சனி, ஜூன் 06, 2015

ஓ ! நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிப்பவை !


எப்போதுமே காலச்சக்கரம் சுழல்வதை கவலையோடு பார்ப்பவன் நான். காலத்தை கழிக்கின்ற எந்த விளையாட்டையும் இயல்பாக விரும்பாதவன்.பொழுதை போக்குதற்காக ஒரு எழுத்தைகூட நான் எழுதியதில்லை என்ற ஜெயகாந்தனின் சொற்கள் எனக்கு ரொம்ப பிடித்தமானவை. 
என் பிறந்த நாளை நான் எப்போதும் நினைவிற்கொண்டதில்லை. எதிர்நோக்கி வருகின்ற ஒவ்வொரு பிறந்தநாளும் ஏதோ ஒரு வகையில் எனக்கு ஒரு பேரிழப்பைத்தான் தரக்கூடுமென்று நம்புகிறவன்.ஒவ்வொரு தடவையும் காலம் என் கணக்கிலிருந்து ஒரு வருடத்தை கழித்துக்கொள்வதாகவே புரிந்திருக்கிறேன். எப்போதாவது உறவினர்கள் நண்பர்கள் என் பிறந்த நாளை நினைவூட்டும்போது மெல்லிய புன்னகையுடன் கடந்துபோவேன். இப்போதெல்லாம் முகநூல் பக்கங்களும் வணிக நிறுவனங்களும் தவறாமல் எனக்கு அந்த நாளை நினைவூட்டித் தொலைக்கின்றன.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்.
நான் பிறந்த அடுத்த வருடம் இந்த நாடு விடுதலையுற்றது .அதுமட்டும் என் நினைவுகளில் அழியாமல் நிற்கிறது.
தேசமே விரிந்து பரந்து வெருமனே கிடந்தது.அடிப்படை வசதிகள் அன்று எவருக்கும் எட்டியதில்லை.
ஒரு கலைக்கல்விக்கோ ஒரு தொழிற் கல்விக்கோ மாவட்டத்தின் இன்னொரு மூலைக்கு ஓட வேண்டிய நிலை. மருத்துவ அவசரத்துக்குகூட மாவட்ட தலைநகருக்கு ஓடவேண்டும். கிடைத்த வேலையில் பணியாற்ற அரசு அலுவலகங்களில் காலநேரமின்றி உழைக்க வேண்டியிருந்தது.ஊதியவிகிதங்களும் இன்றைய நிலையோடு ஒப்பிடக்கூடியதன்று.
இப்போதும் எண்ணிப்பாற்கிறேன்.பற்றாக்குறை பரவலாக இருந்தபோதும் மனநிறைவோடு நகர்ந்த வாழ்க்கை.எதிர்பாராத துயரங்களோடு இடையிடையே எதிர்பட்ட மகிழ்வான தருணங்கள்.நெருக்கடியற்ற நகரவாழ்க்கை .சூதும் வாதும் இன்றுபோல் தலைவிரித்தாடியதில்லை.
ஓ ! அவையெல்லாம் நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிப்பவை.
எனக்கு மறு பிறப்பு பற்றி முழுமையான எந்த நம்பிக்கையும் இதுவரை ஏற்பட்டதில்லை .இறந்தபின் ஒவ்வொரு உடலும் சாம்பலாகித்தான் பார்திருக்கிறேன்.ஒரு சிலர் இப்போதும் பேசிக்கொண்டிருப்பதைப்போல் உயிர் மூச்சு எங்கோ பிரயாணம் செய்வதை நினைத்துப் பார்க்கமுடிவதில்லை. ஒருவேளை அப்படியொரு வாய்ப்பு கிட்டுமென்றால் நான் வாழ்ந்த அதே வாழ்க்கையை மீண்டுமொருமுறை வாழத்தான் ஆசைப்படுகிறேன்.
வில்லவன் கோதை
06 சனி ஜூன் 2015


என் முகநூல் சித்திரங்கள் 03