ஞாயிறு, அக்டோபர் 05, 2014

விகடனின் தீர்ப்பு !

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு!
நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில், 'நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்’ என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள 'முதல் முதலமைச்சர்’ ஜெயலலிதாதான்!
ஆனால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு... 17 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இடையில் ஒரு தலைமுறையே பிறந்து வளர்ந்துவிட்டது. '66 கோடி ரூபாய் எல்லாம் ஓர் ஊழலா?’ எனக் கேட்கும் அளவுக்கு, ஊழல்களின் பரிமாணம் அதிபயங்கரமாகக் கிளைத்திருக்கிறது. இருந்தாலும், நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் தீர்ப்பு, அரசியல்வாதிகளுக்குப் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அநீதி இழைத்தால் எத்தகைய அதிகாரம் படைத்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற நம்பிக்கையை மக்களுக்கும், 'முறைகேடான வழிகளில் சம்பாதித்தால், நிம்மதியற்ற வாழ்வும் அவமானமும் தலைகுனிவும்தான் இறுதியில் மிஞ்சும்’ என்ற நிதர்சனத்தை அரசியல்வாதிகளுக்கும் அழுத்தமாக உணர்த்தியுள்ளது.
'மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் சம்பளம் பெற்ற ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்?’ என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக்கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. விரைந்து நீதி வழங்குவதில் ஏற்படும் இடர்களைக் களைவதற்கான தருணமாக, நீதித் துறை இதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால், 'செயற்கை’யாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!  
கடந்த ஆண்டு வரை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றவழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட‌ ஒரு மக்கள் பிரதிநிதி 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்தால், பதவியில் தொடர முடியும். ஆனால், கடந்த வருடம்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி பறிக்கப்படும் விதமாக‌ச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தம்தான் இப்போது ஜெயலலிதாவின் பதவியை உடனடியாகப் பறித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார்!
தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன;  கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய நிலை ஏற்படும் என்பதைக் கணித்து, 'கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் அளிக்கக் கூடாது’ என்ற ஆற்றுப்படுத்தும் அறிக்கைகூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சியினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.  
மறுபுறம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து நாடே பேசுகிறது. ஆனால், இந்தத் தேசத்தில் ஜெயலலிதா மட்டும்தான் ஊழல் அரசியல்வாதியா? நீதித் துறையின் சாட்டை சுழல வேண்டிய  ஊழல்வாதிகள் கட்சி, ஆட்சி பேதமின்றி நாடெங்கும் நிறைந்துள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க‌ ஊழல்... என நம் தேசத்தை இறுக்கிச் சுற்றி வளைத்திருக்கிறது ஊழல் எனும் கொள்ளைநோய். நீதிமன்றத்தை அலைக்கழித்து, மக்கள் மன்றத்தை அவமதித்து, 'மாண்புமிகு’ அந்தஸ்துடன் உலாவரும் அவர்கள் ஒவ்வொருவரும், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக, முதல் படியாக அமையட்டும்!

நன்றி ! ஆனந்தவிகடன் 08 10 2014


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !