ஞாயிறு, அக்டோபர் 23, 2016

தாத்தா பாட்டிகளை கொண்டாடிய தனியார் பள்ளி !

    வில்லவன் கோதை
   “ வர்ற பிரைடே நீங்களும் உமாம்மாவும் கண்டிப்பா மீட்ங்குக்கு வரணுமுண்ணு மேம் சொல்லிட்டாங்க. ஷேவ் பண்ணிட்டு அழகா ரெடியாவுங்க. “
   என்னுடைய நான்குவயது நிரம்பப்பெறாத பெயரன் கவின் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டிருந்தான்.
   எனக்குத்தெரிந்து பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாதத்திற்கொருமுறை பெற்றோர்களை எல்லாம்  அழைத்து தங்கள் இயலாமையை குழந்தைகள் மீது பெரும் குறையாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
   ஏறதாழ வாழ்வின் விளிம்பு நிலைக்கே நகர்ந்து விட்ட எங்களை ஏன் இவர்கள் அழைக்கிறார்கள் என்ற இயல்பான எண்ணம்தான் எனக்குள்ளும்  ஏற்பட்டது. வயது முதிர்ந்தவர்க்கு இப்போதெல்லாம் எல்லாரும் உபதேசிப்பதைப்போல
   இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
   என்ற ரீதியில் அமைதியான வாழ்வுக்கு ஏதாவது ஆலோசனை சொல்லப்போகிறார்களோ என்னவோ.
இப்படித்தான் நான் எண்ணிப்பார்த்தேன்..
   ஒருவழியாக பெயரன் கவின் குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கிழமையும் ( 21 அக்டோ  2016 ) வந்தது. குழந்தையின் கட்டளையை தவிர்க்க மனமின்றி சர்வ லட்சணமாக காலை எட்டரை மணிக்கே சிங்கப்பெருமாள் கோயில் மகேந்ரா நகரியத்துக்கு பயணமானோம்.

அது மகேந்ரா உலகளாவிய கல்விக்கூடம்,
   ஏறதாழ ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாயிரத்து ஏழில்  எல்கேஜி வகுப்புடன் துவக்கப் பெற்று இருந்த  இந்த கல்விக்கூடம் இன்று பன்னிரண்டாம் வகுப்புவரை சி பி எஸ் சி பாடதிட்டத்தில் வளர்ச்சியுற்றிருக்கிறது. பச்சைப் பசேலென்ற சூழலில் இயற்கையான காற்றோட்டமும் மிகுதியான வெளிச்சமும் நிறைந்த விசாலமான வகுப்பறைகளுடன் இந்த கல்விக்கூடம் விரிந்து கிடக்கிறது. உள் , வெளி விளையாட்டுத் திடல்கள் , இருவேறு நூலகங்கள் ,  சோதனைக்கூடங்கள் , கணினி அறைகள் , உரையாடல் அரங்கம் என்று  ஒவ்வொன்றையும் இயற்கைச் சூழலுடன் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்
   நான்கைந்து நாட்களாக வெள்ளிக்கிழமையை நினைவூட்டிய என் பெயரன் கவின் புத்தக பையை எளிதாக முதுகில் சுமந்து வளைந்து கிடந்த நெடிய வராண்டாவை கடந்து தன் வகுப்பறையை எட்டும்வரை கண்ணிமைக்காமல் பார்த்து நின்றேன்.
   இடையே குறுக்கிட்ட அன்பான வரவேற்பிற்கு பிறகு அத்தனை தாத்தா பாட்டிகளும் குளிரூட்டப்பெற்ற விசாலமான அரங்கொன்றில் அமர்ந்தோம்.

   இன்று நிகழ்ந்த கலந்துரையாடலில் இனம் மொழி கடந்து ஏறதாழ நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட தாத்தா பாட்டிகள் ஒருசேரக் குழுமியிருந்த காட்சி என் நினைவுகளைக் கிளறியது.
இறை வணக்கத்துடன் நிகழ்வுகள்  துவங்கிற்று.
   உங்களுடைய அத்தனை நினைவுகளையும் ஒருகணம் ஒதுக்கிவைத்து இன்றைக்கு இரண்டுமணி நேரம் எங்களோடு மகிழ்வாக கலந்திருங்கள்
   எங்கள் எல்லாரையும் மூன்று மொழிகளில் அன்போடு வரவேற்ற பள்ளியின் முதல்வர் திருமதி நிர்மலா கிருஷ்ணன் தன்னுடைய உரையின் இறுதியில் தாத்தா பாட்டிகளிடம் இப்படியொரு  வேண்டுகோளையும் வைத்தார்
   அதனைத் தொடர்ந்து ஐம்பதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக மேடையில் அரங்கேறிற்று. ஆடல் பாடல் ஓரங்க நாடகம் என்று மும்மொழிகளில் வெளுத்து விளாசினர்.
   இதிலும் ஒன்றைக் கவனிக்கவேண்டும் தமிழ் இந்தி பாடல்களில் பெரும்பாலும் ஐம்பது அறுபதின் தாக்கம்தான் இன்றைக்கும் முன் நின்றது.
   எழுபத்தி நான்கு வயதை எட்டிய ஒரு பெண்மணி ( அவரும் நிகழ்வுக்கு தொடர்ந்து வரும் ஒரு பாட்டிதான் ) இடுப்பைச்சுழற்றி சுழற்றி இளமையோடு இரண்டு பாடல்களுக்கு தொடர்ச்சியாக நடனமாடியது நினைவில் நீங்காத காட்சி. பலத்த கரகோஷத்தோடு வரவேர்ப்பை பெற்றது என்பதையும்  குறிப்பிடவேண்டும்.
   அதனைத்தொடர்ந்து தாத்தாக்களும் பாட்டிகளும் ஒவ்வொருவராக தங்கள் நினைவுகளை ஒலிப்பெறுக்கி வாயிலாக பகிர்ந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இப்படியொரு நிகழ்வு தாங்கள் எதிர்பாராதது என்பதையும் சொல்லத் தவறவில்லை
   .நான்கய்ந்து ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த தாத்தா பாட்டிகளின் கொண்டாட்டம் ஒவ்வொருமுறையும் அந்த பள்ளியின் வளர்ச்சியைப் போலவே விரிவடைவதை கேட்க முடிந்தது.
   அதனைத் தொடர்ந்து தாத்தா பாட்டிகளை ஓடி விளையாட வைத்து இளமை நினைவுகளை புதுப்பிக்க உதவினார்கள் அந்த பள்ளியின்  மாணவச்செல்வங்கள்.
   மணி பதினொன்றைத் தாண்டியபோது அத்தனை பேருக்கும் இனிப்போடு உணவு வழங்கி உபசரித்தார்கள்  பள்ளியின் பேரக்குழந்தைகள்.
   இறுதியில் கலைநிகழ்சிகளில் தூள் கிளப்பிய மாணவச்செல்வங்கள் தரையில் விழுந்து வணங்க அத்தனை தாத்தா பாட்டிகளும் கரம் உயர்த்தி வாழ்த்திய
காட்சி  நெஞ்சை  நெகிழவைத்த ஒன்று.
  
   உங்களுக்கு உடல் சார்ந்த , மனம்சார்ந்த உபாதைகள் எத்தனை இருந்தாலும் அவ்வப்போது கசப்பான மருந்துகளை  உட்கொண்டாவது இந்த குழந்தைகளுக்காக இன்னும் நீங்கள் உயிர் வாழுங்கள் 
   உருக்கமான வேண்டுகோளுடன் விழாவை நிறைவு செய்தார் ஒர் ஆசிரியை.
   எல்கேஜி பயிலும் என் பெயரன் கவின் வகுப்பு முடிவுக்கு வந்து சக குழந்தைகளோடு தொடர்வண்டியைப்போல் அணிவகுத்து அந்த நீண்ட வராண்டாவில் வந்து கொண்டிருக்கிறான் நடந்ததையெல்லாம் வரிசைப்படுத்தி நான் அவனுக்கு சொல்லவேண்டும்
நானும் என் மனைவியும் அதற்காக காத்திருக்கிறோம்.

21 10 2016