புதன், மே 14, 2014

மோடியின் வெற்றுக்குரல் !

ழீன் த்ரெஸெ   ( தமிழில் - சாரி )
                                  
 குஜராத்      மாநிலத்தின்வளர்ச்சிச் சாதனைகள் அனைத்தும்  பிற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலான முன்னோடியானவை அல்ல; இதை நான் மட்டும் அல்ல, பல பொருளாதார அறிஞர்களும் கூறிவருகின்றனர். இருப்பினும் இப்படிச் சொல்வதற்குக் காரணம், மோடி மீது எங்களுக்குள்ள வெறுப்புதான் என்று பலர் பதிலுக்குக் குற்றஞ்சாட்டுவதால், நாம் கூறுவதை மறு ஆய்வுக்கு உள்படுத்தினால் என்ன என்று தோன்றியது. வழக்கமான தரவுகளை வைத்து, வழக்கமான பாணியில் அல்லாமல் வேறு வகையில் இந்த வளர்ச்சியை அளவிட்டால் என்ன என்று தீர்மானித்தோம். அப்படிப் பார்த்தபோது கிடைத்த முடிவுகள் அதைவிட மோசமாகவே இருந்தன.
மனிதவளக் குறியீட்டெண் (Human Development Index) என்ற அடையாளத்திலிருந்து இதைத் தொடங்குவோம். எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' என்ற பத்திரிகைக்காக நானும் ரீதிகா கேரா என்பவரும் இதைத் தயாரித்தோம். நாட்டின் மிகப் பெரிய 20 மாநிலங்களின் தரவுகளைப் பெற்று இந்தப் பட்டியலைத் தயாரித்தபோது, குஜராத் மாநிலம் 9-வது இடத்துக்கு வந்தது. அதாவது, 20 பெரிய மாநிலங்களில் நடுத்தர அளவில்தான் அதன் வளர்ச்சி இருக்கிறது.
அடுத்ததாக, குழந்தைகள் நலனை மையமாகக் கொண்ட (Achievements of Babies and Children) குறியீட்டெண்ணைத் தயாரித்தோம். குழந்தைகளின் ஊட்டச்சத்து, உயிர்பிழைத்தல், கல்வி, தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது ஆகியவற்றின் அடிப் படையில் இந்தக் குறியீட்டெண் தயாரிக்கப்பட்டது. இதிலும் 20 மாநிலங்களில் குஜராத்துக்குக் கிடைத்தது 9-வது இடமே.
பன்முக வறுமைக் குறியீட்டெண் (Multidimensional Poverty Index) மற்றொரு பயனுள்ள கருவி. ஏழ்மையை அளவிட வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கின்றன. சாப்பிட உணவு கிடைக்காமை, குடியிருக்க வீடு இல்லாமை, சுகாதார வசதிகள் இல்லாமை, பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பு இல்லாமை, மருத்துவ வசதிக்குச் செலவு செய்ய முடியாமை என்பவை சில. இத்தகைய இல்லாமைகளில் குறைந்தபட்சம் மூன்று இல்லாவிட்டாலும் அவர்கள் வறியவர்களாகத்தான் கருதப் படுவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சபீனா அல்கிரேவும் அவரது சகாக்களும் இந்தக் குறியீட்டெண்ணின் அடிப்படையில் தயாரித்த 20 மாநிலங்களின் பட்டியலிலும் குஜராத் 9-வது இடத்தில்தான் இருக்கிறது.
இந்தக் குறியீட்டெண் குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினர் சேர்ந்துள்ளார். கலவை வளர்ச்சிக் குறியீட்டெண் (Composite Development Index) என்ற அதை ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் கண்டுபிடித்துள்ளார். நபர்வாரி நுகர்வு, வீட்டில் உள்ள வசதிகள், சுகாதாரம், கல்வி, நகர்மயமாதல், தொடர்பு வசதிகள், நிதி வசதி போன்ற 10 அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு, இந்தக் குறியீட்டெண் தயாரிக்கப்படுகிறது. சரி, இதிலெல்லாம்தான் குஜராத் வளர்ச்சி அடைந்திருக்குமே, எனவே முதல் ஐந்து இடங்களில் ஒன்று நிச்சயம் கிடைத்துவிடும் என்று பார்த்தால், இதிலும் 9-வது இடம்தான் கிடைக்கிறது.
வெவ்வேறு வகையிலான குறியீடுகளை அடையாளமாகக் கொண்டுதான் இந்தத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. யாரும் குஜராத் மாநிலத்தை மட்டம்தட்ட வேண்டும் என்ற நோக்கில் இவற்றைத் தயாரிக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் 9-வது இடத்திலேயே குஜராத் இருப்பது ஏன் என்று புரியவில்லை. எப்படி அணுகினாலும் குஜராத் 9-வது இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று நானும் திட்டமிட்டு ஏதும் செய்யவில்லை.
இந்தத் தரவுகள் எதுவும் உங்களுக்குத் திருப்திகரமாக இல்லை என்றாலும், மத்திய திட்டக்குழு, 2011-12 நபர்வாரி செலவுகள் அடிப்படையில் தயாரித்துள்ள வழக்கமான வறுமை மதிப்பீட்டு அளவுகளைக் கொண்டு ஆராய்வோம். அப்படிச் செய்தால் 20 மாநிலங்களில் குஜராத்துக்கு 10-வது இடம்தான் கிடைக்கிறது.
ரகுராம் ராஜன் குழு, செயல்பாட்டுக் குறியீட்டெண் (Performance Index) என்ற ஒன்றையும் தயாரித்திருக்கிறது. கலவை வளர்ச்சிக் குறியீட்டெண் என்று முன்னர் பார்த்த அந்த வளர்ச்சி, குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பதுதான் இந்தக் குறியீட்டெண். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி அளவை மட்டும் பார்த்தால் போதாது, எத்தனை குறுகிய காலத்தில் அந்த வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்று குஜராத் ஆதரவாளர்கள் கூறுவதால், அந்தக் கோணத்திலிருந்தும் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால், குஜராத் நிச்சயம் எங்கோ முன்னேறிவிடும் என்று பார்த்தால் இருந்த 9-வது இடத்திலிருந்து 12-வது இடத்துக்குச் சரிந்துவிட்டது!
சுருக்கமாகச் சொல்வதென்றால், குஜராத் மாநிலத்தை எந்தக் குறியீடுகளின்படி பார்த்தாலும் மாதிரி மாநிலமாக'த் தெரியவில்லை. சராசரி மாநிலமாகவே இருக்கிறது. வளர்ச்சி அடிப்படையில் குஜராத்தான் மாதிரி மாநிலம் என்றால், ஹரியானா, கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றையும் அப்படித்தான் அழைக்க வேண்டும். பல்வேறு அம்சங்களில் தமிழ்நாடும் கேரளமும் பட்டியலின் முதல் இரு இடங்களில் மாறி மாறி வருகின்றன.
அப்புறம் ஏன் குஜராத் மாதிரி?
தரவுகளும் புள்ளிவிவரங்களும் குஜராத்தைச் சராசரி மாநிலமாகத்தான் காட்டுகின்றன என்றால், அதை முன்னோடி மாநிலமாகக் கருதியது ஏன்? தன்னுடைய நண்பர்கள் சிலரின் உதவியுடன் நரேந்திர மோடிதான் இந்த எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கருத வேண்டும். மற்றொரு வலுவான காரணமும் இருக்கிறது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான பிஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலங்களாக வகைப்படுத்தியிருந்தனர். இந்த மாநிலங்களின் ஆங்கில எழுத்தில் முதலெழுத்துகளைச் சேர்த்தெழுதி பிமாரு' மாநிலங்கள் என்று அழைப்பார்கள். பிமாரு' மாநிலங்களின் பின்தங்கிய நிலையை வளர்ந்த மாநிலங்களுடன் ஒப்பிடுவது வழக்கம். அந்த வழக்கத்தின்படி குஜராத் ஒப்புநோக்கப்பட்டு, சிறந்து விளங்குவதாகப் பாராட்டப்பட்டது. பிமாரு' மாநிலங்களில் பற்றாக்குறையான அடித்தளக் கட்டமைப்பு வசதிகள், மோசமான பொதுச் சேவைகள், மோசமான சமூக வளர்ச்சிக் குறியீடுகள்தான் கண்ணில்பட்டன. எனவே, அவற்றைவிட குஜராத் சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது.
நன்றி ! - இந்து (ஆங்கிலம்)