jeyamohan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
jeyamohan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 11, 2013

பட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் !

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன ?
( நவம்பர் 4 - 2013 தி இந்து நாளிதழில்ஜெயமோகன் எழுப்பிய வினாவின் எதிரொலி  )

கூடுவிட்டு கூடு பாயும் வித்தை 

வில்லவன் கோதை

இந்த ஜெயமோகனின் அபத்தமான ஆலோசனைகளை தமிழ் இந்து பத்திரிக்கை  பிரசுரித்து  தன்னிடம் திறன் மிக்க ஆசிரியர்குழுவொன்று   தற்போதைக்கு இல்லை என்ற தகவலை பறையடித்து சொல்லியிருக்கவேண்டாம்.
அவர் எழுப்பிய ஆலோசனை  விவாதத்துக்குறிய விஷயமே  அல்ல.  அடிப்படையிலேயே  உதறத்தகுந்தவை.
எப்போதுமே படைப்பாளிகளைக் காட்டிலும் பதிப்பாளர்கள் அடிப்படையில் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தாண்டி எந்த  அபத்தங்களும் இப்படி அச்சுக்கு வந்ததில்லை.
முன்பெல்லாம் பத்திரிக்கை ஆசிரியர்களும் பதிப்பாளர்களும்    பிரசுரிக்கப்பெறும் விஷயங்களில் எப்போதும்  தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒன்றிரெண்டு களவாடப்பட்ட படைப்புகள் கூட அன்றைக்கெல்லாம் அத்தனை எளிதாக அச்சுக்கு வந்துவிட முடியாது.
இன்று நிலமை அப்படியில்லை.
பத்துப்பதினைந்து நூல்கள் எழுதி பதிப்பித்தவர்கள் அனுப்புகிற சரக்குகளை பிரித்துப்பார்க்க   அலுப்புற்று நேராக அச்சுக்கு அனுப்புகிற பத்திரிக்கைகளும்  இருக்கிறது.ஒருசில நூல்கள் எழுதியதாலேயே அவர்கள் அந்த தகுதியை பெற்றுவிடுகிறார்கள்.
பிரபலமான எழுத்தாளரின் லாண்டரி கடை கணக்குகள்கூட  அச்சுக்குப்போன கதையை சுஜாதா சொல்லி கேட்டிருக்கலாம்.
இந்த யோசனைகளை உதிர்த்த ஜெயமோகன்  -
நிரம்ப உழைப்பவராகவும்  எதையாவது மிகுதியாக வாசிப்பவராகவும் எத்தகைய கருத்துக்களுக்கும் உடனடியாக பதிலளிப்பவராகவும் நட்புக்கினியவராகவும்  நான்  அறிந்திருக்கிறேன்.
 வளைந்து நெளிந்து செல்லும்அருவியைப்போன்ற வேறுபட்ட நடையில் எம் தமிழை கையாளுவதை கண்டுருக்கிறேன்.
இன்றைக்கு  எழுதுகிற அத்தனை நவீன எழுத்தாளர்களின் ஆரம்பப் பாடசாலையாயிருந்த திராவிட இயக்கங்களை அவர்களைப்போலவே சபிப்பவராகவும்
சவமேடைகளில்கூட சம்மந்தப்பட்டவரிடம் காணநேர்ந்த குற்றங்குறைகளை கருத்துத் தளங்களில் நின்று துணிவோடு பேசுபவராகவும்  பார்த்திருக்கிறேன்.
அண்டைமாநிலத்தின் ஓரத்தில் அவர் வாழுகின்ற வாழ்க்கை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த இரட்டை குடியுரிமை அவர் பேச்சிலும் எழுத்திலும் ஊடுருவிக்கிடப்பது எனக்குத் தெரிகிறது..
இவருடைய  எழுத்தின் வீச்சுக்கு  நான் நேசிக்கிற தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ  இன்னும் தேசபிதா காந்தியோ விலக்கில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.
ஆனால் -
மேற்கிளையில் அமர்ந்து அடிக்கிளையைக்கூட அவரால் வெட்ட முடியும் என்பதை  இப்போதுதான் பாற்கிறேன்.
இப்படியொரு அபத்தமான ஆலோசனைகள் பாரம்பரியமிக்க இந்துவின் பார்வையில் எப்படி நழுவிற்று.
நினைத்தாலே நன்றாக சிரிக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.
ஒருவர்  ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் புத்தகங்களின் படைப்பாளி.
இன்னொன்று இன்றைய தமிழ் வாசகர்களின் பரவலான எதிர்பார்ப்பைப் பெற்ற  பாரம்பரியம்மிக்க தி இந்து  நிறுவனம்.
இருவருக்குமே ஒருவகையில் செலவுக்கு கைகொடுக்கும் சமாச்சாரம்.. சோறுபோடும் மொழி என்று சொல்லமாட்டேன்.
இப்படியொரு கூற்றைக்கூட  விவாதிக்கவேண்டிய கருத்தென்பது எத்தனை அபத்தம்.
மொழி உயிரென்றால் எழுத்துரு உடலல்லவா. எழுத்துரு இருந்தால்தானே இலக்கியமும் இலக்கணமும்  வரும். இலக்கணமும் இலக்கியமும் இருந்தால்தானே மொழி தொடர்ந்து  வாழும்.
துருக்கி மொழியும் மலயா மொழியும்  முறையான எழுத்துக்கள் அற்றபோது  கூடுவிட்டு கூடு பாய வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிற்று.   துருக்கி மொழியும் மலாய் மொழியும்  எடுத்த நிலைப்பாடு தமிழுக்கு தேவையற்து. உறுப்புக்கள் இல்லாதவனுக்கும்  உறுப்புக்களை இழந்தவனுக்கும்தாமே மாற்று உறுப்புக்கள் பொருத்தப்படுகிறது.
ாங்கிலத்தில் இப்போது இருக்கிற எழுத்துருக்கள் ஆங்கிலத்துக்கே சொந்தமற்றபோது   அதற்கு மாறச்சொல்வது  எத்தனை பேதமைதானே.
எம்மொழியும்தோன்றாத காலத்தே இலக்கிய இலக்கணங்களோடு வாழ்ந்து ஒவ்வொரு கால கட்டங்களிலும்  தன்னைத்தாதானே செதுக்கிக்கொண்டு இன்றும் சீரிளமையோடு நிற்கின்ற செம்மொழியல்லவா எம் தமிழ்.
எம் தமிழோடு   கலக்கும் தைரியம் இன்றுவரை வேறெந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை.`
2000 ஆண்டுகளுக்கு மேலாக ஏரக்குறைய சீரான எழுத்துருக்களுடன் எம்மொழியின் கலப்பின்றி  தனித்து நிற்கும்  எம்மொழியா கூடுவிட்டு கூடு பாயவேண்டும்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து வெளியில் காணப்பட்ட கல்வெட்டுக்கள்  சொன்னதென்ன.,
அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பெற்ற  பிராமி கல்வெட்டுகள்  
அதைத்  தொடர்ந்த பௌத்தர்களின்   தாக்கம்  அத்தனையும் கடந்துதானே எம்தமிழ் வந்திருக்கிறது.
ப்ராமி முறையில்காணப்பட்ட எழுத்துருக்கள் தமிழ் ஒலிகளை ஏற்க இயலாமற் போனபோது பிறந்ததுதானே தமிழ் ப்ராமி ..
அடுத்து
கல்வெட்டுப்பதிவுகளைத்தாண்டி ஓலைகளில் எழுதப் பட்டபோது தமிழ் வட்டெழுத்து முறைக்கு மாறுகிறது.
ஏரக்குறைய பதினோராம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து முறை முற்றிலுமாக ஒதுக்கப்பெற்று பல்லவர்களால் மேலும் சீரமைக்கப் பெறுகிறது.பல்லவர் காலத்திலேயே இன்றையதமிழின் நெருங்கிய தோற்றத்தை எம்மொழி பெற்றுவிட்டது  எம்மொழிக்கும் கிட்டாத பேரங்கீகாரம் அல்லவா.
பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கிருத்துவமத பிரச்சாரத்துக்கு வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர்  அன்னை தமிழுக்கு பொட்டிட்டு ( எழுத்துருவுக்கு புள்ளி சேர்த்து  இலக்கணங்கள் தந்து ) அணிகலன் படைத்து அணி சேர்க்கிறார்.
உலகிலேயே எம்மொழிக்குமில்லாத வரலாறு கொண்ட , எம்மொழியிலும் காணக்கிடைக்காத இலக்கணங்களும் இலக்கியங்களும் நிறைந்த   தாய்தமிழை கற்பதற்கா எம்மக்கள் அல்லலுறுகிறார்கள்.
இன்றைய குழந்தைகளுக்கு இவை ஒரு பொருட்டே அல்ல.அவர்களின்  விரிந்த  பார்வைக்கு விருந்தளிக்க நவீன யுகத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன.அதனால் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அறிந்து கொள்கிற திறனும் கையாளுகிற நேர்த்தியும் மிகுதியாக நம் குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்.
அவர் சொல்லுவது போல இரண்டு எழுத்துருக்களைக் கற்க அவர்களுக்கு தேவையான இரண்டு மூன்று வருடங்கள்  அவர்கள் கல்வி வாழ்க்கையில் மிகமிகக் குறைவானவையே. நெடுங்காலம் மும்மொழியை கற்ற அனுபவமும் எம் குழந்தைகளுக்குண்டு. இன்றும் வேற்றுமாநிலங்கள் பலவற்றில் மூன்று மொழிக்கு குறைவின்றிதானே கல்வி கற்பிக்கப்படுகிறது.
மிருகங்களையும் பறவைகளையும் வித்தை என்ற இலக்குக்காக பழக்கியபின்  அவைகள் நிகழ்த்தும் சாகசங்கள் வியக்கத்தக்கவை.பிள்ளைப்பிராயத்தில் பயிற்றுவைத்தால்  குழந்தைகளும்  அப்படித்.தான்.
கற்பதில் சிரமமும் கையாளுவதில் சங்கடங்களும் ஏற்படும்போது  மொழியை மேலும்மேலும் சீரமைப்பது காலத்தின் கட்டாயம் .அதைத்தான் இதுவரை கண்டிருக்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் அது தவிற்க முடியாதவைதான்.ஆனால் இலக்குஒன்றாகத்தான் இருக்கும்
அப்படி வளர்ந்து வளர்ந்துதான் தமிழ்மொழி இப்போது கணினிக்குள்ளே நுழைந்திருக்கிறது.
பதிமூன்றாண்டுகாலம் ஆங்கிலத்திலேயே தமிழை தான் தட்டச்சு செய்த சாகசத்தை சொல்லும் ஜெயமோகன் ஒன்றை கவனிக்க வேண்டும். அது கணனிக்குள் தமிழ் கால் வைத்த காலம்.
தட்டச்சே அறியாத நான் இன்று அவர் பேசும் வேகத்தில் தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன்.இதைக்கற்க எனக்கு ஒருநாள்கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

ஒருவேளை ஜெயமோகன் கூற்று நிகழ்ந்து விட்டால்   குழந்தைகள் அவர் சொல்வதுபோல் வேகமாக வாசிக்கக்கூடும் ஆனால் அவருடைய படைப்புகளையோ  எம் கவிஞர்கள்  உணர்வுகளையோ அவை பிரதிபலிக்கக்கூடும் என்று தோன்றவில்லை.   இப்போதே இயல்பாக மொழிமாற்றம் செய்யப்பெற்ற எத்தனையோ இனிய தமிழ் நூல்கள்  உயிரின்றி உடலோடு உலாவுவது வெளிப்படை
என்னதான்  z h போட்டு எழுதினாலும் ழகரத்தை உச்சரித்தறியாதோர் பட்டியலில் நம் இனமும்  சேரும்.
பெரியாரை வெருப்பவர்கள்கூட மொழிக்கெதிராக முணுமுணுக்கும்போது  அவரை சேர்க்கத்தவறுவதில்லை.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வில் முன்னுரிமை கொடுத்தது உயர்வு தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கே. அவருக்கு மொழி அடுத்தபட்சமாகவே இருந்திருக்கிறது.
தமிழில் காணப்படுகிற எழுத்துகளின் எண்ணிக்கைய குறைத்து  எம்குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டுமென பெரியார் பேசியது உண்மைதான்.
அதை வலியுறுத்தவே  மொழியின் உடலையே மாற்றிய துருக்கி கமால் பாட்சாவை அவர்தான் நினைவூட்டினார்.
எழுத்துருவை இழக்கும்போது தமிழின் கதி  –
எண்ணி ப்பாற்கவே  ஏதோ விபரீதம் புலப்படுகிறது.
கூடுவிட்டு கூடு பாய்த்த பட்டி விக்ரமாதித்தன்  கதைகளை படித்தவர்கள் ஜெயமோகனின்  கூடுவிட்டு கூடு பாயும் யோசனைகளில் இருக்கும் விபரீதத்தை  உணரக்கூடும்.
இந்த ஆலோசனைகள்  அவர்  குறிப்பிட்டதைப்போல அபத்தமாகவும் அதீதமாகவும்தான்  இருக்கிறது. மேலும் யோசிக்க யோசிக்க  அது  நிரூபணமும் ஆகக்கூடும்.
எல்லா மாற்றங்களும்  முதலில் அபத்தமாகத்தான் தோன்றும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஜெயமோகன் தமிழும் ஆங்கிலத்தை மீறி சகல துறைகளிலும் ஒளிரும் என்பதை  ஏன் ஏற்கக்கூடாது.
கிளியின் உடலில் கூடு பாய்ந்த விக்ரமாதித்தன்  கிளியாக வாழலாமே தவிற விக்ரமாதித்தனாக  முடியாது.

________________________________________________________________________

இடுகை  0108
- வல்லமை   இணைய இதழ்

வெள்ளி, ஜூன் 10, 2011

ஜெயமோகனின் அறச்சீற்றம் !



(கிணற்றுத்தவளைகள் என்ற என் பதிவுக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் ஞாயம் )
அன்புள்ள பாண்டியன்,
தங்கள் கடிதம் மூலம் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டேன்.கடிதம் எழுதியமைக்கு நன்றி. இந்தப்பதிலை இவ்வகையான பல கடிதங்களுக்குப் பொதுவாக எழுதுகிறேன். ஒருவேளை உங்களுக்கும் யோசிக்கும்படியான ஒரு விளக்கமாக இருக்கலாம்.முதலில் நாம் ஒருவர் இறந்தபின்னர்
அவரைப்பற்றிப்பொதுவாகப்பேசுவதற்கும்,அறிவுத்தளத்தில் பேசிக்கொள்வதற்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப்புரிதல் இல்லாமல்தான் அதிக வாசிப்போ அறிவுத்தள அறிமுகமோ இல்லாதவர்கள் சிலர் உள்ளே புகுந்து உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள்.
ஒருவர் இறந்துபோகும்போது பொதுவான தளத்தில்  அவரைப்பற்றி இரங்கலும் சொந்தக்காரர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் அனுதாபமும் தெரிவிக்கிறோம். அது மரபு. ஒரு சமூகச்சடங்கு. பழங்குடிவாழ்க்கையில் இருந்து நீண்டு இன்றைய வாழ்க்கை வரை வந்திருக்கும் நீத்தார் வழிபாடு என்ற மனநிலை இதன்பின்னால் உள்ளது. இறந்தவர்களை வழிபடுவதும், அவர்களின் நினைவைப்  புனிதமாக்கிப் போற்றுவதும், கதைகளைக் கட்டிக்கொள்வதும் நம் மரபில் நெடுங்காலமாகவே உள்ள முறை.  அந்த உணர்வுகளே இறந்தவர்களின் விஷயத்தில் தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலையாக இன்றும் நீடிக்கின்றன.
இந்த மனநிலைகள் எதற்கும் அறிவுத்தளத்தில் இடமில்லை. அறிவுத்தளத்தில் எப்போதும் உண்மையான உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டுமே மதிப்பு. எதன்பொருட்டும் மிகைக்கும் பொய்க்கும் அங்கே இடமிருக்க முடியாது. அப்படி அனுமதித்தால் படிப்படியாக மொத்த அறிவியக்கமே வெறும் சம்பிரதாயப்பேச்சுகளாக மாறிவிடும்.
ஒருவர் இறந்து போகும்போது அவரைப்பற்றி மிகையான,பொய்யான பிம்பங்களை அவரைச்சார்ந்தவர்கள் உருவாக்கி அதை வரலாறாக நிலைநாட்டுவது மிகமிகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் இது எப்போதுமே நிகழ்கிறது. இறந்தவரைப்பற்றி அப்படி ஒரு பொய் நிலைநாட்டப்படும்போது அதை எதிர்த்து அல்லது ஐயப்பட்டு உண்மையை முன்வைப்பதென்பது இறந்தவரை அவமதிப்பது என்றும் மரணத்தை அவமதிப்பது என்றும் ஒரு நெருக்கடி கட்டமைக்கப்படுகிறது. அதற்கு நம் சூழலில் உள்ள அந்த சம்பிரதாய உணர்ச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
என்னைப்பொறுத்தவரை நான் ஏதேனும் வகையில் சமூகத்திற்கோ அல்லது தனிப்பட்டமுறையில் எனக்கோ முக்கியமானவர்கள் என்று நினைப்பவர்களைப்பற்றி மட்டுமே அஞ்சலிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளில் அந்த மனிதர் ஏன் முக்கியமானவர், அவரது பங்களிப்பு என்ன என்று எந்த வித மிகையும் இல்லாமல் கூறியிருக்கிறேன். எனக்கு நேர்பழக்கம் உள்ளவரென்றால் அவரது ஆளுமையின் நுண்ணிய சித்திரத்தையும் அளித்திருக்கிறேன். கூடவே அவர்களின் எதிர்மறைக்கூறுகளைப்பற்றியும் கறாராகவே எழுதியிருக்கிறேன். எனக்கு மிகமிக நெருக்கமானவர்களாக நான் உணர்ந்த நித்ய சைதன்ய யதி முதல் லோகிததாஸ் வரை அனைவரைப்பற்றியும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். அதுவே முறையானது என நான் உறுதியாக நினைக்கிறேன்.
சின்னக்குத்தூசி,தமிழின் தரக்குறைவான இதழியலின் மூத்தபிரதிநிதி என்று மட்டுமே நினைக்கிறேன். ஆகவே அவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் இங்கே அஞ்சலிக் கட்டுரைகள் எழுதியவர்கள் சிலர்  அவரை ஏதோ இதழியல் பிதாமகர் என்ற அளவில் எழுதியபோதே அவரைப் பற்றி என் மதிப்பீட்டை முன்வைக்க நேர்ந்தது. அது ஒன்றும் விவாதத்துக்குரிய கருத்தும் அல்ல. தமிழில் நாற்பது வருடங்களாக அவர் எழுதிய கட்டுரைகளில் எதையாவது ஒருமுறையாவது தமிழ் அறிவுலகம், ஏன் திராவிட இயக்க அறிவுஜீவிகள், பொருட்படுத்தியிருக்கிறார்களா என்று பார்த்தாலே போதும்.
சின்னக்குத்தூசியின் இதழியல் பணி என்பது,திமுகவின் எதிரிகளை எல்லாவகையிலும் தரம்தாழ்ந்துசென்று தாக்கி வசைபாடி முரசொலியில் அவர் எழுதிக் குவித்த கட்டுரைகள் மட்டுமே. சரித்திரநாயகர்களான காந்தி,நேரு,சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோரைப்பற்றி அவர் எழுதிய வசைகளும் திரிபுகளும் அவதூறுகளும் அதிகம். இந்தத் தருணத்தில் சின்னக்குத்தூசி இறந்துவிட்டார் என்பதற்காக அவரது எழுத்தையும் ஆளுமையையும் பொய்யாகப் புகழ்வதென்பது அவர் செய்த அனைத்தையும் நியாயப்படுத்துவதாகும். ஒருவர் என்ன செய்தாலும் இறந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது எனக்கு உவப்பான நியாயம் அல்ல.
அவரது ஆளுமை மேல் சரியான மதிப்பீட்டை முன்வைப்பதன்மூலமே அவரது வசைகளைச் சரியான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். அதையே செய்திருக்கிறேன்.
இனி உங்கள் கடிதத்தின் பொதுவான ஒரு தொனி. அதாவது நான் என் ‘சோலியை’ப் பார்க்கவேண்டும், எவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்கிறீர்கள். சின்னக்குத்தூசி போல எந்தத் தளத்திலும் அடிப்படை வாசிப்பில்லாத ஒருவர் நாற்பதாண்டுக்காலம் சரித்திரநாயகர்களை வசைபாடியது உங்களுக்கு சரியாகத் தோன்றுகிறது. ஆனால் நான்  முறையான தர்க்கங்களுடன் என் கருத்துக்களை முன்வைப்பது உங்களுக்குப் பெரும் பிழையாகத் தெரிகிறது.
உங்கள் எழுத்தாளர்கள்,காந்தியையும் காமராஜரையும் தரமிறங்கி வசைபாடலாம். வரலாற்றுத் திரிபுகளைப் பதிவு செய்து வைக்கலாம் . அது அரசியல். ஆனால் அப்படித் தரமிறங்கி எழுதியவர் ஒருவர் என்று சுட்டிக்காட்டுவது காழ்ப்பு, சனநாயக விரோதம் இல்லையா? ஈவேராவும் அண்ணாத்துரையும் எல்லாரையும் வசைபாடுவது அரசியல் தரப்பு.  அவர்களைத் திருப்பி விமர்சனம் செய்தால் அது தாக்குதல், உங்கள் மனம் புண்படும் இல்லையா?
நண்பரே, எப்போதாவது இந்தமாதிரி முரண்பாடுகளைப்பற்றித் திரும்பிப்பார்த்து யோசிப்பீர்களா?
சரி விடுங்கள். இந்தக்கடிதத்தையே எடுத்துக்கொள்வோம். நீங்கள் யார்? என்ன சாதித்திருக்கிறீர்கள்? நீங்களே சொல்லிக்கொள்வதைப் போல எழுத முயன்றிருக்கிறீர்கள் எப்போதோ , இல்லையா? ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப்பற்றி என்னுடைய விமர்சனத்தைக் கண்டதும் பொங்கி எழுந்து என்னை வசைபாடுகிறீர்கள். நான் வணிக எழுத்தாளன், நாக்கு தொங்க விருதுகளுக்கு அலைபவன் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அதைப்  பிரசுரிக்கிறீர்கள். ஆனால் என்னுடைய எந்த நூலையும் வாசித்ததில்லை. என் தகுதி என்ன, என் சாதனை என்ன எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ள அக்கறையும் இல்லை. என் கருத்துக்களைக்கூட முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை.
யோசித்துப்பாருங்கள்.சின்னக்குத்தூசியை விமர்சித்தால் இதையெல்லாம் என்னைப்பற்றிச் சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் காந்தியை வசைபாடிய சின்னக்குத்தூசியை நான் அவர் வசைபாடினார் என்று சொல்வதே அவமதிப்பு, காழ்ப்பு என நினைக்கிறீர்கள்.
அய்யா, விமர்சனம் என்றால் உங்களுக்கு மட்டுமே உரிமை கொண்டதுதானா? பிறருக்கு அதற்கு அனுமதியே கிடையதா? ஊர் பேர் தெரியாத ஒருவரான நீங்கள் என்னை விமர்சித்து எழுதிய வரிகளின் கடுமையில் கால்வாசிகூட நான் எவரைப்பற்றிய விமர்சனத்திலும் காட்டியதில்லையே. அதை நான் தங்கள் மேலான கவனத்துக்குக்  கொண்டுவரலாமா?
நீங்கள் அளித்த அறிவுரைகளுக்கு நன்றி. என்னைத் திரும்பிப்பார்த்திருப்பதற்கு மகிழ்ச்சி.  கருத்துலகம் என்பது முரண்பட்டு இயங்கும் பல்வேறு தரப்புகளினாலேயே ஆனது. ஆகவேதான் நீங்கள் என்னுடைய கருத்துக்களை முரண்பட்டு விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள்.  தொடர்ந்து எழுதுவீர்கள். நல்ல விஷயம். ஆனால் ஐயா,  உங்களுக்கு நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அந்த உரிமை எனக்கு மட்டும் கிடையாதா?
கொஞ்சம் ஜனநாயகபூர்வமாகச் சிந்திக்கும்படி கோருகிறேன்
அன்புடன்
ஜெ
________________________________________
 ( ஜெயமோகன் இணையதளத்திலிருந்து.....   )
இடுகை 0062