பாண்டியன்ஜி
---------------------------------
நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது..இருநூறு குடும்பங்களே வாழும் மாங்கோணத்தில் இரண்டு மூன்று நிலக்கிழார்களின் ஆதிக்கம்..அவர்களை அண்டி வாழுகின்ற பல்வேறு குடும்பங்கள்.மழை பெய்வதற்கும் பயிர் விளைவதற்கும் ஆதாரமாய் விளங்கும் சின்ன பெரிய தெய்வங்கள் .அதற்கென அவ்வப்போது ஊர் பொதுவில் எடுக்கப்பெறும் விழாக்கோலங்கள்.அதன் பொருட்டு உருவெடுக்கும் வன்மங்கள் குரோதங்கள் என்ற ரீதியில் கதை துவங்கி நகர்ந்து திடீலென்று முடிகிறது நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு குறுநாவல்.
மிடுக்கான மிராசுவாக வரும் கடுவாய் சுந்தரம் பிள்ளைக்கும் நெஞ்சு உரமும் நேர்மையும் மிக்க பண்ணையாளாக வரும் கூறுவடி கந்தையாவுக்கும் நிகழுகின்ற அகப்போரில் கந்தையா படைக்கப்படுவதுதான் இந்த குருநாவலின் மையக்கோடாக இருக்குமென்று நினைக்கிறேன்.
ஒரு சிறு கதைக்கு தேவையான பக்கங்களை விட விஞ்சியும் அதே சமயம் ஒரு நாவலுக்குத் தேவையான நீளமும் இன்றி ஒரு குறு நாவலாக உருவெடுத்திருக்கிறது மாமிசப் படைப்பு.
ஒரு மண்ணின் இயல்பான வாசனையை இவரைவிட வேறொருவர் இத்தனை தெளிவுற வெளிப்படுத்தியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை.கேட்ட படித்த பார்த்த அடுக்கடுக்கான சொற்கள் தகுதிமிக்க இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன.நாஞ்சில் நாடனென்ற பெயருக்கு பொருத்தமாக ஒரு மண்ணின் சகல வாசனைகளையும் தொடர்ந்து அள்ளித் தெளிப்பது அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை என்றே கருதுகிறேன்...பரவிவரும் பல்வேறு கலாசார நாற்றங்களினால் ஒவ்வொரு மண்ணும் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து போயிருக்கும் நேரமிது.நாஞ்சில் நாட்டு மணற்பிரதேசத்தில் காணமற்போன மரபுகளையும் நம்பிக்கைகளையும் தோண்டித்துருவி எடுத்த நாடனின் உழைப்பு வியப்பைத் தருகிறது. அவருடைய எழுத்துக்களில் காணப்படுகிற அற்புதமான பிழையற்ற மொழி தமிழ் புத்தகங்களின் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கை விதைக்கிறது..அதட்டல் போன்ற நடையிலும் ஆங்காங்கே நகைச்சுவை வெளிப்பட்டு நூலுக்கு சுவைகூட்டுகிறது. .மாங்கோணத்தின் நிஜங்களையும் நிழல்களையும் அவர் அறிமுகம் செய்யும் அழகு மெய்சிலிர்க்கிறது. வெவ்வோறு தடவை அந்த மண்ணில் பயணித்த அநுபவம் மாமிசப்படைப்பு என் ருசிக்கு விருந்தாயிருந்ததில் வியப்பொன்றும் இல்லை.அந்த வகையில் இந்த நூலில் மாங்கோணம் கண்களுக்கு புலப்படுகிறது.கதாபாத்திரங்கள் அறிமுகம் மனதை ஈர்க்கிறது..உரையாடல்கள் உள்ளத்தை தொடுகிறது.ஆனால் கதை முடிவுக்கு வரும்போது வெருமைதான் மிஞ்சுகிறது.பாத்திரங்கள் ஆங்காங்கே தோன்றி நாடகம் போல கலைந்து போகிறார்கள்.
இப்போது இந்த குறுநாவலில் இடற நேர்ந்த இடங்களை எண்ணிப்பார்க்கிறேன்.
நாவலிலும் தொடர் புதினங்களிலும் வெறி கொண்டிருந்த என் சுற்றத்து பெண்களுக்கு படைப்பில் குறுக்கிட்ட முள்களாலும் எலும்புகளாலும் அந்த அற்புத படையலை சீரணிக்க இயலாமற் போனது உண்மை. சாதாரணமாக நாங்கள் அறிந்திராத சொற்கள்.காட்சிகளை மனதோடு ஒட்ட விடாத அதட்டல் நடை.
அழுத்தமான அடித்தளம் எதுவும் இன்றி சிறுகதைகளோ நாவலோ
எழுதக்கூடாது என்று யாரோ ஒரு திறனாய்வாளன் குறிப்பிட்டது இப்போது என் நினைவுக்கு வருகிறது.
மாமிசப்படைப்பு ஆழமான அடித்தளமின்றி அலங்காரத்தேராக தனித்து நிற்கிறது.
பின் அட்டையில் சுந்தர ராமசாமி கோடிட்டு காட்டியது போல மாங்கோணத்தின் இழந்துபோன வாழ்க்கையை வெருமனே கண்முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
முதற்பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பும் வந்துவிட்ட நிலையில் இந்த புத்தகம் இப்போதுதான் என் பார்வைக்குப் பட்டிருக்கிறது.இயல்பாகவே நான் ஒரு சராசரி வாசகன் என்ற காரணமாககூட இருக்கக்கூடும்.ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் பிறப்பெடுக்கும் நூல்களுக்கு சரியான திறனாய்வு மேற்கொள்ள படுவதில்லை என்ற தனது ஆதங்கத்தை மாமிசப்படைப்பு இரண்டாவது பதிப்பில் நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.அவர் கூற்று ஞாயமானதும் கூட.கடைசியாக பெரியவர் தி க சிவசங்கரனுக்குப் பிறகு திறனாய்வுத்துறையில் ஒரு தேக்கநிலை ஏற்ட்டிருப்பது உண்மைதான். அதன் விளைவாக வாசிப்புலகில் ஏராளமான கழிவுகளும் குப்பைகளும் குவிந்திருப்பதைக்காண முடிகிறது.அப்படியே ஆய்வு செய்தாலும் இருபத்தைந்து முப்பது வருடங்களாக எழுதுவோர் வாரி இறைக்கின்ற சாக்கடையில் நனைந்தாக வேண்டும்.
ஒரு நல்ல எழுத்தாளனாக உருவெடுக்க கண்களையும் காதுகளையும் முழுதாக என்னேரமும் திறந்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று பேசக் கேட்டிருக்கிறேன். வயை அல்ல.அப்படி இருந்து விருது பெற்றவர் நாஞ்சில் நாடன் என்பதில் எனக்கு எந்த அய்யமும் இல்லை.
சமீபத்திய நவீனத்துவம் வாய்ந்த பெரும்பாலான படைப்பாளிகள் முன்னதைக்காட்டிலும் பின்னதையே திறந்து வைத்திருப்பதை பார்க்கிறேன்.அது அவர்களுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு எத்தனை இடையூறு என்பதை உணர்ந்தார்களோ என்னவோ.ஆழ்ந்து எழுதப்படும் எழுத்துக்களில் காணப்படும் நிதானம் பெரும்பாலும் பேச்சில் காணப்படுவதில்லை. நா பா , ஜெயகாந்தன் கூட இதற்கு விதிவிலக்காயிருக்கவில்லை.
சமீபத்திய நவீனத்துவம் வாய்ந்த பெரும்பாலான படைப்பாளிகள் முன்னதைக்காட்டிலும் பின்னதையே திறந்து வைத்திருப்பதை பார்க்கிறேன்.அது அவர்களுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு எத்தனை இடையூறு என்பதை உணர்ந்தார்களோ என்னவோ.ஆழ்ந்து எழுதப்படும் எழுத்துக்களில் காணப்படும் நிதானம் பெரும்பாலும் பேச்சில் காணப்படுவதில்லை. நா பா , ஜெயகாந்தன் கூட இதற்கு விதிவிலக்காயிருக்கவில்லை.
பிரபலமான பாரம்பரியம் மிக்க வார மாத பத்திரிக்கைகள் சிந்தனைக்கு உரமூட்டும் எழுத்துக்களை விட்டு சிந்தையைக் கிளரும் சினிமா பக்கம் சாய்ந்து வெகு நாளாயிற்று.படைப்பாளிகள் பக்கங்கள் எல்லாம் பறிக்கப்பெற்று பல வருடங்கள் ஓடிப் போய் விட்டது.. எழுத்துலக ஜாம்பவான்கள் எல்லாம் இலவசமாக தரப்படும் வார மலர்களில் இடம் பிடிக்க போட்டியிடுகின்ற நிலை. ஆங்காங்கே அவ்வப்போது தோன்றி மின்னுகிற சிற்றிதழ்கள் மட்டும் இல்லாமற் போனால் தமிழ் எழுத்துலகின் நிலை இன்னும் மோசமாகவே இருக்கக்கூடும்.இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய் நேரடியாக பதிப்பிபதன் மூலம் அம்பதோ நூரோ விற்று ஆனந்தப்படுவதைக்காண முடிகிறது.
இன்றைய நவீன எழுத்தாளர்கள் என்று வருணிக்கப்படுகிற ஒரு சிலருடைய எழுத்துக்களில் அடிக்கடி இடம் பெறுகிற தரம் தாழ்ந்த மொழிசொற்களைகுறித்து எனக்கேற்பட்ட மனக்குறையொன்று உண்டு.
அது இந்த குறு நாவலை மட்டுமே கருத்தில் கொண்டு ஏற்பட்டதல்ல.வழக்கமாக தமிழ் திரைப்படங்களில் பொழுது புலருவதை பறவையினங்கள் கண்திறந்து பல்வேறு இனிமையான ஒலிகள் எழுப்ப பின்னணியில் பூபாளம் இசைக்க காண்பிப்பது உண்டு. யதார்த்தமான காட்சிகளை காட்டுகிறேன் என்று மலம் கழிக்கும் ஒரு பெரியவர் தலையில் கட்டப்பெற்ற முண்டாசுடன் எழுந்து சொம்புத்தண்ணீரை கையில் எடுப்பது போல் ஜெயகாந்தன் காட்டியபோது முகம் சுளித்தவர்களை பார்த்திருக்கிறேன்.
ஜன நடமாட்டம் நிறைந்த சாலையோரங்களில் இப்போதெல்லாம்
வெட்கமின்றி மூத்திரம் கழிப்பது இயல்பாகிவிட்டது.அதைப்போலவே நல்ல எழுத்துக்களிடையே மூத்திரத்துக்கு தேவைக்கு அதிகமாகவே முக்கியத்துவமும் ஏற்பட்டிருக்கிறது.
மலம் கழிப்பதும் புணர்வதும் கூடவாழ்க்கைச்சூழலில் அங்கீகரிக்கப்பெற்ற வழிமுறைகள் என்றாலும் நான்கு சுவர்களுக்கிடையேதாம் இன்றும் நிகழ்ந்து வருகின்றது.அப்படியிருக்க இவையனைத்தும் அச்சில் மணங்கமழும் ஆக்கங்களில் வெட்ட வெளிச்சமாக இடம் பெறவேண்டுமா என்பதே என் கேள்வி.அச்சொற்களை விடுத்து எழுதும்போது எத்தகைய இழப்புகள் ஏற்படக்கூடும் என்பதே எனக்கேற்பட்ட அய்யம்.
இவையனைத்தும் நிஜமென்றாலும் முன்நாளில் எழுதிக் குவித்த எவரும் இந்த கண்ராவிகளை நினைவூட்டியதில்லை என்றே கருதுகிறேன்.
( இந்த புத்தகத்தை ஒரு திறனாய்வாளனாக நின்று ஆசிரியரின் குறைதீர்க்க மதிப்புரை எதுவும் தர நான் முயலவில்லை.ஒரு சராசரி தமிழ் வாசகனாகவே என் மன ஓட்டங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். )---------------------------------------------------------------
இடுகை 0064 .
நல்ல பதிவு.
பதிலளிநீக்குநானும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி.