புதன், ஆகஸ்ட் 31, 2011

இறங்காத மனமும் இறங்கும் !

பாண்டியன்ஜி
ராஜீவ் காந்தி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மிஞ்சியிருந்த குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் தூக்கு கயிறுகள் சற்றே தளர்த்தப்பட்டிருக்கிறது. இதர்க்கான முயற்சிகளில் இந்திய புகழ்மிக்க வழக்குறைஞர்கள் கடைசி தருணத்தில் முயற்சி மேற்கொள்ள நேரிட்டிருக்கிறது.மனிதநேயம்மிக்க தமிழ் இதயங்களின் துடிப்பை ஒருவாறு சீர்செய்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
இருபத்தி மூன்று நெடிய ஆண்டுகள்...ஏன் இத்தனை காலம்கடந்த எழுச்சி ! - கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்களின் வியப்பு ஞாயமான ஓன்றுதான்.ஆனால் தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து குரலெழுப்பித்தான் வந்திருக்கிறார்கள். இருப்பினும் ஏற்பட்டுவிட்ட கொடூரக்கொலை எழும்பிய குரலின் ஒலியை குறைத்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.அந்த தீரா அவமானத்தில் இந்த இளைஞர்களின் குரலொலி எழும்பாமல் போனது உண்மை.அதுவே மக்கள் எழுச்சிக்கு ஊறு விளைவித்திருக்கக்கூடும்.
இப்போது இருபத்திமூன்று நெடிய ஆண்டுகள் தொலைந்துபோய்விட்டன.
இதயத்தில் ஏற்பட்ட வலி குறைந்திருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணைமனுக்களை நிராகரிக்க இயலாமல் பதினோரு ஆண்டுகள் இரண்டு குடியசுத்தலைவர்களால் குழம்பப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு
இப்போதய முதல் பெண் குடியரசுத்தலைவரால் இவர்களுக்கான கருணை மறுக்கப்பட்டிருக்கிறது.

மூன்று இளைஞர்களும் மரணத்தின் விளிம்புக்கு நகர நகர சோம்பிக்கிடந்த மனித நேயம் விழித்துக்கொண்டது.விசாரணைக்கைதியாகவே இருபத்திமூன்றுஆண்டுகள் சிறைக்கோட்டத்தில் கழித்தபின்னும் இந்த கற்கால கொடூரம் தேவைதானா...
என்னுடைய நினைவுகளில் எத்தனையோ அறப்போர்களைஅறிந்திருக்கிறேன்.   அத்தனை போர்களையும் பின்தள்ளி இப்போது நிகழ்ந்த எழுச்சி முன்நிற்பதாகவே கருதுகிறேன்.
காஞ்சியைச்சேர்ந்த சகோதரி செங்கொடி தன்னுயிரை மாய்த்துக்கொண்டது இதுவரை அறியாதது ஒன்று. கோயம்பேடு மத்திய பேரூந்து வளாகத்தில் மூன்று பெண் வழக்கறிஞர்கள் உண்ணாமல் மூன்றுக்கு மேற்பட்ட நாட்கள்
தங்களை வருத்திக்கொண்டு ஆண்களை பின்னுக்கு தள்ளியிருக்கின்றனர்.
மக்கள் சக்திக்கு மாற்று சக்தியில்லை என்பதை இப்போது தமிழ்நாடு நிரூபித்திருக்கிறது.
அகில இந்திய அளவில் ராணுவ சிப்பாயாக இருந்து மூக போராளியாக உருவெடுத்த அன்னா அசாரே உத்தமர் காந்தியின் கைத்தடியைக்கொண்டே மாபெரும் மக்கள் எழுச்சியை திரட்டிக்காட்டியதை மறந்திட இயலாது.இந்திய பாராளமன்றமே தனது மறபு மிக்க கூச்சல்களை ஒதுக்கி விரும்பியோ விரும்பாமலோ அசாரேயின் குரலுக்கு பணிந்தது இதுவரை அறியாத ஒன்று.
மனதிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் குடியிருந்தாலும் எழும்பி ஒலித்த மக்கள் குரல் ஒருங்கிணைந்த ஒரு கருணைத்தீர்மானத்தை தமிழகமுதல்வர் நிறைவேற்ற வழிசெய்திருக்கிறது. இந்த வழக்குக்கு வந்த புகழ் மிக்க
வழக்கறிஞர்களோ இந்த மரணக்கயிற்றை அறுத்தெறிய தமிழக முதல்வருக்கு வழி உண்டு என்றே பேசுகிறார்கள்.அதற்கான சூழலை மனிதநேயம்மிக்கவர்கள் ஏற்படுத்தவேண்டும். அப்போது -
இறங்காத மனமும் இறங்கும் !
----------------------------------------------
இடுகை 0070


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !