ஞாயிறு, ஜூலை 10, 2011

வாக்குமூலம்

புலவர் பொன்னி வளவன்
----------------------------------
'மதிப்புமிகு நடுவர்க்கு வணக்கம் ! நீதி
மன்றத்தில் நிற்கின்றேன்,குற்றக் கூண்டில் !
கொதிப்போடு மொழிப் பிரிவைக் கொளுத்தி விட்டேன் !
கொழுத்துப் போய் அல்ல ! இதைக் குற்றம் என்று
விதிப்பீர்கள் தண்டனையை ! ஏற்றுக் கொள்வோம் !
வீண்வாதம் நான்செய்ய மாட்டேன் ! இந்தி
எதிர்ப்புணர்வில் மொழிப் பிரிவை எரித்த செய்கை
எனதுமன சாட்சிக்கோ குற்ற மல்ல !
முன்னேற்றக் கழகத்து கவிஞர் , நானோ ,
முத்தமிழைக் கற்றுணர்ந்த புலவன் ,ரொம்பச்
சின்னவன்தான்! இருந்தாலும் பிறர் மதிக்கும்
சீர்வாய்ந்த பேச்சாளன் ! இந்தி தன்னை
என்னென்னவோ விதத்திலும் எதிர்த்துப் பார்த்தேன் !
எழுதிப் பார்த்தேன் ! பேசிப் பார்த்தேன் ! இன்னும்
என்ன வழி !ஆட்சி மொழி சட்டம் தன்னை
எரிப்பதுதான் வழி என்று எரித்தும் பார்த்தேன் !
தயங்கவில்லை , மயங்கவில்லை. இந்த நாட்டில்
தமிழ் படித்தோர் இந்திதனை எதிர்ப்பதற்கு
பயங்கொண்டு ஒதுங்கிவிட்டால் இனிக்கும் வெல்லப்
பாகுநிகர் தமிழ்கெட்டுச் செத்துப் போகும் !
நயங்கெட்ட இந்திமொழி வந்து குந்தி
நாட்டாண்மை செய்திடுமே ! அதனால் , நன்றாய்
இயங்குகிற இயக்கத்தில் உள்ள தொண்டன்
எரித்திட்டேன் ஆட்சிமொழிச் சட்டம் தன்னை !
சாட்சிமொழி பலசொல்லிக் காட்டி நீங்கள்
சட்டத்தை நினைவூட்டிச் சுமையைக் கூட்டி
ஆட்சிமொழிச்சட்டத்தை எரித்ததற்கு
'அளித்திடுக நீ வாக்குமூலம் !' என்றீர்.
சாட்சியென்ன ? சாட்சியென்ன ? நீங்கள் சொல்லும்
சட்டமென்ன ? ஆட்சியென்ன ? எனது - நெஞ்சின்
சாட்சிக்கோ நான் குற்றவாளியல்ல !
சட்டம் அதைக் குற்றமென்றால் மறுக்க மாட்டேன் !
அழியாமல் வளர்கிறது எங்கள் கட்சி !
அதனைநான் எப்போதும் நினைத்தி ருப்பேன் !
கமழ்கின்றார் எனது மனநிறைவாய் எங்கள்
கற்கண்டு தனித்தலைவர் அறிஞர் அண்ணா !
தமிழ் காக்க எரிந்தவனாம் சின்னச்சாமி
தன்னையும் நான் மனநினைவில் உலவ வைப்பேன் !
தமிழ்காக்கும் தொண்டனுக்கு இந்த நாட்டில்
தண்டனைதான் பரிசென்றால் ஏற்றுக் கொள்வேன் ! '
------------------------------------
1964 பிப்ரவரி 26 நாள் !
இந்தியை எதிர்த்து மொழிப்போர் தமிழகமெங்கும் வீசிற்று !
நாடு முழுதும் கொழுந்து விட்டு எரிந்த அந்த தணல் மாணவர் சமூகத்தையும்
விட்டு வைக்காத நேரம்.அப்போது நான் நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் முதலாண்டு மாணவன்.படிப்பை முடித்து வெளியேறியபோது எனக்கு பட்டயம் வழங்கி வாழ்த்தியது 67 ல் அண்ணாவின் ஆட்சியே.
அன்று நிழ்ந்த மொழிப்போரில் அன்நாளைய மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களான காளிமுத்துவும் ந. காமராசும் ஆட்சிமொழிப்பிரிவின் நகலை எரித்து கைதாயினர்.அவர்களே பின்நாளில் அரசியலிலும் கவிதைத் துறையிலும் ஓளிவிட்டவர்கள்.
அதே சமயம் தூத்துகுடி போஸ் திடலில் ஆட்சிமொழிப் பிரிவை எரித்து கைதானார் புலவர் பொன்னிவளவன்.நீதிமன்றத்தில் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்ட போது தனது வாக்குமூலத்தை கவிதையாய் அளித்தார்.அவர் அளித்த வாக்குமூலக் கவிதை அடுத்த நாள் அத்தனை ஏடுகளிலும் பிரசுரிக்கப்பட்டு இன்று வரை முறியடிக்க முடியாத மறபாய் திகழ்கிறது .
நெஞ்சில் நின்ற நிகழ்வை பகிர்ந்து கொளகிறேன்
1975 ல் மாதவி காப்பியத்தை படைத்த கவியரசர்.பொன்னிவளவன் கணிசமான கவிதை நூல்களை படைத்தவர். கவியுள்ளம் கொண்டோர் தேடிப் படிக்க வேண்டியவை.!
---------------------------------
சென்னையிலிருந்து .. பாண்டியன்ஜி .
இடுகை 0065

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !