வியாழன், ஜூலை 03, 2014

வல்லமை - கண்ணதாசன் போட்டி முடிவுகள் !

என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி முடிவுகள்!
கவிஞர்  திரு வ .வே .சு

அன்பு நண்பர்களே,
இதோ நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, நடுவர் திரு .வே.சு. அவர்கள் வழங்கியுள்ள  “என் பார்வையில் கண்ணதாசன்கட்டுரைப் போட்டி முடிவுகள் இதோ 
போட்டியில் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டியை முன்மொழிந்துள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன், தம்முடைய இடைவிடாத
கவிஞர் திரு. காவிரி மைந்தன்

( யெம் .  ரவி )
பணிச்சுமையிலும், நடுவர் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று, வல்லமையுடன் தம் தீர்ப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ள கவிஞர் திரு .வே.சுப்பிரமணியம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து எழுத்தாளர்களையும், ஊக்குவித்தும், உற்சாகப்படுத்தியும், மென்மேலும் சிறப்பாக காவியம் படைக்க உந்து சக்தியாகத் திகழும் நம் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிபரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.
 தீர்ப்புக் கட்டுரை- நடுவர் .வே.சு
ஒரு முக்கியமான சேதியை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
கவியரசரின் பெயரைச் சொல்லி எது கேட்டாலும் நான் மறுக்காமல் ஒத்துக் கொண்டு விடுவேன்இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பது, காவிரிமைந்தன் கேட்ட உடனேயே கட்டுரைகளைத் தேர்வு செய்யும் நடுவராக இருக்க நான் ஒத்துக் கொண்டதிலிருந்து நிரூபணமாகிவிட்டது..
அப்புறம் கொஞ்சம் யோசித்துப் பார்த்த பிறகே நான் இந்தப் பணிக்குத் தகுதியானவனா என்ற ஐயம் வலுத்தது. இந்தத் தன்னிலை விளக்கத்திற்கும் தன்னடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை என்னை அறிந்தவர்கள் நன்றாகவே அறிவார்கள்.
பிறகு என்னதான் பிரச்சனை? கவியரசரின் வரிகளுக்குள்ளேயே ஆழ்ந்துவிட்டதுதான் பிரச்சனை. ஒரு புறம் அவருடைய ஒற்றைச் சொல்லை ஒருவரியில் பாராட்டி எழுதினாலே எங்கள் சொத்தை எழுதி வைக்கும் கூட்டம் நாங்கள். இன்னொரு புறம் அவருடைய ஒருவரியைப் பத்து பக்கங்கள் எழுதிய பின்னாலும் இன்னும் நூறு பக்கங்கள் ஏன் எழுதவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கூட்டம் நாங்கள். இதில் எப்படி நடுவராக இருந்து இது முதல் இது அடுத்தது என்று தேர்வு செய்ய..? கவியரசரின் இரசிகனாக, அனுப்பப்பட்ட அனைத்து கட்டுரைகளுக்கும் முதலிடம் என் நெஞ்சில் கொடுக்கப்பட்டுவிட்டதை அறிவிப்புச் செய்கிறேன்.
 கவியரசரை எழுத்தெண்ணிப் படித்தும் கேட்டும் இரசித்த என்னை போன்றவனுக்கு, பிறர் அவரை இரசிப்பதை அருகிருந்து பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பை வழங்கிய எனது இனிய நண்பர் காவிரி மைந்தனுக்கும், போட்டியை நடத்தும் வல்லமை குழுவுக்கும் ஆசிரியர் பவளசங்கரிக்கும் நிரம்ப நன்றி.
இனி கட்டுரைப் போட்டியின் நடுவராக என் பணி முடிவுகள்:
மொத்தம் வந்த கட்டுரைகள் முப்பது. அத்தனையும் முத்துக்கள்; இரத்தினங்கள். காரணம் அனைவருமே கண்ணதாசனென்னும் ஆழ்கடலுள் மூழ்கி முக்குளித்து எழுந்தவர்கள். யாரும் சோடை போகவில்லை. கவியரசரின் வரிகளை இடைகட்டித் தொடுத்த பிறகு எந்த மாலைதான் மணம் வீசாதிருக்கும்? எனில் தரம் பிரிப்பது எவ்விதம்? எல்லார் கைகளிலும் ஆணிப்பொன் தான். ஆனால் அதை எப்படிப்பட்ட ஆபரணமாக ஆக்கியிருக்கிறார்கள்? அங்குதான் கொஞ்சம் வேறுபாடு. அதற்குக் காரணம் அணுகுமுறை.
சிலர் கவியரசரின் வாழ்க்கையை மட்டுமே எழுதியுள்ளனர்; சிலர் அதில் தம் வாழ்க்கை பிணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் பொது வாழ்க்கைத் தத்துவமே அதில் அடங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். சில கட்டுரைகளில் இலக்கிய ஊடாடல்களும் ஒப்புமைகளும் அதிகம் இருந்து சுவை கூட்டின; சிலவற்றுள் கவியரசரின் வரிகள் கண்ட வாழ்க்கை அனுபவங்கள் அருகு நெருங்கி அரவணைத்துக் கொண்டன. சிலவற்றில் கண்ணதாசன் மீது காதல்; சிலவற்றில் பக்தி; இன்னும் சில கட்டுரைகள், கவிதை வரிகளின் இடைபயிலும் மோனத்திற்குக் கூட மெட்டமைத்துப் பார்த்துள்ளன.
அணுகுமுறை,.கருத்துத் தெளிவு, மொழி ஆளுமை, போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டுரை நீளம் ஆகிய துணை அலகுகளைக் கொண்டுதான் கட்டுரைகளை வரிசைப்படுத்தியுள்ளேன். ஆனால் இதையும் தாண்டி ஒரு பரவசத்தையும், துள்ளலையும் உயிரோட்டத்தையும் எந்தப் படைப்பில் பார்த்தேனோ அதைத்தான் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன். 
மூன்று முதலிடங்கள்
1.     1.   விசாலம் அற்புதமான கற்பனை நேர்காணல். இரவு எட்டு மணிக்குக் கவியரசரோடு பேசத் தொடங்கி அருகிலுள்ள கோயிலின் இரவு மணியோசை மறையும் வரை பேசியதைப் பதிவு செய்துள்ளார். எடுத்த உடனேயே கவிஞரின் அழகு முகத்தைப் படம் பிடித்து நம் நெஞ்சில் இடம்பிடிக்கிறார். வான்நிலா என்று தொடங்கி, கவிஞரின் வாழ்க்கைப் பாதையோடும் அவர் படைப்புகளோடும் நம்மைப் பயணிக்க வைக்கிறார். இதற்குக் கண்ணதாசனே சாட்சி.! தெரிந்தாலும் பலர் வெளிச்சம் போடாத சேதி. நடமாடும் தெய்வமாக வாழ்ந்த காஞ்சி முனிவரோடு கவிஞருக்கு நிகழ்ந்த சந்திப்பைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன் என்ற அந்த ஆளுமையைக் கற்பனையிலேனும் அருகே கண்டு பேசுவதுதான் கட்டுரைக்கு உயிர் கொடுக்கும் என்ற இவரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. பொதுவாக நேர்காண்பவர் குறைவாகவும் பதிலளிக்கும் பிரபலம் அதிகமாகப் பேசுவதும் மரபு. இங்கே அது தலைகீழ்; காரணம் கவிஞரின் மவுன சம்மதத்தில் இவரே அவர் சார்பில் பதில்களைக் கொடுத்துள்ளார். இந்த நெருக்கம் கட்டுரையின் உயிர்ப்புக்கு அடித்தளம் அமைக்கிறது.
1.     2.   அருமையான இன்னொரு கட்டுரை; ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியுள்ளார். கண்ணதாசனை எப்போது நினைத்தாலும் இவர் பரவச உணர்வில் ஆழ்ந்துவிடுவார் என்ற அறிவிப்பினை அவர் எழுத்துக்களே செய்துள்ளன,, உதாரணம்ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானதுகரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானதுஇனியும் மேம்படுத்த இயலாத எல்லைச் சொல் ஓவியம். “’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’
இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.” எப்படி இரசித்திருக்கிறார் பாருங்கள். வாணி ஜெயராம் குரலில் இப்பாடலைக் கேட்டவர்கள் ஒரு கோப்பை அமுதக் குழம்பைக் குடித்தவர்கள்.
1.     3.   அடுத்து பாண்டியன்.ஜி ( வில்லவன் கோதைபடைத்த கட்டுரை. அவரே இது வித்தியாசமான பார்வை எனக் குறிப்பிட்டிருக்கிறார். கவியரசரின் வாழ்க்கையை மிகச் சரியாக, ஓர் எழுத்தோவியமாகக் கொண்டு வந்துள்ளார். அநாவசிய மாலை சூட்டல்களும் , சிக்கித் திணறும் பாராட்டு மொழிகளும் இன்றி, ஒரு மாபெரும் கவிஞனை, அவன் வாழ்ந்த வாழ்க்கையின் போக்குகளைக் கொண்டும் எழுத்துகளைக் கொண்டும், கொண்ட கொள்கைகளை வைத்தும் தன்னுடைய அளவுகோலால் உண்மையாக எடை போட்டிருக்கிறார். உதாரணம் காட்டாமல் இருக்கமுடியாது.

ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள். கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.வாசிப்பு திறன் மங்கிப்போன இந்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.
கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல. கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.”

ஆக (27)விசாலம், (1) ஜெயஸ்ரீ ஷங்கர், (13) பாண்டியன்.ஜி ஆகிய மூவரையும் முதல் பரிசுக்குரிய இடத்தில் வைக்கிறேன். மூவரும் சமமே.

-- வல்லமை இணைய இதழ்  03 07 2014