வியாழன், மார்ச் 01, 2012

மீண்டும் ஒரு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் !

இராஜேந்திரசோழன்




     ( வேர்களின் 17 , 18 , 19  பதிவுகளில் தந்தை பெரியார் பல்வேறு பணிகளுக்கிடையில் வெளிப்படுத்தியிருந்த மொழிச்சீர்திருத்தம் சார்ந்த பேச்சுக்களை இணைய வாசகர் பார்வைக்கும் மேலான சிந்தனைக்கும் தந்திருந்தேன்.மொழியின் தனிச்சிறப்பு போன்ற கருத்துக்களுக்கு முக்கியம் தராமல் தமிழ்சந்த்தியினருக்கு தமிழ் எளிதாக்கப்படவேண்டுமென்ற எண்ணத்தை பண்டிதர்கள் யோசிக்கவேண்டுமென்றே பெரியார் பேசியிருந்தார்.
மண்மொழி ( மணிமொழி அல்ல ) இதழின் ஆசிரியரும் முற்போக்கு எழுத்தாளருமான திரு .ராஜேந்திரசோழன் ( அஸ்வகோஷ் ) மே 2011   மண்மொழி இதழில் எழுதிய இது சார்ந்த இன்னொரு கருத்தையும் இப்போது பதிவு செய்கிறேன். பாண்டியன்ஜி )

 அய்...கய்...மை...பை....யும் அடிப்படைத்தருக்கமும்.
இராஜேந்திர சோழன்

பெரியார் கடைபிடித்து வந்து எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ் எழுத்துச்சீர்திருத்தத்தில் தருக்கப்பொருத்தமற்ற ஓர் அம்சம் குறித்து தமிழ் அறிஞர்களிடம் விவாதிக்கவேண்டும் என்கிற ஒரு சிந்தனை நீண்ட நாள்களாக கிடப்பில் இருந்தது.
ஐ என்னும் உயிரெழுத்தோடு புணரும் மெய்யெழுத்துக்களை கை ,  ஙை ,  ஞை , டை  என எழுதிவர ணை , லை , ளை , னை என்னும் எழுத்துக்களை மட்டும் முன்பு தற்போது எழுதுவது போல் அல்லாமல் யானைக்கொம்பு எனப்படும் கொம்பு போட்டு எழுதும் வழக்கம் இருந்தது. அதை நீக்கி கை , ஙை முதலான எழுத்துக்களுக்குப் பொருந்தும் தருக்கம் பிற ண , ல , ள , ன ஆகிய எழுத்துக்களுக்குப் பொருந்தாதா எனக்கேட்டு அதன்படி தற்போது நாம் எழுதுவது போன்ற நடைமுறை பழக்கத்துக்கு வந்த்து. இது சரி.
ஆனால் சிலர் கை , ஙை , சை , ஞை , என்று எழுதாமல் கய் , ஙய் , மய் , ...லய் , னய்  என எழுதுவதுடன் ஐ என்னும் உயிரெழுத்துக்குப்பதில் அய் எனவும் எழுதிவருகின்றனர். இதுதான் என்ன நியாயம் , இதற்கு என்ன தருக்கம் என்பதுதான் கேள்வி.
தமிழ்மொழியைப் பொறுத்தவரை உயிரெழுத்து 12 , மெய்யெழுத்து 18 , உயிர் மெய்யெழுத்து 216 , ஆயுத எழுத்து 1 ,மொத்தம் 247 என்பது அடிப்படை. காலத்துக்கு காலம் எப்போதாவது மாற்றங்கள் பெற்று வரும் தமிழ் அதன் வரிவடிவில்தான் மாற்றம் பெற்று வந்துள்ளதே தவிர மற்றபடி அதன் அடிப்படை அப்படியேதான் நீடித்து வந்துள்ளது.
இப்படியிருக்க ஐ யை நீக்கி அய் என்று எழுதுவானேன். இதற்கான தேவை என்ன. இதற்கான நியாயம் என்ன. ண , ல , ள , ன ,எழுத்துக்களில் யானைக்கொம்பைப்பயன்படுத்தி வந்தபோது தட்டச்சுப்பொறிகளில் அதற்கான தனிக்குறி தேவைப்பட்டதால் அதைநீக்கி பிற எல்லா எழுத்துக்களுக்கும் போடும் ¨ - குறியைப்போட்டுக்கொள்ளும் ஒரு தேவை இருந்தது..ஆகவே அப்போது அந்த சீர்திருத்தம் தேவைப்பட்டது.அதற்கு ஒரு நியாயம் இருந்தது.ஆனால் இதற்கு என்ன தேவை. என்ன நியாயம் இருக்கிறது.
இது நியாயமற்றதாக இருப்பதுடன் இது தொடர்பான வேறு சில கேள்விகளையும் இது எழுப்புகிறது. ஐ க்கு பதில் அய் என எழுதினால் மாணவர்களுக்குத் தமிழில் உயிரெழுத்து எத்தனை என்று சொல்லிக் கொடுப்பீர்கள். தமிழில் உள்ள எழுத்துகளில்  அதன் ஒலிக்குறிப்பில்  நெடிலுக்கு இரண்டு மாத்திரையும் குறிலுக்கு ஒரு மாத்திரையும் , மெய்யெழுத்துக்கு அரை மாத்திரையும்  என்றும்  இதன்படி உயிரெழுத்துக்களில் நெடில் ஏழுக்கும் இரண்டு மாத்திரை குறில் ஐந்துக்கும் ஒரு மாத்திரை எனச்சொல்லிக்கொடுக்கிறோமே, இப்படி இருக்க ஐ க்கு பதில் அய் போட்டால் அதை ஈடு செய்யுமாக ஐ நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்றால் அய் க்கு ஒன்றரை மாத்திரை ஒலிக்குறிப்பில் இரண்டு மாத்திரை ஐ யை ஈடு செய்யுமா.இது தமிழ் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்காதா. மரண்பாட்டை ஏற்படுத்தாதா.
தவிரவும் தமிழ் உயிரெழுத்தில் ஔ தவிர பிற அனைத்தும் தனித்த ஒற்றை எழுத்துக்களே.அப்படியிருக்க ஐ என்னும் தனித்தொற்றை எழுத்தை நீக்கி அய் என எழுதுவானேன். தவிர உயிரெழுத்து வரிசையில் ய் என்கிற மெய்யெழுத்தை கொண்டுவருவதேன்.இது மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாதா.ஏற்கனவே உள்ள ஔ வே ஒள எனத்தனித்தனி எழுத்தாக தொடக்க நிலை பயிலும் மாணவர்களால் பாவிக்கப்படுவதும் உச்சரிக்கப்படுவதும் நேர்கிறதே.இப்படி இருக்க இது வேறு புதுக்குழப்பத்தை ஏற்படுத்தாதா..
தவிரவும் தமிழ் மொழியின் தனிச்சிறப்பாக பலவற்றைக் குறிப்பிடும் அறிஞர்கள் தமிழில் தனி எழுத்துக்களே தனிப் பொருள் தரும் தனிச் சொல்லாக விளங்குவதைக் குறிப்பிடுவர். அதாவது வா , போ , கை , தை , பை , மை , வை , இப்படித் தனிப்பொருள் தரும் தனிச்சொல்லுக்கு நிகரான எழுத்துக்களை பய் , மய் , வய் , கய் என  எழுதுவது நியாயமா. இது விகாரமாகவும் இலக்கண அடிப்படைக்கு எதிராகவும் இல்லையா .இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.
ஏறகனவே தமிழில் பல எழுத்துச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு அதற்கேற்ப தட்டச்சுப்பொறிகள் வடிவமைக்கப்பட்டு அதற்கேற்பவே தற்போது ஒளியச்சு விசைப்பலகைகளும் வந்துள்ளன.
தட்டச்சுப்பொறியில் பலருக்கும் இருக்கும் கேள்வி எல்லா உயிர் மெய் எழுத்துக்களுக்கும் பொதுக்குறி பயன்பாடு இருக்க உ கரம் ஊ காரத்துக்கு மட்டும் அப்படி பொதுக்குறிகள் இல்லாமல் தனிக்குறிகள் பயன்படுத்த வேண்டியிருக்க அதாவது கு , கூ , சு , சூ ,ங , ஙூ , டு , டூ என இருக்க அதில் மட்டுமாவது சீர்திருத்தம் செய்யவேண்டும் என குறிப்பிட அதற்கான சில மாதிரிகளும் முன மொழியப்பட்டன.
ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. நவீனயுகம் , தொழில் நுட்ப வளர்ச்சி , எழுத்து எழுது கருவியில் எழுதுவது என்பதைவிடவும் எழுத்தைப் பொத்தானை அழுத்திப் பதிவு செய்யும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே தமிழில் இனிமேல் எந்த எழுத்துச் சீர்திருத்தமும் வேண்டாம்.அதற்குத்தேவையுமில்லை என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும்.
தவிர  முன் வைக்கப்படும் எந்த யோசனையும் பணியை எளிமை படுத்துவதாக இருக்கவேண்டுமேயல்லாது இடர் படுத்துவதாக இருக்கக்கூடாது.
ஆனால் கய் மய் பய் என்று எழுதுவது இடர்படுத்துவதாகவே உள்ளது. காட்டாக கணிப்பொறி விசைப்பலகையில் கை பை மை முதலான எழுத்துக்களை ஒளியச்சுசெய்ய இரு பொத்தான்களை அழுத்தினால் போதும். அதாவது ¨--க்கு ஒன்று .அதனோடு சேரும் எழுத்துக்கு ஒன்று..ஆனால் கய் , பய் , மய் ,என்று எழுத்துக்களை ஒளியச்சு செய்ய ஒவ்வொரு எழுத்துக்கும் மூன்று, மூன்று பொத்தான்களை அழுத்த வேண்டும். அதாவது அகர உயிர் மெய்யுக்கு ஒன்று யவுக்கு ஒன்று , புள்ளிக்கு ஒனறு என மூன்று பொத்தான்கள்.இது நம்மையறியாமல் நமக்கே தெரியாமல் நமது நேரத்தை வங்கும்.பணியும் கூடுதலாகும்.இது தேவையற்ற உழைப்பு விரயமும்.
ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு கய் , மய் , பய் , என்று எழுதுபவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைத்தாண்டி வேறு ஏதாவது நியாயம் இருந்தால் சொல்லட்டும்.. இல்லாவிட்டால் மரபுக்கும் விதிமுறைகளுக்கும் முரணாக விளங்கும் தேவையற்ற இப்பழக்கத்தைக் கைவிட்டு கை , மை , பை , என எழுதுவதே நியாயமானதும் சாலச்சிறந்த்துமாகும்.
_______________________________________________

இடுகை 0086


   

3 கருத்துகள்:

  1. ''...கை , மை , பை , என எழுதுவதே நியாயமானதும் சாலச்சிறந்த்துமாகும்....''
    எனது விருப்பமும் இதுவே. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. கோவைக்கவிக்கு
    உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் தமிழ் நேசத்துக்கும் நன்றி.
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !