ஞாயிறு, அக்டோபர் 16, 2011

மகாகவியும் சாதா கவியும்!


( பாரதி மகாகவியல்ல என்ற விவாதத்தை துவக்கி பாரதியை தரம் தாழ்த்த முயற்சிக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வேர்களின் மின்அஞ்சல் )
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ...கடைசியில்.. 
என்று கிராமங்களில் பேசக்கேட்டிருக்கிறேன். இப்போது அந்த திசையில்தான் உங்கள் பாரதி விவாதம் பயணிப்பதாக நான் கருதுகிறேன்.அதேசமயம் நீங்கள் மட்டும் அதே இடத்தில் அசையாமல் நிற்பதையும் காண்கிறேன்.இந்த விவாதம்
இன்றைய தலைமுறைக்கு எவ்விதத்திலும் பயனளிக்கத்தக்கது என்று தோன்றவில்லை.இதுபோன்ற ஆய்வுகள் இந்த சமூகத்துக்கு புகழ் சேர்ப்பதைக் காட்டிலும் கடந்த தலைமுறை மீது அலட்சியமும் அவநம்பிக்கையையுமே ஏற்படுத்த வழி வகுக்கும்.
 பாரதி மகா கவியா அல்லது சாதா கவியா என்ற விவாதம் முன் எப்போதோ முடிந்து போனதாகவே கருதியிருந்தேன். இன்று உங்கள் பங்குக்கு நீங்கள் உங்கள் தரநிர்ணயத் தராசை கையில் எடுத்திருக்கிறீர்கள். பாரதி ஒரு மகாகவி என்று போற்றப்பட்டபோது பாரதி மகாகவியல்ல அவர் வெரும் சாதா கவிதான் என்று பேராசிரியர் கல்கி சொல்லிக்கொண்டிருந்ததையும் காலப்போக்கில் அவர் தன் கருத்துக்களை மாற்றிக்கொண்டு பாரதி மகாகவிதான் என்று ஒத்துக்கொண்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.பின்னாளில் கல்கி தன் பேச்சுக்கு வருந்தி பாரதிக்கு மணிமண்டபம் எழுப்பி பிராயசித்தம் தேடிக்கொண்டது கூட நினைவிருக்கக்கூடும்.
பொதுவாக எதிர்வினை ஆற்றுவதன் மூலமே தன்னை தனித்து அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்று பேசுகிற எழுதுகிற நடக்கிற ஒரு சாராரை நான் அறிந்திருக்கிறேன்.ஒருவேளை உங்களின் சமீபத்திய வெடிகுண்டு வீச்சுக்கும் இதுதான் காரணமோ என்னவோ.
பாரதி வாழ்ந்த காலம் சாதிகளாலும் சமயங்களாலும் இந்த தேசம் சிதறிக் கிடந்து.ஆனால் அதற்கு மாறாக இந்த நாடே அன்னியருக்கு ஒற்றுமையுடன் தலைதாழ்த்தி இருந்தது.அப்போது..
ஆயிரம் உண்டிங்கு சாதி இதில் அன்னியர் வந்து புகல்வதென்ன நீதி ... என்று வெகுண்டெழுந்தவன் பாரதி.இந்த தேசத்துக்கு தேவை ஏற்பட்டபோது தோன்றியவன் பாரதி.அவன் மக்களின் வாழ்வின் சந்தோஷம் சுதந்திரம்தான் என்று கருதினான்.சுந்திரம் பெற்றுவிட்டால் இந்த தேசம் அனைத்தையும் பெற்றுவிடும் என்று நம்பியவன் பாரதி.அவனுடைய எழுத்துக்களில் அன்னிய எழுத்துக்களின் தாக்கங்கள்இருந்திருக்கக்கூடும். அவன் அன்னிய மொழிகளை நேசித்தவன் அறிந்தவன் என்ற காரணமாகக்கூட இருக்கலாம்.இந்த தேசத்தின் புராண இதிகாசங்களின் சாயல்கள் தென்பட்டிருக்கலாம்..புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஒருமுறை குறிப்பிட்டது போல அவை அவன் தந்தையிடமிருந்து கற்றவை.இருந்தபோதிலும் அவனுடைய பெரும்பாலான எழுத்துக்களில் விடுதலை விடுதலை என்ற மூச்சுக்காற்று சீறி வெளிப்பட்டதை மறந்திட இயலாது.ஒவ்வொரு படைப்பாளியை போன்றே அவனுடைய படைப்புகளும் படிபடியாகத்தான் உச்சத்தை தொட்டன.மகாபாரதத்தின் சாயலென்றாலும் விடுதலை மூச்சைக் கலந்து உணர்வு தெரிக்க படைக்கப்பட் காவியம் பாஞ்சாலி சபதம். .சிந்து நதியின் என்ற கவிதையில் வருங்கால பாரதத்தின் தேவைகளை அன்றே கனவு கண்டவன் பாரதி.
ஒரே கதையையோ அல்லது ஒரே கவிதையையோ எழுதியதன் மூலம் நோபல் பரிசு பெற்ற ஒருவரை நீங்கள்தான் கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள்.
பாரதி வடித்தெடுத்த கவிதைவரிகளில் 80 விழுக்காட்டுக்கு மேலாக
இன்னும் இந்த நாட்டில் உரக்க பேசப்பட்டு வருவதை பாருங்கள்.இது போன்ற ஏராளமான வரிகள் மக்களிடையே கலந்த வேரொரு கவிஞன் இல்லையென்றே கருதுகிறேன்.அவன் இந்த மண்ணை பொறுத்தமட்டில் மகா கவியல்லவா. 

அன்புள்ள ஜெயமோகன்!

உங்கள் வாசிப்பு திறனும் அதற்கு நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற உழைப்பும் அசாத்தியமானது.அதை உணர்கிறேன்.ஆனால்..தேசிய அளவில் பாரதிமீதும் தேசபிதா காந்தி மீதும் நான் கொண்டிருக்கிற நேசம் உயர்வானது. பட்டிமன்றங்களிலும் வழக்காடுமன்றங்களிலும் கூட பேசப்படுகிற பொருளின் நிறை குறைதான் பேசப்படுமே தவிற எடுத்துக்கொண்ட பொருளை தாழ்த்த எவரும் முயற்சிப்பதில்லை.
இன்று போற்றிப்புகழப்படும் பாரதி அன்று ஒரு மனநோயாளியக ஒரு பயித்தியகாரனாகத்தான் பேசப்பட்டான்.அவன் சந்திக்க நேர்ந்த சிமங்கள் எவரும் சந்தித்திருக்க முடியாது.ஆனால் இன்று அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற உயரம் மகத்தானது. அந்த அஸ்திவாரத்தின் அடி கற்களை அசைக்க முயற்சிக்காதீர்கள்.
பாரதியார் பாடிய ஆயிரக்கணக்கான பாக்களில் தமிழர் நாகரீகம் எதனையும் பாடவில்லை,அது அவர் அறியாதது என்று பேசும் பாரதிதாசன் கேட்டிருக்கவேண்டும் உங்கள் கூற்றின் முகவரியை ...
நார்நாராக கிழித்திருப்பார்.
பாரதியை மகாகவியாக உருவெடுக்க உதவிய தலையாய கவிதைகள் எவையெவை என்ற திசையில் உங்கள் விவாதம் திரும்பட்டும்.தகுந்த நேரத்தில் அவதரித்த ஒரு தேசிய கவியை தரம்தாழ்த்த முயற்சிக்காதீர்கள்.
அடுத்து..
நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி தேசபிதாவா அல்லது சாதா பிதாவா என்ற அடுத்த அணுகுண்டை பிரயோகிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் அயரா உழைப்பை நேசிக்கும்..

பாண்டியன்ஜி
இடுகை 0073 ( tamil blogs )
-------------------------------------------
எழுத்தாளர் ஜெயமோகனின் அஞ்சல் !
   jeyamohan_ B  8:03 AM (4 hours ago)

அன்புள்ள பாண்டியன்
உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன்என்னுடைய வாதங்களை ஏற்கனவே எழுதிவிட்டேன்

  ஜெ
pandian g to jeyamohan_
 9:56 AM (3 hours ago)
உங்கள் அன்பான பதிலுக்கு நன்றி.
நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதங்களை புரிந்து கொள்கிறேன்.அவை வலுவானவை.இருப்பினும் பாரதி சார்ந்த என் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்