சனி, நவம்பர் 19, 2011

இரவலாக கிடைக்கும் இரண்டு மணி நேரம் !

( இரவலாக இரண்டு மணிநேரம் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று இண்டி பிளாகரும் சர்ப் எக்சலும் சேர்ந்து கேட்டபோது....)
பாணடியன்ஜி
காலச்சக்கரம் தொடர்ந்து தொய்வின்றி சுழன்றுகொண்டே இருக்கிறது.இரவும் பகலும் மாறி மாறி மரணத்தை தழுவுகின்றன.சந்திரனும் சூரியனும் அலுப்பின்றி விண்ணுலகில் வலம் வந்து கொண்டேயிருக்கின்றன.
ஒவ்வொரு நொடி...ஒவ்வொரு நிமிடம்...ஒவ்வொரு மணி...சரித்திரம்
பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
இப்போது எடுக்கப்பட்ட நிழற்படம் அடுத்த மணித்துளியில் இறந்த காலமாகிறது.ஒவ்வொரு உயிரினங்களும்பெருதற்கறிய ஆயுளை நொடி நொடியாக சிந்திக்கொண்டிருக்கின்றன.
பூமியின் அச்சு சீராக சுழல இது போன்ற நியதி ஒருவேளை அவசியமாயிருக்கக்கூடும்.உயிரினங்கள் உணவுக்காக உழைப்பதற்கும் செழிப்பதற்கும் இருக்கின்ற இரவும் பகலும் தேவையாயிற்று.
காலப்போக்கில் மனிதகுலத்தின் சிந்தனைக்கும் செயலுக்கும் இருக்கின்ற பகற்பொழுது பத்தாததாயிற்று.அதன் பலனாக மனித குலத்துக்கு இரவும் பகலும் ஒன்றாயிற்று.உறவுகளும் நட்புகளும் உயர்ந்த போது மனித குலத்தின் ஆசைகளும் அளவின்றி போயிற்று.கடமைகளும் தேவைகளும் தொடர்ந்து கதவைத்தட்டின.அவற்றை ஈடுகட்ட இரவும் பகலும் பேதமின்றி உழைக்க வேண்டியிருந்தது.இந்த நியதி எனக்கு மட்டும் விதி விலக்காயிருந்ததில்லை.
பொழுது புலர்ந்து இயல்பான கடமைகளை முடித்து அலுவலகத்துக்கு புறப்படும்போது கடிகாரத்தின் சின்ன முள் ஆறை விட்டு நகர்ந்திருக்கும். இரண்டு மூன்று நகரப்பேரூந்துகளுக்கு காத்திருந்து ..காத்திருந்து ...மனித நெரிசலில் கலந்து ஆங்காங்கே மாறி மாறி பயணித்து அலுவலக வாயிலை கடக்கும்போது மணி ஒன்பதை எட்டியிருக்கும்.
நேற்றைய பணியில் தொய்வின்றியும் வருங்கால பணியில் சிரத்தையோடும் இருக்கின்ற ஊழியர்களோடு பகிர்ந்து பணியை முடிக்கும்போது பொழுது சாய்ந்திருக்கும்.ஒவ்வொரு நாளும் அனேகமாக அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது பெரும்பாலும் இருட்டத் தொடங்கியிருக்கும். மீண்டும் 
போக்குவரத்து நெரிசலில் போராட்டம்.பெரும்பாலான நாட்களில் வீட்டு ப்படிகளில் ஏறும்போது மணி பத்தைக்கூட தொட்டிருக்கும்.
உழைக்க வேண்டிய நேரத்தைவிட ஊர்தியில் பயணிக்கவேண்டிய நேரமே நகரவாசிகளுக்கு மிகுதியாயிருக்கிறது.பெரும்பாலான அரசு ஊழியர்கள் தினந்தினம் அலுவலகத்தை தொட்டுவிட்டு திரும்புவதையே பார்த்திருக்கிறேன்.
விபரம் அறிந்த நாட்களில் புத்தக வாசிப்பிலும் சித்திரம் தீட்டுதலிலும் தவிற பொழுதைப்போக்குகிற வேரெந்த சிந்தனையிலும் நாட்டம் இருந்ததில்லை.ஓடி விளையாடுவது உடலுக்கு உறுதி என்றாலும் அவற்றுக்கு என்னிடத்தில் இடமில்லாமற் போயிற்று.படிப்பு முடிந்து பணிக்கு சென்றபோது ஓவியம் மட்டும் என்னைவிட்டு விலகியது.வாசிப்பில் மொழிசார்ந்த புத்தகங்கள் விலகி தொழிற் நுட்ப புத்தகங்கள் முன்னுக்கு வந்தன.இருக்கின்ற நேரத்தில் பெரும்பகுதியை இன்று விழுங்கிக்கொண்டிருக்கும் திரைப்படமும் தொலைக்காட்சியும் கூட என் வாசிப்பிடம் நெருங்கியதில்லை.
