ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மங்காத்தா - ( வெடியும் குடியும் ! )

பாண்டியன்ஜி

கிரிக்கெட் ஆட்டத்தின் வெற்றி தோல்விகளை முன்னிருத்தி நிகழுகின்ற சூதாட்டங்களில் பெருமளவு பணம் புரள்கிறது. மும்பையை மையமிட்டு சுழலுகின்ற இந்த கிரிக்கெட் பெட்டிங்களில் ஒரு சமயம் பெரும்பணம் கைமாற 500 கோடிக்கதிகமான அமெரிக்க டாலர்கள் கண்டெய்னர் ஒன்றில் ஏற்றி பத்திரமாக கொண்டு செல்லப்படுகிறது.இதையறிந்த ஒரு இளம் கொள்ளைக்குழு பணம் முழுதும் மொத்தமாக கைப்பற்ற திட்டமிடுகிறது. இந்த கூட்டத்தில் கடைசி நேரத்தில் இணைத்துக்கொண்ட வினாயக் மூளையாக செயல்பட்டு திட்டத்தை வெற்றியாக்குகிறான்.
மராட்டிய மாநில காவல்துறை ஆய்வாளராக இருந்து சமூகத்தைக்காக்க தனக்கு தரப்பட்ட ஆயுதங்களை பயங்கரவாதிகளை மீட்க பயன்படுத்தி வேலை நீக்கம் செய்யப்பட்டவன்தான் இந்த வினாயக் . அவனும் அவனுக்குப் பதிலாக அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ஜுனும் சேர்ந்துஅத்தனை பேரையும் ஏமாற்றி 500 கோடியையும் கைப்பற்றி அனைவர் முகத்திலும் கரிபூசுவதே வெங்கட் பிரபுவின் மங்காத்தா.
பயிரையே வேலி மேய்ந்ததை கொண்டாடி இதுவரை எவரும் சொல்லத்துணியாததை திரைப்படத்தின் அடித்தளமாக அமைத்ததின் மூலம் இந்த சமூகத்தின் செயல்களுக்கு புதிய அங்கீகாரத்தை தந்திருக்கிறார் வெங்கட்பிரபு.அஜீத்தோ அர்ஜுனோ சமுதாயத்துக்கு எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று கைத்தட்டல் பெறுவதில் வேர்களுக்கு எந்த சங்கடமும் இல்லை.ஆனால் திரைக்கதை முழுதுமே ஒருகொள்ளைக்காரனின் வெற்றியை முன்னிருத்தி குடி கூத்து வெடி என்று பயணிப்பது சீரணிக்க இயலாத ஒன்று.
இந்த திரைப்படத்தை பொருத்தவரை பாத்திரங்களுக்கு நடிப்பதற்கு ஏற்ற தருணங்கள் எதுவும் தரப்பட்டதாக நினைவில்லை.ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு வந்து போகிறார்கள்.நரைமுடியோடு நாயகவில்லன் அஜித் வந்துபோவது புதுமையென்று கொள்ளலாம்.திரிஷா வந்து போவது
பயனளிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.இசைக்கருவிகளின் கூச்சல் மிகுதியால் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் மட்டுமே மனம் லயிக்கலாம்.படத்தின் முற்பகுதி மிகுந்த சிறமத்துடன் நகர்ந்தாலும் பிற்பகுதிக்கு எடிட்டிங் உயிர் கொடுக்கிறது.மொத்தத்தில் வெடி குடி கூத்து என்று படம் முழுதும் ட்ரெயிலராக நகர்கிறது. 
இந்த திரைப்படத்தை பெரம்பலூர் நகரில் காணுகின்ற வாய்ப்பை பெற்றேன்.அரங்கில் எழுந்த ஆரவாரம் மிக்க பெருங்கூச்சல் நாளைய தலைமுறையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று எனக்குத் தோன்றவில்லை.
படம் சூப்பரா இருக்குப்பா....
அரைத்த மாவையே அரைக்காமல் புதிய கோணத்தில் இருக்கிறது..
நாட்டில் நடக்கிறதைதானே சொல்றாங்க..

இது போன்ற விமர்சனங்கள் என்னை பெரிதும் தடுமாறச் செய்தது.
64 ஆண்டு நெடிய ஜனநாயகம் மக்களுக்கு இப்படியொரு சலிப்பை கொடுத்திருக்கக்கூடும் என்றே எண்ணிக்கொண்டேன். 
திரைப்படமும் தொலைக்காட்சியும் இன்னும் தவிற்க இயலாத ஒரு சக்திமிக்க சாதனமாகவே திகழ்ந்துவருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு ஆட்சி முளைப்பதற்கும் ஒரு ஆட்சி வீழ்வதற்கும் தலையாய காரணமாகவே இருந்திருக்கிறது.
தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடி தருமம் வெல்லும் என்ற வரிகளை பேசக்கேட்டிருக்கிறோம். வாய்மையே வெல்லும் என்ற வரிகளை அரசின் இலட்சினையாக கொண்டது இந்த அரசு.இந்த பிரதேசத்தில் எழுதப்பட்ட எழுதப்படுகிற ஒவ்வொரு கதையும் எடுக்கப்படுகிற ஒவ்வொரு திரைப்படமும் இதைத்தான் போதித்து வந்திருக்கின்றன.
ஊழல்களும் வன்முறையும் மிகுதியாக காணப்பட்டாலும் இறுதியில் அத்தனையும் தோல்வியுறுவதாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. வேலியே பயிரை மேய்ந்தாலும் வேலியும் தண்டனைக்கு தப்பியதாக நினைவில்லை.தெயவம் நின்று கொல்லும் என்ற எழுத்துக்கள் கூட இதைத்தான் பேசுகின்றன.
படைப்பாளி பெற்றிருக்கிற ஆயுதம் வாளினும் கூர்மையானது என்று கேட்டிருக்கிறோம்.அந்த கூர்மை இந்த சமூகம் எப்படி பயணிக்க வேண்டுமென்பதை தீர்மானிக்க வேண்டுமேயன்றி சமூகத்தின் பின் கைகட்டி செல்வதல்ல என்பதை உணர வேண்டும்.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக பிரதேசத்தில் சட்டத்தை தாண்டிய செயல்கள் நிகழலாம்.வன்முறையும் பயங்கரவாதமும் தலைவிரித்து ஆடலாம்.காக்கவேண்டிய காவல்துறையில் களங்கம் ஏற்படலாம். அதனாலேயே இவைகள் போற்றப்படுவதோ கொண்டாடப்படுவதோ இந்த தேசத்துக்கு நல்லதல்ல.அவை எப்போதும் அங்கீகரிக்கத்தக்கதல்ல என்பதை உணர வேண்டும்.
இது போன்ற திரைப்படங்கள் நாளையே பலருக்கு வழிகாட்டியாகவும் துணிவையும் ஏற்படுத்தக்கூடும்.
அதன் விளைவாக..
வங்கிகளில் அடிக்கப்படும் திறன் மிகுந்த கொள்ளை போற்றப்படும்.
பாராளமன்றத்தில் தன்னந்தனியனாக வெடி குண்டு வைத்தோ பொதுமக்கள் நிறைந்து வழியும் ரயிலைக்கவிழ்த்தோ நாசத்தில் ஈடுபடுவோரின் அசாத்திய திறன் கண்டு அதிசியிக்கப்படலாம்.

நமது ஜனநாநகத்தில் குறைகளும் உண்டு . நமது அரசு இலாக்காக்களில் ஊழலும் மெத்தனமும் உண்டு.அவைகள வெற்றி கூட பெறலாம்.அவை அனைத்தும் பேசப்படவேண்டும் . விவாதிக்கப்படவேண்டும் . ஆனால் வொற்றிபெற வேண்டுமென எண்ணிவிடக்கூடாது என்றே கருதுகிறேன்.
இந்த நாட்டு மக்களின் மனோபாவத்தை எண்ணி மனம்வருந்தியது உண்டு .ஆனால் இந்த திரைப்படத்தை பார்த்தபோது வளருகின்ற ஒரு படைப்பாளியின் சிந்தனைப்போக்கை எண்ணி முதன்முதலாக தலைகுனிய நேரிட்டது.
இந்த திரைப்படத்தைப்பற்றி எழுத எதுவும் இல்லை என்றாலும் இதுபோன்ற சிந்தனைப்போக்கு கண்டிக்கப்படவேண்டும் என்றே கருதுகிறேன்.
விளைவுகளை அறியாது செய்யப்படுகிற ஆரவாரங்களும்அபரிதமான பணப் பிரயோகமும் இந்தபடத்தை முன்னே இழுத்துச் சென்றிருப்பதாகவே கருதுகிறேன்.சுயமரியாதைச்சிந்தனைகள் இந்தநாட்டில் மலர நீர் தெளித்த தலைவர்களின் வாரிசுகள்தாம் இந்த குடி வெடி கூத்தை முன்னுக்கு இழுத்துச் சென்றிருக்கின்றன என்ற தகவல் மிகுந்த வெட்கத்துக்குரியது.இந்த படத்தில் சன் டிவியின் பங்கு வேதனைக்குரியது என்றே சொல்லவேண்டும். தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் ஒரு நேர்மைமிகு இந்தியன் என்றபெயரை தக்கவைத்துக்கொண்டிருந்த நடிகர் அர்ஜீனும் இந்த படத்தின் மூலம் கரி பூசப்பட்டிருக்கிறார் என்றே கருதுகிறேன்.
மங்காத்தா தமிழ் மண்ணுக்கு ஒரு மோசமான முன் உதாரணம் என்றே கருதுகிறேன்.

இடுகை 0071