ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கருப்பு நிலா ! ( வளர்ப்பும் நட்பும். )

வில்லவன்கோதை

          சென்ற ஞாயிற்றுக்கிழமை  ( 23 11 2011 ) காலை மணி ஒன்பது இருக்கும் .கைபேசிமெல்ல சிணுங்கியது.
சுப்புணி செத்து போச்சுப்பா..
நெஞ்சுக்குழி அடைக்க என் மகள் சவியின் குரல் திணறுகிறது.
         அப்போது நான் சென்னையிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறேன்.வார்த்தைகள் வெளிவராமல் துண்டித்த கைபேசியில் மீண்டும் அழைக்கிறேன்.
         எப்படிம்மா...
டாடா சுமோக்காரன் அடிச்சிட்டான்..
         நெஞ்சம் திணறத் திணற...என்னையறியாமல் என் கண்களிலிருந்து நீர் வழிகிறது.           என்ன தாத்தா
பேரன் கவுதம் கூர்ந்து கவனிக்கிறான்.
         தகவல் தெரிந்ததும் குழந்தைகள்  சிபி ,  கவுதம் முகங்களில் சோகம் சூழ்கிறது.
         சுப்புணிக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட உறவு அப்படியொன்றும் சுப்புணி கண் விழித்தபோது ஏற்பட்டதல்ல.இப்போதிருக்கும் வீட்டின் முதல் தளத்திலிருந்து தரைதளத்துக்கு குடியேறி ஏறதாழ பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும்.அடுத்த அய்ந்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்த ஜீவனின்  நட்பு எங்களுக்கு கிடைத்து எங்களுக்கு கிடைத்தது என்று சொல்லவேண்டும்.. எப்போதுமே செல்லப் பிராணிகளை வீட்டில் வைத்து வளர்ப்பதை முற்றிலும் சரி என்று நான் கருதியதேயில்லை.
வீதியெங்கும் சுதந்திரமாக சுற்றித்திரியும் பிராணிகளை சங்கிலிகளில் பிணைத்து பாலும் சோறும் பருமாறுவது....
மனிதர்களுக்கு அரிதான சிறகுகளை வரமாக பெற்ற பறவைகளின் சிறகுகளை கத்தரித்து முக்காலடி கூண்டுக்குள் புகுத்தி  நவதானியங்களைக் பரிமாறுவது......
நாம் ஏற்படுத்திக்கொண்ட நவீன பழக்கங்களை செல்லப்பிராணிகளிடம் திணித்து அவைகளை இம்சைக்குள்ளாக்குவது...
இவைகள் எல்லாம் என்னால் எளிதில் ஜீரணிக்க முடியாதவை. அவைகளின் இயல்பான சுதந்திரத்துக்கு இடையூரானவை என்று கருதுகிறவன் நான்
அவசரமாக வெளியூர்களுக்கு குடும்பத்தோடு செல்ல நேரும்போது அவைகளுக்கும் நமக்கும் ஏற்படும் சங்கடங்கள்..  அப்பப்பா. சொல்லித்தீராதவை.
அதுமட்டுமினறி ஒரு காலத்தில்  ஜூலியையும் சீசரையும் ( அவைகளும் செல்லப் பிராணிகள்தாம்.)  நேசித்து வற்றை இழக்க நேர்ந்தபோது  மாறாத வடுக்களை பெற்றது எங்கள் குடும்பம்..அதன் விளைவாக..வேண்டவே வேண்டாம் இந்த செல்லப் பிராணிகள் என்று தவிர்த்து வந்தோம்.
நான்கு வீதிகள் தொண்ணூறு  டிகிரியில் சந்திக்கின்ற அந்த சதுக்கத்தில்  மேற்கு பார்த்து அமைந்திருந்தது எங்கள் வீடு. இரவு பகலாக இயங்கும் தொழிற்கூடங்கள் நாங்கள் வாழும் நகரைச்சூழ்ந்திருந்தன. நடு  நிசியில் கூட பணியாளர்களின் நடமாட்டம் ஆங்காங்கே காணப்படும்.
எல்லா தெருக்களைப்போலவே எங்கள் தெருவிலும் கணிசமான நாய்கள்ண்டு   இருந்தபோதும் அவைகள் எவரையும் துன்புருத்தியதில்லை.எப்போதோ சில நாட்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு இங்குமங்கும் ஓடுவதுண்டு. கூட்டம் கூட்டமாக சேர்ந்து வேற்றுப்பிரதேச நாய்களைத்தான் எல்லைக்கப்பால் துரத்துமே தவிர அறிமுகமான அறிமுகமற்ற மனிதர்களைக்கண்டு நாய்கள் நடுநிசியில் குரைத்ததாக நினைவில்லை ஒவ்வொன்றும் தங்கள் எல்லைகளுக்குள் கிடைக்கின்ற உணவை உண்டு இங்கும் அங்கும் தங்கள் எண்ணம் போல திரிந்து கொண்டிருக்கும். அவைகள் எவரையும் பொருட்டாக மதித்ததில்லை.
அத்தனை தெருநாய்களிலும் கம்பீரமானது எங்கள் சுப்புணி..வலுவான உடலமைப்பு..மிகுதியான கருமை. கூர்ந்த முகத்தில் லேசான மஞ்சள் திட்டுகள். அதன் நடுவில் பளிச்சென்ற வெண்மை... எவரையும் எளிதில் ஈர்த்துவிடும்.
அது எங்களைப் பொறுத்தவரை ஒரு கருப்பு நிலாவாகவே இருந்திருக்கிறது.
எப்போதோ படித்திருக்கிறேன்.கண்டிப்பும் திறனும் மிக்க ஒரு தமிழ்ப்பேராசிரியரை குருவாகப் பெற விரும்பினான் அனைத்திலும் தாழ்ந்த மாணவன் ஒருவன். அவரை குருவாக அடைய அவன் ஒரு தந்திரம் செய்தானாம். தினந்தினம் அதிகாலை அவர் நடைபயணம் வரும்போது வழக்கமாக குறுக்கிட்டு வணக்கம் அய்யா ன்று கைகூப்பி சென்றானாம்.தொடர்ந்து அவன் செயலை கவனித்த அந்தபேராசிரியர் அவனை அழைத்து பேசி மாணாக்கனாக ஏற்றுக்கொண்டாராம். அப்படித்தான் சுப்புணியும் எங்களுக்கு அறிமுகமாயிற்று.நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சமயம் சுப்புணி எவரிடமோ வருத்தமுற்று வீட்டு வாசலில் வந்து நின்றது. அது ஒரு றுகிய நட்பாக பின்நாளில் மாறும் என்று நாங்கள் ன்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த நாள் ..அதற்கடுத்த நாள்..
சுப்புணி சளைக்கவில்லை.இருந்தும்அப்போது அதனுடைய மொழி எங்களுக்கு புரியாமலிருந்தது.
நாய்கள் வாயில்லா ஜீவன் என்று அடிக்கடி பேசக்கேட்டிருக்கிறேன்.அதில் கடுகளவும் உண்மையில்லை என்பதை போகப்போகத்தான் உணர்ந்தேன்.நாய்கள் தங்களுக்குள் பிரியமுடன் பேசிக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். தொடர்ந்த பழக்கத்தில் மனிதர்கள் பேசும் மொழியைக்கூட அவைகள் புரிந்து கொண்டு கண்களாலும் உடல்உறுப்புகளாலும் பதிலளிப்பதை அறிந்திருக்கிறேன்.
சுப்புணி தினந்தினம் சரியான தருணத்தில் எங்களை சந்திக்க ஆரம்பித்தது.
மெல்ல மெல்ல நாங்கள் சுப்பிணியை எதிர்பார்க்க ஆரம்பித்தோம்.ஒரு வேளை உணவு இரண்டு வேளையாயிற்று.முருகன் மீது தீராத பற்று கொண்ட என் மனைவி அந்த புதிய நட்புக்கு சுப்ரமணி என்ற பெயரை செல்லமாக சூட்டினார்.மெல்ல மெல்ல என் மகள் சவியையும் மருமகன் மோகனையும் கவர ஆரம்பித்தது. விடுமுறைக்கு வந்துபோகும் பேரக்குழந்தைகளும் தம்பி குழந்தைகளும் மேல் தளங்களில் குடியிருப்போரின் குழந்தைகளும் சுப்ரமணியை நாளடைவில் சுப்பிணியாக்கினர்.
இயல்பாக பிராணிகளில் நாய்களும் பூனைகளும் மட்டுமே மனிதர்களோடு ஒன்றி வாழ்வதால் அவைகளுக்கு மனிதர்களின் சில நல்ல குணங்களும் தீய குணங்களும் பற்றிக்கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.அந்த வகையில் சுப்புணிக்கென்று சில சிறப்பான குணங்களுண்டு.
ஆரம்ப காலங்களில் சுப்பிணி சரியாக சாப்பாட்டு நேரங்களில் மட்டுமே வாசலில் காணப்படும் .பொதுவாக தயிரோ பாலோ கலந்த சாதத்தை விரும்பி உண்ணும்.சாதம் இல்லாமற் போகும்போது ரொட்டித்துண்டுகளை வாங்கிப் கொடுப்பதுண்டு..மாமிச உணவும் உண்ணும். ஆனால் தேவைக்கதிகமான எந்த உணவையும் அது எடுத்துக் கொண்டதேயில்லை இன்றைக்கும் மனிதர்கள் கற்கவேண்டிய ஒன்று.
அதைப்போல் வித்தியாசமான  உணவுகளையோ பழைய உணவுகளையோ அது உண்டு பார்த்ததில்லை. மற்ற நாய்களைப்போல அது உணவு வைப்பதற்குள் அவசரப்படுவதிலை. உணவை வைத்துவிட்டு வந்த பிறகு நிதானமாக எழுந்து சோம்பல் முறித்து நாலாபக்கமும் பார்வையை செலுத்தும்.மற்ற நாய்களை கர்வத்துடன் பார்த்து அதன் பிறகே நிதானமாக உண்ண ஆரம்பிக்கும் அப்போதெல்லாம் சுப்பிணியின் உணவுக்கு வேறு எந்த தெரு நாயும் பங்குக்குவரும் துணிவை பெற்றிருக்கவில்லை.
எங்களுக்கு முன்னதாகவே சுப்புணியை இந்த பகுதியில் வேறு சிலரும் அறிந்திருந்தார்கள்.  அவர்களைக் காணுபோது கண்களால் அன்பை வெளிப்படுத்தும்.தெருமுனை வரை தொடர்ந்து கவுரவிக்கும்.அவர்கள் வாயில் கொடுக்கும் ரொட்டித்துண்டுளை உண்ணும். அது கீழே போட்டால் சாப்பிடாது என்கிறார்அதன் குணங்களை அறிந்த பெரியவர் ஒருவர்.
மற்ற தெரு நாய்களைப்போல் வாலை ஆட்டி நன்றி தெரிவிக்கின்ற பழக்கம் எதுவும்சுப்புணிக்கு இருந்ததில்லை..அத்தனை சுயமரியாதை குணங்களைக் கொண்டது சுப்புணி.இப்போது கூட சுப்புணி எவரிடமோ வருத்தமுற்று தன் சுயமறியாதையைகாக்க எங்களிடம் வந்திருப்பதை பின்னால்தான் தெரிந்து கொண்டேன்.
பொதுவாக நாய்களுக்கு ஆயுள் பத்து பதினைந்து வருடங்கள் என்று படித்திருக்கிறேன்.சுப்புணியும் பதினைந்து வயதை தொட்டிருந்தது..கடந்த சில மாதங்களாக உடல் தளர்ந்து காணப்பட்டது
அதனாலோ என்னவோ உணவுக்குப்பிறகு சுப்புணி வேறு எங்கும் போவதேயில்லை.வாயிலில் நிற்கும் போர்ட் அய்க்கானுக்கடியிலேயே அதனுடைய படுக்கையை அமைத்துக்கொண்டது.
இரவு பகல் எப்போதும் வாசலிலேயே கிடக்க ஆரம்பித்தது. சில மாதங்களாக அளவுக்கதிகமான உறக்கத்தை மேற்கொண்டதை காண முடிந்தது. இவையெல்லாம் கூட அது அந்தகோர விபத்தில் சிக்குவதற்கு காரணமாக இருந்திருக்கக் கூடும்.
வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் அது நன்றாக அறிந்திருந்தது.அவர்களுடைய குணங்களை புரிந்திருந்தது..என் மருமகன் மோகனிடத்தில் மட்டும் சற்று அதிகமான உரிமை கொண்டதை பார்த்திருக்கிறேன்.விடுமுறைக்குவரும் குழந்தைகளையும் பெரியவர்களையும் அது நேசித்தது.
சென்ற 23 ஆம் தேதி காலை
வழக்கம்போல் காரின் அடியிலிருந்து எழுந்து எதிர் தெருவோரத்தில் சிறு நீர் கழிக்க  ( வழக்கமான செயல் ) சென்ற சுப்புணி இப்படியொருகோர விபத்தை சந்திக்க நேரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.சிமண்ட் சாலையின் தெற்கிலிருந்து வேகமாக வந்த ஒரு டாட்டா சுமோ சற்றும் எதிர்பாராமல் மேற்கு நோக்கி திரும்ப சுப்புணி அந்த விபத்தில் சிக்கியது.
உரத்த குரலில் கத்திய சுப்புணி உடலின் பின் பகுதியை தரையில் இழுத்தவாறு எதிர் வரிசையில் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருந்த சவர்லட் கார் ஒன்றின் அடியில் படுத்தது. வலி பொறுக்க முடியாமல் முனகியிருக்கக்கூடும். எவருக்கும் தெரியாமல் போயிற்று.
அடுத்த அரைமணியில் அந்த கட்டிட பொறியாளர் காரை எடுக்க முயலுகிறார் பயந்து போன சுப்புணி வாய்விட்டு கோரமாக கத்துகிறது.
அப்போது வாசல் தெளித்து கோலமிட்டுகோண்டிருந்த என் மனைவி உமா பதறிபோய் பாற்கிறார். ரத்த வெள்ளத்தில் கோரமாக கிடக்கிறது சுப்புணிதான்.மகள் சவியும் மருமகன் மோகனும் மனம் பதறி நிற்கின்றர்.
அடுத்த கணம் உமா இதே தெருவில் அய்ந்தாறு செல்லப்பிராணிகளை வளர்க்கும் பெரியவரின் உதவியை நாடுகிறார்.அந்த பகுதிஅடுத்த சில நிமிடங்களில் ஒரே பரபரப்புக்குள்ளாகிறது.அந்த பெரியவரும் அவரது மகளும் பதற்றத்துடன் வருகின்றனர். தொடர்ந்த பெரு முயற்சிக்குப்பிறகு ஒரு கால் நடை மருத்துவர் வந்துபார்த்து கையைவிரித்து திரும்புகிறார்.எனது மறுமகன் பிராணிகள் சார்ந்த பல்வேறு நிருவனங்களுக்கு தொடர்பு கொள்ளுகிறார். சென்னையின் புறநகர் பகுதியாய் அமைந்துவிட்டதால் முயற்சிகள் முழுமை அடையாமற் போயிற்று.
வலி பொறுக்காமல்எங்கள் வீட்டை திரும்பத்திரும்ப நோக்கி கதறியதையும் எப்படியாவது காப்பாற்ற மாட்டார்களா என்று கண்களால் கெஞ்சியதையும் சொல்லும்போது என் மருமகன் கண்களில் நீர் வழிகிறது.அவர் அதன் அருகில் அமர்ந்து சுப்புணி சுப்புணி என்றுஅழைத்தபோது தளர்ந்துபோன தன் காலை மெல்ல தூக்கி தன் கால்களை தொட்டதை நெஞ்சடைக்க சொல்லுகிறார்.
இன்று வசதியும் வாய்ப்பும் இருந்தும் எங்கள் சுப்புணியை காப்பாற்ற எங்களால் இயலாமற் போய்விட்டது.
பிராணிகள் பாதுகாப்புக்கென்று பல்வேறு நல அமைப்புகள் நாடு முழுதும் இருந்தும் எங்கள் சுப்புணியை காக்க எவரும் முன்வரவில்லை.கால்நடைக்கென்று அரசு செலவில் மருத்துவம் பயின்ற பல்வேறு மருத்துவர்கள் இந்த நகரத்தில் வாழ்ந்தும் இந்த காலைப்பொழுதில் எவரும் முன்வராதது எங்களின் துரதிஷ்டம்.
சுப்புணியை நாங்கள் செல்லப்பிராணியாக வளர்த்தோம் என்று சொல்ல முடியாது. சொல்லப்பிராணியாக வளர்ப்பதென்பது சகல உரிமைகளுடன் வளர்ப்பதாகவே கருதுகிறேன்.
நாங்கள் சுப்புணியை பெரிதும் நேசித்தோம்.அது விரும்பிய உணவை பகிர்ந்தோம் மொத்தத்தில் உண்மையான நட்பு செலுத்தினோம்.
அந்த சுயமறியாதை மிக்க பிராணி எங்களை மட்டுமல்லாமல் இதே பகுதியில் வேறு சிலரின் கண்களிலும் நீர் வழிய தன் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறது.அது அஞ்சுவது இரண்டுக்குத்தான்.ஒன்று தண்ணீர் மற்றொன்று தீபாவளி வெடி. தண்ணீரின் ஈர பிசுபிசுப்பிற்கு உணவையே ஒதுக்கும்.வெடிகளின் சத்தத்திற்கு பதுங்கு குழியில் மறைந்திருக்கும்.வரப்போகும் மழைக்கும் அதனைத் தொடரும்தீபாவளி பட்டாசுகளுக்கும் முன்னதாகவே தப்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்.
நான் வீட்டுக்குள் நுழைந்தபோது ...சுற்றுச்சுவரின் இரும்புக்கதவுகள் வலுவின்றி தனித்து நிற்பதாக தோன்றுகிறது.வீட்டிலும் வாசலிலும் ஒரு வெருமையே காணப்பட்டது.எவரையும் பார்ப்பதையும் பேசுவதேயும் முழுமையாக தவிர்த்தேன்.சுப்புணி இனி வராது என்பதை உணர வெகு நேரமாயிற்று.
போன பிறப்பில் அது ஒரு மகானாகவோ மகராஜனாகவோ இருந்திருக்க வேண்டும்..              என் மனைவி பேசிக்கொண்டே போவது என் காதுகளில் ஒலிக்கிறது. அந்த கம்பீரமான கருப்பு நிலா இப்போது தீராத சோகத்தை இந்தப்பகுதியில் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறது .


இடுகை  0075