புதன், அக்டோபர் 26, 2011

உள்ளாட்சி தேர்தலும் உளருவாயனும் !

பாண்டியன்ஜி 

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கின்றன.112750  க்கு மேற்பட்ட வேட்ப்பாளர்கள் பலமுனை போட்டிகளைச் சந்தித்து வெற்றி வாகை சூடியதாக மாநிலதேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்கள் பெற்ற அமோக வெற்றியை கொண்டாடி இந்த தேசத்துக்கு தங்களின் ஜனநாயகக்கடமைகளை நிறைவேற்ற களத்தில் இறங்கியிருக்கின்றனர்.அதே சமயம் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் வாக்கு எண்ணிக்கையில் பிழை நேர்ந்திருக்கிறதென்றும் கூட்டல்கள் சரியாக செய்யப்படவில்லையென்றும் நடந்து முடிந்த தேர்தல் ஒரு ஜனநாயகப்படுகொலை என்றும் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் உரத்த குரலெழுப்பத் துவங்கியிருக்கின்றனர் .இவையனைத்தும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிற மவுனவிரதத்தால் கூடியவிரைவில்அடங்கிப்போகும் என்று நம்பலாம். 
சமீபகாலங்களில் இந்த நாட்டில் அவ்வப்போது நடந்து முடிந்த பொதுத்தேர்தல்களை வெவ்வேறு தேசங்கள் கூர்ந்து நோக்கியதை கண்டிருக்கிறேன்.தேர்தல் ஆணையத்தின் கடுமையான செயல்பாடுகளையும் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்அணு எந்திரங்களின் அசாத்திய திறனையும் வியந்து பார்த்த தேசங்கள் உண்டு.இது போன்ற ஜனநாயகத்திருவிழாவை தங்கள் தேசங்களிலும் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக ஆசைகொண்ட தேசங்களும் உண்டு.
இவையெல்லாம் ஒருவகையில் உண்மையானதுதான். ஆனால் -இப்போது நடந்து முடிந்திருக்கிற உள்ளாட்சிமன்றங்களுக்கான தேர்தல்கள் அப்படிப்பட்டதல்ல.இந்த தேர்தல்கள்முழுக்க முழுக்க மாநில அரசின்ஆளுமைக்கு உட்பட்ட மாநில தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே நடந்திருக்கிறது.ஆளும் கட்சியின் அரணாக விளங்குகின்ற காவல்துறையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பணியாளர்களைக் கொண்டும் இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.பெரும்பாலும் இந்த மாநில அரசுகள் மத்தியில் ஆளும் அரசையும் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களையும் என்றைக்கும் மதித்து செயல்பட்டதாக நினைவில்லை. இதுபோன்ற சூழலில்தான் இந்த உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கிறது .அளவிற்கதிகமான அதிகார துஷ்பிரயோகங்களும் சட்டத்துக்கெதிரான சகலஆயுதங்களும் அள்ளி வீசப்பட்டிருக்கின்றன.
வீட்டுக்கு வீடு குறைந்தபட்சம் 500க்கு குறையாமல் பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது.
அரிசி மூட்டைகள்வணிகர்கள் வழியாக வினியோகிக்கப்பட்டிருக்கிறது.
நலிந்தபிரிவினர் வாழும் நகர்களில் வெள்ளி குங்குமச்சிமிழும் வெள்ளிமூக்குத்தியும் உயர் ரக புடவைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ( கொடுக்கப்பட்ட மூக்குத்திகளில் செம்பு குலுங்கச்சிரித்தது வேறு விஷயம்
)
மது பிரியர்களுக்கு மதுபாட்டில்களும் பிரியாணி பொட்டலங்களும் தாராளமாக தரப்பட்டிருக்கின்றன.
பல்வேறு வேட்பாளர்கள் ஆட்டு இறைச்சியும் கோழிக் கரியையும் வாக்குகளுக்கு விலையாக கொடுத்திருக்கின்றனர்.
இன்னும் சில இடங்களில் வாக்குக்களின் எண்ணிக்கையை பொறுத்து வாஷிங் எந்திரங்களும் குளிர் சாதன பெட்டிகளும் இருசக்கர வாகனங்களும்இறக்கப்பட்டிருக்கின்றன.
 குறைந்தபட்சம் ஒவ்வொரு வேட்பாளரும் விலையுயர்ந்த தேங்கா பூ துண்டுகளை வாக்காளர்களுக்கு தாராளமாக வினியோகித்திருக்கின்றனர்.
பல்வேறு வாக்குச்சாவடிகளில்அரசுஊழியர்களே ஆளும் கட்சிக்கு வாக்கு சேகரித்ததை காணமுடிந்தது.
.இது போன்ற சகல ஆயுதங்களையும் ஆளும் கட்சிமட்டுமே பிரயோகித்ததாக கூற முடியாது.சயேட்சை வேட்பாளர்களிலிருந்து அத்தனை கட்சிகளுமே பங்கு பெற்று ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக் கொள்ளவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.
அத்தனையையும் கைநீட்டி வாங்கிய இந்த தேசசத்தின் குடிமக்கள் ஜனநாயகத்துக்கு மாறா வடுவை எற்படுத்தி விட்டார்கள் என்பதுதான் உண்மை.இது போன்ற அத்து மீறல்கள் தமிழகமெங்கும் பரவலாக நிகழ்ந்ததை நான் செய்த பயணங்கள் உறுதி செய்தது. வேட்பாளர்களில் சிலர் தங்கள் நிலை அறிந்து கட்சி வழங்கிய நிதியையே மிச்சம் பிடித்ததையும் பார்த்திருக்கிறேன்.
இந்த தேர்தலைத்தான் அமைதியாக நிகழ்ந்த தேர்தலென்றும் இதற்குமுன்னால் நிகழ்ந்த தேர்தல்கள் தேர்தல்களே அல்ல என்றும் மாநில தேர்தல் ஆணையர் சோ அய்யர் வியந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்கள் ஞாயமான நடு நிலையான தேர்தல்களல்ல.தழிழர்கள் தலைகுனியத்தக்க ஜனநாயக படுகொலையே.இந்த மாபொரும் படுகொலைக்குஇந்த தேசத்தின் குடிமக்களே தலையாய காரணம்.
ஒரு தேசத்தின் குடிமக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் அவர்களுக்கு அமையும் தலைவர்களும் இருக்கக்கூடும் என்பது நிதர்சனமான உண்மை.
தமிழகத்தில் ஒவ்வோருமுறை அரசியல் பிரளயம் ஏற்படும்போது வட இந்திய பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கருத்துக்களை கேட்க துக்ளக் சோ ராமசாமியை நாடுவது உண்டு. அவரும் வஞ்சனையின்றி தன் கருத்துக்களை வாரி இறைத்தே வந்திருக்கிறார்.நடந்துமுடிந்த ஜனநாயகபடுகொலைகுறித்த அந்த நடுநிலை நோக்கரின் கருத்துக்களை பாருங்கள்.
உள்ளாட்சித்தேர்தல்கள் தமிழகத்தின் நிலையை தெளிவாக அறிவித்திருக்கின்றன.ஜெயலலிதாவின் மீது மக்கள் கொண்டிருக்கிற மாறாத நம்பிக்கையை மறுபடியும் உறுதி செய்திருக்கின்றன.பத்திரிக்கைகள் இப்பிடி அப்பிடி என்று எழுதலாம்.அது முழுக்க முழுக்க தவறானது..விஜயகாந் தனியே எதுவும் செய்திட முடியாது என்பதும் தெளிவாகிறது.
எத்தனை பெரிய பூசணியை இலையில் மறைக்கும் இந்த அரசியல் தரகனின் வாசகங்களை பாருங்கள்.

இடுகை 0074