செவ்வாய், செப்டம்பர் 11, 2012

சக்கரவர்த்தி திருமகன் ( பிறந்தான் )




வில்லவன்கோதை
நெடுநாட்களாக என் நெஞ்சில் நின்றிருந்த ஒரு முள் இப்போது முழுமையாக அகன்று விட்டது. வாழ்நாளில் நான் எதிர் நோக்கியிருந்த மகிழ்ச்சியான தருணங்களில் மிச்சமிருந்த ஒன்றும் இப்போது நிறைவேறியிருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை (30 08 2012 ) காலை எட்டுமணி நான்கு நிமிடங்களில்  என் இரண்டாவது மகள் சவீதா மோகன்பாபு ஒர் ஆண் மகவுக்கு தாயானாள். திருமணம் நிகழ்ந்து ஏரத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு அவளுக்கு இந்த தகுதி கிடைத்திருக்கிறது.

இதற்காக அவள் எடுத்துக்கொண்ட நவீன மருந்துகளும் அவளுக்கு துணையாக இருந்த  நவீன மருத்துவரின் உள்ளார்ந்த ஈடுபாடும்  இப்போது கைகூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.அதைப்போலவே அவளுக்காக என் மனைவி எடுத்துக்கொண்ட சிரத்தைகளும் சாதாரணமானதல்ல. நிகழ்கால எதார்த்தங்களை முழுமையாக உணர்ந்திருந்தாலும் இன்றும் பொய்யின்றி மெய்யாகவே தெய்வங்களை தொழுபவள்.அவளுக்கிருந்த ஆழ்ந்த தெய்வ சிந்தனைகூட இந்த சக்கரவர்த்தி திருமகனின் பிறப்பிற்கு காரணமாக இருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.

என்னைப்பொருத்தவரை எனக்கிருந்த ஏக்கத்தை எனக்குள்ளேயே புதைத்து வாழ்ந்தவன்.அறியாமற் கூட அவை சிதறி அடுத்தவர் துயரத்தை மேலும் தூண்டிவிடக்கூடாதென்பதில் கவனத்தோடு இருந்தவன்.

என் மகளைப்போலவே இன்றும் எத்தனையோ தம்பதிகள் ஒர் மழலைக்காக ஆங்காங்கே ஏங்கிக்கிடப்பதை பார்க்கிறேன். இதுபோன்ற சங்கடங்களுக்கு கணவன் மனைவிக்கிடையே இயல்பாக இருக்கின்ற மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உள்ள வேறுபாடுகளே காரணமாக இருக்கக்கூடுமென்று தோன்றுகிறது.
 
ஆரம்ப காலங்களில்  குழந்தைகள் பிறக்கும் தருணங்களையும் பின்னாளில் அதன் உள்ளங்கையில் கைகளில் காணப்படும் கோடுகளின் நிலைகளையும் வழிவழியாக ஆய்ந்தறிந்து சில பொது குணங்களை கண்டறிந்திருக்கிறார்கள்.அந்த குணங்களை  நிகழ்காலங்களுக்கு தக்கவாறு  சாதுர்யமாக  இணைத்து பலன்கள் சொல்லும் சோதிடர்களை பார்த்திருக்கிறேன்..இவைகள் ஒரு சமயம் சரியாகவும் பெரும்பாலான சமயங்களில் தவறாகவுமே இருந்திருக்கின்றன.

இன்றைய மருத்துவர்களைப்போலவே விளைவுகள் சாதகமான சமயங்களில்  சோதிடர் திறன்மிக்கவராக பேசப்படுவதை காணமுடியும். காலம் காலமாக சரியான முடிவுகள் நம்பத்தகுந்தவையாகவும் மற்றவை  அவநம்பிக்கையையுமே ஏற்படுத்தியிருக்கின்றன.
குழந்தைகள் பிறந்த தருணங்களைக்கொண்டு எழுதப்பெற்ற சாதகங்கள் பிற்காலத்தில் திருமண பொருத்தங்களை நிச்சியிப்பதில் முன்னணியில் இருப்பதையும் பார்க்கமுடியும். அவற்றின் விளைவுகள் அத்தனையும் சரியாக இருந்ததாக எனக்கு நினைவில்லை


இப்போதெல்லாம் இந்த சாதகங்களை  ஒரு சம்பிரதாயமாகவும்  வணிகரீதியாகவுமே பயன்கடுத்துவதை காணலாம்.மனதிற்கும் வசதிக்கும் ஏற்ற வரன்கள் அமையாதபோது அதாவது தங்களுக்கு வரன் சாதகமாக இல்லாதபோது அதைத்தட்டிக்கழிக்க இந்த சாதகங்கள் பயன் படுவதை பர்க்கமுடியும்.  

வாழ்க்கையின் அடுத்தடுத்த நகர்வுகள் நம்முடைய செயல்பாடுகள் மூலமே நிகழ்கிறது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். ஆனால் எனது பெண் சவிதாவின் வாழ்வு நான் எதிர் பாராத திசையில் பயணித்து அதன் வழி நான் சென்றதுதான் உண்மை. அவளுடைய மேல்நிலைக்கல்விக்குப்பிறகுஅவள் சென்ற பாதை அவளோ நானோ எதிர்பாராதவை.

கல்லூரி பட்டப்படிப்பின் போதே பன்னாட்டு நிருவனம் நிகழ்த்திய ( FORD INDIA ) தேர்விலும் நேர்காணலிலும் முதன்மை பெற்று சென்னையிலே பணிக்குச் சேர்ந்தாள் இன்னும் ஒரு ஆண்டில் முடியவேண்டிய கல்லூரிப்படிப்பு இடையிலேயே தடையுற்றது.அடுத்த இரண்டாண்டுகளில் திருமணமும் முடிந்து இப்போது சொந்தமாக தொழில்துவங்கி பட்டம்படித்த பதினைந்து பேருக்குமேல் பணிபுரியும் ஒரு நிருவனத்துக்கு  ( MEKTRONICS AUTOMATIONS AND SOLUTIONS ) உரிமையாய் இருக்கிறாள்.தடையுற்ற பட்டமும் இப்போது கைவசமாகியிருக்கிறது.

அன்பார்ந்த கணவன் அரவணைப்பில் வாழுங்கின்ற அவளுக்கு ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு  இப்போது ஒரு தங்கமகன் பிறந்து எங்களுடைய மகிழ்ச்சிக்கு வித்திட்டிருக்கிறான். 

என்னுடைய இந்த நெடிய வழ்வில் சோதிடங்களுக்கும் சாதகங்களுக்கும்எப்போதுமே முக்கியத்துவம் தந்ததில்லை.அவைகள் நம்பத்தகுந்தவைகள் என்றும் கருதியதில்லை. எப்போதுமே என்னுடைய முன்முயற்சியை மீறி நிகழ்பவைகள் அனைத்தையும்  ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப் பக்குவத்தையும் நான் பெற்றிருந்தேன். பெரும்பாலும் மனிதர்கள் அடிக்கடி சந்திக்க நேருகிற நெருக்கடிகளும் எதிர்பாராமல் வருகிற நோய்களுமே இன்று சோதிடர்களையும் மருத்துவர்களையும் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கின்றன. அவர்கள் உயர்வுக்கு மக்களிடையே மலிந்து கிடக்கும் அச்ச உணர்வே காரணமாய் இருக்கிறது என்பதை மிகுதியாக நம்புகிறவன்.

இந்த சமயத்தில் ஒன்றை குறிப்பிடத் தோன்றுகிறது.
என் மனைவியும் நானும் பெரிதும் மதிக்கின்ற கீதா வேணுகோபாலன்  ( நெய்வேலி ) என்ற ஒரு மாமி என் பெண்ணின சாதக குறிப்புகளை பார்த்த போது கணித்த முடிவுகள் தொடர்ந்த நிகழ்வுகளில் முழுமையாக வெளிப்பட்டதை மறுக்க முடியாது.அவருக்கு சோதிடம் ஒரு வணிகமல்ல.அவருக்கிருந்த ஆழ்ந்த திறன் என்றே கருதுகிறேன்.

பெண்ணின் படிப்பு இடையிலேயே தடையுறும்.

உங்களை விட்டு அவள் விலகி இருக்க நேரிடும்.

நல்ல கணவன் நல்ல வாழ்க்கை கிட்டும்.

உங்களுக்கு துணையாக அவ்ள் வாழ்வு இருக்கும்.

நிச்சயம் குழந்தை உண்டு. ஆனால் காத்திருக்க நேரிடும்.

இவை அத்தனையும் ஒவ்வொன்றாக அவர் கணித்தபடியே  நிகழ்ந்திருக்கிறது. நான் சற்றும் எதிபாராத சூழலில் அவளது பட்டப்படிப்பு தடையுற்று பன்னாட்டு நிருவன பணிகிடைத்தது அதனைத்தொடர்ந்து அவள் எங்களைவிட்டு விலகி நான் அலுவலில் ஓய்வுற்றபோது ஒன்றாக இணைந்தோம். அவளுக்கு அவர் கணிப்புபடியே நல்ல கணவன் நல்ல வாழ்க்கை கிடைத்தது. அதுமட்டுமன்றி நெடிய ஒன்பதாண்டுகளுக்கிப்பிறகு இந்த அற்புதமும் நிகழ்ந்திருக்கிறது. 
.
இந்த நிகழ்வுகளை முன்னதாகவே கணித்த கீதா மாமி இப்போது பாரதி , பாரதிதாசன் வாழ்ந்த புதுவையில் வாழ்கிறார்.

நாங்கள்  பெற்ற இந்த மகிழ்வை இந்த பதிவின் மூலம் இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இடுகை 0096
_____________________________ கடந்த 30 08 2012 ல் பிறந்த என் பேரனுக்கு கவின் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்
30 09 2012

4 கருத்துகள்:

  1. ஆரூர். மு. அஜ்மல்கான் ஜபருல்லாஹ்., திருவாரூர்.திங்கள், செப்டம்பர் 24, 2012 1:27:00 AM

    இனிமையான மகிழ்வான செய்தி. அக்காவிற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடவும்.

    #மாமா, ஒரு ஸ்வீட் பாக்ஸ் உங்கள் அஜ்மலுக்கு பார்சல்...

    பதிலளிநீக்கு
  2. அன்பான அஜ்மலுக்கு
    உனது பார்வையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது.உனது இருப்பிடத்தை தெரிவி.இனிப்பு வந்து சேரும்.
    அக்காவுக்கும் மகிழ்ச்சி.
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு
  3. ஆரூர். மு. அஜ்மல் கான்செவ்வாய், அக்டோபர் 23, 2012 1:36:00 AM

    உங்களின் மகிழ்ச்சியே... எனக்கு இனிப்பு தான்...
    :)

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !