ஞாயிறு, ஜூலை 04, 2010

வன்னியடியில் ஒரு சந்திப்பு !

             ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன் தமிழ் நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று இன்று பல்வேறு திசைகளில் வாழ்ந்து வரும்  ஆறு நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடி  மகிழ்ந்திட எண்ணியபோது  இனிய நண்பர் ஜெகநாதன்  அந்த சந்திப்பை இங்கேயே   வைத்துக் கொள்ளலாமே ' என்று அன்போடு அழைக்க  மூலைக்கு ஒருவராய் பிரிந்து வாழும் நாங்கள்  29  ,  30  ஜுன்  2010  ல்  தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சார்ந்த வன்னியடி கிராமத்தில் அந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்தோம்.
              முன்பே நிச்சியித்தபடி    ஜுன்   29   காலை கும்பகோணம் பேரூந்து நிலையத்தில்  நான் இறங்கியபோது   திருவாரூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த  நண்பர் குமரசாமி  என்னோடு இணைந்து கொண்டார்.
           கும்பகோணத்திலிருந்து தஞ்சை  நெடுஞ்சாலையில்  ஒரு பத்து கிலோ மீட்டரில் குறுக்கிடும் பாபநாசத்தில் இறங்கினால் எல்லாருக்கும் அறிமுகமான  புளியமரத்து தேநீர் கடை எதிர்படும். அதன்  அருகில் வடக்கு நோக்கி திரும்பி  நீண்டு கிடக்கும் தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் கடக்கும் போது  காவிரியின் கிளை நதி அரசலாற்றையும் அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும்  நீண்ட நவீன பாலத்தையும் பார்க்கலாம். ஆற்றின் தென்கரையில் மேற்கு நோக்கிசெல்லும் குறுகிய தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் தாண்டி தென்திசையில் இறங்கி அரை கிலோமீட்டர் பயணித்தால் பசுமைப்பிரதேசம் வன்னியடியை அடையலாம். 
                         நாங்கள்  வன்னியடியில் நுழைந்த போது எதிரே  குறுக்கிட்ட அரசு உயர் நிலைப் பள்ளியில் அத்தனை சிறார்களும் சீருடையில் வரிசையாக அணிவகுத்து இசைக்கின்ற நீராரும் கடலுடுத்த ...தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளியின் இயல்பான துவக்கத்தை வெளிப்படுத்துகிறதுதாமதமாக வர நேரிட்ட  ஒரு சில சிறுவர்கள்   ஒருவித இனம்புரியாத  அச்சத்தோடு கம்பிக் கதவுகளுக்கருகில்  ஒதுங்கி நிற்பதையும் காணமுடிகிறதுஇரண்டு மூன்று குறுக்குத்தெருக்களை கடந்து  நண்பர் ஜெகன்நாதன் வீட்டை  நாங்கள் அடைந்தபோது  எங்களுக்கு அன்பான வரவேற்பு  நிகழ்ந்தது.  ஜெகன்நாதன் எங்களுக்காக ஒதுக்கியிருந்த வீடொன்றில்  முன்னதாகவே வந்திருந்த   நண்பர்களை நீண்டநாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க முடிந்தது.நண்பர் வேதசிரோன்மணி சென்னையிலிருந்து புகைவண்டியிலும் ஈரோட்டிலிருந்து தங்கவேலுவும் பழனிச்சாமியும் மாருதி ஸ்விப்ட்டிலும் முன்னதாகவே வந்திருந்தனர்.  அறுபத்தி எட்டுகளில் ஈரோடு பிரப் சாலையில் கலைமகள் விடுதியில் ஏற்பட்ட பிணைப்பு ஒவ்வொருவரும் மின்வாரியத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்தாம்பணிக்காலங்களில் முக்கியமாக காலந்தவறாமை , கிடைத்த பணியில் உள்ளார்ந்த ஈடுபாடு ஞாயமான ஊதியம்  இவைமட்டுமே  உயர்வாக கருதியவர்கள்இன்று துறைதோரும் மலிந்து கிடக்கும் ஊழலில் இருந்து பெரிதும் ஒதுங்கியிருந்தவர்கள் 
                     ஈரோடு நகரிலிருந்து  நண்பர் தங்கவேலு வந்திருந்தது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியளித்தது.  அறுபத்தெட்டுகளில்  ஈரோட்டில் பணியில் இணைந்தபோது நான் பெற்ற நட்பு அதுநீறுபூத்த நெருப்பாக ஆண்டாண்டுகளாய் தொடர்வது நான் பெற்ற பேறேயாகும்பார்ப்பதற்கு மா நிறம் , சராசரியான உயரம் எப்போதும் பளிச்சென்று காணப்படும் தெளிவான கோவை வாசிகளுக்கே உரித்தான முகத்தோற்றம். இடையிடையே எப்போதாவது லேசாக குறுக்கிடும் கோவைத்தமிழ்  - இவைதான் ஈரோட்டைச்சேர்ந்த தங்கவேலு
                  எதிலும் வெளிப்படையான செய்கைகள் பணியில் காலந்தவறாமை இயல்பான ஈடுபாட்டுடன் பணிகளை முடிக்கும் திறன் அத்தனையும்  அவருக்கே உரியவை.மின்வாரியத்தில் போதுமான பணிக்குப்பிறகு சுழலுகின்ற மோட்டார் எந்திரங்களுக்கு அடிப்படைத்தேவையான பேரிங் வணிகத்தில் நுழைந்து ஈரோடு நகரில் சாதனை நிகழ்த்தியவர். போதுமான உழைப்பிற்குப்பிறகு வணிகத்திலிருந்தும் முற்றிலும் நகர்ந்து ஆன்மீக நிகழ்வுகளிலும் அரிமா இயக்கத்தின் அளப்பரிய தொண்டுகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். நட்புக்காக எப்போதுமே காலத்தையும் தூரத்தையும் துச்சமாக கருதுபவர்.
                      அவரோடு வந்த பழநிச்சாமி இடைக்காலத்தில் எங்களுக்கு அறிமுகமானவர் . பணிக்காலங்களிலும் சரி மற்றநேரங்களிலும் சரி எங்களுக்கெல்லாம் துணையாகவும் தூணாகவும் திகழ்ந்தவர். என்றும் இனிய முகத்தோடும் இன்சொற்களோடும் விளங்கிய பழநிச்சாமி இன்றும் அப்படியே இருந்தது என்னை நெகிழவைத்தது.
என்னோடு வந்த குமரசாமி திருவாரூரை அடுத்த சிக்கல் கிராமத்தை சேர்ந்தவர். எல்லாராலும் சிக்கலார் என்று அன்போடு விளிக்கப்படுபவர். வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் எனக்கு ஒருவருடம் முதலானவர். திராவிட இயக்கத்தைச்சார்ந்த பகுத்தறிவுப்பரம்பரை.பணியிலும் சரி சூழ்ந்திருப்போர் வாழ்விலும் சரி எதிர்படும் சிக்கல்களை களைவத்தில் எப்போதுமே முன்நிற்பவர். நெஞ்சுறுதி மிக்கவர். பணிக்காலங்களில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தவர் .  தானெடுக்கும் முடிவுகளில் தனித்து நிற்பவர். இன்றும் பன்முனை விற்பனையில் பலருக்கு துணையாக வாழ்பவர்.
             நண்பர் வேதசிரோன்மணி திருச்சியில் எனக்கு அறிமுகமானவர் .உருண்டையான முகம்  உயர்ந்த உருவம்  உயரத்துக்கேற்ற உடல் . ஒரு இலக்கியவாதியை  நினைவூட்டும் தோற்றம்.. மணிமணியான கைஎழுத்துக்கும் இசைக்கு அழகு சேற்கும் இனிமையான குரல் வளமும் அவருடையது.  அவர் இசைக்கும் சுப்ரமணிய பாரதியாரின் இசையை கேட்கவேண்டும் அவர் இயல்பாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தும்போதும் ஓய்வாக இசையை இசைக்கும்போதும் அவர் குரலிலும் முகத்திலும்  ஏற்படுகிற மாற்றங்கள் பின்னாளில் அவர் ஒரு சிறந்த கிருத்துவமதபோதகராக உருவெடுக்க உதவியிருக்கக்கூடும். இடையிலேயே பணியிலிருந்து விடுபட்டு தன் எஞ்சிய வாழ்வை தியாகத்திருமகன் ஏசுவின் நெறிபரப்பும் ஒரு கிருத்துவ மதபோதகராக இப்போது வாழ்வது மகிழ்வுக்குரியதே. 
            எங்களை விருந்துக்கழைத்த நண்பர் ஜெகநாதன் எங்களிற் பெரிதும் மாறுபட்டவர். மாநிறம் , சராசரிக்கு சற்று கூடுதல் உயரம் , வலுவான உடலமைப்பு  புன்னகைக்கும் முகம்  -அறுபத்தாறுகளில் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில்  அறிமுகமான ஜெகநாதன் கடந்த முப்பாண்டுகளுக்கு மேலாக மின்வாரியப்பணியிலும் என்னோடு  ஒன்றாக பயணித்தவர். நெஞ்சத்தில் உறுதியும் நேர்மைத்திறனும் நிரம்பப் பெற்றவர்.பணியில் இயல்பான ஈடுபாடு முக்கியமாக காலந்தவறாமை திறன் மிக்க பொறியாளர்களை நண்பர்களை  மதிக்கின்ற பாங்கு ஜெகநாதனுக்கு சொந்தமானவை. எந்த சூழல்களிலும் தான் எடுத்த முடிவுகளிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ளாதவர். பின்விளவுகளை துச்சமாக மதிக்கும் மன உறுதி மிக்கவர்.அவரது துணைவியும் மூத்தமகள் கவிதாவும் தொடற்சியாக இரண்டு நாட்கள் தலைவாழை இலையில் விதம் விதமாக உணவளித்து உபசரித்த விதம் தஞ்சை மண்ணில் விருந்தோம்பல் இன்னும் மறக்கப்படவில்லை என்பதை எங்களுக்கு உணர்த்திற்று.
              கர்நாடகத்தில் தோன்றி தமிழ்மண்ணில் பாய்கிற காவிரி இந்த மண் செழிப்புற தான் பாயும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிளை நதிகளை உருவாக்கிவிட்டு தொடர்ந்து வங்கக்கடலை நோக்கி பயணிப்பது வியப்பானது.              ஏறக்குறைய நான்குக்கு மேற்பட்ட கிளை  நதிகளால் சூழப்பட்டது வன்னியடி கிராமம் . தஞ்சைத்தரணியே வரட்சியின் பிடியில் சிக்கித்திணறியபோதும் வன்னியடி பசுமைக்கோலம் பூண்டிருந்தது பாற்பதற்கும் கேட்பதற்கும் வியப்பானதுதான்.வாழை கரும்பு கருணை என்று பல்வேறு பயிர்கள் செழிப்புற்று வன்னியடி எப்போதும் பசுமைப் பிரதேசமாய் உருவெடுத்திருக்கிறது.மேகங்கள் திரளும்போது ஆனந்த நடனமாடும் மயில்களும் பழம் தின்னி வௌவால்களும் தஞ்சை மாவட்டத்திலேயே  வன்னியடியில் சூழ்ந்துத்திரிவது வன்னியடியின் மாறாத பசுமைக்கு சாட்சி. 
              மொத்தத்தில் பெருநகரங்களுக்கிணையான சகல வசதிகளையும் பெற்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமமாக திகழ்ந்தது வன்னியடி .              
இந்த இரண்டு நாட்களில் நாங்கள் கடந்துவந்த முப்பதுக்குமேற்பட்ட ஆண்டு மின்வாரியபணியில் நிகழ்வுற்ற பல்வேறு நிகழ்வுகளை ஒருசேர அசைபோட்டது அத்தனை இனிமையானது.  நாங்கள் எங்கள் பணிக்காலங்களில் சந்திக்க நேர்ந்த திறன் வாய்ந்த பொறியாளர்களையும் அரசாங்க அழகுச் செடிகளாக அங்காங்கே நின்றிருந்த தவிற்க இயலாதவர்களையும் திரும்ப நினைவு கூர்ந்து மகிழ்ந்தோம் கலை இலக்கியம் அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை .காலை நேரங்களில்  வன்னியடியை சூழ்ந்திருந்த  நதிக்கரை ஓரங்களில் காணப்பட்ட பசுமைப்பிரதேசங்களையும் மாலை நேரங்களில் கும்பகோணத்து மகாமகக் குளக்கரையிலும் பொழுதை ரசித்தது  கழித்தது  மறக்க இயலாதது.
எண்ணற்ற வரலாற்றுத்தடங்கள் தஞ்சைமண்முழுதும் இறைந்து கிடந்த போதும்  இந்தசந்திப்பில் எங்கள் கண்களுக்கு இரையான ஒரு தானிய காப்பகத்தை சொல்லியாகவேண்டும்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் ரகுநாதன் கட்டிய 36  அடி உயர தானிய காப்பகம் ஒன்றை பாபநாசம் சிவன் கோயில் வளாகத்தில் காணநேரிட்டது. மெல்லிய செங்கற்களையும் சுண்ணாம்புக்  காரைக ளையும்   கொண்டு கட்டப்பெற்ற அந்த கிடங்கு 3000 கலம் தானியங்களை நெடு நாட்களுக்கு சேமிக்க வல்லது வெப்பதட்ப சூழல்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பெற்ற அந்த கிடங்கு தமிழர்தம் புத்திசாதுர்யத்துக்கு சான்றாக  இன்றும் நிற்பதை கண்டோம். இன்று  இந்த அரிய கிடங்கு தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  
              இந்த சந்திப்பில் வேலூரைச்சேர்ந்த திருவலம் டி.ராஜேந்திரன் கலந்து  கொள்ளாமற் போனது எதிர்பாராதது .கோவையில் நிகழ்ந்த செம்மொழி மகாநாட்டைபோல் பல்வேறு சிந்தனைகளையும் விதைத்து விட்டு    ஜுலை  30 மாலை அனைவரிடமும் விடை பெற்று கொண்டு மாறுபட்ட திசைகளில பயணப்பட்டோம்.
                இறுதியில் நாங்கள் அறிய நேர்ந்த செய்தி நண்பர் ஜெகநாதன் எங்களில் எத்தனை வித்தியாசமானவர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்தது .ஜுன் 28 அன்று அவரது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்ததுதான் அந்ததகவல். அகத்தின் துயரை முகத்தில்  சிறிதும் எதிரொலிக்காமல் இரண்டு நாட்கள் எங்களோடு .....எப்படி   ..என்னால் என்றுமே இயலாத ஒன்று.அவரது தாயார் துயரிலிருந்து விடுபட்டு பிணியின்றி நீண்டு வாழவேண்டும் !
                       வன்னியடியை விட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்  அடுத்து ஒரு சந்திப்பு நிகழ ஒவ்வொருவர் சூழல்களும்  துணை நிற்கவேண்டும்.