அவசியமாகவோ அவசரமாகவோ சாலையில் செல்லுபோது பெரும்பாலான சாலையோர புத்தக கடைகள் பிடித்து பின்னுக்கு இழுப்பதுண்டு.புதிய புதிய நூலகங்களுக்குள் நுழையும்போது அந்தந்த பகுதி மக்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள் என்று அழுக்காறு அடைவதுண்டு.புதுபுது புத்தகங்களை
காணுந்தோரும் இருக்கின்ற நேரமல்ல இருக்கின்ற வயது பத்தாதே என்ற ஏக்கங்கள் ஏற்பட்டதுண்டு.ஒவ்வொரு முறையும் நூலகத்தைவிட்டு வெளியேறும் மணியோசை ஒலிப்பதற்கு முன் சுயுணர்வு பெற்றதேயில்லை.
ஒரு நாளில் இருக்கின்ற இருபத்திநான்கு மணிகளில் இப்போதிருக்கிற இயல்பான கடமைகள் தவிர்த்து குறைந்தபட்சம் எட்டு மணி நேரங்கள்தான் மிச்சமிருக்கின்றன.என்னதான் அயர்ந்து படுத்தாலும் அய்ந்து மணிகள் மட்டுமே உறக்கத்துக்கு கிடைப்பதுண்டு.
துப்புறவுத் துறையில் முன்னணியில் நிற்கும் சர்ப் எக்சல் இன்னும் இரண்டுமணிக்களை இரவலாக வாங்கித்தர முயலுகிறது.அந்த இரண்டு மணிகளை இரவலாக பெரும்போது அது முன்னதாக துண்டுவிழும் என் மணிக்கணக்குக்கு உதவக்கூடும்.அந்த இரண்டு மணிகளையும் இராப்பொழுதில்தான் சேர்க்க முயற்சிப்பேன். அந்த சலனமற்ற இரவு நேரங்களில் என்னுடைய வாசிப்பு பேராசைகளில் ஒரு துளியையாவது முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்று நம்புகிறேன்.
வணிக உலகில் சர்ப் எக்சல் துணிகளில் உள்ள கரைகளை அகற்றுவதாக அறிந்திருக்கிறேன் .மற்ற மாவுகளைப்போல கரைளை மறைப்பதில்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.அதைப்போலவே

நல்ல புத்தகங்கள் நம்மிடையே சேர்ந்திருக்கும் மன அழுக்குகளை அறவே அகற்றும் என்று நம்புகிறவன் நான்.
இன்றைய இளையதலைமுறை நல்ல புத்தகங்களை கைகளில் எடுக்க வேண்டும்.அப்போது மட்டுமே இந்த தேசத்தில் நல்ல சிந்தனைகள் துளிர் விடக்கூடும்.புதிய வெளிச்சம் தோன்றக்கூடும்.
இந்த நேரத்தில் என் நினைவுகளில் நின்றிருக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும்.முன்நாளைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை புற்று நோய்க்கான அறுவைசிகிச்சைக்கு மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.நான் படித்துக்கொண்டிருக்கிற புத்தகத்தில் இன்னும் சில பக்கங்கள் பாக்கி இருக்கின்றது.முடித்தவுடன் அழைத்துச் செல்லுங்கள்.என்றஅண்ணாவின் வாக்கியங்கள் வாசிப்பு அனுபவத்தின் உச்சத்தை இன்றையதலைமுறைக்கு உணர்த்தும்.
இடுகை 0077
( இந்த இடுகை இண்டி ப்ளாகர் - சர்ப் எக்சலை கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !