திங்கள், ஜூன் 09, 2014

மரணத்தை வென்ற மகன் !

                                             வில்லவன் கோதை
Kannadasan
தொள்ளாயிரத்து ஐம்பத்தியேழு என்று கருதுகிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். தஞ்சை மாவட்டத்தின் ஒரு மூலையிலிருந்து தற்காலிகமாக சென்னைநகர பள்ளியொன்றுக்கு இடம் மாறுகிறேன்.
நகருக்குள் நுழையும்போதே பரந்துவிரிந்து கிடந்த மதராஸ் பட்டணம் (அப்போது அதுதான் பெயர் ) என் இமைகளை உயர்த்துகிறது. நகரின் நெருக்கமான வீதிகளில் நவீன வாழ்க்கை நான் அதுவரை பார்த்திராதது
ஒருசமயம் மதராஸ் நகரின் கெல்லீஸ் பகுதியிலிருந்த உமா திரையரங்கு என்வழியில் குறுக்கிடுகிறது. அதன் முகப்பில் வைக்கப் பெற்றிருந்த கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் வானுயர கட்டவுட் எனக்குள் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அது இப்போது போலல்லாமல் முழுவதும் ஓவியர்களால் எழுதப்பெற்றிருந்தது. அதுபோன்ற கட்டவுட்களை அப்போதெல்லாம் நான் பார்த்ததில்லை.
ஏறத்தாழ முப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்னால் மறைந்து இன்றும் பேசப்படுகிற கவிஞர் கண்ணதாசனை முதன்முதலாக அன்றுதான் கேள்விப்படுகிறேன்.
நான் நிரந்தரமானவன் எனக்கு மரணமில்லை ! 
என்று பாடிய அந்த கவிஞனது கூற்று இன்று உண்மையாகியிருக்கிறது.
கவிஞர் அப்போதே திரையுலகின் பல்வேறு சரிவுகளைக்கடந்து சொந்தமாக திரைப்படம் எடுக்கும் நிலையை எட்டியிருந்தார் .அடுத்த சில நாட்களில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் திராவிடஇயக்க திரளான கூட்டமொன்றில் கவிஞர் பேசுகிறார். அப்போது திமுகாவின் முக்கியத் தலைவர்களுள் அவர் ஒருவராயிருந்தார்
“இன்று சொல்கிறேன். எழுதிவைத்துக்கொள்ளுங்கள். இந்த கண்ணதாசன் மாண்டுபோனால் அவனுடைய உடல் கழகத்தின் கருப்பு சிகப்பு துணிகளால் போர்த்தப்பட்டு இறுதி பயணத்தை மேற்கொள்ளும்.. அது நிச்சயம் ! ’’
மூன்று மணி நேரத்துக்கு மேலாக நகைச்சுவை ததும்ப பேசுகிறார் கவிஞர் .நான் கேட்ட முதல் அரசியல் சொற்பொழிவும் அதுதான். அதன் பெரும்பகுதி அப்போது எனக்கு அவ்ளவாக விளங்காமற் போனாலும் அவருடைய நகைச்சுவையான பேச்சு என்னைப்பெரிதும் கவர்ந்தது. அவரது குரலும் பேச்சு நடையும் திராவிட இயக்க பேச்சாளர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்ததை பின்னால் உணர்ந்தேன்.
அந்த ஆவேசமான சூளுரை அடுத்த ஐந்தாண்டுகளில் அவசியமற்றுப்போயிற்று. கவிஞரும் அன்று பேசப்பட்ட கண்ணதாசனை மறந்து போனார். தமிழகமக்களுக்கும் அந்த சூளுரை அவ்ளவாக நினைவில்லாமற் போயிற்று.
அவர் திமுகாவை விட்டு வெளியேறியிருந்தார்!!!
இருந்தாலும் பின்நாளில் புரட்சி நடிகரின் பேரன்பால் தமிழக அரசின் உயரிய அரசவைக்கவிஞராகி மரணத்தின்போது அவரது பூதஉடல் தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு அரசு மரியாதை பெற்றது.
செட்டிநாட்டு மண்ணில் தொள்ளாயிரத்து இருபத்தேழில் பிறந்த முத்தையா எட்டாம்வகுப்பு வரை மட்டுமே படித்தவர். நெற்றியிலே பட்டையோடும் கழுத்திலே கொட்டையோடும் உலா வந்த இளைஞர் முத்தையா படித்தது போதுமென்று பட்டணத்துக்கு புறப்படுகிறார். இளமையிலேயே கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட முத்தையா விரும்பியது போலவே பத்திரிக்கைத்துறை அவருக்கு அடைக்கலமளிக்கிறது.
அன்நாளில் பேச்சையும் எழுத்தையுமே பேராயுதமாக கொண்டு தமிழகத்தில் எழுச்சியுற்ற திராவிட இயக்கம் இளைஞர் முத்தையாவை ஈர்க்கிறது.தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பதில் அண்ணா தலைமையில் திராவிடமுன்னேற்ற கழகம் உருவெடுத்தபோது இளைஞர் முத்தையா தன்னையும் இணைத்துக்கொள்கிறார்.
மொழிமீது ஈர்ப்புகொண்டு தலைவர்களும் தொண்டர்களும் சீனிவாசன் , சுப்ரமணியன் என்ற தங்கள் பெயர்களையெல்லாம் தனித்தமிழ்படுத்திக்கொண்ட காலம். ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இளைஞர் முத்தையாவும் கண்ணதாசனாகிறார். பகவான் கண்ணனைப்போல முத்தையாவும் அவர் குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக பிறந்ததாலோ என்னவோ அவர் கண்ணனுக்கு தாசனாகியிருக்கக்கூடும்.
ஆரம்ப காலங்களில் மதராஸ் பட்டணத்தில் அவர் பட்ட துயரங்கள் இந்தத் தலைமுறைக்கு கிட்டாதவை. கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் சொல்லொண்ணா துயரங்களிலும் வாழ்க்கையின் வெவ்வேறு ரசனைகளை விடாது அனுபவித்தவர் கவிஞர். அவருக்கிருந்த அசாத்திய கவித்திறன் தமிழ்த்திரையுலகுக்கு அன்று விளங்காமற் போயிற்று.
“நீ பாட்டெழுதியது போதும் . கதைவசனத்தை எழுதி பொளப்ப பாரு ! “
தமிழ்த்திரையுலகம் அவர்க்கு இப்படித்தான் வழிகாட்டிற்று. பாடல் எழுத படிபடியாய் ஏறிய கவிஞருக்கு திரையுலகம் தந்த வாய்ப்பு வசனம் எழுதத்தான். அவர் வசனம் எழுதிய இல்லறஜோதி , மதுரைவீரன் போன்ற பல்வேறுபடங்கள் தொடர்ந்து வெற்றியை ஈட்டுகிறது. இருந்தாலும் கவிஞருக்கு பாடல்கள்தான் லட்சியமாக இருந்தது.
அப்போதெல்லாம் வெற்றி பெற்றவன் பின்னாலேயே தமிழ்த்திரையுலகம் ஓடிக்கொண்டிருந்தது . “பா” என்ற எழுத்தில் ஒரு படம் வெற்றி பெற்றபோது அடுத்த பலமான அடிகள் வாங்கும்வரை அந்த ‘ பா ’ தான் அடுத்தடுத்த தமிழ்ப்படங்களின் முதலெழுத்து.திறமைக்கு குறைவில்லையென்றாலும் அடுத்தவன் எவனும் அத்தனை எளிதாக கோடம்பாக்கத்தில் காலடி வைக்கமுடியாது.
இத்தனைக்கும் கவிஞர் தளர்ந்து போய்விடவில்லை . தானே ஒரு படத்தை தயாரித்து அத்தனை பாட்டையும் தானே எழுதி தன் கவித்திறனை இந்த திரையுலகுக்கு எப்படியாவது பரைசாற்ற விரும்பினார் கவிஞர்.
தொள்ளாயிரத்து ஐம்பத்தியேழில் பாட்டுக்கொருபடம் என்ற பெயரைப்பெற்ற அந்த திரைப்படம் மாலையிட்ட மங்கை என்ற பெயரில் வெளியாயிற்று. மறக்கமுடியாத ஐந்து பாடல்களையும் கவிஞரே எழுதியிருந்தார். அப்போதுதான் கவிஞரின் கவித்திறன் இந்த தமிழ்த்திரையுலகிற்கு புரிந்தது. அன்று அவரை வியப்போடு திரும்பிப்பார்த்த கோடம்பாக்கம் கடைசிவரை அவர் காலடியில் இருந்து எழவில்லை.அடுத்த கவிஞர் அந்த படியேற வெகு காலமாயிற்று. அப்படி வேறொருவர் எழுத நேர்ந்த பாடல்களும் கண்ணதாசன் பாடல்கள் என்றே பேசப்பட்டன.
அந்த திரைப்படத்தில் ஒலித்த டி . ஆர் . மகாலிங்கத்தின்
திராவிடப் பொன்னாடே . . .
என்ற பாடல் திமுகாவினரை இன்றும் உறக்கத்தில் தட்டி எழுப்பத்தக்கது.
அச்சம் என்பது மடமையடா . . . .
என்ற கவிஞரின் இன்னொருபாடல் இன்றும் தமிழின மேடைகளில் ஒலிப்பதைக் கேட்டிடமுடியும்.
அன்நாளைய திமுகாவில் முன்னணியிலிருந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தனர். கட்சியின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்ல இரவு நேரங்களில் அரசியல் மேடைகளையும் பகற்பொழுதுகளில் பத்திரிக்கைகளையுமே திமுகா நம்பியிருந்தது. கவிஞரும் தம் அரசியல் கருத்துகளை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க தமது தென்றல் , சண்டமாருதம் இதழ்களை பயன்படுத்தினார். பொறிபறக்கும் அரசியல் கட்டுரைகளும் நெஞ்சில் நிற்கும் கவிதைகளும் தென்றலில் தொடர்ந்து இடம் பெற்றன.
புலம் பெயர்ந்த தமிழர்கள்பற்றி அவர் எழுதிய
பெற்றதாய் நாட்டைவிட்டு பிற நாட்டுக்கேன் போனாய் தமிழா
என்ற நெடுங்கவிதை இன்றும் மறக்கத்தகுந்ததல்ல.
தன்னுடைய இலக்கியதாகத்துக்கு கலைஞரின் முத்தாரத்தைப்போல முல்லை என்ற திங்களிதழையும் கவிஞர் வெளியிட்டார். அந்த காலகட்டத்தில்தான் கவிஞரின் …
சிவகங்கைச்சீமை
கவலையில்லாத மனிதன்
திரைப்படங்கள் வெளியாகி கவிஞரின் வரலாற்றில் முத்திரை பதித்தன.
மேலும் மேலும் உயரே பறக்கநினைக்கும் கவிஞருக்கு திமுகா அத்தனை சாத்தியப்படவில்லை. அவர் எதிர்பார்த்த முக்கியத்துவம் திமுகாவில் கிடைக்காமற்போயிற்று. அன்று திமுகாவில் சொல்லின் செல்வர் என்று பேசப்பட்ட ஈ.வெ கி சம்பத் ஏற்படுத்திய பிளவு கவிஞர் கழகத்தைவிட்டு வெளியேற உதவுகிறது.
“பகுத்தறிவு பேசும் இயக்கத்தில் ஒரு யோக்கியனைக்கூட இதுவரை நான் பார்தத்தில்லை”
கழகத்தில் இருந்து வெளியேறிய கவிஞரின் சலிப்பான வார்த்தைகள் இவை.
காலப்போக்கில் பத்தாண்டுகளுக்குமேலாக கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் பேரியக்கத்திலேயே ஈவெகி சம்பத்தோடு சேர்ந்து கரைகிறார் கவிஞர். சாகித்யாகாதமி விருது இப்போது அவரது சேரமான் காதலி என்ற நூலுக்காக தேடிவருகிறது.தேசிய சிந்தனைகளை விதைத்த இரத்த திலகம் ,கருப்புப்பணம் திரைப்படங்களை தருகிறார் கவிஞர்.
புரட்சி நடிகர் எம்ஜியார் ஆட்சியில் அரசவைக்கவிஞராகிறார். எண்பத்திஒன்றில் சிகாகோ நகரில் நிகழ்ந்த தமிழர் மாநாட்டில் கவிஞரின் உயிர் பிரிகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபுக்கவிதைகளை சாமான்னிய மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் மகாகவி பாரதிக்கு முக்கிய இடமுண்டு. அவரது படைப்புகளின் பெரும்பகுதி தேசவிடுதலையை முன்னிறுத்தியே பாடப்பட்டவை. அவரைத்தொடர்ந்து எழுதிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் படைப்புகளில் சமூகசிந்தனையும் மொழியின் சிறப்புமே மையம் கொண்டிருந்தன. பாரதிதாசனுக்கிருந்த கவித்திறன் அவரைத் தொடர்ந்து தமிழ்க்கவியுலகில் ஒரு கவிப்பரம்பரையே உருவாகக் காரணமாயிற்று..அந்த பரம்பரையில் காலடிவைத்து பல்வேறு பரம்பரைகளுக்கு பயணித்தவர் கவிஞர் கண்ணதாசன். எந்த குறிக்கோளிலும் நிலையின்றி மனம்போன போக்கில் சிறகடித்துப் பறந்த வானம்பாடி ..
“போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாறி தூற்றுவோர் தூற்றட்டும் . .” என்று தன் விரிந்த பயணத்துக்கு பின்னாளில் விளக்கம் சொன்னவர் கவிஞர்
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமென்பதற்கு தன் தந்தையும் எப்படியெல்லாம் வாழக்கூடதென்பதற்கு தானும் ஒரு சிறந்த உதாரணமென்கிறார் கவிஞர்.
ஏறத்தாழ பத்துவருடங்களுக்கு மேலாகபகுத்தறிவு வாதியாக வலம் வந்த கவிஞர் அவர் வளர்த்த இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது அவர் அங்கே இல்லாமற் போனார்.. அதன்பிறகு கவிஞரின் பிற்பகுதி வாழ்க்கை அத்தனை சுவாரசியமற்று போயிற்று. மனக்கிளர்ச்சிகளுக்கேற்ப தவறுகளும் தடுமாற்றங்களும் இயல்பாக நிறைந்த கவிஞரை இன்றளவும் தூக்கி நிறுத்துவது அவரது திரையிசைபாடல்கள்தாம்..
ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளையெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள்.கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.
வாசிப்பு திறன் மங்கிப்போன இன்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.
மிகமிக எளிமையாக சொல்லப்பட்ட ஒரு கருத்து மக்களிடையே முக்கித்துவம் பெற்று இன்றும் பேசப்படுவது அவரது பாடல்கள் மூலமே. இந்தப்பாடல்கள் அனைத்தும் இந்த தலைமுறையிலும் உலாவர அதற்கு தரப்பட்ட இசை வடிவமும் ஒரு தலையாய காரணம்.
பல்வேறு வாழ்வியலின் தத்துவங்களை உள்ளடக்கிய இந்த பாடல்கள் அவரது மரபுக்கவிதைகளைப்போல திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. இசையொலிக்காக அவ்வப்போது கவிஞர் மனதில் தோன்றி கொடுக்கின்ற காசுக்கு பிறந்த பாடல்கள். கவிஞரின் திரைப்பாடல்களில் அவர் சொன்ன உவமைகள் பல பாடல்களில் ஒட்டாமற் போனதுண்டு. அவையெல்லாம் இசைக்கேற்ப எழுதப்பட்டதே தலையாய காரணம்.
அவர் பாடல்களுக்கான பல்லவிகள் மனதிற் தோன்றுதற்கு அவரது புறச்சூழல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. ஈவெகி சம்பத் கட்சியைவிட்டு வெளியேறியபோது எங்கிருந்தாலும் வாழ்க என்ற அண்ணாவின் வரிகள் நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படத்தில் எங்கிருந்தாலும் வாழ்க என்ற பல்லவியை தருகிறது.
அதைப்போலவே மனிதன் மாறிவிட்டான் என்ற பாடலும் ஏனோ மனிதன் மாறவில்லை என்ற பாடலும் கவிஞரின் அரசியலில் அவருக்கேற்பட்ட தடுமாற்றங்கள் தந்தவை.
பழந்தமிழ் இலக்கியங்களின் வரிகளையும் புராண இதிகாசங்களின் புகழ் மிக்க சொற்களையும் தன் பாடல்களில் சேர்த்துக்கொண்டவர் கவிஞர். இதை பெரும் குறையாக பேசியவர்கள் உண்டு
போனால் போகட்டும் போடா. . . .என்று தொடர்ந்து போனவர் கவிஞர்..
கவிஞரைப்போல் ஒருவரை போற்றி கொண்டாடியவர் இல்லை. அவரையே இழித்துப்பேசியவர் அவரைத்தவிற வேறொருவர் இருந்திருக்கமுடியாது. கவிஞரின் கலம்பகத்தில் காமராஜரும் கலைஞரும் முக்கியமானவர்கள். அந்த வரிசையில் பண்டித நேருவிற்கும் இடமுண்டு.
அவர்தான் கவிஞர் கண்ணதாசன்.
அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்.அவரது ஆயிரம் கருத்துக்களுக்கு மாறுபட்டாலும் அவரை மறக்கமுடியாத ரசிகன். அவரது பாடல்களில் சிறந்த பத்துபாடல்களை தேர்தெடுக்க முயன்றால் எத்தனையோ பாடல்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.
கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல.
கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.
 நன்றி !    வல்லமை இணைய இதழ்