வியாழன், செப்டம்பர் 04, 2014

ஈச்சம்பட்டி பெரியப்பா !


















ஈச்சம்பட்டி  பெரியப்பா. !
இயல்பாக என் மூத்த மருமகன் பெரம்பலூர்  திரு பாலகிருஷ்ணனுக்குத்தான் அவர் பெரியப்பா.இருந்தாலும் என் குடும்பத்தார் அனைவருமே அவரை அப்படித்தான் அடையாளப்படுத்தினோம்.
கடந்த 21 08 2014 மாலை ஆறு மணியளவில்  எதிர்பாராமல் நேர்ந்த  சிறு தவறால் அவர் மரணமடைய நேர்ந்திருக்கிறது...  மாலைநேரத்தில்  மங்கிய ஒளியில் மின்னிணைப்பு ஒன்றை  ஏற்படுத்தியபோது கால் இடறி நீறற்ற ஆழ் கிணற்றில் விழுந்திருக்கிறார். (  மின் கசிவால் அல்ல. ) அவர் விரும்பி வாழ்ந்த இயற்கைச்சூழலே அவர் உயிரை பறித்திருக்கிறது.
தகவல் அறிந்த நாங்கள் பதறிப்போனோம். அடுத்த சில நாட்களில் நிகழப்போகும் ஒரு திருமண நிகழ்வுக்காக அவரைக்கண்டு உரையாட காத்திருந்தோம்.. அது இல்லாமற் போயிற்று. . .
அவரது புகழுடம்பைக் காண 22 08 2014 காலை பெரம்பலூர் - ஈச்சம்பட்டி புறப்பட்டோம்.
மதியம் பன்னிரண்டு மணியிருக்கும்.  
பெரம்பலூர் புதிய பேரூந்து நிலையத்தில் இறங்கியபோதே பெரியப்பாவின் பிரிவின் அடையாளங்களைக் காணமுடிந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் ஈச்சம்பட்டி போக  ஒரு நகரப்பேரூந்தில் ஏறியபோது பெரியப்பாவின் மரணம் முழுமையாக உணரப்பட்டது. பாலிதீன் பைகளில் சுற்றப்பட்ட மலர்மாலைகளுடன் பலரைப்பார்த்தேன்.
‘ஈச்சம்பட்டிய அடுத்த காடு ஸ்டாப்பில் எறங்கிகுங்க ! ’.
அந்த நகரப்பேரூந்து நடத்துநர் பலருக்கு இப்படித்தான் டிக்கட் கிழித்தார்...
பெரம்பலூரிலிருந்து துறையூர் நெடுஞ்சாலையில் ஒரு பத்து கிலோமீட்டர் பயணித்தால் ஈச்சம்பட்டி சிற்றூர் குறுக்கிடுகிறது.சாலையின் இருபுறமும் வரிசையாக நிழல்தரும் புளியமரங்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் உயர்ந்த குன்றுகள்   . மொத்தத்தில் மனதுக்கு நிறைவுதரும் பசுமைப்பிரதேசங்கள்.
ஈச்சம்பட்டி நிறுத்தத்திலிருந்து ஓரு கிலோமீட்டர் கடக்கும்போது  வலதுபக்கத்தில் ஒரு மணற்சாலை பிரிகிறது. நெடுஞ்சாலையிலிருந்து தெற்கே ஒரு கிலோமீட்டரளவில்  நீண்டு கிடக்கும் அந்த மணற்சாலை முடிவில் பெரியப்பாவின்  பிரத்தியோகமான வீட்டில் முடிகிறது.
.            இருபுறமும் வயல்வெளிகள் , நெருக்கமான மரஞ்செடிகள் , பின்னணியில் உயர்ந்து நிற்கும்  இரட்டைமலைகள்  .
 பெரியப்பாவின் வீடு ரம்மியமாக காட்சி தருகிறது.
பேரூந்தை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.
வழிநெடுக ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. இரவு முழுதும் எரிந்திருக்கக்கூடும்.
சாரி சாரியாக பலதரப்பட்ட  ஆண்களும் பெண்களும்  யாரோ ஒரு மகானையோ ஒரு காட்டு தெய்வத்தையோ தரிசிக்கப்போவதைப்போல பெரியப்பாவைக்காண போய்க்கொண்டிருந்தனர்.   முன்னதாக போனவர்கள் இறுக்கமான முகத்துடன் பெரியப்பாவின் நினைவுகளை சுமந்து எதிர்திசையில் வருவதை பார்த்தேன்.
சிறிது தூரத்தில் சாலையின் இடது பக்கம்  விசாலமாக மணல் பரப்பி வரிசையாக பலவண்ணங்களில் இன்றைய நவீன ரக கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டேன். ஒருசில கார்களில் இன்றைய அரசியல் கட்சிகளின் கொடிகள் கூட கட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். அரசியலிலும் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கக்கூடும்.
சற்று தூரத்தில் சாலையின் ஒரமாக நீண்டு கட்டப்பட்டிருந்த சிமிண்ட் கூரை வேயப்பட்ட வீடுகள் வரிசையாக காணப்பட்டன. அவைகள் பெரும்பாலும் பெரியப்பாவின் செங்கற்சூளையில் கல் அறுக்கும் தொழிலாளிகளுடையதாக இருக்கக்கூடும். அவர்களில் பெரும்பாலான பெண்தொழிலாளிகள் கண்களை கசக்கிக்கொண்டு ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த மணற்சாலையின் முடிவில் காணப்பட்ட செவ்வகவடிவ மணற்திட்டில் கிழக்கு பார்த்த ஒட்டு வீடு. வீட்டையொட்டி இடது பக்க ஓரத்தில் கார்கள் நிறுத்தம் போன்ற வரிசையான தடுப்புகள்  .அவைகளில் வரிசையாக கால்நடைகள் கட்டப்பட்டிருந்தன. அவைகள் கால்களை மாற்றி மாற்றி ஒருவித ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. நடப்பது எதையும் அவைகள்  உணர்ந்ததாக தெரியவில்லை.
மிகப்பெரிய மரணத்தைக் கருதி உயர்ந்த இரண்டு வாழை மரங்கள் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வாயிலுக்கெதிரே உயர்ந்த ஷாமியானா நிறுவப்பட்டு பிளாஸ்டிக் இருக்கைகளில் பல்வேறு வயது ஆண்களும் பெண்களும் நிரம்பியிருந்தனர்.நெடுந்தூரம் பயணித்தவர்கள்  தாகம் தீர்க்க தாராளமாக தண்ணீர் தரப்பட்டது .வீட்டிற்கு இடதுபுறம் நீண்ட பந்தலிட்டு பசியோடு வந்தவர்களுக்கு காலையிலிருந்து விடாது தொடர்ந்து முழுமையான உணவு  பரிமாரப்பட்டு வந்தது.
வீட்டிற்குள் நுழையுமுன் பெரியப்பாவின் இரண்டு மகன்களும் கண்களில் நீர்வழிய எதிகொண்டனர்.
வீட்டின் முன் வராண்டாவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய கண்ணாடிப்பெட்டி ஒன்றில் பெரியப்பா அத்தனை அழகாக உறக்கத்தில் இருப்பதை காணமுடிகிறது. கண்களில் நீர்வழிய குனிந்து நிற்கிறேன்.அந்த வராண்டாவில் பெண்கள் பெருமளவில் குழுமியிருக்கின்றனர்.
மனைவியும் பெற்ற பெண்களும் பெட்டியை சூழ்ந்து நின்று கதறிய காட்சி என்னை மேலும் இளக்கிற்று. பெரியப்பாவின் சகோதரி ஒருவர் கடந்த கால நினைவுகளை  சொல்லிச்சொல்லி பேசமுடியாத பெரியப்பாவிடம் அழுதது நினைவுகளில் நிற்கிறது.
ஏறத்தாழ ஆறடி  உயரம்  உயரத்துக்கேற்ற உடல்வாகு  சிவந்த நிறம் காற்றில் அலைபாயும் நெருக்கமற்ற வெள்ளை முடி எப்போதும் வெண்ணிற வேட்டி சட்டை , நெற்றியில் லேசான திருநீர் கீற்று , நிமிர்ந்த நடை ,கனிவான பார்வை  எப்போதும் கபடமற்ற பேச்சு
இவைதான் நான் பார்த்த ஈச்சம்பட்டி ராஜு முதலியார்.  
பிறந்த சில நாளில் பெற்ற தாயை பிரிந்து  சின்னம்மாவின் அன்பில் வளர்ந்த  ராஜு பெரியப்பா  ஒருகாலத்தில் உற்ற நண்பரோடு செங்கல்லறுக்கும் தொழிலில் கால்பதிக்கிறார். தன் தொழிலுக்கு தோதுவாக ஒரு கட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இரட்டைமலை அடிவாரத்திலேயே இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொள்கிறார். மெல்லமெல்ல  சமூகத்தில் ராஜு முதலியாராக ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்  மேற்கொண்ட முயர்ச்சி அசாத்தியமானது.  இங்கே சாரிசாரியாக வந்து போகும் மக்களே அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாக இருக்கக்கூடும்.
ஏறத்தாழ நான்கு மணிக்குமேல் பெரியப்பாவின் சடலம்  காத்திருந்த பூந்தேரில் ஏறி          உறவுகளும் ஊர் மக்களும் சூழ குரும்பலூர் இடுகாட்டுக்கு பயணமாயிற்று.
நேற்று இரவிலிருந்த வந்து குவிந்த மலர் மாலைகள் அனைத்தும் துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு  ஊர்வத்தின் வழி நெடுக பொழியப்பட்டன. சடலத்துக்கு முன்பாக வழி நெடுக சிவகாசி சரவெடிகள்  வெடித்துச்சிதறின. முரட்டுதனமான இசைக்கருவிகள் பிளரின.பல்வேறு கூச்சல்களுடன் பெரியப்பா பூந்தேரில் மெல்ல மெல்ல நகர்ந்தார்.
இந்த துணிவுமிக்க  மனிதனின் இறுதிப்பயணத்தில் ஏற்பட்டுவிட்ட ஒருசில இடையூறுகளையும் சொல்லவேண்டும். இறுதி ஊர்வலம் புறப்பட்டபோதே ஆரம்பமான கோடி சாற்றுதல் சம்பந்தமாக உடன்பிறப்புகளுக்கிடையே ஏற்பட்ட சிக்கல் ..அதனைத்தொடர்ந்து சடலம் குரும்பலூரைக்கடக்குபோது வழிப்பாதை குறித்த ஒரு தடுமாற்றம் .. இதையெல்லாம் காணபொறுக்காமல் வானம் வடித்த கண்ணீர்.
இவையெல்லாம் மறபுகள் சார்ந்த கிராமங்களில் இயல்பானதே.
எனக்குத்தெரிந்து  பெரம்பலூர் நகரம் அசுர வளர்ச்சி அடைந்தது வெகு சமீபத்தில்தான். எல்லா நிலைகளிலும் வரண்டு கிடந்த பூமி இந்த பெரம்பலூர். சமீபத்தில் அது எட்டிய வளர்ச்சி எண்ணிப்பார்க்கமுடியாதவை. நவீன நாகரீக வளாகங்கள் மிகுதியாக ஏற்பட்டுவிட்ட போதிலும் பெரம்பலூரைசூழ்ந்த கிராமங்களின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.
நகரமே கல்விக்கூடங்களால் நிரம்பி வழிந்தாலும் மரபுகளையும் தொன்று தொட்ட பழக்கங்களை இந்த நகரம் கைவிடத்தயாராயில்லை.பெரியப்பாவின் பயணத்தில் இடையூறு ஏற்படுத்திய  இரு சாராரும் மரபுகளுக்காகத்தான் பேசினார்கள்.
இருந்தாலும்  இந்த சிக்கல்களை சுமுகமாத் தீர்க்க ராஜு முதலியார் போன்ற ஆளுமை அங்கே இல்லாமற்போயிற்று.
இந்த பயணத்தின்போது எனக்கேற்பட்ட இன்னொரு நெருடலையும் சொல்லித்தான் ஆகவேண்டும். நல்ல கல்விக்கு நெய்வேலி நகரம் பேசப்படுவதுண்டு. மிகுந்த பிழைகளோடு அரைபக்க இரங்கல் ஒன்றை கருவண்ணத்தில் அச்சிட்டு நெய்வேலி மனித வள மேம்பாடைச்சார்ந்த  இரத்த தான குழுமம்  வினியோகித்தது.
பெரியப்பா  21 08 2012 லேயே மரணமுற்றதாக தவறாக அச்சிட்டதோடல்லாமல் அதை மிகுந்த துணிவோடும் வினியோகித்தார்கள்.
என் கடந்த காலங்களில் திருக்குறளை முழுமையாக படிக்க நேர்ந்ததில்லையென்றாலும்  இங்கொன்றும் அங்கொன்றுமாக பல்வேறு  குறட்பாக்களை அறிந்திருக்கிறேன்.இப்போதெல்லாம் அந்த பொய்யாமொழியின் அழுத்தமான குரல்  வெவ்வேறு தருணங்களில் என் நினைவுகளில் எதிரொலித்து என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு     -    336

நேற்றிருந்த ராஜு பெரியப்பா இன்றில்லை என்ற உண்மை   இந்த உலகம் எத்தனை ஆளுமை மிக்கது என்பதை எனக்கு உணர்த்திற்று .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !