‘
ஜோதி ! நம்ம ப்ரொகிராம்படி இன்னிக்கு நைட்டே நாகப்பட்னம் கெளம்பரோம். பத்துமணிக்கு
கம்பன் எக்ஸ்ப்ரஸ் நாளைக்கு நாகப்பட்னத்ல
ஹால்ட். மறுநாள் ஞாயித்துக்கிழமை எர்ளி மார்னிங் திருக்கண்ணபுரம்.
வேண்டுதல முடிச்சிட்டு
அன்னிக்கு நைட்டே சென்னை ரிட்டர்ன். திங்கக்கெழமை மினிஸ்ட்ர்ஸ் மீட்டிங். அவசியம்
வந்தாகணும்.
தேவையானதை எல்லாம்
மறக்காம எடுத்து வெச்சுக.. ஒங்க
அம்மாகிட்டயும் பேசிடு. வாசுகிட்ட நான் சொல்லிட்டேன். ‘
அலுவலகத்திலிருந்து
படபடவென்று பேசினான் சுரேஷ் .
‘
வர்ரப்ப சாமி பாவாடைய மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க.. ‘
இடுக்கோடு இடுக்காக
சுரேஷுக்கு நினைவூட்டினாள் ஜோதி.
‘
சரி..அனுவுக்கு.....’
‘
பட்டுப்பாவாடை சட்டை....அம்மா எடுத்துட்டு வந்துடுவாங்க. ‘
‘
ம்...சரி! ‘
உரையாடலை
முடித்துக்கொண்டு கைபேசியைத் துண்டித்தான் சுரேஷ். நெடுநாளாக நெஞ்சை
அழுத்திக்கொண்டிருந்த ஒரு சுமை இப்போது மெல்ல மெல்ல தளர்வதை உணர்ந்தாள் ஜோதி. இரண்டு
ஆண்டுகளாக தள்ளித் தள்ளி போய் வந்த ஒரு வேண்டுதல் இரண்டு நாளில் நிறைவேரப்போகிறது.
சுரேஷைக் கைபிடித்து
சென்னைக்கு வந்து குடியேறிய இந்த பத்து வருடங்களில் கடந்த ரெண்டு வருடமாகத்தான்
குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து நிறைவேற்ற முடியாமற் போயிருந்தது.
சமீபகாலங்களில் இந்த
குடும்பத்தில்தான் எத்தனையெத்தனை கஷ்டங்கள். உறவோடும் நட்போடும் எத்தனையெத்தனை
உரசல்கள். அத்தனைக்கும் இதுவேகூட ஒரு
காரணமாக இருக்கக்கூடுமென்று உறுதியாக நம்பினாள்
ஜோதி.
இந்த வருடம் கூடுதலாக
தங்கள் குழந்தை அனுவுக்கு மொட்டை போட்டு
காது குத்தவும் போகிறார்கள். இரண்டு வருடத்துக்கு முன்பே செய்யவேண்டிய இந்த
சம்ப்ரதாயம் இப்போதுதான் நிறைவேறப்போகிறது. அனுஷா இப்போது ஆறு வயது முடிந்து
யூகேஜி வந்துவிட்டாள்.
இந்த சந்தோஷ சமாச்சாரத்தை
அம்மாவோட பகிர்ந்துகொள்ள தொலைபேசி எண்களை
அழுத்தினாள் ஜோதி.
அடுத்த கணம் தொலைபேசி
மணி நன்னிலத்தில் ஒலிப்பது தெளிவாக கேட்டது.
அம்மாதான் எடுத்தாள்.
‘
அம்மா ...அவருக்கு லீவு கெடச்சிட்டாம். வர்ர ஞாயித்துக்கிழமை அனுவுக்கு காது
குத்தல் வெச்சுகலாமாம். ‘
‘
அப்பாடா ..ஒரு வழியா லீவு குடுத்துட்டானா. செகரட்ரியேட்டே ஸ்தம்பிச்சுட போவுது . ‘
‘
நீங்கள்ளாம் அண்ணாவோடநேரா கோயிலுக்கே வந்துடுங்க. தோடும் ஜிமிக்கியும் துக்ணோண்டு
எடுத்துகிட்டு வந்து நிக்காதே ! செத்த பெரிசாவே எடுக்க வாசுகிட்டே சொல்லு.
அனுவுக்கு பட்டுப்பாவடை சட்டை அரக்கு
கலர்தான் நல்லா இருக்கும்...திருபுவனம் சொஸைட்டியிலேயே எடுத்துடு. ஜிமிக்கி
மாயவரம் ஏஆர்சிலேயே வாங்கச்சொல்லு. ‘
‘
காதுக்கு தகுந்தாப்ல எடுத்தாதானே குழந்தைக்கு பாந்தமா இருக்கும்.. ‘
‘
எல்லாம் பாந்தமாதான் இருக்கும் அப்டியே நானும் போட்டுப்பேன் அது சரி ..அப்பா
எப்டிம்மா இருக்கார். ‘
ஜோதிக்கு ஒரு கணம்
நெஞ்சை அடைத்த்து.
‘
அப்டியேதாண்டி இருக்கார். எல்லாம் இருந்த எடத்லேயே.. சம்முவத்தை
வெச்சிட்டுதான் அனு காது குத்துக்கு
வரணும். போம்போது ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்.. மாப்பிளைகிட்ட சொல்லு..’
‘
ம் . பாக்கலாம் ! ‘
ஜோதிக்கும் ஒரு எண்ணம்
இருந்தது. சாமிதான் வரம் கொடுக்கணும்
தகவலை பகிர்ந்த
திருப்த்தியில் தொலைபேசியை வைத்தாள் ஜோதி.
மூவருக்கும் இரண்டுநாள்
பயணத்துக்குத் தேவையான துணிகளை தேடித்தேடி சேகரித்தாள். தினசரி தேவைக்கு ஆங்காங்கே சிதறிக்கிடந்த
பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து கம்பிவலைகளுக்குள் அடுக்கினாள்.
மூலைக்கு மூலை
இரைந்துகிடந்த அனுவின் விளையாட்டு சாமான்களையும் சுற்றுச்சூழல் வகுப்புக்காக தயாரித்த வண்ண வரைபடங்களையும்
பொறுக்கி எடுக்கும்போதுதான் இந்த குடும்பத்தில்
இன்னொரு ஜீவனும் இருப்பது ஜோதியின்
நினைவுக்கு வந்தது
சின்னஞ்சிறு குட்டி நாய்
ஜானி இந்த நடுத்தர குடும்பத்தோடு கலந்து ஏரத்தாழ ஆறுமாதமிருக்கலாம்.அனு
பிராணிகள்பால் கொண்டிருந்த பரிவை உணர்ந்த
சுரேஷின் அலுவலக உதவியாளர் முருகேசன்தான் கண் விழிக்காத இந்த குட்டிநாயை
எங்கிருந்தோ தூக்கிவந்தார். இப்போதெல்லாம் பள்ளியில் கழிக்கும் நேரங்களைத்தவிர
பெரும்பாலான நேரங்களில் ஜானியையும்
அனுவையும் ஒன்றாகவே பார்க்கலாம்.
இந்த இரண்டு நாள்
பயணத்துக்கு ஜானிக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். எப்போதோ ஒருமுறைதான் இதுபோன்ற
சங்கடங்கள் வருமென்றாலும் இதற்காக இன்னொருவர்
தயவை தேடத்தான் வேண்டியிருந்தது.
குழந்தை அனுவுக்கோ இதையெல்லாம் உணர்வதர்க்கு தகுந்த வயதில்லை.
பக்கத்து போர்ஷன் பானுவிடம்தான் இரண்டு நாளைக்கு ஜானியை விட்டு விட்டு
போகவேண்டும்.
வீட்டின்
சுற்றுச்சுவரின் கதவுகளுக்கிடையே இரண்டு கால்களை உயர்த்தி கம்பிகளுக்கிடையே தலையை
நுழைத்து வாலை விசிரியவாறே அனுவின்
வருகையை பார்த்திருந்த்தது ஜானி.
எப்போதுமே அனு வரும்
வழக்கமான நேரத்தை மணிக்காட்டி இன்றியே அறிந்துவைத்திருந்தது அந்த ஜீவன்.அதற்கு
ஆறறிவு மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது..
இரவுப்பயணத்துக்கு
தேவையான ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக முடித்து ஜோதி வாசற்பக்கம் வந்தபோது சுரேஷ் அனுவோடு
பைக்கிலிருந்து இறங்கினான்.
‘
ஒன்னவர் பிபோராவே கெளம்பிட்டேன். சாமி பாவாடை வாங்கிகிட்டு அப்டியே இவளையும்
பிக்கப் பண்ணிட்டு வந்துட்டேன் ‘
முன்னதாக வர நேர்ந்த
காரணத்தை சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
முதுகை இறுக்கிய
புத்தகச்சுமையை தளர்த்தி வராண்டாவில் வீசிவிட்டு ஜானியை அள்ளிக்கொண்டாள் அனு. ஒரு
நாளின் குறைந்தபட்ச பிரிவைக்கூட சகியாத ஜானி குதுகுலத்துடன் அனுவோடு ஒட்டி
உருண்டது.
‘
நாமெல்லாம் ஊருக்குப் போரோண்டா..செல்லம் ! ‘
ஜானியின் முகத்தை ஒட்டி
உறவாடினாள் அனு.
‘
நாமெல்லாம் இல்லடா...நாம மட்டுந்தான்டா தங்கம் ! ‘
அனுவுக்கு
பதிலளித்துக்கொண்டே சிதறிக்கிடந்த புத்தகப்பையுடன் உள்ளே நுழைந்தாள் ஜோதி.
‘
ஏம்மா... ‘
குழந்தையின் முகம்
மாற்றம் பெற்றது
‘
போவலாம்டா கண்ணு.. ‘
அனுவை சமாதானப்படுத்த
முயன்றான் சுரேஷ்.
‘
நாயி பூனையெல்லாம் ட்ரெயினில் ஏத்தமாட்டான்.. ‘
ஜோதி பேசிக்கொண்டே
அடுக்களையுள் நுழைந்தாள்.
‘
அனு ! ஊர்ல ஒன்னோட விளையாட புதுசா ஒரு பிரண்ட் வெயிட் பண்றான்.’ அனுவை
சமாதானப்படுத்திக்கொண்டே வியர்வை வாசம் நிறைந்த ஆடைகளை களைந்தான் சுரேஷ்.
‘
ஜோதி ! கிஷ்ணா ஒரு குட்டி ஆட்ட வாங்கிட்டானாம். கிடா வெட்டித்தான் காது
குத்தணுமாம். அவன் ப்ரண்ட்ஸெல்லாம் வர்ராங்களாம் ‘.
லுங்கியை அணிந்து
கொண்டே கைபேசியில் கிடைத்த தகவல்களை
பகிர்ந்துகொண்டான்.
‘
இது என்ன புதுபழக்கம்.. ‘
முகம் சுளித்தாள் ஜோதி.
‘
மனுஷா ரசனைக்குத்தகுந்தார்ப்போல பழக்கங்களும் மாறிகிட்டுத்தான் வர்ரது..’
நிகழப்போகும் ஒரு
உயிர்வதையை அங்கீகரித்தான் சுரேஷ்.
‘
வாசுவும் அம்மாவும் சாப்ட மாட்டாங்க.. ‘
‘
லோக்கல் மெஸ்ல பத்து வெஜிடேரியன் மீல்ஸ் வேணா சொல்லிடுவும். ‘
‘
கடாவெட்டா ..என்னப்பா அது..’
அனு அப்பாவை வியப்போடு பார்த்தாள்.
‘
ஆட்டுகுட்டியை சாமிக்கே குடுத்துர்ரது.. ‘
சுறுக்கமாக பதிலளித்தான்
சுரேஷ்.
சுரேஷின்
வார்த்தைகளுக்கு பொருள் புரியாமல் அனு ஜானியோடு நகர்ந்தாள். அடுத்த சில நொடிகளில்
நகரத்து அழுக்கு தீர குளிப்பதற்கு குளியலறையில் நுழைந்தான் சுரேஷ்.
காப்பிக்கு பாலை
காச்சி வைத்து விட்டு அனுவை குளிப்பாட்ட
ஜோதி தேடியபோது அனு சோபாவில்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஜானியும் அவள் பிஞ்சு கைகளில் சுகமாக
சிரைப்பட்டுக்கிடந்தது ,
.......................................................................................
விர்ரென்ற பேரொலியுடன்
ஆட்டோ வட்டமடித்து வீட்டுவாசலில் நின்றது. முன்னால் பைக்கில் வந்த கிஷ்ணா குழந்தை அனுவை வாங்கிக்கொண்டான
சுரேஷும் ஜோதியும்
உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டிர்க்குள் நுழைந்தனர்.
‘
சுரேஷா...வா.. ‘
வயது முதிர்ந்த
அம்மாதான் வரவேற்றார்.
‘
மாமி ..எப்டி இருக்கீங்க... ‘
‘
வாம்மா..வா....’
‘
சின்னகுட்டி எங்க.. ‘
‘
த்தோ இருக்காளே...’
‘
அனு ! ‘
‘
வாங்க.. ‘
அடுத்த அரைமணியில்
கிஷ்ணாவின் மனைவி கங்கா பில்டர் காபியுடன் உபசரித்தாள்.
அத்தனைபேரையும்
மாறிமாறிப் பார்த்து நினைவுக்கு கொண்டு வந்த அனு வீட்டின் பின்புரம் தனக்காக
காத்திருக்கும் புதிய நண்பனைக்காண ஆவலோடு ஓடினாள்.
கரடுமுரடான அந்த
கொல்லைபுரத்தில் செடிகளும் கொடிகளும் மண்டிக்கிடந்தது.. வாயிலின் ஓரத்தில்
வளர்ந்திருந்த கிளுவ மரத்தின் அடியில் அந்த வெளாட்டுக்குட்டி கயிற்றால்
கட்டப்பெற்று கொஞ்சம் கிளுவ இலைகள் உணவுக்காக போடப்பட்டிருந்தது. தன் நுனிப்பற்களால்
இலைகளை கடிப்பதை நிறுத்தி தலையை தூக்கி
தன்னை கூர்ந்து நோக்கும் சிறுமியை
நோட்டமிட்டது அந்த குட்டி ஆடு.. பளிச்சென்ற வெண்மையான உடலில் திட்டுதிட்டாக
கருமை படர்ந்திருந்த்து. ஜானியைப்போலவே துருதுருவென்ற பார்வை.. அனுவுக்கு அந்த
புதிய நண்பனை மிகவும் பிடித்து விட்டது. அனுவும் நட்பாகப்பார்த்து நட்பாக பேசி
அந்த குட்டியாட்டின் நெஞ்சுக்குள் மெல்ல மெல்ல
நுழைந்துவிட்டாள்.
சுரேஷும் ஜோதியும்
குளித்து உடைமாற்றி உணவருந்தியப்போது அந்த குடும்பத்தின் பல்வேறு நெடுநாளைய
விஷயங்கள் அலசப்பட்டன.
அதேசமயம் அனுவுக்கும்
ஆட்டுக்குட்டிக்கும் இடையே ஏற்பட்ட நட்பு மெல்ல மெல்ல இருகிற்று.
தமிழகத்தின் பிற
மாவட்டங்களைப்போல ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குலதெய்வ வழிபாட்டிடங்கள் ஊருக்கு
வெளியே எல்லையோரங்களில்
அமைந்திருக்கவில்லை.பிரமிப்பூட்டும் உயரங்களில் வண்ணம் பூசப்பட்ட சுடுமண்
சிற்பங்கள் கொடூரமானஆயுதங்களுடன் நின்றதில்லை. இத்தனைக்கும் தஞ்சைமாவட்டம்
முழுதுமே கலைநுணுக்கம் மிகுந்த கோயில்களைக் நிரம்பகொண்ட சரித்திர பூமிதான் . தெய்வ
வழிபாட்டிடங்களில் உயிர் வதை செய்கின்ற பழக்கமும் மேல்தட்டு மக்களிடையேயும்
நடுத்தர மக்களிடையேயும் பெரும்பாலும்
இருந்ததில்லை.மிகவும் நலிந்த பிரிவினிடையே மட்டும் ஆங்காங்கே காணப்பட்டது..
அன்நாட்களில் மூதாதையர்களின் நினைவாக நடப்படும்
நினைவுக்கற்கள் பெரும்பாலும் தங்கள தங்கள் வீடுகளுக்குப்பின்புறமே நடப்பட்டு காலம்
காலமாக குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றனர்..காலம் செல்லச்செல்ல அந்த
நடுகற்கள் சொறுகப்பட்ட இடங்கள் சிறு சிறு கோயில்களாக முளைத்தன..குடும்பங்களில்
ஏற்படுகின்ற அடுத்த கட்ட நகர்வுகள் அனைத்திற்கும் தங்கள் மூதாதையர்களே
முன்நின்று வழிகாட்டுவதாக அவர்கள்
நம்பினர். அவர்களுக்கு மிகவும் பிரியமான மீனையும் மாமிசத்தையும் படைத்து
கொண்டாடினர். மதுவையும் சுருட்டையும் கூட வழிபாட்டின்போது படையலிட்டு மகிழ்ந்தனர்.
இருந்த போதிலும் தென் மாவட்டங்களைப்போல உயிர் வதை பெரும்பாலும் இங்கு
ஏற்பட்டதில்லை.ஊடகங்களின் அசுர வளர்ச்சிக்குப்பிறகு நாடெங்கும் இதுபோன்ற உயிர்வதை கலாச்சாரங்கள்
கால் ஊன்றத் தொடங்கின.. அதன் வளர்ச்சிதான் இந்த உயிர் வதை.
சரியாக காலை
பதினோருமணியளவில் பத்து பதினைந்து பேரை சுமந்துகொண்டு அந்த மகேந்ரா வேன் திருப்புகலூரின் தெற்கே திரும்பி கரடுமுரடான
தார்ச்சாலையில் பயணித்து திருக்கண்ணபுரத்தை அடைந்தது.
சிறப்புமிக்க வைணவ
தலங்களில் ஒன்றான சௌரிராஜபெருமாள் திருக்கோயிலும் எதிரே விரிந்து கிடந்த
திருக்குளமும் ரம்மியமாக காட்சி அளித்தது. கோயிலைச்சுற்றி படர்ந்து கிடந்த
வீடுகளைக்கடந்து கிழக்கு மூலையில் ஒதுங்கி காணப்பட்ட அங்காளபரமேஸ்வரி ஆலயத்தை
அடைந்தபோது முன்னதாகவே மேலும் ஒரு மகேந்ரா வேன் இளைப்பாறுவதை சுரேஷ் பார்த்தான்.
அந்த வேனில் சம்பந்தி குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் நன்னிலத்திலிருந்து
வந்திருந்தார்கள். மாமியும் மைத்துனனும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்கள். இரண்டு
வேன்களில் வந்தவர்கள் ஒருவருக்கோருவர் கண்டு அளவளாவினர்.ஜோதியும் வாசுவும்
நெகிழ்வோடு பார்க்க அனு ஓடிபோய் பாட்டியோடு ஒட்டிக்கொண்டாள்.
இரண்டு
வேன்களிலிருந்தும் வந்தவர்கள் ஏரத்தாழ முப்பதுபேர்களுக்குள்
இருக்கக்கூடும்.ஒவ்வொருவரையும் தனித்தனியாக இன்முகத்துடன் வரவேற்றான் சுரேஷ்
.அடுத்து வழிபாட்டுக்குத்தேவையானவைகளை கவனிக்கத்தொடங்கினான். வேன்களிலிருந்த
வேண்டுதலுக்குத்தேவையான அத்தனை பொருள்களும் இறக்கப்பட்டன. அனுவுக்கு பிரியமான
குட்டி ஆடும் இறக்கப்பட்டது. குட்டி ஆட்டை கோவிலின் சுற்றுச்சுவர் அருகே ஒரு
மரத்தின் நிழலில் கட்டி இடைக்கால உணவாக கொஞ்சம் இலை தழைகளும் போடப்பட்டன. இரண்டு
குடும்பத்தினரும் தாங்கள் கொண்டுவந்த பழம் பூக்களை தட்டு தாம்பாளங்களில் அடுக்கி அன்னையின் சன்னதியில் பரப்பிவைத்தனர்.
திருப்புகலூரிலிருக்கும்
சுரேஷின் சிற்றப்பா செல்வம் வழிபாட்டுக்குத்தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே
செய்திருந்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்னால்
குறுகிய கொட்டகையில் வாசம் செய்த
அங்காளம்மை இப்போது சற்று விரிவான வளாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தாள்.
அம்மாவின் அருட்பார்வையால் திசையறியாமலிருந்த அவளது குழந்தைகள் இன்று தேசமெங்கும் கணிசமாக கால்பரப்பி
நிற்கிறார்கள்.அவர்களுடைய நினைவுகள் இப்போது அம்மாவை எண்ணிப்பார்க்கிறது.அதன்
விளைவாக அம்மாவின் ஆலயம் அவ்வப்போது மாற்றம் கொள்கிறது.
ஆலயத்துக்கு
சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு நிழல் தரும் மரங்கள் வைக்கப்பட்டிருந்தது. மையத்தில்
எழப்பப் பெற்ற கருவரையில் வினாயகனும் முருகனும் இருபுறமிருக்க அங்காள பரமேஸ்வரி
அலங்காரமாக அமர்ந்திருந்தாள். அவளைக்கடந்து சுற்றுச்சுவரையொட்டி வீரன் பெரியாச்சி முனி என்ற காவல் தெய்வங்களும் தனித்தனியே நின்றிருந்தன.
கருவரை கோபுரம் வண்ணப்பூச்சு செய்து புதுப்பிக்கப்பட்டிருந்தது.
வழுவழுப்பான ஓடுகளைப் பரப்பி தரைதளம் அமைத்திருந்தார்கள் தேடிவரும் பக்தர்களின் தாகம் தீர்க்க மேல்நிலை
நீர்தேக்கம் எழுப்பி குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்த்து.
புதிதாக கோயிலுக்கு வெளியே மாமிசப் படைப்பிற்கென சிமெண்ட் கூரை வேயப்பெற்ற
கொட்டகையையும் ஏற்படுத்தியிருந்தார்கள்.
வழக்கமாக நிகழும்
ஒருவேளை பூசைக்குப்பிறகு பெரும்பாலும் கோயில் நடை சாற்றப்பட்டே இருக்கும்.மற்ற
நேரங்களில் பூசாரி பாலகுரு தன் வயிற்றை கழுவ வயல் வேலைகளுக்கு போவது
வ.ழக்கம்.இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சுரேஷின் சித்தப்பா செல்வம்
பூசாரியைத்தேடி வழிபாட்டுக்கு சொல்லியிருந்தார்.கிடா வெட்டுவதற்கும் தனியாக ஒரு
ஆளை பேசியிருந்தார்.
கோயில் பூசாரி பாலகுரு குடம்குடமாக தண்ணீர் விட்டு தெய்வங்களை நீராட்ட
தொடங்கியிருந்தான். பால் பழ திரவிய
குளியல்களை முடித்து சுரேஷ் வாங்கி வந்த புத்தாடைகளை குலசாமிகள் அணிந்து
கொண்டன. பாலகுரு மலர்மாலைகளை சாத்தி சர்க்கரை பொங்கலை படயலிட்டான். கூடுதலாக
ஓரத்தில் நின்றிருக்கும் காவல்தெய்வங்களுக்கு தனியே தயாரிக்கப்பட்ட மாமிச உணவுகளையும் படைத்தான். . வாசம் மிக்க
சாம்ராணி புகை சூழ தீப ஆராதனையை அத்தனை
பேரும் பரவசத்துடன் கண்டு களித்தனர்.வந்திருக்கும் முப்பதுபேருக்கும்
வேண்டுதலுக்குப்பின் நடக்க இருக்கும் மாமிச விருந்துக்கான ஏற்பாடுகளைச்செய்ய
திட்டச்சேரியிலிருந்து நல்லதம்பி வந்திருந்தான். கோயில் சுற்றுச்சுவருக்கு அருகே
ஆயுத எழுத்தைப்போல கற்களை அடுக்கி தீ
மூட்டத் துவங்கியிருந்தான்.
மொட்டையடிக்க பேசப்பட்ட
முருகேசன் சைக்கிளில் வந்து இறங்க
ஆட்டுக்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த அனுவைத்தூக்கி வந்தான் மாமன் வாசு.
தனித்தனியே வட்டமிட்டு கதை பேசிய இரண்டு குடும்பத்தினரும் பரபரப்பாயினர்.
முருகேசனின் முரட்டுத் தோற்றமும் கையிலிருந்த கத்தியும் அனுவுக்கு அச்சத்தை
ஏற்படுத்தியது. சிறியவர்களும் பெரியவர்களும் நெருக்கமாக சூழ வாசுவின் பிடியில் அனு
அகப்பட்டாள். கத்தியில் ப்ளேடை மாற்றிய முருகேசன்
லாவகமாக அனுவின் முடியை வழித்தெடுத்தான்.
செறுமிச்செறுமி அழுத அனுவை நீராட்டி பட்டுப்பாவடை சட்டையை அணிவித்தாள்
ஜோதி.வழவழப்பான சிவந்த தலை முழுதும் குளுர்ச்சிக்கு மணம்கமழும் சந்தனம்
பூசப்பட்டது. இன்னும் அனுவின் அழுகை நின்றபாடில்லை. அழுகையை நிறுத்த அவளுக்குப்பரியமான குட்டி
ஆட்டிடம் கொண்டு போனான் வாசு. அடுத்த கணம்
அனுவின் அழுகை தடம் மாறி இயல்பு நிலைக்கு வந்தது. ஆட்டின் கழுத்தை இழுத்து இறுக்கி முத்மிட்டாள்
.மொட்டயடிக்கப்பட்ட அனுவை அறியாது ஆடு மிரண்டது.
அனுதாண்டா தங்கம்.!...
ஆட்டுக்கு தன்னை புரியவைக்க மெல் மெல்ல முயற்சித்தாள் அனு.
சூரியன் மேல் திசையில் சரியத்தொடங்கினான்.மணி ஒன்றைத் தாண்டிற்று.
காதுகுத்தும் நிகழ்ச்சிக்கு வரவழிக்கப்பட்ட பொற்கொல்லன் சண்முகம் கைப்பையுடன்
காத்திருந்தான்.
ஆடு அறுப்பதற்கு சொல்லப்பட்ட உள்ளூர்காரன் வந்து சேரவில்லை.அவனை எதிர்பார்த்து
பயனில்லை என்பதை உணர்ந்த சிற்றப்பா செல்வம் பக்கத்திலிருக்கும் திருமருகல்லிருந்து
யாரோ ஒருவனை டிவிஎஸ் 50 யில் கொண்டுவந்தார்.
வந்து இறங்கியதுமே கத்திகளை எடுத்து கருங்கற் தரைகளில் தீட்டத்
துவங்கிவிட்டான்.ஆட்டுக்குட்டியின் அரவணைப்பில் ஒருவாறு அழுகையை நிறுத்திய அனு
அவனையும் அவனுடைய கத்திகளையும் அச்சத்தோடு பார்த்தாள்.
நேரம் நகருவதை உணர்ந்த வாசு அனுவின் கைகளை விலக்கி தூக்க முயர்ச்சித்தான்.
ஆனால் அனுவின் பிடி தளருவதற்கு மாறாக இறுகிற்று.
‘
குழந்தையை தூக்குங்க !.. தூக்குங்க..‘
ஆடு அறுக்க கத்தியோடு நெருங்கினான் புதிதாக வந்தவன்.
‘ என்ன
செய்யப் போரீங்க... ‘
நடக்கப்போவது அனுவுக்கு மெல்ல புரிந்தது .
அனு உயர்ந்த குரலெழுப்பி அழத் தொடங்கிவிட்டாள்.
‘
வெட்டாதீங்க...ப்ளீஸ்.. ‘
‘ மாமா
வெட்டப்போராங்க மாமா...சொல்லுங்க மாமா.. ‘
அனுவின் அழுகுரலைக்கேட்டு ஜோதியும் சுரேஷும் ஓடிவந்தார்கள்.
‘
கொழந்தைய தூக்குங்க.. ‘
ஆடு அறுப்பவன் தன் பணியை முடிக்க
முயர்ச்சித்தான்.
‘ அப்பா
! ஆட்டு குட்டிய வெட்ட சொல்லாதீங்ப்பா..பாவம்பா..
அம்மா சொல்லுங்கம்மா..’
‘
பாட்டி!...பாட்டி..நீங்க சொல்லுங்க. ‘
குட்டியின் கழுத்தை இறுக பற்றியவாறு ஒவ்வொருவரையும் உதவிக்கு அழைத்தாள் அந்த சிறுமி.
அனு விதைத்த இரக்கம் அந்த கூட்டத்தின் ஒருபகுதியில் மெல்ல படர்ந்தது. அதே
சமயம் -
அவள் காட்டிய பிடிவாதம் சுரேஷை நிலை குலையச்செய்தது.
‘ சரி.
வேண்டாம்மா.. ‘
ஒரு முடிவுக்கு வந்தான் சுரேஷ்.
‘
கொழந்தைக்கு என்னங்க தெரியும் ‘
கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுப்பிற்று.
‘வாசு..குட்டிய
கோயில் நிர்வாகத்துகிட்ட விட்டுடு....காது குத்ரத வேலைய பாருங்க..சாப்பாட்ட
சித்தப்பா பாத்துகுவார். ‘
குழுமியவர்களிடையே ஏற்பட்ட சிறு சலசலப்பை தவிற்து அடுத்த வேலையை கவனிக்க துவங்கினான் சுரேஷ்
சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்பட்டதை மீறி குழந்தையின் குரலுக்கு முதன் முதலாக கட்டுப்பட்டான் சுரேஷ்.
அது அந்த குட்டி ஆட்டின் விதியை நகர்த்திப்போட்டது.
விதி செய்வதறியாது எட்டி நின்று வேடிக்கை பார்த்தது.
கல்கி 29 07 2012
இடுகை 0095
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !