சீனமண்ணைச் சீரழித்த தொற்று நோயொன்றின் தாக்கம்இந்திய தேசத்தையும் தாக்கக்கூடும் என்ற அச்சம் பரவலாக காணப்பட்டிருந்த காலம்.
ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி .
இந்திய துணைக்கண்டத்தில் பல்லவ பேரரசர் விருப்பத்திற்கிணங்க இளவரசன் போதி தர்மன் சீனதேசத்துக்கு பயணமாகிறான்.மூலிகை மருத்துவத்திலும் தற்காப்பு வர்ம கலையிலும் கைதேர்ந்த இளவரசன் போதி தர்மன் மூன்றாண்டு கடும் குதிரைப்பயணத்துக்குப்பிறகு சீன தேசத்தை சென்றடைகிறான் . தன்னை தீயசக்தியாக புரிந்து கொண்ட சீன மக்களின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து இறுதியில் சீனமக்களின் பெரும் நம்பிக்கைக்கு உரியவனாகிறான்.சில ஆண்டுகளுக்குப்பிறகு தனது பயணத்தின் குறிக்கோளை எட்டிய போதிதர்மன் நாடு திரும்ப எண்ணும்போது தன்னை இழக்க சீனமக்கள் விரும்பவில்லை என்பதை உணர்கிறான். இறுதியில் அங்கேயே சமாதி நிலை பெற்று இன்றும் சீனமக்களின் பெரும் தெய்வமாக பூஜிக்கப்படுகிறான்.
ஆறாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிற இந்த கதை ஏழாம் அறிவு திரைப்படத்தின் முற்பகுதியாக காண்பிக்கப்படுகிறது.
நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் வல்லரசு போட்டியில் அண்டை நாடான சீனா இந்தியாவை வீழ்த்த விஷக்கிருமிகளை ( bio - war ) விதைக்கும் முயற்சியில் இறங்குகிறது .இதையறிந்த பட்டப்படிப்பு ஆராச்சி மாணவியான சுபாவும் அவள் நண்பர்களும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும் போதிதர்மனின் பரம்பரையை தேடி அதில் அரவிந் என்ற இளைஞனை கண்டறிகிறார்கள்.மனித உடற்கூறு விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை பயன்படுத்தி போதிதருமனின் dna வை அரவிந்துக்கு பொருத்துவதன் மூலம் சீன திட்டங்களை முறியடிப்பதே முடிவான கதை.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே திரைக்கு வந்த இந்த திரைப்படத்தின் முதற்பகுதி பரபரப்பு மிக்கதாகவே படமாக்கப்பட்டிருக்கிறது.போதிதர்மனின் சீனப்பயணமும் அங்கு அவன் எதிர் கொள்ளும் எதிர்ப்புகளையும் அதன்பின் அந்த மக்களால் பூஜிக்கபடுதலையும் மெய்சிலிர்க்க சித்திரமாக்கியிருக்கிறார்கள்.
தொற்று நோயால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்படும் குழந்தையை தூக்கி குணப்படுத்தி பெற்றதாயுடன் போதிதர்மன் சேர்க்கும் காட்சி இன்னும் நினைவில் நிற்கிறது.
திரையுலகில் விதம்விதமான கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒருகாலத்தில் எம்ஜியாருக்கு மட்டுமே பொருந்தியதை பார்த்திருக்கிறேன்.இப்போது சூரியாவுக்கும் பல்வேறு வேஷங்கள் இயல்பாக பொருந்துவதை காணமுடிகிறது.ஒவ்வொரு காட்சிக்கும் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் சிறத்தை வியக்கத்தக்கதாயிருக்கிறது.
வில்லனாக வலம் வரும் வியட்நாம் நாட்டைச்சேர்ந்த நடிகர் ஜானி ட்ரை க்யன் தமிழ்த்திரைக்கு ஒரு வித்தியாசமான புது வரவு.திரையில் அவர் நிகழ்த்தும் சாகசங்கள் இதுவரை கண்டிராதவை.
கதையின் நாயகி சுபா சீனிவாசனாக வரும் கமலஹாசனின் புத்திரி சுருதி ஹசன் தனக்கு தரப்பட்ட பணியை திருப்தியாகவே செய்திருக்கிறார்.வேறு எதுவும் சிறப்பாக பேசுவதற்கில்லை.
ரவி கே.சந்திரனின் அற்புதமான ஒளிப்பதிவும் ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையும் படத்தை முன்னுக்கு இழுத்து செல்கிறது.பாடல்கள் மனதில் நிற்கின்றன.யம்மா யம்மா என்ற பாடல் தமிழ்த்திரையுலகின் கடந்தகால இசையை நினைவூட்டுகிறது.
இந்த சித்திரத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிற இயக்குநர் முருகதாஸ் எடுத்துக்கொண்டிருக்கிற அசாத்தியமான சிரத்தை போற்றத்தக்கது.
இந்த கதையை பொருத்தவரை போதி தர்மனின் சீனப்பயணத்துக்கு சொல்லப்படும் காரணங்கள் இதுவரை நான் அறிந்திராதவை என்றே சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த மண்ணை ஆண்ட மன்னர் பெருமக்கள் தாங்கள் விரும்பி தழுவியிருந்த மதங்களையும் சமய கோட்பாடுகளையும் மற்றவர்கள் மீது திணிக்கத்தவறியதில்லை.
அதன் விளைவாகவே இந்த பூமியில் தோன்றிய புத்தர் மதம் இன்றும் வெவ்வேறு தேசங்களில் வேர்விட்டிருப்பதை காணலாம்.அதற்கெனவே தன் சொந்த மகனையும் மகளையும் கூட நாடுகடந்த பிரச்சாரத்துக்கு சக்ரவர்த்தி அசோகன் அனுப்பிவைத்ததை படித்திருக்கலாம்.
ஏழாம் அறிவு திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் கதைக்காக சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்.
இந்த படத்தின் முற்பகுதியை காணும்போது அயர்லாந்து தேசத்தில் பிறந்து கிருத்துவ மத போதனைக்காக கடல்கடந்து தமிழக கடற்கரையோர பிரதேசத்துக்கு வந்த அறிஞர் ராபர்ட் கால்டு வெல் வரலாறே நினைவிற்கு வருகிறது.முதலில் அவரை தவறாக புரிந்து கொண்ட அந்த பிரதேச மக்கள் பின்நாளில் தெய்வமாக பூஜித்ததை எண்ணிப்பார்க்கிறேன்.
இதே அடித்தளத்தை கொண்ட வேறு சில ஆங்கில படங்களையும் இ ந்தி திரைப்படங்களையும் கண்டிருக்கலாம்.அதனால் தானோ என்னவோ இந்த கதையை இருபது நிமிடங்கள் மட்டுமே திரையில் சேர்த்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்..
இந்த திரைப்படத்தின் முதற்பகுதி மிகுந்த பரபரப்புடன் துவக்கப்பட்டு கம்பீரத்துடன் விரைகிறது.இருந்த போதிலும் திரையின் பின்னணியில் கதை சொல்லும் பாணி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிப் போவதில் சிரமம் ஏற்படுத்துகிறது.இயல்பாகவே நகர்த்தியிருக்கலாம்.பின்னணியில் பேசுவதும் பின்னோக்கி காட்சிகளை அமைப்பதும் புதுமையாக தோன்றலாமே தவிற கதையோடு ஒன்ற உதவுவதில்லை.
திரைக்கதை அடுத்த பகுதியை அடையும்போது நோக்கு வர்மம் என்ற அற்புத கலையை கேலிக்கூத்தாக்கி நகைச்சுவைக்கென நடிகர்கள் இல்லாத குறை போக்கப்பட்டிருக்கிறது.
இறுதி கட்டத்தை அடையும்போது காரண காரியங்களைப்பற்றி கவலை கொள்ளாமல் அவசரம் அவசரமாக தேவையற்ற உபதேசங்களுடன் திரைப்படம் முடிக்கப்படுகிறது.
எல்லை தாண்டிய பிரச்சனைகளிலும் பொருளாதார போட்டிகளிலும் அண்டை நாடான சீனாவுடன் எப்போதுமே நல்லுறவு நமக்கு இருத்ததில்லை என்பது உண்மைதான்.இருந்த போதிலும் அப்படியொரு உறவை எப்போதாவது அடையக்க்கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கின்ற உறவு மேலும் சீர்கெட்டுவிடக்க்கூடாது என்ற அச்ச உணர்வும் இப்போதுகூட நமக்கு உண்டு என்பதை உணரவேண்டும். நான்கு அய்ந்து முறை திரைப்படத்துக்காக சீனப்பயணம் மேற் கொண்ட இயக்குநர் இப்படியொரு தாக்குதலை நேரடியாக நிகழ்த்தியிருக்க வேண்டாம்.இந்த தேசத்து மக்கள் வெவ்வேறு தேசங்களுக்கு தங்கள் தேவைகளுக்காகவும் தங்கள் சொந்த வளர்ச்சிக்காகவுமே இடம் பெயர்கிறார்கள் என்பதை இயக்குநர் உணர்ந்திருந்தால் வெரும் மலிவான கைதட்டலுக்காக இறுதியில் சூரியாவுக்கு நீண்ட வசனங்கள் தந்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.
இந்த படத்தை பொறுத்தவரை நிகழ்வதனைத்தும் மனிதனுக்கு தரப்பட்ட ஆறாவது அறிவின் விளைவாகவே நிகழ்கிறது.அந்த நிலையில் ஏழாவது எட்டாவது அறிவுக்கு இங்கு என்ன வேலை .
இயக்குநர்தான் விளக்க வேண்டும்.
very nice ramesh
பதிலளிநீக்குvery good analysis.....
பதிலளிநீக்குNanum padam parthen, Intha karuthu arumai "இந்த தேசத்து மக்கள் வெவ்வேறு தேசங்களுக்கு தங்கள் தேவைகளுக்காகவும் தங்கள் சொந்த வளர்ச்சிக்காகவுமே இடம் பெயர்கிறார்கள் என்பதை இயக்குநர் உணர்ந்திருந்தால் வெரும் மலிவான கைதட்டலுக்காக இறுதியில் சூரியாவுக்கு நீண்ட வசனங்கள் தந்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்"
பதிலளிநீக்குIt is very true. i think you are 100% correct
பதிலளிநீக்குB.SIBI
what u said is right.....................
பதிலளிநீக்கு