செவ்வாய், ஜூன் 14, 2011

கடிவாளம் அணிந்த குதிரைகள் !

பாண்டியன்ஜி
அன்பார்ந்த ஜெயமோகன் தாங்கட்கு,
இயற்கை எய்திய மாறுபட்ட கருத்து கொண்ட ஒரு சக பத்திரிக்கையாளனை கொச்சைப்படுத்தி தாங்கள் எழுதிய ஒரு பதிவுக்கெதிரான என் உணர்வுகளை கிணற்றுத் தவளைகள் என்ற தலைப்பில் வெளிப்படுத்தியிருந்தேன்.அந்த மின்அஞ்சலுக்கு மாறான உங்கள் ஞாயங்களை விரிவாகவே எழுதி இரண்டாம் முறையாக என் நினைவுகளில் இடம் பிடித்துவிட்டீர்கள் .அதற்காக என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என் பதிவில் உணர்வுகள் மேலீட்டால் ஒரு சில கடும் சொற்கள் இடம் பெற்றுவிட்டதைப் போலவே (அவையும் உங்களை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை அல்ல ) உங்கள் கண்ணியமான விளக்கத்திலும் ஆங்காங்கே ஒரு சில கண்ணி வெடிகள் காணப்பட்டதை உணர்கிறேன்.அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருந்த சினத்தையும் வன்மத்தையும் என்னால் உணரமுடிந்தது.
சின்னகுத்தூசி ஒரு தரம் தாழ்ந்த இதழியலின் மூத்த பிரதிநிதி என்றும் எந்த தளத்திலும் வாசிப்புத் திறனற்ற வணிக எழுத்தாளர் என்றும் மீண்டும் எழுதி உங்கள் திறனாய்வுத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.படைப்பாளிகள் திறனாய்வை கையில் எடுக்கும்போது ஏற்படுகிற மிகச்சாதாரண விபத்து என்றே இதனைக் கருதுகிறேன்.ஓரளவு எழுதிக்குவித்தவர்களுக்கு அதனை விஞ்சி எவரும் எழுதிட முடியும் என்று தோன்றுவதில்லை.
நீங்கள் குறிப்பிட்டது போல் சின்னகுத்தூசி இதழியலின் பிதாமகர் என்றோ அவருடைய எழுத்துக்கள் எதுவும் சாகித்ய அகாதமியின் தகுதிக்குட்பட்டது என்றோ எவரும் எழுதியதாக நினைவில்லை. நானும்  அப்படி எழுதவில்லை.நீங்கள் குறிப்பிட்டது போல அவர் எனக்கு எல்லாவகையிலும் பிடித்தமானவராக இருக்கமுடியுமோ என்னவோ எனக்குத் தெரியாது.தந்தை பெரியாரின் கருத்துகளுக்காக தன் வாழ் நாளை கழித்த ஒர் மூத்த பத்திரிக்கையாளர் என்றே நான்அறிந்திருக்கிறேன்.
காலச்சுவடு இதழுக்கு அவர் அளித்திருந்த நேர்காணலில் தன்நிலை குறித்து வெளிப்படுத்திய பண்பு போற்றத்தக்கது என்றே கருதுகிறேன்.
தந்தை பெரியாரின் சமுதாயக்கருத்துகள் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றிட முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சின்னகுத்தூசி இறுதிவரை அதே திசையில் பயணித்தவர்.பல்வேறு சமயங்களில் திராவிட இயக்கத்தின் தலைமைக்கேற்பட்ட தடுமாற்ங்களகூட அவரது பயணத்துக்கு இடையூராக அமைந்ததில்லை.
மறைந்து போனவர்களைப் பற்றிய மாயப்பிம்பங்களை இந்த சமூகம் தொடர்ந்து ஏற்படுத்தி ஊறு விளைவிக்கிறது என்பது உங்கள் வாதம்.இந்த குற்றச்சாட்டுக்கு தேசப்பிதா காந்தியோ அல்லது கர்மவீரர் காமராசரோ கூட விதிவிலக்கல்ல என்பதை உணர வேண்டும்.தனிப்பட்ட வாழ்விலிருந்து விலகி வெளியே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒவ்வொருவரும் விமரிசன வளையத்துக்குள் சிக்கியவர்தாம்.இதில் நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ராஜாஜி காமராஜர் மட்டுமல்ல,காந்திஜி நேருஜியும் கூட பெரியார் அண்ணா போன்றவர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.அரசியலில் மாறுபட்ட திசைகளில் பயணித்தாலும் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டியவர்கள். பல்வேறு சமயங்களில் இணைந்தும்
செயல்பட்டவர்கள்.அரசியல் அரங்கில் அன்றாட நிகழ்வுகளில் பதிலுக்கு பதில் பேசப்பட்ட விமர்சனங்களை பிய்த்தொடுத்து உங்களைப்போன்றவர்களதாம் தொடர்ந்து அவர்களை  இழிவு செய்கிறீர்கள்.அப்படி என்ன காந்தியும் காமராஜரும் விமர்சனத்துக்கு அப்பார்பட்டவர்கள் என்று கருதுகிறீர்களா.இப்போது கூட ஆங்காங்கே காந்தியையும் நேருவையும் விமர்சித்து நூல்கள் முளைக்கவில்லையா.         அதேசமயம்-
நேருக்கு நேர் விமரிசிக்கப்பட்ட காந்தி மறைந்தபோது உத்தமர் காந்தியானார்.குலக்கல்வி கொடுத்த ராஜாஜி மூதறிஞாக மதிக்கப்பட்டார்.அந்த மூதறிஞரே பின்நாளில் உங்கள் கண்களுக்கு எரிச்சலூட்டிய அண்ணாவோடு இணைந்து செயல்பட்டார் என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது .காங்கிரசிலேயே காமராஜர் வலுவிழந்தபோது  பச்சைத்தமிழனென்று தூக்கி நிறுத்தியது திராவிட இயக்கம்தான் என்பதை நினைவு கூருங்கள்.
மறைந்துபோன சத்தியமூர்த்தி முதல் மிச்சமிருந்த அத்தனை காங்ரஸ் இயக்கத் தலைவர்களுக்கும் சிலைகளையும் நினைவிடங்களையும் எழுப்பி எதிர்காலத் தலைமுறைக்கு அடையாளம் காட்டி அரசியல் பண்பு காத்தது திராவிட இயக்கம் மட்டுமே.
இப்போதெல்லாம் உங்களைப்போன்றவர்கள் மட்டுமே சாதகமான சொற்களை பற்றிக்கொண்டு மறைந்த தலைவர்களை தொடர்ந்து இழிவு செய்வதாக நான் கருதுகிறேன்.மறைந்த தலைவர்களை தி க வோ திமுகாவோ எப்போதுமே போற்றி புகழ்ந்தே வந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒப்பாரி வீட்டில் வக்கணை பேசுதல் அறிவுத்தளம் என்கிறீர்கள்.இறந்தவர் எவரும் எழுந்துவந்து உங்கள் அறிவு சார்ந்த நக்கல்களுக்கு பதிலளிக்கப் போகிறார்களா என்ற துணிவாககூட இருக்கலாம்.மாண்டுபோன பாம்பை சுழற்றி சழற்றி அடிப்பது எந்தவகை நாகரீகம்.வக்ரமும் வன்மமும் வெளிப்பட்டதுதான் மிச்சமென்று கருதுகிறேன்.
இப்போது உங்களுக்கேற்பட்ட அய்யத்துக்கு வருகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டது போல் என்னுடைய கடிதத்தின் தொனி யார் சோலியை யார் பார்ப்பது என்பதல்ல.தேவையற்ற தனிமனித தூற்றல் உங்கள் இலக்கிய பயணத்துக்கு எத்தனை கேடு விளைவிக்கும் என்பதையும் கால விரயத்துக்கும் இலக்கிய நட்புக்கும் எத்தனை எதிரானது   என்பதையும் சொல்லவேண்டுமென்பதுதான்.
உயிரோடு இருக்கும் ஒருவரை நீங்கள் தர்கரீதியாக சந்திக்கும்போது அவரே உங்களை எதிர் கொள்ளக்கூடும்.இந்த உலகில் இல்லையென்று ஆன ஒருவரை அள்ளித்தூற்றுவது என்ன அறிவுத்தளம் என்பதுதான் என் கேள்வி.
விடுதலைக்கு பின் சொல்லிக்கொடுக்கப்பட்ட காந்தி காமராஜ் பாடங்களே இன்னும் உங்களை வழி நடத்துவதாக கருதுகிறேன்.அதுமட்டுமின்றி மனிதனை மனிதனாக மதிக்க போதித்த தந்தை பெரியாரையும் படித்தவன் நான்.அது உங்களுக்கு தரக்குறைவான விஷயம்.
சின்னகுத்தூசியை தரக்குறைவாக விமர்சித்ததாலேயே உங்களை விமர்சிக்கும் தகுதி எனக்கு வந்ததாக நான் கருதவில்லை.உங்கள் எழுத்துக்கள் அச்சாகி வந்தபோதே அதை பெற்றுவிட்டவன் நான்.
எழுத்துலகில் இல்லாதபோதும் ஏறத்தாழ 13 வயதிலிருந்தே வாசிப்புலகில் சஞ்சரித்தவன். எவரையும் நீங்கள் விமர்சிப்பதை தவரென்று கருதியதில்லை.ஆரோக்கியமான விமர்சனங்களே  அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை நம்புவன்.
தேசபிதா காந்தியோடு டாக்டர் அம்பேத்காரிலிருந்து மகாகவி பாரதிவரை பல்வேறு சமயங்களில் கருத்து மாறுபாடு கொள்ளவில்லையா.நீங்கள தரக்குறைவாக கருதும் பேரறிஞர் அண்ணாவை சொல்லின் செல்வர் ராபி சேதுப்பிள்ளையும் ஆறுமுக நாவலரும் தர்கரீதியாக எதிர் கொண்டு பின்னடைவு பெறவில்லையா.கடிவாளம் அணிந்த குதிரையைப்போல ஒரே நேர் கோட்டில் பார்வையை செலுத்தும் உங்களுக்கு இந்த ஞாயங்கள் புரிவதற்கான வாய்ப்பில்லை.
சமீபகாலத்தில் சாகித்யகாதமி பரிசுகள் அறிவிக்கப்பட்ட தருணத்தில் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பதைப்போல எழுதப்பட்ட பல்வேறு பதிவுகளை படிக்க நேர்ந்ததன்விளைவே நீங்கள் குறிப்பிட்ட அந்த வசை என்று கருதுகிறேன். அவை உங்களை மட்டுமே எண்ணி எழுதப்பட்டதல்ல.அதை திரும்பப் பெருவதுடன் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
முற்றுப்புள்ளி_
இடுகை 0063
 திரு.ஜெயமோகனின் பதிலுரை.
அன்புள்ள பாண்டியன்
 நான் ஒரு எண்ணத்தை என் வாசிப்பு வழியாக அடைந்திருக்கிறேன். நீங்கள் மறுக்கிறீர்கள். உங்கள் வாசிப்பு, சிந்தனை அது. இதில் வன்மம் எங்கே வந்தது? என் வரையில் அப்படி ஏதும் எப்போதும் இல்லை. இதெல்லாமே ஒருவகை நுண்ணிய ஆட்டங்கள் மட்டுமே. வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளப் பழகுங்கள் வன்மம் குரோதம் என்றெல்லாம் யாராவது சொல்லும்போது நான் என் உள்ளங்கையை முஷ்டியால் குத்திக்கொண்டு ஜ்ஜ்ஜ்ஜக்கூஊஎன்று கத்துவது மாதிரி இருக்கிறது
ஜெ
 ( ஜெயமோகன் இணையதளத்திலிருந்து.....   )
 ----------------------------------
 நான் ஒரு எண்ணத்தை என் வாசிப்பு வழியாக அடைந்திருக்கிறேன். நீங்கள் மறுக்கிறீர்கள். உங்கள் வாசிப்பு, சிந்தனை அது
உங்கள் பதிலுரை இப்போது மூன்றாவது முறையாக என் நினைவில் இடம் பிடித்துவிட்டது.மிக்க நன்றி!
பாண்டியன்ஜி..சென்னையிலிருந்து...

2 கருத்துகள்:

  1. //வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளப் பழகுங்கள் வன்மம் குரோதம் என்றெல்லாம் யாராவது சொல்லும்போது நான் என் உள்ளங்கையை முஷ்டியால் குத்திக்கொண்டு ‘ஜ்ஜ்ஜ்ஜக்கூஊ’ என்று கத்துவது மாதிரி இருக்கிறது./
    அருமை நண்பரே,
    இத்னை கற்பனை செய்து பார்த்தால் மிக அருமையாக இருக்கிறது. சரி
    வேடிக்கை அவர் வாடிக்கை.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்பார்ந்த சார்வாகன் தாங்கட்கு,
    தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    தொடரட்டும் நட்பு.
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !