சு.கிருஷ்ணமூர்த்தி -மதுரை |
தமிழ்ப்புத்தாண்டு பிறந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேலாயிற்று.
இன்று ( சித்திரை 14 ) 'இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ' என்று இரண்டு குறுஞ்செய்திகள் கைபேசியில் கிடைக்கப்பெற்றேன்.ஒன்று நீண்ட நாளைய நண்பரும் என்னோடு சில காலம் பணியாற்றியவரும்மான நாகர்கோவில் சு.கிருஷ்ணமூர்த்தி. இன்னொன்று இடைக்காலத்தில் கிடைக்கப்பெற்ற நண்பர் ரிலிகர் கஜபதியுடையது. கிருஷ்ணமூர்த்தி அப்படி ஒன்றும் தமிழக வாக்காள பெருமக்களைப்போல நினைவுத்திறன் குறைந்தவரல்ல.
இந்து சமுதாயம் இந்த பூவுலகில் உயிர்த்தெழ வலுவான காரணங்கள் மதம்சார்ந்த இந்துமுன்னணி போன்றமைப்புகளிடையேதான் இருக்கிறது என்று பரிபூர்ணமாக நம்புபவர்.மேலும் அவர் சார்ந்த நாகர்கோவில் பகுதிகளில் அடிக்கடி நிகழும் மதக்கலவரங்களும் அவர் எண்ணங்களுக்கு உரமேற்றியிருக்கக்கூடும்.இருந்த போதிலும் என் கிருஷிணமூர்த்தி முற்றிலும் வேறானவர்.குறைந்த காலமே என்னோடு பணியாற்றியபோதும் என் நினைவுகளில் இடம் பெற்றிருப்பவர்.
பணிக்காலங்களிலும் சரி ,வாழ்வின் இதர அம்சங்களிலும் சரி. கிருஷ்ணமூர்த்தி மேற்கொள்ளும் காலம் தவறாமை இன்றைய தலைமுறையினர் இழந்துவிட்ட ஒன்று.எந்த நிகழ்வுகளிலும் தன்னை முழுதும் உட்படுத்திக்கொள்ளும் வல்லமை நிகழ்கால தலைமுறை நினைவில் கொள்ள வேணடிய ஒன்று. தனி நபர் ஒழுக்கம் , நிதி சார்ந்த நிலைகளில் அவர் கடைபிடிக்கும் நிலை என்னை ஈர்த்தவை. பெரிதும் இக்கட்டான சூழல்களில் துணை நின்று தோள் கொடுப்பதில் ஒன்றும் சளைத்தவரல்ல.அவர் பற்று கொண்டிருக்கும் இந்துத்வா சார்ந்த அமைப்புக்கள் பொரும்பாலான காலங்களில் சிறுபான்மையனருக்கு மாறாக இருந்தபோதும் அவர் அனைத்து இனத்தோரிடமும் மனிதநேயமே காட்டியவர்.இருப்பினும் ஒரு சில இந்துத்துவா தத்துவங்களில்
கவரப்பட்டு இந்த தேசம் விமோசனம் பெற இதை விட வேறு வழியில்லை என்று கருதுபவர்.
----------------------------------------------------------------
பழக்கத்திற்கு அடிமையுற்ற மனம் மாறுதல்களை எளிதில் ஏற்க மறுக்கிறது.( இப்போதுகூட திருமணநிச்சயங்களில் ஒன்றுக்கும் துணைநிற்காத நிகழ்வுகளுக்கு இது எங்க பழக்கம்,அது எங்களுக்கு பழக்கமிலை என்ற வகையில் பெண் மாப்பிள்ளை வீட்டார் அடம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம்.)
கடவுள் நம்பிக்கைக்கும் சமுதாய சட்டதிட்டங்களுக்கும் என்றும் தலைதாழ்த்தியவர்கள் நம் பழந்தலைமுறையினர்.நித்யானந்தனைப் போன்ற சமயவாதிகளின் நிஜங்களைக் கண்ட போதும் பகுத்தறிவு நிலைகளை ஏற்க மனம் மறுக்கிறது.
மாற்றங்களுக்கான காரணங்கள் வலுவாக இருக்கும்போது மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.இந்த உலகம் தட்டையானது என்ற மதங்களின் கூற்றை கலீலியோ வலுவான சான்றுகளுடன் மறுத்தபோது அவருக்கென்ன பரிசளித்தா போற்றினார்கள்.?
2000 ஆண்டு பழமையான நம் செம்மொழியே மறுபரிசீலனைக்குட்பட்டதுதான்.
மார்க்சீயத்தை பற்றி கருத்து தெரிவித்த அரசியல் பேச்சாளர் சி.பி.சிற்றரசு ஒரே வரியில் ' என் பாட்டன் போட்ட ஷட் கோட்டு ' என்றார்.
இன்றைய தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதையே அவ்வாறு குறிப்பிட்டார்.
இந்திய துணைக்கண்டம் விடுதலை பெற்று குடியரசானபோது மாமேதைகள் என்று கருதப்பெற்ற வல்லுனர்களால் வடிவமைக்கப்பெற்ற இந்திய அரசி
யல் சட்டம் காலத்துக்கேற்ப இன்றுவரை ஏராளமான திருத்தங்களுக்குள்ளானதை அறிவோம்.அது போல-
தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்கம் என்ற முடிவை முன்வைத்தவர்கள் திராவிட அரசியல் வர்கத்தினரல்ல.செல்லுக்கிரையான பழந்தமிழ்
இலக்கியங்களை கொடிய வருமையிலும் தேடிப்புதிப்பித்த தமிழ் அறிஞர்களன்றோ !
அதை விடுத்து சமஸ்கிருத பண்டிதர்களுக்கோ, மதம் சார்ந்த அமைப்பினருக்கோ போலிச்சோதிடர்களுக்கோ உரிமை இல்லை என்பதை உணரவேண்டும்.சான்றோர் குரலுக்கு வணங்கி சட்டமாக்கியது மட்டுமே அரசின் செயல்.
மாற்றங்களை மதிக்கமாட்டோம் என குரல் தருவோர் ஒரு கணம் திரும்பிப் பாருங்கள்.
உருவமே அறியாத வள்ளுவர் உருவாக்கப்பட்டார்.
மதராஸ் மாகாணம் தமிழ் நாடு அரசாயிற்று.
அன்னிய அடையாளங்களையும் ஜாதிய வால்களையும் கொண்டிருந்த சாலைகள் சுயமரியாதை பெற்றன.
தான் புகுத்திய எழுத்து மாற்றத்தை இறுதிவரை தான் மட்டுமே செயல்படுத்திவந்த தந்தை பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் புரட்சி நடிகர் எம்.ஜி ஆரின் ஒரே கையெழுத்தால் புதிய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டதை நினைவில் கொள்ளவேண்டும்.
அறிவியல்,மருத்துவம் மற்றும் இணையதளத்திலும் தாய்மொழி தமிழ் ஏற வேண்டிய படிக்கட்டுகள் இன்னும் ஏராளமாய் இருக்கின்றன.
ஒவ்வொரு படியிலும் முரண்டுபிடித்தால் இலக்கை எட்டுவது எப்போது.?
இடுகை - 0011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !