இன்று என் மூத்த பேரன் சிபி பாலகிருஷ்ணன் தனது பதினாறாவது அகவையை எளிமையாக நினைவுகூர்ந்தான்.அந்த மகிழ்வூட்டும் தருணங்களில் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்களை அவனிடம் பகிர்ந்து கொண்டோம்.
இந்த மகிழ்வின் தொடர்ச்சியாக நேற்று மாலைப்பொழுதில் ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு சென்றிருந்தோம். துறையூர் நெடுஞ்சாலையில் செஞ்சேரி –
செட்டிக்குளம் திருப்பத்தில் அந்த குழந்தைகள் உண்டு உறைவிடப்பள்ளி இருந்தது.பதற்றமான போக்குவரத்தற்ற சாலையின் ஓரத்தில் விசாலமான பரந்த இடத்தில் அந்த வித்யாஸ்ரமம்
நிறுவப்பட்டிருந்தது. குழந்தைகள் ஓடியாடி விளையாடுதற்கும் கூடி ஒன்றாக உண்பதற்கும் தனித்தனியே உறங்குதற்கும் விசாலமான அறைகள் நிறைந்திருந்தன. குழந்தைகள் தனித்து உறங்கத் தேவையான அடுக்கடுக்கான கட்டில்களையும் பார்த்தேன்.
இதற்கான ஒட்டுக்கட்டிடங்கள் தனலட்சுமி சீனுவாசன் கல்வி நிறுவனங்களின் கொடையென்று சொன்னார்கள்.நாங்கள் சென்றிருந்தபோது ஓரு ஆசிரியையும் உணவு தயாரிக்க ஐந்தாறு ஆண் ஊழியர்களையும் பார்த்தோம்.
அரசாங்கத்தின் எல்லாருக்கும் கல்வியென்ற திட்டத்தின் கீழ் இந்த வித்யாஸ்ரம்ம் அங்கீகரிக்கப்பட்டு எட்டாம் வகுப்புவரை தனித்தனி அறைகளில் முறையான கல்வியும் கற்பிக்கப்படுகிறது.இதற்கென வரும் ஆசிரியைகளுக்கான ஊதியமும் அரசே வழங்குகிறது.
மூன்றிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட நூறு குழந்தைகளை அந்த குடிலில் பார்த்தோம்.
இந்த குழந்தைகள் அனைவருமே எயிட்ஸ் நோய்களுக்காளான பெற்றோர்களிடமிருந்து பிரித்தெடுத்து பாதுகாக்கப்படுகிறவர்கள்.
திருச்சியில் வாழும் மனிதநேயமிக்க ஒரு மருத்துவ த்தம்பதிகள் இந்த குடிலை ஏற்படுத்தி நிராயுதபாணியாக கைவிடப்பட்ட குழந்தைச் செல்வங்களை காத்து வருவதாகச் சொன்னார்கள்.குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ சோதனைகளையும் தொடர்ந்து செய்துவருகிறார்களாம்.தனியார் உதவிகள் அவ்வப்போது இந்த காப்பகத்துக்கு கிடைத்தாலும் எதனையும் எதிர்பாராமல் ஏழு ஆண்டுகளாக இந்த சேவையை தொடர்வதாக சொன்னார்கள்.
எட்டாம் வகுப்பைத்தாண்டிய குழந்தைகள் விருப்பப்படியே இந்த உறைவிடத்திலிருந்து மேற்கல்விபயில அரசுப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர் .தொண்ணூறு விழுக்காடு மதிப்பெண் பெற்று பாலிடெக்னிக் ஒன்றில் சேர்ந்திருந்த ஒரு மாணவனையும் பார்த்தேன்.
கடவுளின் குழந்தைகள் இவர்கள்தான் என்று தோன்றிற்று.
பொழுது சாய்ந்த மாலை நேரத்தில் நாங்கள் சென்றபோது அந்த குழந்தைகள் வரிசை வரிசையாக அமர்ந்து எங்களுக்கு அன்பான வரவேற்பளித்தனர்..அந்த பிஞ்சு உள்ளங்களைப் பார்த்த அந்த கணங்கள் என்ன காரணத்தாலோ எங்கள் மகிழ்வை கலைத்தன. குழந்தைகள் விரும்பிக்கேட்டிருந்த பென்சில் பேனா நோட்டுப்புத்தகங்கள் கிரீம் ரொட்டிகள் கடலைத்துண்டுகள் ஆகியவற்றை எனது மருமகன் பாலகிருஷ்ணன் அனைவருக்கும் வினியோகித்தார். மகிழ்வோடு பெற்றுக்கொண்ட அந்த குழந்தைகள் இன்னும் என்னன்ன வேண்டும் என்பதை உரிமையோடு அவரிடம் கேட்டது எங்களை பெரிதும். மகிழ்வுக்குள்ளாக்கிற்று.
சென்னையிலிருக்கும் எனக்கு இந்த தனியார் குழந்தைகள் காப்பகங்களோடு ஏற்பட்ட தொடர்பு அத்தனை மகிழ்வூட்டுவதாக இருந்ததில்லை.அந்த நிலையில்
நாங்கள் சென்றிருந்த இந்த காப்பகம்
மிகுந்த மனநிறைவைத்தந்தது என்றே சொல்லவேண்டும்.
முடிவில் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும்.
தாத்தா எனக்கு பிறந்த நாளென்று இங்கே சொல்லிவிடாதீர்கள்.!
முதன் முதலாக அந்த குழந்தைகளை கண்ணுற்றபோது .
. .என் பேரன் சிபி சொன்ன வார்த்தைகள் என் நெஞ்சை பெரிதும் நெகிழவைத்தது .அவனது முகத்தில் ஏதோவொரு குற்ற உணர்வு இழையோடியதைப்பார்த்தேன்.
_____________________________________________________________________
பெரம்பலூருக்கு அருகில் வாழும் நண்பர்கள்
வசதியும் வாய்ப்பும் இருந்தால் ஒருமுறை அந்த குழந்தைகளை பாருங்கள்.
- பெரம்பலூரிலிருந்து வில்லவன்கோதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !