திங்கள், ஜூன் 28, 2010

லட்சுமியை மிஞ்சிய சரஸ்வதி

( தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை ) தமிழகத்தின் கல்விக்கூடங்கள் அனைத்தும் வணிகமயமாகி பல வருடங்களாயிற்று. அரசியலைவிட மிகுந்த பாதுகாப்பு மிக்கதாகவும் எளிதாக செல்வங்கொழிக்கும் சுரங்கங்களாகவும் கல்விக்கூடங்கள் திகழ்வதை தமிழக அரசியல்வாதிகள்
மிக நன்றாகவே தெரிந்து கொண்டுவிட்டனர். ஊழலில் விளைந்த பணமும் அரசியலில் கிடைத்த அபரிதமான செல்வாக்கும் இணைந்து கல்விக்கூடங்களைத் துவக்குவது இவர்களுக்கு எளிதாகவே இருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் வெறும் பத்துக்கு பத்து என்ற அளவு அறைகளில் ஐந்தாறு இருக்கைகளுடன் துவக்கப்பெற்ற கல்விக்கூடங்கள் நடுத்தர வர்கத்தின் உழைப்பைச் சுரண்டி பிரமிப்பூட்டும் கட்டிடங்களுடன் கல்லூரிகளாக உயர்ந்திருப்பதை
இன்று காண முடிகிறது. பணம் ஒன்றையே தலையாய குறிக்கோளாக கொண்ட இந்த கல்விக்கூடங்கள் பெருமளவும்
அரசு நிர்ணியிக்கின்ற குறைந்தபட்ச தர நிலையை என்றும் எட்டியதேயில்லை. போக்குவரத்து , நோட்டுபுத்தகங்கள்
சீருடை என்று ஒவ்வொரு நிலைகளிலும் நடுத்தர வர்கத்தின் உழைப்பையே வெகுவாக சுரண்டி வந்திருக்கின்றனர். தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சியைக் காட்ட இந்த கல்வி நிறுவனங்கள் நிகழ்த்துகின்ற தில்லுமுல்லுகள் இந்த நாட்டின் எதிர் காலத்தையே அசைத்துப் பார்க்கும் முயற்சி என்றே கருதுகிறேன்.
மக்கள் தொகை பெருக பெருக கல்வி நிலையங்களின் தேவைகள் அதிகரிக்கின்றன. இன்றைய சூழலில் அரசு மட்டுமே அனைத்தையும் ஈடு செய்ய இயலாது. தனியார் கல்விக்கூடங்களின் தேவை அதிகரிக்கும் போது தங்கள் போக்குக்கேற்ப கல்விக்கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தியே வந்திருக்கின்றனர். அவ்வப்போது இவைகளை சீர்தூக்கி
கட்டணங்களை சீரமைக்க அரசு தவறியே வந்திருக்கிறது. இவைகள் அனைத்தையும் இந்த நடுத்தர வர்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இருப்பினும் இதற்கு மாறாக சிந்தனையைத் திருப்ப ஒருபோதும் முயற்சித்ததில்லை.
நாடு அடிமையுற்றிருந்தபோது சுதந்திரம் கிடைத்துவிட்டால் சகலமும் சரியாகும் என்று பாரதி நம்பினார்.அது முழுதும்
பொய்த்துப் போயிற்று. அதற்கு மாறாக அடிமையுற்றிருந்த நாட்டின் மக்களையெண்ணி அஞ்சியஞ்சி சாவார் என்ற அவர் கூற்று இன்று உண்மையாயிற்று.
ஜனநாயகம் கோலோச்சும் தேசங்களில் பெரிதும் மக்களே விழுப்புணர்ச்சி மிக்கவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது மட்டுமே அரசின் ஆக்கபூர்வமான திட்டங்கள் அடித்தளத்து மக்களைச் சென்றடையும். அரசின் திட்டங்கள் தாறுமாறாக செல்லும்போது மக்களின் எழுச்சி மட்டுமே கட்டுப்படுத்த இயலும். அதுவன்றி அரசின் நல திட்டங்கள் அனைத்தும் தாமாகவே அடித்தட்டு மக்களைச் சென்றடையும் என்று எண்ணுவது அறியாமையே.
சமீபத்திய நாட்களில் தமிழக கல்வித்துறை வெகு நாட்களாக எதிர் பார்க்கப்பட்ட சில முடிவுகளை செயல் படுத்த துவங்கியிருக்கிறது.
இவற்றில் –
சமச்சீர் கல்வித்திட்டத்தையும் தனியார் கல்விக்கட்டண சீரமைப்பையும் குறிப்பாக குறிப்பிடத் தோன்றுகிறது. இவை
அனைத்தும் கல்வி வியாபாரிகளிடமிருந்து பல கட்டத்தடைகளை கடந்து இறுதி நிலைக்கு வந்திருக்கிறது. கல்விக்கட்டணம் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை சாதாரணமானதல்ல. இந்த பகற் கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகளும் மக்கள் உரிமைக்காக உயிர் வாழும் நிறுவனங்களும் ஏனோ இன்று வாய் மூடி மெளனம் சாதிப்பதையே காணமுடிகிறது.
அதே சமயம் –
தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு அழுத்தமான முடிவு எடுத்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
அரசின் குரலை மீறி தங்கள் எண்ணப்படியே கட்டணங்களைத் தொடர்வது என்று தீர்மானித்து விட்டார்கள்.
இரண்டொரு நாட்களுக்கு முன் நாகப்பட்டினம் தஞ்சாவூர் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சாதாரணமாக சென்று
வர நேர்ந்தது. நகரில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த பகற் கொள்ளையை எந்த சான்றும்
வைக்காமல் தொடர்ந்து நிகழ்த்தி வருவதை கண்டு அதிர்ச்சியுற்றேன். ஒவ்வொரு பள்ளியிலும் மழலையரைச் சேர்க்க
குறைந்த பட்சம் 14 முதல்15 ஆயிரம் வரை எந்த சான்றுச்சீட்டுமின்றி வசூலிப்பதைக் காண முடிந்நது. இயலாதவர்கள் விலகல் சான்றிதழை பெற்றுகொள்ளலாம் என்பதை திமிரோடு கூறுவதைக் காண முடிந்தது. தமிழக அரசின் உத்தரவுகளையோ நீதிமன்றம் அறிவித்த தீர்ப்புகளையோ அவர்கள் எண்ணிப் பார்த்ததாக தெரியவில்லை.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி –
அரசின் மிக உயர்ந்த பதவியில் இருப்போர் , அரசியலில் அங்கம் வகிப்போர் , சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோர் அனைவருமே ஏதோ ஒரு இயலாமையைக் கருத்தில் கொண்டு வாய் மூடி கைகட்டி எந்தவித சான்றுச்சீட்டும் பெறாமல் கொள்ளைப்பணத்தை கொள்ளைக்காரர்களிடம் தாமே ஒப்படைப்பதை ஒவ்வொரு நகரிலும்
காண முடிந்நது. இந்த அரசு தீட்டுகின்ற திட்டங்களுக்கு ஒரு கல்லைக்கூட எடுத்துவைக்கத் துணியாத தமிழ் மக்களுக்கு இந்த அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை வைக்க ஒருபோதும் அருகதை இல்லை என்றே தோன்றுகிறது. அரசின் செயல் பாடுகளையும் அரசு ஊழியர்களின் சலனங்களையும் பல்வேறு சந்தர்பங்களில் தாறு மாறாக விமர்சிப்பதை விடுத்து தவறுகளை தட்டிக் கேட்கின்ற நிலை மிகுதியாகும்போது மட்டுமே கொள்ளைகள் தடுக்கப்படும். ஊழல்கள் குறையக்கூடும்.அரசின் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையும்.
இடுகை 0024