ஞாயிறு, ஜூன் 07, 2015

நானும் நான் பயிலாத தட்டச்சும் !


தமிழ் நாடு மின்வாரியத்தில் மின்னணுவியல் சார்ந்த தொழில் நுட்பப்பிரிவில் ஏறதாழ முப்பதாண்டுகளுக்கு மேலாக பணியிலிருந்தவன். கண்ணாடிக் குழாய் வால்வுகள் ,ட்ரான்சிஸிஸ்டர்கள் , ஐசிக்கள் ,மைக்ரோபுராசசர்கள், போன்ற நவீன தலைமுறை சாதனங்களுக்கு அடுத்தடுத்து ஈடு கொடுத்தவன்.இறுதியில் கணனி மற்றும் ஆப்டிகல் பைபர் என்ற கண்ணாடி இழை பயன்படுத்தப்பட்ட தளங்களிலும் பணியாற்றி ஓய்வுற்றவன்.
இருந்தபோதிலும் இணையம் எனக்கு முழுமையாக அறிமுகமானது எனது பணி ஓய்வுக்கு பிறகுதான்.
அறுபதுகளிலேயே திருத்தருபூண்டியில் தொழிற்கல்வியில் ஈடுபாடு கொண்டு தனிப்பிரிவில் பயிலத்தொடங்கிவிட்டேன்.செகரட்ரிகல் என்ற வணிகவியல் பாடம் படிப்பவர்களுக்கு மட்டும்தான் அன்று தட்டச்சு சொல்லிக்கொடுத்தார்கள்.பெரும்பாலும் அரசு அலுவலகங்களுக்கு தலையாய தகுதியாக தட்டச்சு சொல்லப்பட்டது. நான் முறையாக தட்டச்சு பயிலாததற்கு இதுவும் ஒரு காரணமென்று கருதுகிறேன்.
ஆனால் எப்படியோ இன்றைய கணனி யுகத்தில் முறையான தட்டச்சு தேவையான ஒன்றாயிற்று.அதற்கான வாய்ப்பும் வசதியும் எனக்கிருந்தபோதும் நான் கடைசிவரை முறையான தட்டச்சு பயிலவேயில்லை.
என் பணி ஓய்விற்கு பிறகு கணனியில் எனக்கேற்பட்ட தொடர்ந்த ஆர்வமும் விடா முயற்சியும் என்னை இந்த தலைமுறை கணனிகளை எளிதாக கையாள உதவியிருக்கிறது.நானே ஏற்படுத்திக்கொண்ட வேர்கள் வலைப்பூ கணனியின் பல்வேறு தளங்களில் எனக்கு பயிற்சியை தந்திருக்கிறது.வேர்களுக்காக நான் மேற்கொண்ட கடும்முயற்சியும் அதற்காக நான் விலை கொடுத்த காலமும் கணனியின் கவர்சிகரமான பக்கங்ளை எனக்கு எளிதாக்கியிருக்கிறது.இப்போதெல்லாம் தமிழ் ஆங்கில எழுத்துகளில் நேர்த்தியாகவும் விரைவாகவும் தட்டச்சு செய்ய முடிகிறது.
ஆறாம் ஏழாம் வகுப்புக்கள் படித்த காலத்திலேயே இதழியல் துறையை காதலித்தவன் நான். கையெழுத்து பத்திரிக்கையாக பூக்காடு இதழை வடிவமைத்தவன். அடுத்தடுத்த நகர்வுகளில் பெரும்பகுதி மின்னணுத்துறையில் பயணிக்க நேர்ந்துவிட்டதால் நிறைவேறாத அந்த கனவுகளை வேர்கள் வலைப்பூ எனக்கு நிறைவேற்றித்தந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ,
வில்லவன்கோதை
07 ஞாயிறு ஜூன் 2015

என் முக நூல் சித்திரங்கள் 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !