வெள்ளி, ஜூன் 10, 2011

ஜெயமோகனின் அறச்சீற்றம் !



(கிணற்றுத்தவளைகள் என்ற என் பதிவுக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் ஞாயம் )
அன்புள்ள பாண்டியன்,
தங்கள் கடிதம் மூலம் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டேன்.கடிதம் எழுதியமைக்கு நன்றி. இந்தப்பதிலை இவ்வகையான பல கடிதங்களுக்குப் பொதுவாக எழுதுகிறேன். ஒருவேளை உங்களுக்கும் யோசிக்கும்படியான ஒரு விளக்கமாக இருக்கலாம்.முதலில் நாம் ஒருவர் இறந்தபின்னர்
அவரைப்பற்றிப்பொதுவாகப்பேசுவதற்கும்,அறிவுத்தளத்தில் பேசிக்கொள்வதற்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப்புரிதல் இல்லாமல்தான் அதிக வாசிப்போ அறிவுத்தள அறிமுகமோ இல்லாதவர்கள் சிலர் உள்ளே புகுந்து உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள்.
ஒருவர் இறந்துபோகும்போது பொதுவான தளத்தில்  அவரைப்பற்றி இரங்கலும் சொந்தக்காரர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் அனுதாபமும் தெரிவிக்கிறோம். அது மரபு. ஒரு சமூகச்சடங்கு. பழங்குடிவாழ்க்கையில் இருந்து நீண்டு இன்றைய வாழ்க்கை வரை வந்திருக்கும் நீத்தார் வழிபாடு என்ற மனநிலை இதன்பின்னால் உள்ளது. இறந்தவர்களை வழிபடுவதும், அவர்களின் நினைவைப்  புனிதமாக்கிப் போற்றுவதும், கதைகளைக் கட்டிக்கொள்வதும் நம் மரபில் நெடுங்காலமாகவே உள்ள முறை.  அந்த உணர்வுகளே இறந்தவர்களின் விஷயத்தில் தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலையாக இன்றும் நீடிக்கின்றன.
இந்த மனநிலைகள் எதற்கும் அறிவுத்தளத்தில் இடமில்லை. அறிவுத்தளத்தில் எப்போதும் உண்மையான உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டுமே மதிப்பு. எதன்பொருட்டும் மிகைக்கும் பொய்க்கும் அங்கே இடமிருக்க முடியாது. அப்படி அனுமதித்தால் படிப்படியாக மொத்த அறிவியக்கமே வெறும் சம்பிரதாயப்பேச்சுகளாக மாறிவிடும்.
ஒருவர் இறந்து போகும்போது அவரைப்பற்றி மிகையான,பொய்யான பிம்பங்களை அவரைச்சார்ந்தவர்கள் உருவாக்கி அதை வரலாறாக நிலைநாட்டுவது மிகமிகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் இது எப்போதுமே நிகழ்கிறது. இறந்தவரைப்பற்றி அப்படி ஒரு பொய் நிலைநாட்டப்படும்போது அதை எதிர்த்து அல்லது ஐயப்பட்டு உண்மையை முன்வைப்பதென்பது இறந்தவரை அவமதிப்பது என்றும் மரணத்தை அவமதிப்பது என்றும் ஒரு நெருக்கடி கட்டமைக்கப்படுகிறது. அதற்கு நம் சூழலில் உள்ள அந்த சம்பிரதாய உணர்ச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
என்னைப்பொறுத்தவரை நான் ஏதேனும் வகையில் சமூகத்திற்கோ அல்லது தனிப்பட்டமுறையில் எனக்கோ முக்கியமானவர்கள் என்று நினைப்பவர்களைப்பற்றி மட்டுமே அஞ்சலிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளில் அந்த மனிதர் ஏன் முக்கியமானவர், அவரது பங்களிப்பு என்ன என்று எந்த வித மிகையும் இல்லாமல் கூறியிருக்கிறேன். எனக்கு நேர்பழக்கம் உள்ளவரென்றால் அவரது ஆளுமையின் நுண்ணிய சித்திரத்தையும் அளித்திருக்கிறேன். கூடவே அவர்களின் எதிர்மறைக்கூறுகளைப்பற்றியும் கறாராகவே எழுதியிருக்கிறேன். எனக்கு மிகமிக நெருக்கமானவர்களாக நான் உணர்ந்த நித்ய சைதன்ய யதி முதல் லோகிததாஸ் வரை அனைவரைப்பற்றியும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். அதுவே முறையானது என நான் உறுதியாக நினைக்கிறேன்.
சின்னக்குத்தூசி,தமிழின் தரக்குறைவான இதழியலின் மூத்தபிரதிநிதி என்று மட்டுமே நினைக்கிறேன். ஆகவே அவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் இங்கே அஞ்சலிக் கட்டுரைகள் எழுதியவர்கள் சிலர்  அவரை ஏதோ இதழியல் பிதாமகர் என்ற அளவில் எழுதியபோதே அவரைப் பற்றி என் மதிப்பீட்டை முன்வைக்க நேர்ந்தது. அது ஒன்றும் விவாதத்துக்குரிய கருத்தும் அல்ல. தமிழில் நாற்பது வருடங்களாக அவர் எழுதிய கட்டுரைகளில் எதையாவது ஒருமுறையாவது தமிழ் அறிவுலகம், ஏன் திராவிட இயக்க அறிவுஜீவிகள், பொருட்படுத்தியிருக்கிறார்களா என்று பார்த்தாலே போதும்.
சின்னக்குத்தூசியின் இதழியல் பணி என்பது,திமுகவின் எதிரிகளை எல்லாவகையிலும் தரம்தாழ்ந்துசென்று தாக்கி வசைபாடி முரசொலியில் அவர் எழுதிக் குவித்த கட்டுரைகள் மட்டுமே. சரித்திரநாயகர்களான காந்தி,நேரு,சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோரைப்பற்றி அவர் எழுதிய வசைகளும் திரிபுகளும் அவதூறுகளும் அதிகம். இந்தத் தருணத்தில் சின்னக்குத்தூசி இறந்துவிட்டார் என்பதற்காக அவரது எழுத்தையும் ஆளுமையையும் பொய்யாகப் புகழ்வதென்பது அவர் செய்த அனைத்தையும் நியாயப்படுத்துவதாகும். ஒருவர் என்ன செய்தாலும் இறந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது எனக்கு உவப்பான நியாயம் அல்ல.
அவரது ஆளுமை மேல் சரியான மதிப்பீட்டை முன்வைப்பதன்மூலமே அவரது வசைகளைச் சரியான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். அதையே செய்திருக்கிறேன்.
இனி உங்கள் கடிதத்தின் பொதுவான ஒரு தொனி. அதாவது நான் என் ‘சோலியை’ப் பார்க்கவேண்டும், எவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்கிறீர்கள். சின்னக்குத்தூசி போல எந்தத் தளத்திலும் அடிப்படை வாசிப்பில்லாத ஒருவர் நாற்பதாண்டுக்காலம் சரித்திரநாயகர்களை வசைபாடியது உங்களுக்கு சரியாகத் தோன்றுகிறது. ஆனால் நான்  முறையான தர்க்கங்களுடன் என் கருத்துக்களை முன்வைப்பது உங்களுக்குப் பெரும் பிழையாகத் தெரிகிறது.
உங்கள் எழுத்தாளர்கள்,காந்தியையும் காமராஜரையும் தரமிறங்கி வசைபாடலாம். வரலாற்றுத் திரிபுகளைப் பதிவு செய்து வைக்கலாம் . அது அரசியல். ஆனால் அப்படித் தரமிறங்கி எழுதியவர் ஒருவர் என்று சுட்டிக்காட்டுவது காழ்ப்பு, சனநாயக விரோதம் இல்லையா? ஈவேராவும் அண்ணாத்துரையும் எல்லாரையும் வசைபாடுவது அரசியல் தரப்பு.  அவர்களைத் திருப்பி விமர்சனம் செய்தால் அது தாக்குதல், உங்கள் மனம் புண்படும் இல்லையா?
நண்பரே, எப்போதாவது இந்தமாதிரி முரண்பாடுகளைப்பற்றித் திரும்பிப்பார்த்து யோசிப்பீர்களா?
சரி விடுங்கள். இந்தக்கடிதத்தையே எடுத்துக்கொள்வோம். நீங்கள் யார்? என்ன சாதித்திருக்கிறீர்கள்? நீங்களே சொல்லிக்கொள்வதைப் போல எழுத முயன்றிருக்கிறீர்கள் எப்போதோ , இல்லையா? ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப்பற்றி என்னுடைய விமர்சனத்தைக் கண்டதும் பொங்கி எழுந்து என்னை வசைபாடுகிறீர்கள். நான் வணிக எழுத்தாளன், நாக்கு தொங்க விருதுகளுக்கு அலைபவன் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அதைப்  பிரசுரிக்கிறீர்கள். ஆனால் என்னுடைய எந்த நூலையும் வாசித்ததில்லை. என் தகுதி என்ன, என் சாதனை என்ன எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ள அக்கறையும் இல்லை. என் கருத்துக்களைக்கூட முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை.
யோசித்துப்பாருங்கள்.சின்னக்குத்தூசியை விமர்சித்தால் இதையெல்லாம் என்னைப்பற்றிச் சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் காந்தியை வசைபாடிய சின்னக்குத்தூசியை நான் அவர் வசைபாடினார் என்று சொல்வதே அவமதிப்பு, காழ்ப்பு என நினைக்கிறீர்கள்.
அய்யா, விமர்சனம் என்றால் உங்களுக்கு மட்டுமே உரிமை கொண்டதுதானா? பிறருக்கு அதற்கு அனுமதியே கிடையதா? ஊர் பேர் தெரியாத ஒருவரான நீங்கள் என்னை விமர்சித்து எழுதிய வரிகளின் கடுமையில் கால்வாசிகூட நான் எவரைப்பற்றிய விமர்சனத்திலும் காட்டியதில்லையே. அதை நான் தங்கள் மேலான கவனத்துக்குக்  கொண்டுவரலாமா?
நீங்கள் அளித்த அறிவுரைகளுக்கு நன்றி. என்னைத் திரும்பிப்பார்த்திருப்பதற்கு மகிழ்ச்சி.  கருத்துலகம் என்பது முரண்பட்டு இயங்கும் பல்வேறு தரப்புகளினாலேயே ஆனது. ஆகவேதான் நீங்கள் என்னுடைய கருத்துக்களை முரண்பட்டு விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள்.  தொடர்ந்து எழுதுவீர்கள். நல்ல விஷயம். ஆனால் ஐயா,  உங்களுக்கு நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அந்த உரிமை எனக்கு மட்டும் கிடையாதா?
கொஞ்சம் ஜனநாயகபூர்வமாகச் சிந்திக்கும்படி கோருகிறேன்
அன்புடன்
ஜெ
________________________________________
 ( ஜெயமோகன் இணையதளத்திலிருந்து.....   )
இடுகை 0062

1 கருத்து:

  1. 1./ஒருவர் இறந்து போகும்போது அவரைப்பற்றி மிகையான,பொய்யான பிம்பங்களை அவரைச்சார்ந்தவர்கள் உருவாக்கி அதை வரலாறாக நிலைநாட்டுவது மிகமிகக் கண்டிக்கத்தக்கது/

    2./சரித்திரநாயகர்களான காந்தி,நேரு,சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோரைப்பற்றி அவர் எழுதிய வசைகளும் திரிபுகளும் அவதூறுகளும்/

    முரண்பாடே உன் பெயர்தான் ஜெயமோகானா? மேற்கூறிய மனிதர்கள் மீது எந்த விமர்சமுமே இல்லையா? எவரும் சரித்திர நாயகர்கள் கிடையாது.வரலாற்றில் வந்து போன மனிதர்கள்தான்.

    அதாகப் பட்டது ஜெ.மோவால் சரித்திர நாயக்ர்களாக உருவப்படுத்தப் படும் மனிதர்களை பற்றி விமசித்தால த்வறு.


    இத்னை ஜெ.மோ மட்டுமே செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !