ஞாயிறு, மே 29, 2011

கிணற்றுத் தவளைகள் ! ( எழுத்தாளர் ஜெய மோகனுக்கு ஒரு மின்னஞ்சல் )

அன்பார்ந்த ஜெயமோகன்

உங்களைப்பற்றியோ உங்கள் நூல்களைப்பற்றியோ நான் முன்னதாக அறிந்திருக்க வில்லை.நீங்கள் நெடுங்காலமாக எழுதி ஒரு வட்டத்திற்குள் ஒரு இடத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திக்கொண்டாலும் நான் சமீபகாலத்தில்தான் உங்கள் எழுத்துக்களை திரும்பிப் பார்க்க நேரிட்டது.உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்க வேண்டுமென்ற விருப்பமும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.வெகுஜன பத்திரிக்கைளை நீங்கள் இடக்கையால் ஒதுக்கி நேரடி பதிப்பை நீங்கள் கையாண்டது கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களில் உங்களிலிருந்து நான் வேறு பட்டிருந்தாலும் மொழிசார்ந்த எண்ணங்களில் எவரையும் நேசிப்பவன் .இயல்பாக ஒரு எழுத்தாளனாக உருவெடுக்க எண்ணி அதற்கான முயற்சிகள் எதுவுமின்றி புற காரணங்களால் நான் தோல்வியுற்றவன் என்பதையும் அறிவேன்.
சமீபத்திய நாட்களில் அவ்வப்போது உங்கள் இணையதளத்துக்கு வருவதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பத்திரிக்கையாளர் சின்ன குத்தூசி குறித்த உங்கள் பதிவை பார்க்க நேரிட்டது.எழுத்துலகில் இன்னும் எத்தனையோ தூரத்தை கடக்க வேண்டிய (நான் பக்கங்களை சொல்லவில்லை )உங்களுக்கேற்ற பண்பாக தோன்றவில்லை. உங்களுக்கேற்பட்டிருந்த அளவுக்கதிகமான மேதாவித்தனமே இது போன்ற கருத்தை வெளியிட்டிருக்கக்கூடும் என்று கருதுகறேன்.இந்தமண்ணில் இல்லாமற்போன, தன்பிறந்த சமூகத்துக்கு எதிராக தான் கொண்ட கருத்துக்களில் கடைசிவரையில் வாழ்ந்த மனிதரைப்பற்றி ஒரு சக வணிக எழுத்தாளன் (காசுக்காக எழுதும் எவரும் என்னைப்பொறுத்தவரை ஒரு வணிக எழுத்தாளன்தான்.) இப்படியும் எழுத முடியுமா.முதல் பகுதியில் அவர் யாரென்று நான் அறியேன் என்று துவங்கிய நீங்கள் அடுத்த சில வரிகளில் உங்களுக்கு அவர்மீது காழ்ப்பு வரநேர்ந்த காரணத்தை தந்திருக்கிறீர்கள். அதற்காக யாரோ ஒரு வாசகர் மூலமாகவோ அல்லது நீங்களாகவோ ஒரு களனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.நான் இப்படி பேசுவதற்கு காரணமும் உண்டு. சமீபத்தில் நான் காண நேர்ந்த ஒரு சில குறுகிய வட்ட எழுத்தாளர்களின் இணையதளங்கள் இந்த யுத்தியையே கடைபிடிப்பதைக்கண்டிருக்கிறேன்.வாசககர் எழுதும் கடிதமும் அதற்கு தரப்படும் பதிலும் ஒன்றுபோல நடைபயிலுவதைக்கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.

சின்னகுத்தூசி எளியதமிழில் அத்தனை பிரதேசமக்களும் ( குப்பத்து வழக்கல்ல )அறியும் வகையில் தான் ஏற்ற பகுத்தறிவு
சிந்தனைகளுக்கும் தான் சார்ந்த திராவிட இயக்கங்களுக்கும் வடிவம் கொடுத்தவர்.சந்தைகளில் ஜாலம் காட்டும் விருதுகளுக்காகவோ வயிற்றை நிரப்ப தேவைப்படும் சன்மானங்களுக்காகவோ குறுகியவட்ட துதிகளுக்காகவோ கிணற்று தவளைகள் போல் அவர் என்றும் செயல்பட்டதில்லை.
அவரை ஒரு வணிககட்சியின் எழுத்தாளர் என்று எழுதியிருக்கறீர்கள்.அப்படியென்றால் வாழ்வில் அங்கீகாரமற்ற அவலங்களை மேலும் வேர்விடாமல் நிராகரிக்கப்படவேண்டிய நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக்காட்டிஅதுதான் இலக்கியமென்று எழுதுபவர் அத்தனைபேரும் இனாமாக எழுதுகிறார்களா.
ஒரு சமயம் விஜய் தொலைக்காட்சியில் மருத்துவர் சார்ந்த ஒருவிவாதத்தில் பங்கேற்ற தாங்கள் தனிமனிதனாக துணிந்து பேசிய கருத்துக்கள் என் நினைவில் தங்களுக்கு ஒரு இடம் ஏற்படுத்தியது.அதற்குள்ளாகவே தாங்கள் எழுதிய அடுத்த கட்டுரையொன்றில் சுந்தரம் ராமசாமியை மேற்கோள் காட்டி பெரும்பாலும் தர்கத்திலிருந்து விலகி பிரச்சனைகளைத் தவிற்பதே நல்லது என்ற அறிவுரையையும் தந்து நான் அப்படித்தான் என்றும் அடித்து பேசியிருந்தீர்கள்.ஆனால் அடுத்தடுத்து உங்கள எழுத்துக்களில் தனி மனிதர் சார்ந்த நக்கல்கள் குறைந்தபாடில்லை.ஏன் இந்த தடுமாற்றம்.
நீங்கள் பேசுவதைப்போல இப்போதெல்லாம் நீங்கள் சுவர்களில் எழுதினால் கூட அடுத்த மாதங்களில் அச்சிட்டு வெளியிட ஆயிரம் பதிப்பகங்கள் காத்திருக்கிலாம்.அதை வாசிப்பதற்கு ஒரு 500 பேர் இருந்தால் போதுமென்று நினைக்கிறீர்களா.அவை ஜனத்திரளிடம் சென்றடைய வேண்டாமா.அதுபோன்ற கட்டுரைகளில்கூட நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிற தனி நபர் நக்கல்கள் பலர் முகம் சுளிக்க காரணமானதை உணர்ந்திருக்கிறீர்களா.சாதாரண திண்டுக்கல் லியோனியும் அசாதாரண வைரமுத்து ஜேசுதாசும் கூட உங்கள் இலக்கியங்களில் இடக்கையாலோ உலக்கையாலோ இகழப்பட்டிருப்பதை பார்க்கிறேன்.இந்த தனிமனிதர் இகழ்ச்சி உங்கள் நூல்களிலும் இடம் பெறவேண்டுமா. உங்கள் எழுத்து இலக்கியமா அல்லவா என்பதை நீங்களே நிச்சியிக்க முடியும் என்று கருதுகிறீர்களா.தகுதி வாய்ந்த இலக்கிய திறனாய்வாளர்கள்இப்போது தமிழில் இல்லை.அதனாலேயேதான் தாம் எழுதிய எழுத்துக்கள்தாம் இலக்கியங்கள் என்று பறைசாற்றி கொள்வதும் மற்ற எழுத்துக்கள்திறனற்றவை என்று குரலெழுப்புவதையும் எளிதாக காணமுடிகிறது.
மக்கள் மொழியில் எழுதிய ஜெயகாந்தனையோ இலக்கிய தமிழில் எழுதிய நா பா வையோ இன்னும் எவரும் எட்டிப்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.சமீப காலத்தில் தமிழுக்கு நவீன தடத்தை சுட்டிக்காட்டி எழுத்துலகில் திருப்பங்களை ஏற்படுத்திய சுஜாதாவையே இன்னும் இந்த இலக்கிய உலகம் அங்கீகரிக்க வில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்..
சென்னையிலிருந்து ... பாண்டியன்ஜி.
இடுகை 0060

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !