வெள்ளி, பிப்ரவரி 06, 2015

இளமையின் ரகசியம் !

பாதையில் பூக்கள் !
 பாண்டியன்ஜி  ( வில்லவன் கோதை )வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தில் எங்கள் வீட்டு புதுமனைப்புகுவிழா நிகழ இருக்கிறது. நீங்களும் கலந்து கொள்வதை விரும்புகிறேன். உங்கள் நண்பர்கள் ஒரு சிலரைக்கூட பார்க்கலாம்.
சென்ற மாதக்கடைசியில் இப்படியொரு கைபேசியழைப்பு எனக்கு வந்தது.. ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாடு மின்வாரியத்தில் என்னிடம் பணியாற்றிய திரு   க. வெங்கடேஷ்தான்  அழைத்திருந்தார்.
முதுமை கருதி தமிழ் நாடு மின் வாரியத்தில் இருந்து ஓய்வுற்று பதினோறு ஆண்டுகள் கடந்துவிட்டது .வாரியத்தின் வரைபடம் மெல்ல மெல்ல என் நினைவுகளில்  மங்கத்தொடங்கிவிட்ட நேரம்.
தொள்ளாயிரத்து அறுபத்தியெட்டில் துவங்கிய என் பயணம் அன்று இன்றுபோல் அத்தனை எளிதாக இருந்திடவில்லை.இருந்தபோதும் கறடுமுரடான அந்தபாதையில் ஆங்காங்கே மலர்ந்து கிடந்த வாசமுள்ள மலர்கள்தாம் ( சக மனிதர்கள்தாம் ) என் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கியது.
1980 என்று நினைக்கிறேன்.
என் நினைவுகள் என்னையறியாமலேயே பின்னோக்கிப் பயணிக்கிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இரண்டாம் அனல் மின்நிலையத்தின் கட்டுமானங்கள் முடிவுக்கு வந்திருந்தது. . தடையின்றி தமிழக மின்சுற்றை பராமரிக்க முதல்  இரண்டாம் அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி சார்ந்த தகவல்கள்  தமிழ்நாடு மின்வாரியத்துக்குத் அப்போது தேவைப்படுகிறது. மேலும் மிழ் நாட்டின் தென்பிரதேச மின்சார விபரங்களை  சென்னைக்கு எடுத்துச்செல்ல நெய்வேலி ஒரு தளமாக கருதப்பட்டது..அதற்கேற்ற நவீன சாதனங்களை முதல் இரண்டாம் மின்நிலையங்களில் நிறுவத்துவங்கியது மின்சார வாரியம்.
அன்று அதற்கான கட்டுமானபணிகளிலும் இயக்கத்துக்கு கொண்டுவரும் பொறுப்புகளிலும்  நான் பெரும் பங்கு வகித்தேன்.பெருவாரியான பணிகள் முடிவுக்கு வந்தபோது நிறுவப்பட்ட சாதனங்களின் பராமரிப்புக்கு ஒருமின்வாரிய பிரிவு அலுவலகம் நெய்வேலியில் ஏற்படுத்தப்படுகிறது.
அந்த அலுவலகத்துக்கு பிரிவுப் பொறியாளனாக முதன்முதலாக நானே அமர்த்தப்பட்டேன்.  அடுத்த சிலமாதங்களில் ன்னிடத்தில் இணைந்தவர்  ராஜபாளையத்தைச் சேர்ந்த திரு முத்துசாமி.
அவரைத்தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் வந்து சேர்ந்தவர்தான் சென்னையைச்சேர்ந்த திரு க . வெங்கடேஷ்.
சராசரியான உயரம்  , சராசரி நிறம். கூரான முகத்தில்  கலைந்து விழும் கோரை முடி  நெற்றியில் பெரும்பாலும் சந்தனக்கீற்று  .துருதுருவென்று எதனிலும்  ஊடுருவும் பார்வை. ,படபடவென சிதறும் கனமான குரல் .
ஏறத்தாழ இருபத்திநான்கு வயதிருக்கும்.
ஒரிஜினல் சென்னை வாசி. இருந்தபோதும் சென்னைவட்டார வழக்கில்  ஒரு சொல்லைக்கூட அவரிடம் நான் கேட்டதில்லை.
வந்த முதன் நாளே எங்களுக்கிடையே இரண்டு எரிகற்களாக சின்ன உரசல். அவ்ளவுதான். அடுத்தடுத்த நாட்களில் அவர் என்னை முழுமையாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். நானும் அவர் இயல்புகளை அறிந்துகொண்டேன்.
முக்கியமாக அலுவலகத்தில் நான் விரும்பும் காலம் தவறாமை  சக மனிதர்களையும் மேலதிகாரிகளையும் மதித்து அவர் நடந்த பாங்கு  எந்தவொரு பணியிலும் உள்ளத்தோடு ஒட்டிய ஈடுபாடு எப்போதும் தொலைநோக்கு சிந்தனை  இவையெல்லாம் வெங்கடேஷிடம் என்னை ஈர்த்த குணங்கள்.
அவரிடம் விரும்பத்தகாத குணங்கள் என்று எதுவும் எனக்கு நினைவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத அவர்குணம் நெய்வேலி நகரியத்தில் மிகுதியான நட்புகளை அவருக்கு சேர்த்தது. நகுதல் பொருட்டன்று நட்டல் என்பதற்கேற்ப எப்போதும் நண்பர்களோடு ஒன்றாய் நின்றவர்.
எனக்கேற்பட்ட குழப்பம் மிகுந்த  சூழல்களில் ஒளிக்கீற்றாய் திகழ்ந்தவர்..
தன் கடமைகளைத் தாண்டி காணுகின்ற ஒவ்வொன்றையும் அறிந்துகொள்ளவேண்டுமென்ற அவரின் இயல்பான துடிப்பு  இன்றைய தலைமுறை கற்கவேண்டிய ஒன்றாய்  கருதுகிறேன்.
ஒவ்வொரு ஊழியரும் அனுபவங்களை கற்க கற்க அதற்கிணையாக அங்கீகரிக்கப்பெற்ற கல்வித் தகுதிகளை பெற்றிடவேண்டும்.
அதற்கான சூழல்கள் இருந்தபோதும் வெங்கடேஷ் ஏனோ அதற்காக முயற்சிக்கவில்லை. அவர் பெற்றிருந்த குடும்பச்சூழல்கள் கூட அதற்கான  காரணமாக இருந்திருக்கக்கூடும்.
முதன்முதலாக பேறிஞர் அண்ணா  காங்கிரஸ் இயக்கத்தை வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது பொதுத்துறை நிறுவனங்கள சார்ந்த கருத்து தெரிவிக்க நேர்ந்தது.
தமிழ் நாடு மின்வாரியம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மிகப்பெரிய சொத்தென்று அப்போது அவர் பேசக்கேட்டிருக்கிறேன்.
திறன்  துணிவு நேர்மை மூன்றையும் பெற்ற அதிகாரிகளும் ஊழியர்களும்கூட அவர்கள் ஆற்றுகின்ற நிறுவனங்களின் சொத்தைப்போன்றவர்கள் என்ற கருத்து எனக்குண்டு..
அந்தவகையில் கொரட்டூர் இளம் பொறியாளர் திரு க. வெங்கடேஷ் தமிழ்நாடு மின்வாரியத்தின் சொத்தென்று சொல்லுவேன். இவரைப்போன்ற ஊழியர்கள் மின்வாரியத்தில் ஆங்காங்கே கலந்து கிடப்பதால்தான்  நூறாண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிற தமிழ்நாடு மின்வாரியம் இன்னும்கூட இளமையோடு இருப்பதை காண முடிகிறது
அவருடைய அன்பான அழைப்பிற்கிணங்க விழாவுக்கு சென்றுவந்தேன். சென்னை புறநகர் கொளப்பாக்கத்தில் மரங்கள் நிறைந்த சூழலில் இருந்தது அந்த குடியிறுப்பு. காலப்போக்கில் அந்த மரங்களும் மனிதற்கு இடையூராகத்தோன்றலாம்.
அவர் அவர் தாயார் அவரது துணைவியார் இரண்டு மகன்கள் அத்தனைபேரும் அன்போடு வரவேற்றனர்.  அவரது மூத்த சகோதரர்கள் விழா சிறக்க ஓடியாடி பணிசெய்தது மனதை ஈர்த்தது.
நல்ல பண்புகள் எப்போதுமே வழ்க்கையின் அடுத்த பக்கத்தில் மகிழ்வையும் மனநிறைவையும் தரத்தக்கவை என்பதை நம்புகிறவன் நான். அது வெங்கடேஷுக்கு நிச்சியம் கிடைக்கும்.
விழாவில் எனக்கு மிகவும் பரிச்சியமான வாரிய நண்பர்கள் பலரைக்காணமுடிந்தது. அவர்களில் உதவிச்செயற்பொறியாளர் திரு சந்ரசேகரன் உதவிப்பொறியாளர் திலகராஜ் முக்கியமானவர்கள். அன்பிற்குறிய நண்பர் திருமாவளவன்  , விழுப்புரத்தில் என்னோடு இருந்த அக்ரிபாபு  , ,பணியின் பின்பகுதியில் என்னோடு இருந்த ஜெய்சங்கர்   சென்னையில் அறிமுகமான  மோகன்  , இவர்களெல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்தவர்கள்.
எண்பதுகளில் எனக்கு அறிமுகமாகி இன்று கூடுதல் தலைமைப்பொறியாளராக உயர்ந்து நிற்கும் திரு சம்பத் அவர்களை காண நேர்ந்தது மகிழ்வுக்குறியது.