செவ்வாய், மே 11, 2010

2011 - மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்கள்


இந்த தேசத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கி விட்டது. நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகையும் அதற்கேற்ப வருங்கால திட்டங்களை வடிவமைக்க
மத்தியஅரசுக்குஇந்தகணக்கெடுப்பு உதவக்கூடும். கண்டறியும் விபரங்கள் உண்மையாகவும் தீட்டுகின்ற திட்டங்கள் தெளிவாகவும் இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற கணக்கெடுப்பு வருங்கால தேவைகளுக்கு நிச்சியம் உபயோகமாக இருக்கக்கூடும்.இந்த தேசத்தின் மக்களோடு பெருமளவு கலந்து காணப்படுகிற அரசின் மதிப்பு மிக்க பணியாளர்களாக விளங்கும் ஆசிரியர்கள்தாம் வீடு வீடாக சென்று விபரங்கள் சேகரிக்க போகிறார்கள். வீடு வீடாக சென்று ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அணுகும் போது நீ என்ன ஜாதி எனறு கேட்டு சங்கடபடுத்த வேண்டாம் என்றே மன்மோகன் அரசு எண்ணியிருக்கவேண்டும்.
இருப்பினும் ஜாதியை ஒழிக்கப் பிறந்த இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் விடுவதாயில்லை.நாட்டில் எத்தனை ஜாதிகள் உண்டு என்பது தெளிவாக தெரிந்தால்தானே ஜாதியை அடியோடு ஒழிப்பதற்கு வசதியாயிருக்கும். வரிந்து கட்டிக்கொண்டு நாடாளமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள். எதற்கும் அசைந்து கொடுக்காமல் வசதியாக தீர்மானங்களை நிறைவேற்றும் நடுவண அரசு கூட இந்த விஷயத்திற்கு செவி சாய்த்து விட்டது. இறுதியாக ஒவ்வொரு இந்தியனையும் என்ன ஜாதி என்று கேட்பது என்று முடிவாயிற்று. இப்படி ஒரு கணக்கெடுப்பு ஜாதிய கட்சிகளுக்கு எதிராக முடிந்தாலும் வியப்போன்றும் இல்லை. வழக்கமாக எண்ணிக்கையை உயர்த்திக்காட்டி குரல் எழுப்பி வந்த ஜாதிய கட்சிகளுக்கு தங்கள் பலம் என்ன என்று தெரியப்போகுறது. அடுத்து-
தேசத்தின் மிக மிக முக்கியமான இந்த கணக்கெடுப்பில் ஆசிரியர்களை ஈடு படுத்துவது குறித்து எதிரான குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கின்றன.இந்த கூச்சலில் பள்ளிப்பணியை பகுதிநேரப்பணியாக பாவிப்பவர்களின் குரல்களை ஒருவாறு இனம் கண்டுகொள்ள முடிகிறது. சொந்த மண்ணிலேயே அரசுப்பணி. கணவன் மனைவி இரட்டை சம்பளம்,பகுதிநேர இதர வருமானம். வாழ்வின் வசதிகளை பெரும்பாலும் நிறைவு செய்தநிலை -
இவைகள்தாம் இன்று தேசத்துக்கு தேவையான முக்கிய பணியை ஒதுக்க நினைக்கிறது.
இந்த நாட்டின் அனைத்து மக்களோடும் ஒன்றி வாழும் அரசின் மதிப்புமிக்க பணியாளர்கள் ஆசிரியர்கள்.இது போன்ற புள்ளியியல் விபரங்கள் சேகரிக்க ஆசிரியர்கள்தாம் பொருத்தமானவர்கள் என்று அரசு கருதுகிறது. நாட்டின் வருங்கலத்தலைமுறையை வடிவமைத்து கொடுப்பதோடல்லாமல்,வருங்கால வாழ்க்கை முறையை எதிர் கொள்ளத் தேவையான விபரங்களைத் தேடித்தருவதிலும் ஆசிரியர்களுக்கு மகத்தான பங்கிருக்கிறது.
இந்திய நாடு ஜனநாயக முறையில் தேர்தல்களை எதிர் கொள்ளும்போது சிறப்புமிக்க தேர்தல் பணிகளில் ஆசிரியர்களே முன்நிற்கின்றனர். இது போன்ற பணிகளுக்கு தேவையான அளவே ஆசிரியர்களை அரசு ஈடுபடுத்திக் கொள்ளுகிறது. தேவையான விடுமுறையும் பணிக்கான வெகுமதியும் தாராளமாகவே அரசு செலவழிக்கிறது.
60,70 களில் ஆசிரியர்களுக்கான பணி அத்தனை எளிதானதல்ல. அதேசமயம் இன்று அனைத்து துறைகளிலும் ஊறி கிடக்கும் ஊழலும் ஒழுங்கீனமும் அன்று கல்வித்துறையை பெருமளவு பாதித்திருக்கவில்லை.. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அன்று கஷ்ட ஜிவனம்தான். குறைந்தபட்சம் கவுரவமும் இல்லாத நிலை. அன்று அரசுத்துறைகளிலே வருமானம் இல்லாத துறைகளில் முதன்மையானது கல்வித்துறையாக இருந்தது. இன்றோ நிலமை வேறானது.
அய்ந்தாண்டுகளுக்கு முன் நான்கு இருக்கைகளுடன் துவக்கப்பட்ட கல்வி நிலையங்கள் இன்று வானத்தை முட்டும் கட்டிடங்களுடன் கல்லூரிகளாக நிமிர்ந்து நிற்கின்றன. கல்வியின் தரம் தேவையான அளவு உயராவிடினும் ஆசிரியர் நிலை உயர்ந்தே காணப்படுகிறது.இத்தனைக்கும் காரணமான இந்த அரசுக்கு தேவையான விபரங்களை உண்மையுடன் தேடித் தருவது அரசின் மதிப்பு மிக்க ஊழியர்களான ஆசிரியர்கள் கடமை. அப்போதுதான் வருங்காலத் தேவைகளை இந்த நாடு எதிர் கொள்ள வசதியாயிருக்கும்.
-------------------------------------------
கெள-டில்யன்
இடுகை 0013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !