இனிய நண்பர்களே !

உங்களின் வருகையும் பார்வையும் மகிழ்ச்சியைத்தருகிறது ! அருள் கூர்ந்து உங்களுக்கேற்படும் உணர்வுகளை பதிவு செய்தால் வேர்கள் முழுமை பெறும்.

பாண்டியன்ஜி

வியாழன், ஜனவரி 22, 2015

ஒரு முடிவும் இன்னொரு தொடக்கமும்.


         இனிய நண்பர்களுக்கு
 மிக சிறப்பாக கொண்டாடப்பட்டசென்னைப் புத்தகக்காட்சி முடிவுக்கு வந்துவிட்டது ஏறத்தாழ பதினோறு லட்சதுக்குமேற்பட்ட வாசகர்கள் பதினைந்து கோடிக்குமேலான புத்தக விற்பனை !வியப்பால் கண்கள் விரிகிறது.இந்த சமூகத்தில் புலப்படுகிற மாறுதல் எதிர்கால நம்பிக்கை விதைக்கிறது.
  இந்த மாபெரும் திருவிழாவில் கலந்து கொள்ள என்னுடைய சிறுகதைத்தொகுப்பு உயிர்வதை நூலுக்கு வாய்ப்பற்று போய்விட்டது. விழா முடிவுக்கு வந்த நாளில் நூல் வெளியாகியிருக்கிறது.  இப்போது சைதை அகநாழிகை நூலகத்தில் கிடைக்கிறது. சென்னையில் நூல்கிடைக்கின்ற விபரங்களை இரண்டொரு தினங்களில் தெரியப்படுத்துகிறேன்.   இப்போது தேவைப்படுவோர்
7092181309 ,
9884127328 
என்ற எண்களுக்கு முகவரியை SMS செய்யுங்கள்
120 பக்கங்கள்  பதினைந்து நிகழ்கால சொல்லோவியங்கள்.  ரூபாய் 100

பாண்டியன் ஜி ஞாயிறு, ஜனவரி 18, 2015

ஒருகோட்டில் இணைந்த இரு துருவங்கள் ! சாரு -ஜெமோ

மாதொருபாகன் 

சாரு நிவேதா
நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தேன். ஏனென்றால், தமிழ் இலக்கியச் சூழலுக்கும் எனக்கும் ஒத்தே வராது என்பதை என்னுடைய 26, 27 வயதில் வெளியான ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலிலேயே கண்டு கொண்டேன்.  அப்போதே என் மதிப்புக்குரிய நண்பர்களாக இருந்த கவிஞர் சுகுமாரன் முதற்கொண்டு அத்தனைத் தமிழ் இலக்கியவாதிகளும் அந்த நாவலைக் கொண்டாடோ கொண்டாடு என்று கொண்டாடினர்.  எனக்கோ அந்த நாவல் படு சராசரியாகத் தெரிந்தது.  இவ்வளவுக்கும் அப்போது சுந்தர ராமசாமியுடன் நான் கடிதத் தொடர்பில் இருந்தேன்.  அவருடைய வீட்டு மொட்டை மாடியில் மாதந்தோறும் நடந்து கொண்டிருந்த காகங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மிக விருப்பமாக இருப்பதாக தில்லியிலிருந்து சு.ரா.வை முன்வைத்து இயங்கிக் கொண்டிருந்த கொல்லிப்பாவை இதழிலும் கடிதம் எழுதியிருக்கிறேன்.  ஆனாலும் ஜே.ஜே. சில குறிப்புகள் சராசரிதான்.   ஜே.ஜே. பற்றிய என்னுடைய விமர்சனக் கட்டுரை அப்போதைய தமிழ்ச் சூழலில் எந்தப் பத்திரிகையிலும் வெளிவரும் நிலை இல்லாததால் நானே தில்லியில் அதை ஒரு பிரஸ்ஸில் அடித்து ஒரு துண்டுப் பிரசுரமாகக் கொண்டு வந்தேன்.  தில்லியில் தமிழ் அச்சகங்கள் ஒன்றிரண்டே இருந்தன.  அதுவும் கல்யாணப் பத்திரிகை அடிக்கும் ட்ரெடில் அச்சகங்கள்.  தில்லி வாழ் தமிழர்களுக்கானது.  அதிலிலிருந்துதான் மிகுந்த சிரமப்பட்டு அந்தத் துண்டுப் பிரசுரத்தைக் கொண்டு வந்தேன்.
அடுத்து, புதுமைப்பித்தன்.  சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியத்தின் தந்தை என்றால் புதுமைப்பித்தன் கடவுள்.  அவரும் எனக்கு சராசரியாகவே தெரிந்தார்.  (ஆனால் நகுலன் எனக்கு ஒரு ஆசானாகத் தெரிந்தார் என்பது இங்கே முக்கியம்.)  இந்தக் காரணங்களினால்தான் நான் ஆரம்பத்திலிருந்தே தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு தீண்டத் தகாதவனாகவும் அருவருப்பானவனாகவும் தெரிந்தேன்.  இதே காரணத்தினால்தான் நவீன இலக்கியப் பிரதிகளை வாசிப்பதிலிருந்து ஒதுங்கினேன்.  பெருமாள் முருகனின் ஏறுவெயில் என்ற அவருடைய முதல் நாவலை பல ஆண்டுகளுக்கு முன் வாசித்து விட்டு பல காத தூரம் ஓடினேன்.  அவ்வளவு தட்டையாக இருந்தது அந்த நாவல்.  துளிக்கூட அதில் என்னால் ஒரு இலக்கிய அனுபவத்தை அடைய முடியவில்லை.  அதிலிருந்து பெருமாள் முருகன் என்ற பெயரையே நான் உச்சரித்ததில்லை.  ஏனென்றால், எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதற்குப் பிறகு அந்த விஷயத்தை நோண்டிக் கொண்டிருக்க மாட்டேன்.  அவர் எழுத்து மற்றவர்களுக்குப் பிடிக்கிறது.  நல்லது.  நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்வோம்.  அவ்வளவுதான் என் நிலைப்பாடு.
இந்த நிலையில்தான் மாதொரு பாகன் பிரச்சினையின் காரணமாக அதை வாசிக்கும் கட்டாயத்துக்கு நான் ஆளானேன்.  ஒரு மாதகால ராப்பகலாக உழைத்துக் கண் விழித்து ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழா கொண்டாடக் காரணமாக இருந்த என் வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்லி இன்னும் நான் ஒரு பதிவு எழுதவில்லை.  தருண் தேஜ்பால் தில்லியிலிருந்து அவனுடைய சொந்தச் செலவில் சென்னை வந்து போனான்.  விழா பற்றிய உன் கருத்தை எழுது, நாவலுக்கு எதிர்வினை எப்படி இருந்தது என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.  விரிவாக மின்னஞ்சல் செய்கிறேன், பொறு என்று மட்டுமே குறுஞ்செய்தி கொடுத்தேன்.  அவனுக்கும் ஒரு நன்றிக் கடிதம் எழுதவில்லை.  இந்த நிலையில்தான் மாதொரு பாகனைப் படித்து எழுதினேன்.
.இனி ஜெயமோகனின் நீக்கப்பட்ட பதிவு:
ஜெமோ,
முடித்துவிட்டீர்கள். ஆனால் ஒரு கேள்வி. உங்கள் ‘அண்ணன்’ சாரு இப்படி எழுதியிருக்கிறாரே. http://charuonline.com/blog/ பதில் உண்டா? skip தானா?
சாம்
அன்புள்ள சாம்,
அவரது கோணம் அது. முழு எரிச்சலில் எழுதியிருக்கிறார். அந்நாவலைப் பற்றிய அவரது கருத்து சரிதான். கொஞ்சம் ‘சென்சிடிவ்’ ஆக இலக்கியம் படிப்பவர்கள் அதை வாசித்தால் கற்பனை வரண்ட எழுத்து, அக எழுச்சியற்ற மொழி என்றே உணர்வார்கள். பெருமாள் முருகனின் இந்நாவல்களின் தரத்தை விட பல மடங்கு மேலாக பல்லாண்டுகளுக்கு முன்னரே சி.ஆர்.ரவீந்திரன், சூரியகாந்தன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்
மாதொருபாகன் ஒரு வகையான ‘அமெச்சூர்’ எழுத்து. எவ்வகையிலும் இலக்கியத்தகுதி கொண்டது அல்ல. அது எழுதப்பட்டதிலும் தமிழின் முக்கியமான பெரும்படைப்புகள் இருக்க அது சுடச்சுட மொழியாக்கம் செய்யப்பட்டதிலும் உலகம் முழுக்க கொண்டுபோகப்பட்டு தமிழிலக்கியமும் வாழ்க்கையும் இதுதான் என்று காட்டப்பட்டதிலும் உள்ள தந்திரங்கள் எரிச்சலூட்டுவதுதான்.
ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓர் அரசியல் நடவடிக்கை. அதற்கான அமைப்புகள், நிதிவலைகள் இங்குள்ளன. உலக அளவில் இன்று தமிழிலக்கிய முகங்களாக அறியப்படுபவர்கள் நால்வர் மட்டுமே– சல்மா, பாமா, பெருமாள் முருகன், இமையம். இவர்களை கொண்டு செல்லும் ஒரு பெரிய ‘சானல்’ செயல்படுகிறது. காலச்சுவடு,வ.கீதா,க்ரியா என அவர்கள் ஒரு பெரிய வட்டம். இவர்களில் இமையம் மட்டுமே இலக்கியவாதி.
இவ்வருடம் பல சர்வதேச விருதுக்களை மாதொரு பாகன் பெறலாம். ஏற்கனவே அதன் ஆங்கில ‘பிரமோட்டர்கள்’ அது இங்கே critically acclaimed நாவல் என்று ஊடகங்களில் சொல்லிவிட்டார்கள். அதை அங்கே வாசிப்பவர்கள் இங்குள்ள critics ஐ எண்ணி பரிதாபத்துடன் தலையாட்டிக்கொள்வார்கள். இவ்வளவுதான் தமிழில் சாத்தியம் போல என மனம் கனிவார்கள். இது எப்போதும் நிகழ்வதுதான்.
நான் இப்பிரச்சினையை இன்று நிகழ்வதுடன் கலந்துகொள்ள விரும்பவில்லை. இன்றுள்ள ஒரே கேள்வி இதுதான். ‘இலக்கியத்தில் எதை எழுதுவது எதை எழுதக்கூடாது என்பதை அந்தந்த ஊர் சாதி-மத- அரசியல் பிரமுகர்கள் தீர்மானிக்க வேண்டுமா? அவர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் உட்கார்ந்தபடித்தான் எழுத்தாளன் செயல்படவேண்டுமா?’
மற்றதை பிறகு பேசுவோம்.
ஜெயமோகன்
ஜெ. குறிப்பிட்டுள்ள கடைசிப் பத்தி பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.  நான் மயிலாப்பூரில் வசிக்கிறேன்.  மயிலாப்பூர் பெண்களைப் பற்றி நான் அவதூறாக எழுதினால் நிச்சயம் இங்கே உள்ள கவுன்சிலர், தெருக்கோடி தாதா, வட்டச் செயலாளர் போன்றவர்களிடம் பஞ்சாயத்துக்குப் போய் உட்கார்ந்தபடி தான் நான் செயல்பட வேண்டியிருக்கும். கருத்துச் சுதந்திரம் என்பது குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட சாதி, குறிப்பிட்ட மதத்துப் பெண்களை பாலியல்ரீதியாக இழிவுபடுத்துவதா ஜெயமோகன்?
------------------------------------------------------------------------------------------

சாரு நிவேதாவை இந்த சமூகத்துக்கு உபயோகமான எழுத்தாளனாக என்றுமே கருதுபவனல்ல. அதேபோல் ஜெயமோகனது பல்வேறு கருத்துகளுக்கு மாறுபட்டவன் நான் .இருந்த போதிலும் மாதொருபாகன் நூலைப்பொருத்த மட்டில் மேலே பேசப்பட்ட கருத்துக்கள் சரியானதென்றே கருதுகிறேன்.
பின்னூட்டத்தில் அருள்கூர்ந்து சாருவின் மொழியை மேற்கொள்ளாதீர்கள்.     -  வில்லவன் கோதை 

வியாழன், ஜனவரி 15, 2015

அவர்தான் பெரியார் !

அவர்தான் பெரியார் !
( எழுத்தாளனின் வானளாவிய சுதந்திரமும் இடையில் நுழையும் சாதியும் ! }
ஜெயமோகனுக்கு

இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக பெரியார் பாடுபட்டாராம்!
அவர்களின் சாதிப்பற்றைக் கைவிடும்படி கூறவில்லையாம்!!
என்ன அழகா புளுகுறீங்க!!
பார்ப்பனியம் என்றாலே பொய் புரட்டுதானே!
கடைசிவரைக்கும் சாதிவெறியர்களை நீங்கள் கண்டிக்கவில்லையே மிஸ்டர் ஜெயமோகன்!!
சாதியை கட்டிக்காக்கும் புராணங்களையும் வருணாசிரமத்தையும் சமரசமில்லாமல் எதிர்த்தாரே பெரியார்! உங்களால் முடியுமா?
ஆனால் வன்னியர் மாநாட்டில் மேடையேறி சாதிக்கு எதிராக பேசினாரே பெரியார்!
சத்திரியன் என்றால் பார்ப்பானுக்கு அடிமை. அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு என்றாரே!
அவர்தாம் பெரியார்! உங்களால் சொல்ல முடியுமா?
பெயரில்கூட சாதி இருக்க கூடாது என்று மக்களிடம் சொன்னாரே பெரியார்!
நீங்க சொன்னீகளா?? இல்லை வேறு பார்ப்பனர்கள் சொன்னார்களா??
வழிபாட்டு சமத்துவம் வேண்டி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த பெரியாரிஸ்டுகள் வந்தார்கள், வருவார்கள்.நீங்கள் வருவீர்களா?
பார்ப்பான் எச்சி இலையில் சூத்திரனை உருளச் சொல்லுதய்யா உன் இந்து மதம்!
ஜெயேந்திரனுக்கு கால் கழுவி விட சொல்லுத்தய்யா உன் இந்து மதம்!
பெரியார் எதிர்த்தார். நீங்கள் என்ன செய்தீர்கள்?
சாதியால் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டால் நான் பார்ப்பனர் பக்கம் நிற்பேன் என்றாரே! அவர்தாம் பெரியார்!
இன்று சிலர் கொழுப்பெடுத்து சாதித் திமிர்ப் பிடித்து திரிந்தால் பெரியார் என்ன செய்வார்?
அவரை சாடுவதை விடுத்து சாதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்க.
இந்த மாதிரி குட்டையைக் கிளப்புற வேலை வேண்டாம்.
பார்ப்பனியத்தை வீழ்த்தினால் சாதிக் கட்டமைப்பு வீழும் என பெரியார் எண்ணியிருக்கலாம்!
ஆனால் பாழாய்ப் போன இடைநிலை சாதிகள் இன்று பார்ப்பனியத்தைக் கையில் எடுத்து திரிகின்றன.
* குருநாதன் சிவராமன்

என்னை விடுங்கள் நான் பிற்போக்கு
அன்புள்ள குருநாதன், சிவா,
இப்போது தேசிய அளவில் அத்தனை தொலைக்காட்சிகளிலும் பேசபப்டும் ஓர் ஊர் திருச்செங்கோடு. அத்தனைபேரும் சொல்லும் ஒருவிஷயம் அது பெரியார் பிறந்த மண். சற்றுமுன் மலையாள தொலைக்காட்சியிலும்கூட
ஒவ்வொருவரும் அவரவர் பார்வையின்படியே இதைப்பார்க்கிறார்கள். முழுக்கமுழுக்க சாதியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது இவ்வெதிர்ப்பு. அதை இந்துத்துவ அரசியல் பயன்படுத்திக்கொள்கிறது- எப்போதும் அது அப்படித்தான். அவர்கள் ஒரே விஷயத்தின் இரு முகங்கள்
ஆனால் திராவிடக் கட்சிகள் என்ன செய்தன? இடதுசாரிகள் என்ன செய்தன? தமிழர்தேசியவாதிகள் என்ன செய்தனர்? இவர்கலெல்லாம் முற்போக்கு அல்லவா? சாதியொழிப்பு மத ஒழிப்புச் செம்மல்கள் அல்லவா? இதுதான் கேள்வி
இங்கே பேசும் ஒவ்வொருவரையும் கவனியுங்கள் இது இந்துத்துவாவிற்கான எதிர்ப்பு மட்டுமே, பாரதிய ஜனதாவுக்கான எதிர்ப்பு மட்டுமே என சொல்லி இதிலுள்ள இடைநிலைச் சாதியின் ஆதிக்க அரசியலை எத்தனை தந்திரமாக தவிர்த்துப்பேசுகிறார்கள். அந்த கோட்டுக்குள் நின்றபடி எத்தனை உணர்ச்சிப் பொங்கல்கள் எத்தனை முற்போக்கு ஜாலங்கள்!
அந்த தந்திரத்தைத்தான் நான் உடைத்து முன்னே வைக்கிறேன். அது உங்களுக்குச் சங்கடமளிக்கிறது. அதை என் மீதான வசையாக மாற்றித்தான் நீங்கள் கடக்கமுடியும்
பெரியாரை இழுத்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அது அவரது மண். இதைச்செய்பவர்கள் கூடவே பெரியாரியமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரியர்கள் செவி அடைக்கும் மௌனத்தை கடைப்பிடிக்கிறார்கள்
தமிழகம் இனிமேல் இந்த இடைநிலைச்சாதிவெறி அரசியலைப் பேசாமல் எந்த முற்போக்கையும் பேசமுடியாது நண்பரே
ஆகவே இங்கே பொங்காதீர்கள். உங்கள் பெரியாரியம் வெறும் கோஷம் இல்லை என்றால் திருச்செங்கோடுக்கு போய் நில்லுங்கள். உங்கள் கறுப்புப்படை திருச்செங்கோட்டை அதிரவைக்கட்டும். பெருமாள் முருகனை தூக்கி முன்னால் நிறுத்துங்கள்.
என்னை விடுங்கள் நான் பிற்போக்கு. அவர் உங்களவர். இருபதாண்டுக்காலமாக உறுதியான பெரியாரியர்களில் ஒருவர். அத்தனை பிரிவுகளும் சேர்ந்து சென்று திருச்செங்கோட்டை நிறையுங்கள்.ஃபேஸ்புக்கில் மட்டும் எப்படியும் பத்தாயிரம் பேர் இருப்பீர்கள் அல்லவா?
செய்யமாட்டீர்கள். பெரியாரின் பொன்மொழிகளை -சொல்லாதையும் சொன்னதையும்- எடுத்துப்போட்டு வசைபாடுவே செய்வீர்கள்.
ஜெயமோகன்  


தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம் !

தமிழ்ப்புத்தாண்டு !  நல் வாழ்த்துக்கள் !      (வள்ளுவராண்டு 2046 )

தைத்திங்கள் முதன்நாளை தமிழர்தம் புத்தாண்டு தினமாக கொண்டாடும் தமிழ் உணர்வாளர்கட்கு வேர்கள் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தொள்ளாயிரத்து இருபத்தியொன்றில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார்  ஆய்ந்தெடுத்த தமிழர்தம் புத்தாண்டு தினத்தை தக்க சான்றுகளோடு நிறுவ  தமிழறிஞர்கள் குழுவொன்றை ஏற்படுத்தினார்.
தமிழ்த்தென்றல் திரு வி கல்யாணசுந்தரம்
தமிழ்க்காவலர் திரு கே. சுப்ரமணியம்பிள்ளை
சைவப்பெரியார்  திரு  சச்சிதானந்தம் பிள்ளை
நாவலர் சோமசுந்தர பாரதியார்
நாவலர்   திரு என் . எம்  வெங்கடசாமி நாட்டார்
முத்தமிழ்க்காவலர்   திரு   கே ஏ பி விஸ்வநாதம்  
போன்ற அன்னை தமிழ்பால் ஆர்வம் கொண்ட பேரறிஞர்கள் ஒன்றுகூடி  தைத்திங்கள் முதன்நாளே தமிழர் புத்தாண்டு ஆரம்பம்  என்றறிவித்தனர். தமிழர்தம்  வாழ்வையும் வழியையும் நிர்ணயிக்க வேறு எவரையும் விட எம் தமிழ் அறிஞர்க்கே முதலுரிமை உண்டென்று என்று கருதுகிறேன்.
வருடாவருடம் பல்வேறு விளக்கங்களை தந்தபின்பும்   சித்திரை முதன் நாள்தான்  தமிழ்ப் புத்தாண்டு என்று வீம்பு பேசுவோர் உரிமையில் வேர்கள் குறுக்கிட விரும்பவில்லை.
காலம் தக்க பதில் கூரட்டும்.
தமிழர்வாழும் இந்த மண்ணுக்கு தமிழ் நாடென்ற பெயர் சூட்டவே எத்தனையெத்தனை போர்களை நிகழ்த்த வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் ஒவ்வொரு உரிமையையும் வென்றெடுக்க எத்தனையத்தனை தடைக்கற்கள்.
ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் ! பொழுது விடிகிறபோது விடியட்டும் !

பாண்டியன்ஜி
15 01 2015


சென்னை 603 209