வியாழன், ஜூன் 11, 2015

விழித்துக்கொண்ட ஒரு சமூகம் !


இரண்டு நாட்களுக்கு முன் ( 07 06 2015 ) ஒரு குடும்பச்சூழலில் கும்பகோணத்துக்கு முன்னால் இருக்கும் திருப்பனந்தாளுக்கு சென்றிருந்தேன். ஒரு காலத்தில் பேரூந்திலிருந்து இறங்கியதுமே இந்த ஊரின் பெரும்பகுதியில் உயரமான இடங்களில் சிவ சிவ என்ற எழுத்துக்கள் கண்களில் படுமாறு காட்சி தரும்.
பாடல் பெற்ற இந்த சிவ தலத்தில் ஆங்காங்கே கருவிழிகள் நீர் உகுக்கும் அவலச் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. இப்போதெல்லாம் நான் வாழுகின்ற ஊரிலும் பயணிக்கிற பிரதேசங்களிலும் இதுபோன்ற மரண அறிவுப்புகளை தினந்தினம் நிரம்ப பார்க்கிறேன். ஏற்கனவே அறிமுகமற்ற ஊர்களில்கூட சுவரொட்டிகளில் இருப்பவர்கள் யாராக இருக்கக்கூடுமென்று அறிந்து கொள்கிற ஆவலும் எனக்குள் இருந்திருக்கிறது.
இதற்கு முன்னால் அந்தந்த கிராமத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் பரையடித்து இந்த துயரத்தகவலை தெருவெங்கும் சுமந்து வருவார். இறந்துபோனவரின் இயல்பான அடையாளங்களை சொல்லி அவரது இறுதி யாத்திரை நிகழுப்போகும் நேரத்தையும் ஊராருக்கு பரையடித்து சொல்லுவர்.
மாற்றங்கள் நொடிக்கு நொடி நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.
இன்று நெடுந்தூரம் பரவிக்கிடக்கிற உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இப்போதெல்லாம் கைபேசிகள் கண நேரத்தில் தகவல்களை சொல்லிவிடுகிறது. இரவோடு இரவாக இறந்தவரின் முகங்களோடு அச்சிட்ட கண்ணீர் சுவரொட்டிகள் தெருமுனையெங்கும் ஒட்டப்பட்டுவிடுகிறது. இன்றெல்லாம் இறந்தவர் எவரும் ஒருபோதும் ரகசியமாக விடை பெற்றுவிட முடியாது.
நான் மேற்கொண்ட பயணத்தில் என் கண்களுக்கு பட்ட இந்த சுவரொட்டி என்னை ஒருவகையில் ஈர்த்தது. அதில் காணப்பட்ட வாசகங்கள் என் நினைவுகளைப்பெரிதும் கிளறிற்று.
ஏறதாழ நாற்பது வருடங்களுக்கு முன்னால் இதே திருப்பனந்தாள் கடைவீதியில் ஒரு துணிக்கடை வாயிலில் சாதாரண தையல் எந்திரத்தோடு வாழ்க்கையைத் துவக்கியவர் தலித் சமூகத்தைச்சார்ந்த திரு டீ எம் மணி. இயல்பாக பகுத்தறிவு சிந்தனைகள் கொண்ட மணி காலப்போக்கில் தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கார் சிந்தனைகளில் ஐக்கியமாகிறார். சுயமரியாதை சமூக விழுப்புணர்ச்சி அற்றுக்கிடந்த தலித் சமூகத்தை தட்டி எழுப்பி சாதி இந்துக்களின் அடக்குமுறையை எதிர்க்கிறார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தலித்திய சமூகத்திற்காக போராடிய திரு மணி தனக்குப்பின்னாலும் தன் போராட்டங்கள் தொடர நீலப்புலிகள் என்றொரு இயக்கத்தையும் தோற்றிவைத்திருக்கிறார்.
தந்தை பெரியார் சொன்னது போல பாபாசாகிப் அம்பேத்கர் செய்தது போல இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய தலித்தியஅடையாளத்தை உதறி இஸ்லாத்தை தழுவுகிறார் .பிறக்கும்போது தலித்தாக பிறந்த
திரு டீ எம் மணி இறக்கும்போது
உமர் பரூக் காய் ஆக ஒரு இஸ்லாமியனாக இறந்திருக்கிறார். அவர் பெற்றெடுத்த மூன்று புத்திரர்களில் இளையவன் ஒருவனும் தந்தை வழியில் இந்து மதத்தை ஒதுக்கியிருக்கிறான்.
இறுதி காலம்வரை தலித்திய சமூகத்துக்காக போராடிய மணியின் மறைவுக்கு தலித்திய சமூகமே திரள்கிறது.
‘’உமர் இப்போது ஒரு இஸ்லாமிய சகோதரர். எங்கள் சக தோழரை எங்கள் மத வழக்கப்படியே நல்லடக்கம் செய்வோம் நீங்கள் எல்லாரும் இந்த நல்லடக்கத்தில் அமைதியாக கலந்து கொள்ளலாம். மலர் மாலைகள் .ஆரவாரம் ஆர்பாட்டம் அருள் கூர்ந்து எதுவும் வேண்டாம் !
- - - திரண்டெழுந்த தலித்திய சமூகத்துக்கு திருப்பனந்தாள் இஸ்லாமிய தலைவர் அறிவிக்கிறார்
கண்ணீரோடு விடை கொடுக்கிறது அந்த சமூகம்.
இந்தத் தகவல்களை நான் பயணித்த அம்பாசிடர் காரின் அந்த ஊரைச்சேர்ந்த ஓட்டுநர் என்னோடு பகிர்ந்து கொண்டார்.. இந்த தகவலின் உண்மைத்தன்மையை அறிய மேலும் இரண்டு சாதி இந்துக்களிடம் பேசினேன். தலித்துகளிடையே உமர் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி அதன் விளைவாக தலித்துகளிடையே ஏற்பட்டுவிட்ட மாற்றங்களை பட்டியலிட்டனர்
தங்களுக்கு நிகரான சுபாவமும் மிகுந்த ஒழுங்கீனமும் இப்போது ஏற்பட்டுவிட்டதை உரத்த குரலில் பேசினர்.தங்கள் செய்துவந்த விவசாயத்தொழில் இவர்களின் விழிப்புணர்வால் நசிந்து போனதை சொன்னனர்.அன்றாட வேலைகளுக்குகூட ஆட்கள் இல்லாமற்போனதை குறையாகக் குறிப்பிட்டனர்.
ஒருசமூகம் எத்தனை காலங்களுக்கு உறக்கத்திலிருக்க முடியும். காலங்காலமாக கொண்டிருந்த தங்கள் தலைமைப்பண்புகள் பறிபோனது இவர்களை பதறச்செய்கிறது. வேறென்ன..
வில்லவன் கோதை
11 06 2015



என் முகநூல் சித்திரங்கள் 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !