், அவருடைய பல்வேறு செயல்களில் கண்டு வருகிறேன்.

  அவர் சிறிது காலம், சாமியார் நித்தியானந்தாவின் அறிவிக்கப்படாத ஊடகப்பிரிவு செயலாளர் போல் வலைதளங்களில் அவரைப்பற்றி புகழ்ந்து எழுதி வந்தார். பிறகு, சாமியார் பற்றி இந்த உலகம் தெரிந்து கொண்ட பின், நித்தியானந்தா சாமியாரே கிடையாது என்றார்.

  அதைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வி கேட்டனர். அதற்கு இவர் வெகு மழுப்பலாக பதில் கூறிவிட்டு, பின்னர், அந்த நிகழ்ச்சியைப்பற்றியும், அதன் இயக்குனர், நடத்துனர் ஆகியோர் பற்றியும் தாறுமாறாக எழுதினார்.

  ஆகவே, இவர் பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

  பதிலளிநீக்கு
 2. அஜ்மலுக்கு ,
  வார இதழ் ஒன்றில் சாருநிவேதா மனம்போனபடி எழுதிவரும் கட்டுரைத்தொடர் ஒன்றிலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற சுய புராணம் வரிக்குவரி வெளிப்படுவதை கண்டிருக்கிறேன்.பாவம் . நெடிய வரலாறு கொண்ட அந்த இதழ்....

  பதிலளிநீக்கு
 3. ஐயா, அருமையாக எழுதுகிறீர்கள். இன்றுதான் முதன்முறை வந்திருக்கிறேன். தாமதமாக வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இருக்கட்டும். இனிமேல் அடிக்கடி வருகிறேன். :)

  பதிலளிநீக்கு
 4. அன்பு நண்பருக்கு
  உங்கள் வருகையும் மறு மொழியும் எனக்கு மகிழ்வளிக்கிறது.மாறுபட்ட கருத்துக்களே அசையாத அடித்தளத்துக்கு அடிப்படை.மனதில் தோன்றியதை வெளிப்படுத்துங்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !