செவ்வாய், அக்டோபர் 09, 2012

வேர்களை மறந்த விழுதுகள் !

சிறுகதை !                                                                                                             
வில்லவன் கோதை                                                                                                                                          வராண்டாவின் வெகுதூரத்தில் இருந்து பரிதாபமாக பார்த்தான் பரத்.                                  ‘ அம்மா...!                                                                                 
அவன் உதடுகள் மட்டுமே அசைந்தன. ஒலி எதுவும் எழும்பியதாகத் தெரியவில்லை. கற்பகத்தால் கண்ணீரை அடக்க முடியவில்லை. புடவைத்தலைப்பால் முகத்தை அழுத்தி ஏற்பட்டு விட்ட பிரிவின் அடையாளத்தை மறைக்கமுயன்றாள்.                            
நீங்க ஒண்ணும் கவலபடாதீங்க.. அவன நாங்க பாத்துப்பம். ! அவன் லைப்ல நல்லா வருவான். ‘                                       
கிருஷ்ணமூர்த்தி கொடுத்த இரண்டு லட்சத்துக்கான காசோலையை பத்திரப்படுத்தியவாறே பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியிட்டார் அந்த உண்டு உறைவிட பள்ளி நிர்வாகி புண்ணியகோடி.                                 
" சரி கெளம்பு ! அவர்தான் சொல்ராறே ! எல்லாம் அவன் நல்லதுக்குத்தான் !" 
கற்பகத்தின் மனம் மாறுவதற்கு முன்பாகவே அவளை அழைத்துக்கொண்டு அந்த பள்ளியைவிட்டு வெளியேறினார் கிருஷ்ணமூர்த்தி.பரத்துக்கு தேவை என பள்ளி நிர்வாகம் அச்சிட்டுக் கொடுத்த  நீண்ட பட்டியலில் ஒன்று விடாமல் தேடித்தேடி வாங்கி முன்னதாகவே  நிர்வாகத்திடம் சேர்த்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.                                           
சென்னையிலிருந்து ஏரத்தாழ நாற்பது கிலோமீட்டருக்கு அப்பால் சென்னை திருச்சி  நெடுஞ்சாலையில் வரண்டு கிடந்த வயல்களை வளைத்து 50000 சதுர அடியில் சுற்றுச்சுவருடன் கட்டப்பட்டிருந்தது அந்த சூரம்மாள் ரெசிடன்ஷியல் ஸ்கூல். ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரை அத்தனைக்கும் எங்கும் அலையவேண்டாமாம். குளிரூட்டப்பட்ட அறைகளாம்...விதம் விதமான ஹைஜீனிக் உணவாம்..ஒவ்வொரு அரைக்கும் தொலைக்காட்சி வசதியாம்...எல்லா இடங்களிலும் இணையதள இணைப்பாம்! இப்படித்தான் பேசப்பட்டது  சூரம்மாள். மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே உரித்தாயிருந்த இந்த வசதி இப்போது நடுத்தர வர்கத்தினரும் தொட்டுப்பார்க்கக்கூடிய தூரத்துக்கு வந்திருந்த்து.
சென்னை நகர நடுத்தர மக்களின் கனவுப்பட்டியலில் இப்போதெல்லாம் சூரம்மாளும் இடம்பிடித்தது வியக்கத்தக்கதல்ல.. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி... கதை நினைவுக்கு வருகிறது.
சென்னை புறநகரொன்றில் வாடகைக்கு குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அப்படியொன்றும் மேல்தட்டு மண்ணிலேயே கட்டிப் புரண்டவரல்ல.நகரத்தில் பிரபலமான கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி ஒன்றில் கணிசமான சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்தான். காலை எட்டுமணிக்கு வீட்டைவிட்டு வெளியேறும் கிருஷ்ணமூர்த்தி அனேகமாக இரவு பத்து மணிக்கு மேலேதான் வீடு திரும்ப வேண்டியிருக்கும். அவர் மனைவி கற்பகமோ சொற்பமான சம்பளத்தில் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாக இருந்தாள்.இரண்டு பேருந்து மாறி மாறி அவள் வீடு திரும்ப மணி ஆறுக்கு மேல்ஆகிவிடும். அதுவரையில் அவர்களின் ஒரே புத்திரன் பரத் தெருவீதியில்தான் சுற்ற வேண்டியிருக்கும். தினந்தினம் பரத்துக்கேற்பட்ட இந்த தனிமை கூட கற்பகம் இப்படியொரு முடிவுக்கு இணங்க  காரணமாய் இருந்திருக்கக்கூடும்.                                                
‘ மாசத்ல ஒருதடவ வீட்டுக்கு வந்துட போரான். அப்ரம் என்ன..           
‘ ஒரு தடவதானா..                                                                                                                                                   ‘ சும்மா சும்மா வந்தா அவனுக்கு படிப்புல எப்டி நாட்டம் இருக்கும். ‘
‘ அவன் தங்ர ரூம பாக்ககூடாதுண்டாங்களே. ‘                            
‘ அவர்தான் சொன்னாரே ! .ரூமுக்கு ரெண்டு பேருண்ணு.                                                   கற்பகத்தின் கேள்விகள் தனக்கே சந்தேகத்தை எழுப்பினாலும் நிலமையை உத்தேசித்து சமார்த்தியமாய் பதிலளித்தார் கிருஷ்ணமூர்த்தி.
--------------------
காலம் யாருடைய கட்டாயத்துக்கும் உட்படவில்லை.அது சில பேருக்கு நகர்வதாகவும் பல பேருக்கு ஓடுவதாகவும் தோற்றத்தை கொடுத்தது. ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை பரத் வந்து போனான். நாளடவில் நட்பு வட்டம் விரிய விரிய அவனுக்கு வீட்டு நினைவுகள் இயல்பாகவே மங்கத்தொடங்கின.இப்போதெல்லாம் கற்பகத்துக்குகூட பரத்தின் பிரிவு அத்தனை பாதிப்பை எற்படுத்தவில்லை .கிருஷ்ணமூர்த்தியும் அவ்வப்போது விடுமுறை நாட்களில் கற்பகத்தை ஒரு மாறுதலுக்காக நண்பர்கள் உறவினர்கள் இல்லங்களுக்கு அழைத்துப்போனார். கணவனும் மனைவியும் அலைந்து திரிந்து புண்ணியகோடி பேசிய கட்டணத்தை ஒவ்வொரு வருஷமும் தவறாமல் செலுத்தி வந்தார்கள். புண்ணிய கோடி பேசியது போலவே பரத் நல்ல மதிப்பெண்களோடு ஒவ்வொரு வகுப்பையும் தாண்டி வந்தான்.  எம்மெஸ்ஸி கணிதம் இறுதி தேர்வு எழுதியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது. விளையாட்டாக பரத் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் பரத் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டான். கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் ஒரு அமெரிக்க நிருவனம் பரத்தை முதலாவதாக தேர்தெடுத்து அமெரிக்காவில் பணியும் வழங்கியது. மாதச்சம்பளம் இந்திய ரூபாயில் இரண்டு லட்சமாம். கிருஷ்ணமூர்த்தி கனவில்கூட பெறமுடியாதது. பெற்றவர்கள் பெற்ற மகிழ்வுக்கு அளவே இல்லை. மற்றவர்கள் மலைத்து நின்றார்கள். கற்பகமும் கிருஷ்ணமூர்த்தியும்  வாழ்வில் சகலமும் பெற்று விட்டதாகவே கருதினார்கள். பரத்தும் அமெரிக்கா புறப்பட்டு போனான்.

வருஷத்துக்கு மூன்று முறை தவறாது வந்துபோன பரத் கல்யாணம் ஆகி குழந்தையும் பெற்றுக்கொண்டபோது வருஷத்துக்கு ஒருமுறை என்று ஆயிற்று. மனைவியின் வேலை குழந்தையின் படிப்பு என்று ஏற்பட்டபோது அந்த ஒருமுறையும் சிரமத்துக்குள்ளாகியது. அமெரிக்காவின் பச்சை அட்டை வேறு அவனுக்கு கிடைத்திருந்தது

கிருஷ்ணமூர்த்தி இரட்டைச்சம்பளத்தில் சேமித்த தொகையில் வீட்டுக்கு அருகாமையிலேயே கிடைத்த அடிமனை ஒன்றை முன்னதாகவே வாங்கியிருந்தார். ஆரம்ப காலங்களில் பரத் அனுப்பிவைத்த பணத்தை சேமித்து ஒட்டுக்கட்டிடம் ஒன்றை கட்டிக்கொண்டார்.வாடகை வீட்டிலிருந்து புதுவீட்டக்குள் நுழைந்த போது பரத்துக்காக மேல்தளத்தையும் கட்டவேண்டியதாயிற்று. வீட்டின் மேல்தளத்தை பார்த்துப்பார்த்து மகனுக்காக அழகு செய்தார். இயல்பிலேயே கட்டுமானதுறையில் உழன்றதாலோ என்னவோ மகன் மருமகள் பேரக்குழந்தை என்று ஒவ்வொருவருடைய இயல்புகளுக்கேற்றவாறு அறைகளை வடிவமைத்திருந்தார்.இந்த வருஷ இறுதியில் பரத் திரும்பக்கூடும் என்று கிருஷ்ணமூர்த்தி உறுதியாய் நம்பியிருந்தார்.

கிருஷ்ணமூர்த்தியும் கற்பகமும் பணியில் ஓய்வுபெற்றபோது அவர்களுக்கு பொருளாதாரம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. .அதேசமயம் ஒரே மகனின் பிரிவு அவர்களை பெரிதும் வருத்தியது. வருஷத்துக்கொருமுறை சென்றுவரும் வசதி அவர்களுக்கு இருந்தாலும் மகனுக்கு பிடித்துப்போன  அமெரிக்க கலாச்சாரம் இவர்களுக்கு புரிபடாமற் போயிற்று.  சென்னை சென்னைதான். மகனின் நினைவால் கற்பகத்தின் மனநிலையும் உடல் நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. கற்பகம் படுத்த படுக்கையானாள். இனியும் பரத் திரும்பி ஒன்றாக வாழும் நிலை ஏற்படும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் கிருஷ்ணமூர்த்தி மட்டும் பரத் வருவான்  வருவான் என்று உறுதியாக நம்பினார். ஒருநாள் அதிகாலை உறக்கத்திலேயே கற்பகம் இறந்து போனாள்.பரத்துக்கு தகவல் தரப்பட்டது.
கற்பகத்தின் இறுதிச் சடங்குகள் முடிந்தன.பிரேதம் எரிக்கப்பெற்ற அன்றே பாலும் தெளிக்கப்பட்டது. அவன் வருவானா அவன் வருவானா என்று குழம்பிக்கிடந்த அந்த தெருவாசிகள் இப்போது தங்கள் தங்கள் பணிகளுக்கு திரும்பினர் எப்போதோ விலகிப்போயிருந்த இருந்த ஒரு சில உறவுகளும் திடீரென தோன்றி திடீரென மறைந்தனர். கற்பகம் இறுதிப்பயணம் மேற்கொள்ளும் கடைசி தருணத்தில் பியஸ்டா காரில்  வந்திறங்கிய பரத் பெற்றதாய்க்குரிய சடங்குகளை நிறைவேற்றினான்.மனைவி மஞ்சுவையும் குழந்தை நவீனையும்  அழைத்து வராதது அங்கே பரவலாக பேசப்பட்டதை உணர்ந்தான்.அப்பாவுக்கும் அந்த வருத்தம் இருக்கக்கூடும். கற்பகமற்ற வழ்க்கையை எண்ணிப்பார்த்த  கிருஷ்ணமூர்த்தி சிலையாக சாய்ந்திருந்தார்..நடந்ததையும் நடக்கப்போவதையும் தாங்கக்கூடிய திறனை அமெரிக்க கலாச்சாரம் பரத்துக்கு தாராளமாக தந்திருந்தது .அனைத்தையும் அறிந்த்து போல சலனமற்று நின்றிருந்தான்..
‘ பரத் ...ஒங்கப்பன ஒன்னேடேயே அழைச்சிட்டு போடா. கற்பகம் இல்லாம அவனால வாழமுடியாதுடா..
அந்த குடும்பத்தின் நெடுநாளைய நண்பர் சுந்தரம்பிள்ளை தான்பார்த்து வளர்ந்த விருட்சத்திடம் வேண்டுகோள் வைத்தார்.பரத் பதிலேதும் பேசவில்லை.அவன் எப்போதும் இப்படி இருந்தவனுமல்ல. கிருஷ்ணமூர்த்தி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோதும் நடப்பதை கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.கற்பகமற்ற ஒரு வாழ்க்கையை அவர் நினைத்துப்பார்த்தில்லை. மனித பயணத்ததில் இது இயல்பானது என்றாலும் அதை தானும் ஒருமுறை சந்திக்கநேரிடும் என்று அவர் என்றுமே நினைத்ததில்லை.
மதியம் இரண்டு மணியளவில் கிருஷ்ணமூர்த்தியையும் பரத்தையும் சுமந்து கொண்டு சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் அந்த பியஸ்டா பயணித்தது.
----------------------------
இப்போது --                                                        
அந்த நீண்ட வராண்டாவிலிருந்து பரிதாபமாக பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.         ‘ பரத்... ‘                                                                                                                                                                                            அவர் உதடுகள் மெல்ல அசைந்தன. வார்த்தைகள் எதுவும் வெளிப்பட்டதாக தெரியவில்லை.
‘ நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க தம்பி ! அப்பாவ நாங்க பத்ரமா பாத்துபம். நீங்க போயிட்டு வாங்க ‘.
காப்புத் தொகையாக பரத் கொடுத்த இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை பத்திரப்படுத்தியவாரே அந்த சங்கமம் முதியோர் காப்பகத்தின் மேலாளர் முத்துக்கருப்பன் நிகழ்ந்து முடிந்த வணிகத்துக்கு முற்றுப்புள்ளியிட்டார்.
‘ அப்பா.. இதுதான் ஒங்களுக்கு சவுரியமா இருக்கும். யூயெஸ் உங்களுக்கு ஒருபோதும் சூட் ஆகாது. இந்த செல்போன கைல வெச்சுகுங்க..அவசரத்துக்கு உபயோகமா இருக்கும். நான் வந்து ஒங்கள பாக்றேன். ‘.
கையிலிருந்த செல்போன் ஒன்றை கிருஷ்ணமூர்தியிடம் கொடுத்தான் பரத்.                                                     
‘ அப்ப வீடு..‘..                                                             ‘ ராகவன்கிட்ட சாவிய குடுத்து ஏதாவது ஏற்பாடு பண்ண சொல்லிருக்கேன். இனிமே அத நாம என்ன பண்ணப்போறோம். அப்ப நான் வர்ரன்.ப்பா. ‘
அடுத்த அறைமணியில் பரத் பியஸ்டாவில் ஏறி விமானதளத்துக்கு  விரைந்தான். நல்ல மனைவி ! நல்ல பிள்ளை ! நல்லவீடு !                
- கிருஷ்ணமூர்த்தி சிலையானார் !                                                 கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கையில் எந்த தவறும் செய்யவில்லை.பணத்தை விதைத்துவிட்டு பாசத்தை எதிபார்த்ததை தவிற..
________________________________________________________
இடுகை 0099

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !