வல்லமைக்
கவிஞர்!…
பெருவை பார்த்தசாரதி
இப்பொழுதெல்லாம், எந்த
ஒரு அழைப்பிதழையும் கொடுப்பதற்கும், அவ்வளவாக யாரும் நேரில் வருவதில்லை.
அலைபேசியில் அழைப்பிதழின் நகல் வந்தவுடன், என்ன சார்?.. அழைப்பிதழ்
வந்ததா!..கண்டிப்பாக குடும்பத்துடன் வந்துவிடுங்கள்!.. என்கிற அன்பான
வேண்டுகோளுடன் முடிந்துவிடுகிறது.
இப்படித்தான், கவிஞர்
ரவிச்சந்திரன் எழுதி வெளியிடும் “காதல் பொதுமறை” என்கிற நூலும், இந்த நூலை அது
வெளிவருவதற்கு முன்பே ஆய்வு செய்து இரண்டு ஆய்வு நூல்களாக வெளியிடுபவர் முனைவர்
வைகை மலர் அவர்களும் என்பதை அலைபேசியில் வந்த அழைப்பிதழ் மூலம் அறிந்தேன்.
“நூல் வெளியீட்டு விழா”
அழைப்பிதழை பார்த்தவுடன், ஒரு மகிழ்ச்சியான விஷயம், வல்லமை மின் இதழில்
எழுதிவருகின்ற பலருடைய பெயருக்கு முன்னால், “வல்லமை” என்கிற அடைமொழியோடு
அச்சடிக்கப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை மேடைக்கு அழைக்கும்போதெல்லாம்,
அரங்கமெங்கும் “வல்லமை” என்கிற வார்த்தை எதிரொலித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
விழா முடிந்தவுடன், புதிதாக வந்திருந்தவர்கள் சிலர், என்னிடம் சிலர் வல்லமை
என்பதற்கு விளக்கம் கேட்க, அவர்களுக்கு இந்த மின் இதழின் சிறப்பை நான்
எடுத்துரைத்தேன்.
தொகுப்புரை வழங்கிய தொகுப்புரை வழங்கிய கவிஞர் ஜோதிபாசு அவர்கள்,
விழாவின் முதல் பேச்சாளராக, “வல்லமை தமிழ்தேனி” என்று அழைக்க, அவரும்,
மிகச் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார், அடுத்து வந்தது “வல்லமை
புகழ் – பேராசிரியர் நாகராஜன்”, வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில்
நகைச்சுவையோடு கூடிய பேச்சு, அரங்கத்தில் சிரிப்பொலி, அதற்கடுத்து “வல்லமை
வில்லவன் கோதை”, நிறைய குறிப்புகளுடன் சற்று அதிக நேரம் கவிஞரின் நூல் பற்றிப்
பேசினார், அடுத்து நட்சத்திரப் பேச்சாளர் என்று அழைக்க, பல வித சிரமங்களையும்
பாராமல் பெங்களூருவிலிருந்து வந்த “வல்லமைப் பேச்சாளர் ஷைலஜா”, நூல்
பற்றிய மதிப்பீட்டை வாசித்தார். கடைசியாகப் பேச வந்தவர் “வல்லமை ஆதிரா
முல்லை” மகிழ்ச்சியாகப் பேசினார்.
இடையே அடியேனுக்கும்
ஒரு சிறுபங்கு, நான் கவிஞர் ரவிச்சந்திரனோடு நெருங்கிப் பழகிய அனுபவங்களை மட்டும்
விழாவில் பேசினேன். தவிர்க்க முடியாத காரணங்களால், வல்லமை நிறுவனர் திரு அண்ணா
கண்ணன் அவர்களும், தலைமை ஆசிரியர் திருமதி பவளசங்கரியும் விழாவிற்கு வரமுடியவில்லை
என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த விழாவில் இரண்டு
சிறப்பம்சத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஒன்று..
ஒரு நூல் வெளிவருவதற்கு
முன்பே, அதைப் பற்றிய இரண்டு ஆய்வு நூல்கள் சேர்ந்து வெளிவருவது இதுவே முதல் முறை.
இந்த இரண்டு ஆய்வு நூல்களையும் முனைவர் வைகை மலர் அவர்கள் எழுதி
வெளியிட்டிருந்தார்கள்.
இன்னொன்று…
ஆங்கில நூல்களுக்கு
இணையாக, தரமான முறையில் அச்சிடப்பட்டு வெளிவரும் காதல் பற்றிய தமிழ் நூல் என்பதை
தலைமை உரை ஆற்றிய திரு ஜானகிராமன் தெளிவுபடுத்தினார்.
விழாவின் நிறைவாக
ஏற்புரை ஆற்ரிய காவிரிமைந்தன் அவர்கள், “தனக்கு ஏற்பட்ட சொல்லோட்டம்தான்” இந்த
நூலை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டார்.
இதற்கு முன் நான்
குறிப்பிட்டிருந்த கவிஞர் ரவிச்சந்திரன்?..யார் அவர் என்று நினைக்கின்ற வேளையில்,
கவிஞர் காவிரிமைந்தனின் இயற்பெயர் ‘ரவிச்சந்திரன்’ என்பதை அறியாதவர்
அறிந்துகொள்ளலாமே!.
அழைப்பிதழில்
அச்சிட்டிருந்த அனைத்து நபர்களும் அருமையாக கவிஞரின் இதர நூல்கள் பற்றியும், அயல்
நாட்டில் அவர் ஆற்றிவரும் பணிகள் பற்றியும், கவிஞரைப் பற்றிய சொந்தக் கருத்துக்களையும்
மேடையிலே நயம்பட எடுத்துரைத்தார்கள்.
இவ்விழாவில் புலவர்
ஆறுமுகம் பேசுகையில் ஒரு முத்தான கருத்தைப் பலர் முன்னிலையிலும் வைத்ததை நான்
மிகவும் ரசித்தேன். அதாவது நாம் எந்த விழாவைக்கொண்டாடினாலும், அதில்
இடம்பெற்றிருக்கக்கூடிய நாயகனை மட்டுமே புகழுகிறோமே தவிர, இச்சாதனையின் பின்னால்
இருக்கக்கூடிய, அவருக்கு உறுதுணையாய் இருந்த அவரின் மனைவியைப் பற்றி ஒரு வரி கூடச்
சொல்லுவதில்லை என்று சொன்னதோடு, கவிஞர் குடும்பத்தினர் அனைவரையும் மேடைக்கு
அழைத்துப் பாராட்டினார்.
நூல் வெளியீட்டு
விழாவில் பேசிய அனைவரும், மிகச் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டாலும்,
மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய விழா, இரவு 10 மணி வரையிலும் சுறுசுறுப்பாக இயங்கி,
பூரி, ஊத்தப்பம், கிச்சடி, இனிப்பு என்று தட்புடலாக இரவு விருந்து நடந்து
முடிந்தது.
தற்போது கவிஞர்
காவிரிமைந்தன் வல்லமையோடு இணைந்து புதிய எழுத்தாளர்களையும், புதிய போட்டிகளையும்
நடத்தி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளைகுடா நாடுகளிலும் வல்லமையின் புகழைப்
பரப்பிவருகிறார்.
தற்போது, சென்னையில்
நடந்த தனது சொந்த நூல் வெளியீட்டு விழாவிலும், வல்லமை அன்பர்களுக்கு
வாய்ப்பளித்தற்கு, அனைவரும் வல்லமையின் மடலாடலில் நன்றி
தெரிவித்திருக்கிறார்கள் என்பது, இங்கே குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில்,
வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர், கண்ணதாசன் தமிழ்சங்கம் போன்ற வற்றின் மூலம்
தமிழர்களை ஒன்றிணைத்து, பல விழாக்களை நடத்திவருவதன் மூலம் தமிழர்களையெல்லாம்
ஒன்றிணைத்து, ஊக்குவித்து வருவது, அங்கே பணிபுரியும் தமிழ் ஆர்வலர்களுக்கு
நன்றாகத் தெரியும்.
தற்போது, தனது
தமிழ்பணியில் சிறிதளவை வல்லமையோடு இணைத்துக் கொண்ட கவிஞர் காவிரிமைந்தன் எத்துணையோ
பட்டம் பெற்றிருந்தாலும், இன்றிலிருந்து, தலைப்புக்கு ஏற்றவாறு, அவரை…
“வல்லமைக் கவிஞர்”
என்று நாம்
அழைத்தாலென்ன!..
நன்றி வல்லமை இணைய இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !