சனி, பிப்ரவரி 25, 2012

காவல் கோட்டம் குத்து வெட்டு ..! ( ஒன்று )

வரலாற்றுப் புதினங்கள்

இணையத்தில் இப்போது நிகழ்கின்ற காவல் கோட்டம் சார்ந்த  அடிதடியில் நானும் கட்டாரியுடன் நுழையலாமா என்று யோசிக்கிறேன்..! 
வில்லவன் கோதை
 
எப்போதுமே பாடபுத்தகங்களில் சொல்லப்படுகிற தகவல்கள் அத்தனை எளிதாக நினைவிற்கொள்ளத்தக்கதாய் இருந்ததில்லை. ஆனால் அதே தகவல்கள் செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் பார்க்கப்படும்போது சூடாகவும் சுவையாகவும் இருப்பதுண்டு.
செங்கிஸ்கானின் சாகசங்களை ஆறாம் வகுப்பில் ஆசிரியர் கற்பித்தபோது ஆசிரியரின் வித்தியாசமான வடிவத்தை வரைந்து பார்த்தவன் நான்.ஆனால் பின்னாளில் அந்த சாகச வாழ்க்கையை புத்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் தேடித்தேடி வாசித்திருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை வரலாற்று நிகழ்வுகள் ஓடிப்போன ஒன்றாகவே கருதுகிறேன்.. அவை காணாமற் போன பல்வேறு தகவல்களின் அணிவகுப்பு. கண்டெடுக்கப்பெற்ற அதிகாரபூர்வமற்ற அல்லது அனுமானிக்கப் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களின்    குறிப்புகள்.ஆனால் அவை ஒருமண்ணின் வருங்காலத்தின் தொடர்ச்சி.அவை படைப்பாளிகள் கரங்களில் சிக்கும்போது உயிர் பெற்று சில சமயங்களில் எளிய மக்களையும் சென்றடைவதுண்டு. அந்த வரலாற்றுத்தகவல்கள் சிறப்புறுவதும் சீரழிவதும் அந்த படைப்பாளிகளின் படைப்புத்திறனையே சார்ந்திருக்கிறது.

இப்படித்தான் வரலாற்று புதினங்களை நான் அறிந்திருக்கிறேன்.

ஒற்றைச்சிலம்பு ஒன்று கோவலனின் கொலைக்கு காரணமானதை அறிந்த கண்ணகி அடுத்த சிலம்பின்மூலம் கோவலன் கள்வனல்ல என்றுரைக்க பாண்டிமன்னனை பார்க்கிறாள்.சிலம்பைத் திருடியவன் பொற்கொல்லன் என்று பேசப்படுகிறது..இது வரலாற்று கழிவுகளில் கண்டெடுக்கப்பெற்ற ஒரு தகவல். இந்தத்தகவல் சிலப்பதிகாரம் என்றொரு காவியம் ஏற்பட காரணமாயிற்று.
அக்கினி முதல் அத்னை தெய்வங்கள் சாட்சியாக கண்ணகியின் கால்களில் சிலம்பணிவித்து கைபிடித்த கோவலன் அந்த சிலம்பை  வருமையின் கொடுமையில் கழற்றியபோது தானே கள்வன் ஆனான் என்று எழுதியது இன்றைய படைப்பாளி ஒருவனின் கற்பனை. (தினமணி கதிரில் எழுத்தாளர் அருணன் எழுதியது என்று நினைக்கிறேன் )
தஞ்சை பெருவுடையார் கோயிலின் கோபுரத்தின் உச்சியிலே  உட்கார்ந்திருக்கிற அத்தனை பெரியபாறை அத்தனை உயரத்துக்கு  அந்த நாளில் எப்படி கொண்டு செல்லப்பட்டது..தஞ்சையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சாய்தளம் கட்டி உருட்டியிருப்பார்களோ... தெரியாத அந்த தகவல்தான் படைப்பாளியின் கற்பனை. அதில் நசுங்கிச் செத்துப்போன எத்தனையோ தொழிலாளிகள் படைப்பாளி பெற்றெடுத்த பாத்திரங்கள்.

கண்டுகொள்ளப்பட்ட அல்லது கண்ணுக்குப் புலப்பட்ட தடங்களில் இருந்து இம்மியும் விலகாமல் கட்டுப்பாடற்ற தெம்மாங்கு இசையோடு பயணிப்பது போன்றதே வரலாற்று புதினங்களை படைப்பது.
நாடு விடுதலைக்கு முன்பிருந்தே வரலாற்று நாவல்கள் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டது உண்டு. இருந்த போதிலும் அய்ம்பத்திஒன்பது அறுபதுகளில் பேராசிரியர் கல்கியும், சாண்டில்யனும் எழுதத்துங்கிய போதுதான் எளிய வாசகர்களின் பார்வை இந்த வரலாற்றுத்தளத்துக்கு திரும்பியது. அதே சமயம் வரலாற்று வடுக்கள் திரைத்துறையையும் ஈர்த்தது.ஆனால் அதில் வரலாறின்றி முழுதுதும் கற்பனையால் நிரப்பப்பட்டது.ஆண் பெண் பாகுபாடின்றி அத்தனை வாசகர்களும் ரசிகர்களும் அன்று போட்டியிட்டு அந்த வரலாற்றுத் தொடர்களை வாசித்ததையும் கற்பனைகள் முழுதும் நிரம்பிய திரைப்படங்களை ஓடி ஓடி பார்த்ததையும் பார்த்திருக்கிறேன்.
அன்று எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் யவனராணியையும் திரும்பத் திரும்ப அச்சிட்டு இன்றும் 34 ,35 என்று புத்தக சந்தைகளை வெற்றிகரமாக நிகழ்த்துவதையும் பார்க்கவேண்டும்..கல்கி பொன்னியின் செல்வனை படைக்க வரலாற்று சான்றுகளுக்காக ஈழம் வரை பல்வேறு இடங்களை தேடி அலைந்ததையும்  படித்திருக்கிறேன்.அவர்அந்த புதினத்தில் சொல்லிய பல்வேறு இடங்கள் இன்னும் இந்தமண்ணில் சாட்சியாக நிற்கின்றன.
அவர் எழுதிய சிவகாமியின் சபதமும் பார்த்திபன் கனவும் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றதை எவரும் ஒதுக்க முடியாது. கலைஞர் எழுதிய ரோமாபுரிப்பாண்டியனும் ஒரு நல்ல வரலாற்று நாவலே. ஜெகசிற்பியனின் ஆலவாய்அழகன், திருச்சிற்றம்பலம் போன்ற புதினங்கள் அன்னாளில் ஆர்வமுடன் படிக்கப்பட்டவை.  அன்றைய வழக்கப்படி அரசபரம்பரையை முன்னிருத்தியே எழுதப்பட்டு வந்த புதினங்களிலிருந்து நா பார்த்தசாரதியின் மணிபல்லவம் குடிமக்களை கதைக்களமாக்கி எழுதப்பட்டு வரலாற்று புதினங்களில் தனித்து  நின்றது.

இதுபோன்ற புதினங்கள் படைத்தவர்களிலேயே நாபாவும் கோவி மணிசேகரனும் முறையாக தமிழில் பட்டம் பெற்றவர்கள் என்பதும் பிழையற்ற மொழியடைக்கு அவை பெரிதும்  துணையாயிருந்தவை. என்பதையும் அறிந்திருக்கிறேன்.
வரலாற்று புதினங்களைப்பொறுத்தவரை அறிவுக்கு புலப்பட்ட அல்லது புலப்படுகின்ற வரலாற்று வடுகளில் இருந்து நகராமல் கற்பனையோடு கதைசொல்லுவதே வரலாற்று நாவல்களின் மறபாக இருந்திருக்கிறது. .மேலே குறிப்பிட்ட அத்தனை புதினங்களும் அப்படித்தான் எழுதப்பட்டது.
கச்சணிந்த பெண்களும் திமிறுமும் புரவிகளும் உறைவாளும் உறையூர் ஒற்றர்களும் உலாவருவது மட்டுமல்ல வரலாற்று புதினங்கள் என்று எழுத்தாளர் சுஜாதா சொல்லுவதுண்டு.
மணமுடித்த மறுநாள் நாடுமுழுதும் பரவலாக ஊட்டப்பட் விடுதலை வெறியில்சிக்கி வெள்ளைக்கார ஆஷ்துரையை சுட்டு வீழ்த்திய வாஞ்சிநாதனின் கருகிப்போன வாழ்க்கையை வரலாற்றோடு கற்பனையை இணைத்து சொல்லுவது கூட வரலாற்றுப் புதினம்தான். அறுபத்தேழில் இந்தி ஆதிக்கத்திற்கெதிரான மொழிப்போரில் சிக்குண்டு சீரழிந்துபோன ஒரு கற்பனையான இளைஞனின் கதையை எடுத்து எழுதினால் கூட வரலாற்று புதினம்தான்.
இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி சுயசரிதை கூட வரலாற்றுப் பின்னணில் எழுதப்பட்ட சுய நூல்தான். 
புலப்படுகின்ற அல்லது புலப்பட்ட வரலாற்றுத்தடங்களை புதினத்தின் முதுகெலும்பாக அமைத்து கற்பனையும் மொழியும் மனங்கவரும் உடலாக பெற்றெடுக்கவேண்டும்.
சரித்திர அல்லது வரலாற்று நாவலுக்கான வடிவம்...அவ்ளவுதான் என்று நினைக்கிறேன்.. வெரும் முதுகெலும்பு மட்டுமே வரலாற்று நாவலாக உருவெடுக்க முடியாது
வெரும் வரலாற்றை திரும்பச்சொல்லும் எந்த எழுத்தும்  வெரும் வரலாறாகத்தான் இருக்கமுடியும். நாவலாக முடியாது..
அதைப்போல வரலாற்றிலிருந்து நகர்ந்து எழுதப்படும் கற்பனைகள் வெரும் கற்பனை நாவல்கள்தாம்.அவை வரலாற்று நாவல்களாக முடியாது.

 ---------------------------------------------------------------
(  காவல் கோட்டம்  இரண்டில் பார்க்கலாம் ! )
இடுகை 0085

4 கருத்துகள்:

  1. //புலப்படுகின்ற அல்லது புலப்பட்ட வரலாற்றுத்தடங்களை புதினத்தின் முதுகெலும்பாக அமைத்து கற்பனையும் மொழியும் மனங்கவரும் உடலாக பெற்றெடுக்கவேண்டும்.
    சரித்திர அல்லது வரலாற்று நாவலுக்கான வடிவம்...அவ்ளவுதான் என்று நினைக்கிறேன்.. வெரும் முதுகெலும்பு மட்டுமே வரலாற்று நாவலாக உருவெடுக்க முடியாது//

    super....

    பதிலளிநீக்கு
  2. இனிய தீபக்
    உங்கள் தொடர்ந்த வாசிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
    நன்றி !
    பாண்டியன்ஜி
    மதுரைச்சரவணன் தாங்கட்கு
    தாங்கள் பாராட்டுக்கு மகிழவும் நன்றியும்..
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு
  3. நன்றாக இருந்தது, ஐயா. பத்திகளுக்கு இடையில் ஓர் இடைவெளி மட்டும் விட்டு விடுங்கள். படிக்கும் எங்கள் கண்களுக்கு வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !