திங்கள், மே 02, 2011

கோ..கோ...கோ.!

பாண்டியன்ஜி
நாட்டை ஆளுகின்ற கட்சியும் ஆளத்துடிக்கின்ற எதிர் கட்சியும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளாக இருக்கின்றன.வாக்களித்த மக்கள் பல்வேறு வழிகளில் 

சுரண்டப்படுகிறார்கள்.மண்ணின் கலாச்சாரமே சீரழிந்து காணப்படுகிறது. ஒரு நிலையில் -
மனங்கொதித்து திரண்டெழுந்த ஒரு படித்த இளைஞர் கூட்டம் இந்த சுரண்டல் வாதிகளை அறவழியில் எதிர்த்து இறுதியில் அரியணை ஏறுகிறது. கையில் கேமராவுடன் நாள் முழுதும் அலையும் ஒரு இளம் பத்திரிக்கையாளன் அந்த இளைஞர் கூட்டத்தை நகர்த்தி எப்படி அரியணையேற்றுகிறான் என்பதே கோ திரைப்படத்தின் இழையாக நிற்கும் கதை !
அயன் திரைப்படத்தைப் போலவே கதைத் தலைப்பான கோவின் பொருளை எத்தனை பேர் புரிந்திருக்கக் கூடும் என்று யோசிக்கிறேன்.வாக்களிக்கும் முத்திரைச் சின்னத்தை முன்னிலை படுத்தியதைத் தவிற கோ வுக்கான பொறுத்தமான பொருளை திரைப்படத்தின் எந்த இடுக்கிலும் சொல்லியதாக தெரியவில்லை. தமிழுக்கான பொருளகராதியை புரட்டியபோது..
கோ - அரசன் , பசு , ஆகாயம் , பூமி , கிரணம் ,  அம்பு ,  சந்திரன் ,      சூரியன் .....
கோவுக்கான விளக்கங்கள் நீண்டு போனதுதான் மிச்சம்.
இதில் ஏன் இத்தனை நவீனத்துவம் என்றே தோன்றுகிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு கதை அத்தனை முக்கியமில்லை என்று முடிவு செய்தவர்கள் இப்போது கதைக்கான தலைப்பையும் அப்படி கருதிவிட்டார்கள் போலும்.
துவக்கத்தில் ஊர்ந்து செல்லும் கதை பின்பகுதியில் ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும் ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தை எகிறச் செய்கிறது.
படம் முழுதும் கைகளில் கேமராவுடன் தோன்றி சாகசங்கள் நிகழ்த்தும் அசாத்தியமான பத்திரிக்கையாளனக வருகிறார் ஜீவா .குறும்புச்சிரிப்பு,அப்பவித்தனமான உரையாடல் அத்தனையும் அவருக்கு எளிதாக கைகொடுக்கிறது. அத்தனை அசாத்தியமான மனிதர் இறுதியில் நம்மைப் போலவே ஏமாற்றப்படும்போது வாழ்வின் எதார்த்தம் முன் நிற்கிறது.
சக பத்திரிகாளினியாக வரும் கிருத்திகா நாயர் மின்னுவதற்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. அவரது உயர்ந்த உடல்வாகு தமிழில் ஜொலிக்க உதவுமா என்று பார்க்கவேண்டும். பிரகாஷ்ராஜும் கோட்டா சீனிவாச ராவும் அரசியல்வாதிகளாக தோன்றி இன்றைய சூழலை நினைவூட்டுகிறார்கள். சரோவாக தோன்றும் பியாபஜ்பால் நாயர் படம் முழுதும் கலகலப்பாக வளையவந்து இறுதியில் கண்கலங்கச் செய்கிறார்.அவரையொட்டி பின்னப்பட்ட ஒருசில அபத்தமான காட்சிகளைத் தவிற்திருக்கலாம்.
இளைஞர் குழுவுக்கு முன்னிலை வகிக்கும் வசந்தன் பெருமாளக வரும் அஜ்மல் அமீர் முழுமையாக நடித்தாலும் இறுதி திருப்பங்களுக்கு பொறுத்தமற்றே காணப்படுகிறார்.படத்திற்கான உரையாடல் முன்னிலை வகிக்கிறது. அத்தனையும் நினைவில் நிற்கத்தகுந்தவை. படம் முழுதும் தின அஞ்சல் பத்திரிக்கை அலுவலகம் தி டெய்லி போஸ்ட் அலுவலகமாக காணப்பட்டாலும படத்தின் இறுதியில் நாளைக்கு முண்டக்கண்ணியம்மன் கோயிலிலே கூழ் ஊத்துராங்களாம் நீதான் கவரேஜுக்கு போகணும் ! - ஜீவாவிடம் பத்திரிக்கை அலுவலகத்தில் ஒரு சகபெண் ஊழியர் குறிப்பிடும்போது இயல்பாகவே ஒரு சென்னை தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தை நினைவூட்டுகிறது. 
இன்றைய இளைய சமுதாயம் விரும்பத்தக்க வகையிலே ஹாரிஸ் ஜயராஜின் இசை ஒலிக்கிறது. மதன் கார்க்கி நண்பர்களின் என்னமோ ஏதோ என்ற பாடல் தியேட்டரைவிட்டு வெளியேறிய நிலையிலும் நினைவில் நிற்கிறது. பா விஜய் ,கபிலன் விவேகா எழுதிய மற்ற பாடல்களும் மீண்டும் ஒருமுறை கேட்கும்போது நெஞ்சில் நிற்கக்கூடியவைதாம்.இப்போதெல்லாம் தமிழ் படங்களில் படத்திற்கான தலைப்பிலும் பாடல்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது.இருந்தபோதிலும் இசைப்பதிவாளர்களுக்கேற்பட்டிருக்கிற மேற்க்கித்திய கனவில் தமிழ் சொற்களை கடித்துத்துப்புவது தவிற்க இயலாததாகி விட்டது.பாடல் வரிகள் எல் கே ஜி குழந்தைகளின் ரைம்ஸைப்போல ஒலித்தாலும் பக்க இசையிலிருந்து விலகி தனித்து ஒலிப்பது ரசிக்கத்தக்கவையாய் இருக்கிறது.முன்பெல்லாம் கவிப்பேரரசுவின் வைரம் பாய்ந்த வரிகள் திரை இசைமுழக்கத்தில் முழுவதும் புதைக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது.ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் இணைந்து திரைப்படத்தை தொய்வின்றி நகர்த்துகிறது. வங்கிக் கொள்ளையில் முனைப்பு காட்டிய இயக்குநர் கிளைமமாக்ஸ் காட்சிகளில் சலிப்புற்றது வெளிப்படுகிறது.அது ஆரம்ப சுறுசுறுப்பு. இருந்தாலும் இயக்குநர் கே வி ஆனந்துக்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும். ட்ரெயிலரைப்போல திரைப்படம் தாவித்தாவி சென்றாலும் குடும்பத்தோடு ஒருமுறை பார்த்து மகிழலாம். 

இடுகை 0053
பார்வைக்கு - ரசிகர்களின் ரசிப்புத்தன்மைக்கு ஊறு விளையும் எனக்கருதி திரைப்படத்தின் ஆணிவேரை (  suspense  )வெளிப்படுத்த வில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !