ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

பொறியில் சிக்கிய மூன்று எலிகள் !

பாண்டியன்ஜி
இந்த தேசத்தில் தூக்கு தண்டனை அறவே ஒழிக்கப்படவில்லையென்றாலும் பிற தேசங்களைப்போல எவரையும் அடிக்கடி தூக்கிலிடுவதை வழக்கமாக கொண்டிருக்கவில்லை. இம்மண்ணில் ஏறக்குறைய 70 விழுக்காடுகளுக்கு மேலானவர்கள் மரணதண்டனைக்கு எதிரான கருத்து கொண்டவர்கள்தாம்
.1995ல் ஒருமுறை தூக்கு தண்டனையை பிரயோகித்த அரசு அதன்பின் 2004 ல்தான் மறுபடி கையில் எடுத்திருக்கிறது.அதிலும் பெரும்பாலான கருணை மனுக்களை ஏற்று பல்வேறு தூக்கு தண்டனைகளை நிராகரித்திருக்கிறது
.வேலூர் மத்திய சிறையில் ஆங்கிலேயர் காலத்தில் நிருத்தப்பட்ட தூக்குமேடை இன்று செயலற்று புதராக மண்டிக்கிடக்கிறது. தற்போதய தேவைக்கு சீர்செய்ய முனைந்தபோது எந்த ஒப்பந்தகாரரும் முன்வரவில்லை என்ற தகவல் இந்த மக்களின் மனநிலையை ஒருவாறு உணர்த்தக்கூடியவை என்று கருதுகிறேன்.
குற்றவாளிகள் ஒருவேளை தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடும்.ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை முக்கிய மந்திரமாக கொண்டது இந்த தேசம் 
உலகமே நேசிக்கிற உத்தமர் காந்தி பிறந்த பூமியல்லவா.கத்தியின்றி ரத்தமின்றி ஒரு ஆயுதத்தை கண்டறிந்தவர் அல்லவா.
இந்த மண்ணுலகில் மனிதனாய் தோன்றுவது ஒரு தவம்
பிறந்த ஒவ்வொருஉயிரும் எப்போதோ ஒருமுறை இந்த கூட்டைவிட்டு பறக்கத்தான் போகிறது.
அதை இன்னொரு உயிரோ அல்லது உயிர்களின் கூட்டமைப்போ ஞாய அனியாய கூற்றுகளை முன்வைத்து விடிவிப்பது....இன்னும் விவாதிக்க வேண்டியவை.
அவன் பயங்கரவாதம் செய்துவிட்டான் !
அவனைப்பொருத்தவரை பயங்கரவாதமே பயங்கரவாதத்தை தூண்டிற்று
கொலைக்கு கொலையைப் போல !  பழிக்குப்பழியைப்போல.
அவன் அந்த காரியத்தை செய்ய இந்த சமூகமோ இந்த சமூகத்தின் தனிநபரோ ஒரு காரணமாய் இருக்கக்கூடும்.     இது இந்த தேசத்துக்கு புதிதல்ல.
ஒரு கூட்டத்தின் அங்கீகாரமற்ற ஒரு கொலைக்கு அதே கூட்டத்தின் அங்கீகாரம் பெற்ற கொலை ஒருபோதும் ஈடாகாது.
 என்னுடைய உயிரை நானே போக்கிக்கொள்ள உரிமையற்றவன் எனும்போது .
இவை இன்னும் சிந்திக்கவேண்டியவை.
இவை தேசத்துக்கு தேசம் மாறிக்கொண்டே இருக்கிறது.   இன்னும் காந்தி பிறக்காத நூற்றுக்குமேற்பட்ட தேசங்களில்கூட மரணதண்டனைகளுக்கு மரணம் அளித்து மனித நாகரீகத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.
குற்றம் புரிந்தவனுக்கு வாழ்க்கையில் தண்டனை என்பது அவன திருந்தத்தானே தவிற அவனை பழிக்கு பழி தீர்ப்பதற்க்கல்ல.
தூக்கு தண்டனைய தந்ததன் மூலம் குற்றங்கள் இழைத்தவனை ஒருபோதும் வென்றுவிட முடியாது. வேண்டுமெனின் அவனைச்சார்ந்தவர்களை சில காலங்கள் துன்புருத்தலாம்.
உயிருடன் வாழ்ந்து தண்டனையை அனுபவிப்பதற்கு மரணதண்டனை ஒருபோதும் ஈடாகாது.பின் ஏன் மரண தண்டனை.மனம் வருந்தி உணர வாய்ப்பு கொடுப்பதே நாகரீகமானது.
ஒருவனுக்கு மரணதண்டனை அவனுக்குமட்டுமல்ல அடுத்தவனுக்கும் எச்சரிக்கை என்பதுண்டு.அடுத்தடுத்து நிகழும் கொலைகளும் கொடூரங்களும் அதனையும் பொய்யாக்குகின்றன.
இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொடூரமாய் கொல்லப்பட்டது என்றும் நினைவில் நிற்கும் துயரம். மனித நேயமும் கலாச்சாரமும் மிகுதியாக பேசப்படுகிற தமிழ்மண்ணில் இந்த துயரம் நிகழ்ந்து மாறா வடுவை ஏற்படுத்தியது உண்மை.பக்கத்து தேசத்தில் நிகழ்ந்த உரிமைப்போராட்டம் நம்மையும் எட்டியிருக்கிறது.எட்டிப் பார்த்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம். 
இந்த கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான புலிகள் இந்திய அரசின் கைகளில் சிக்காமலோ மரணமுற்றோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கின்றன.மூன்று எலிகளைத்தவிற.
இந்த கொலைக்கு ஆதாரமானவர்கள் என்று கருதப்பட்ட முக்கியமான மூன்று பேர்கள் மனித சட்டங்களுக்குள் சிக்காமல் மடிந்து போயிருக்கின்றனர். எஞ்சியிருந்த இருபத்தியாறு பேர்களில் பதிமூன்று பேர்கள் மேல்முறையீட்டில் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
இறுதியாக பேரறிவாளன் , சாந்தன் , முருகன் என்ற மூன்று இளைஞர்களின் கருணை மனுக்கள் இப்போது குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டிருக்கன்றன. இரண்டு குடியரசுத்தலைவர்கள் எடுக்கத்தயங்கிய முடிவை தற்போதைய இந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத்தலைவர் எடுத்திருக்கிறார்.
பேரறிவாளன் , சாந்தன் , முருகன் என்ற மூன்று இளைஞர்களுமே இந்த கொடூரத்தில் நேரடியாக முன்நின்றவர்கள் அல்ல.இந்த கொலைக்கான உணர்வுகளில் உழன்றவர்களல்ல.ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழல்களில் இந்த வலையில் சிக்கியவர்கள்.மேலும் இவர்கள் கைது செய்யப்படும்போது இளம் வயதை எட்டாதவர்கள். விசாரணை என்ற பெயரில் ஏறத்தாழ 23 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்கள்.
23 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகுமா ஒரு தூக்கு தண்டனை.எத்தனையோ வழக்குகளில் நெடுஞ் சிறைவாசத்தை கணக்கில் கொள்ளப்பட்டு தண்டனைகள் தாழ்த்தப்பட்டனவே.இவர்களுக்கு இல்லையா.
இத்தனை நெடுங்காலத்தை சிறையில் கழித்தபோதும் அவர்களுடைய செயல்பாடுகள் கூடவா அவர்களுடைய கருணைமனுவுக்கு உதவவில்லை. குற்றவாளிகளேயானாலும் அந்த நெடிய சிறைவாழ்க்கை அவர்கள் தங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள உதவாமலா இிருக்கக்கூடும்.நெடிய தண்டனைக்குபிறகும் இவர்களை இந்த உலகிலிருந்து நீக்குவதன்மூலம் நாம் யாரை எச்சரிக்கிறோம்.
முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்.
பெற்ற மகனுக்காக ஒரு தாய் இந்த தேசத்தின் வீதிவீதியாக சுற்றித்திரிகிறார். எங்காவது கடுகளவு கருணை காந்தி பிறந்த மண்ணில் கிட்டாதா என்ற ஏக்கம்.
அப்சல் குருவுக்காக கஷ்மீர் குரல் எழுப்புகிறது. இந்திய அரசும் கோப்பை எடுக்கத் தயங்குகிறது.
இருபது ஆண்டுகளுக்குமேலாக சிறைவாழ்க்கை வாழ்ந்த இளைஞர்களின் உயிர் காக்க மனிதயநேயம்மிக்க குரல்கள் ஒன்று பட்டு ஒலிக்கவேண்டும்.இப்போதே பல்வேறு அமைப்புக்கள் குரல் எழுப்பத் துவங்கிவிட்டன.கட்சி வித்தியாசமின்றி ஒன்றிணையவேண்டிய தருணம் இது.மக்கள் சக்திக்கு அரசு தலைகுனியும் என்பதை சமீபத்திய அன்னா அசாரேயின் மனஉறுதி நிரூபித்ததையும் பார்த்திருக்கிறோம்.இன்னொருபக்கம் சட்ட பூர்வமான செயல்களில் அணுகவேண்டும்.நல்லமுடிவு ஏற்பட வேண்டும்.
இரக்கம் மிகுந்த காங்கிரஸ் இயக்கத்தினரும் தங்கள் காயங்களை மறந்து குரல் எழுப்பவேண்டும்.அப்போது மட்டுமே அவர்களுக்கு மீண்டும் தமிழர்கள் நெஞ்சில் இடம் ஏற்படக்ககூடும். 

இடுகை 0069

2 கருத்துகள்:

  1. நாகரீகம் மிக முன்னேற்றமடைந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நிகழும் இந்த அநாகரீகமான ஒரு நிகழ்ச்சி உலகெங்கும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். எந்த ஒரு காரணத்திற்காகவும் இன்னொரு உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் அளிக்கப்படக்கூடாது. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !