தமிழர்களுக்குச்
சுயமரியாதையும் துணிவும் மாண்பும் தந்தவர் பெரியார்.
ராஜன்
குறை,
சமூக விமர்சகர்,
மழை
பெய்ததும் ஈசல் பூச்சிகள் கும்பலாகப் புறப்படும். காற்றடிக்கும் திசையில்
திரும்பும் காற்றுமானியாகச் செருகப்பட்டிருக்கும் சேவல் பொம்மை. இதெற்கெல்லாம்
குறியியக்கத்தில் தொடர்மம் என்று பெயர்.
இரண்டு
பெரிய திராவிடக் கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கொண்டு திணறுகின்றன.
இதுதான் சந்தர்ப்பம்,
திராவிடக் கட்சிகளை வீழ்த்துவதுடன் சீர்திருத்த சமூகநீதி
சிந்தனையையும் வீழ்த்தி மீட்புவாதக் கருத்தியலை நிறுவ வேண்டும் என்ற ஆசை வருவது
புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், அதற்கு ஏதோவொரு வகையில்
ஊருக்கு ஊர் காவல் தெய்வம்போல பெரியார் என்ற பிம்பம் நிற்பது சிக்கல்தானே என்பதால்,
சில காற்றுமானிச் சிந்தனையாளர்கள் அந்த பிம்பத்தை
ஆட்டிப்பார்க்கலாம், அசைத்துப்பார்க்கலாம் என்று புறப்பட்டிருக்கிறார்களோ
என்று தோன்றுகிறது. பெரியார் கொச்சையாகப் பேசினார், பச்சையாகப்
பேசினார், அவர் ஒரு சர்வாதிகாரி என்று மெல்ல மெல்லக் கிளம்புகிறது
ஈசல் கூட்டம்.
சபித்தவர்கள்
பிற்போக்குப் பார்ப்பனர்களே!
பெரியார்
வாழ்ந்த காலத்தில் அவரோடு நேரில் பழகியவர்கள் எத்தனையோ பேர். அவர்களில்
பார்ப்பனர்களும் பலர் உண்டு. அவர்கள் எல்லோருக்கும் ஓர் உண்மை தெரியும்.
பெரியாரின் பேச்சு பல சமயம் ஏச்சாகவும் இருக்கும்; ஆனால், செயல் என்பது மிகவும் நாகரிகமாக இருக்கும் என்பது. மக்களின் மனதில்
ஏற்படும் கருத்து மாற்றமே அரசியல் விடுதலை என்று வன்முறையையும் அரசதிகாரத்தையும் நாடாமல்
மனதில் பட்டதை அறிந்த வகையில் மக்களிடம் பேசி, அவர்களைச்
சிந்திக்க வைத்திட்ட அவரது அபூர்வமான காந்திய அரசியல் பாதை எதிரிகளையும் மாற்றாரையும்
அவரை வணங்கிட வைத்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சபித்தவர்கள் எல்லோரும்
பிற்போக்குப் பார்ப்பனர்களே. ராஜாஜியின் தீவிர அபிமானிகளான பார்ப்பனர்கள் பலரும்
பெரியாரை ‘கொஞ்சம் கிறுக்கு
போலப்
பேசும் தன்னலமற்ற சீர்த்திருத்தவாதி’ என்றுதான் நினைத்தார்கள்
என்பதை நானே சிறு வயதில் நேரில் கண்டவன்.
அவரது
பேச்சை அறிவுஜீவிகளால் என்றுமே ஏற்க முடிந்ததில்லை. ஏனெனில், அது படித்தவர்களுக்கான
பேச்சில்லை. பாமரர்களுக்கான பேச்சு. அதன் உள்ளார்ந்த தர்க்கம் படித்தவர்களுக்குப்
புரியாது. பிரான்ஸ் ஃபானனின் எழுத்தின் வலியை, அறச்சீற்றத்தைப்
புரிந்துகொண்டு அவரைப் பற்றி விளக்க சார்த்தர் முதல் ஹோமி பாபா வரை எத்தனையோ
அறிவுஜீவிகள் முனைந்தார்கள். பெரியாரைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவுஜீவிகளும்
அவரது சமகாலத்தில் இருக்கத்தான் செய்தார்கள்.
வ.ரா-வும்
கல்கியும் போற்றிய பெரியார்
வ.
ராமசாமி (வ.ரா) என்று ஒருவர் இருந்தார். தமிழின் அறிவார்ந்த இலக்கிய, கலாச்சார
இதழியலின் முன்னோடி என்று பலராலும் கருதப்படும் ‘மணிக்கொடி’
என்ற இதழை 1933-ல் தொடங்கியவர்; காங்கிரஸ் தேசியவாதி. ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர்’
என்று போற்றப்பட்டவர். 1944-ல் ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்ற நூலை வ.ரா எழுதினார்.
பத்து அல்லது பன்னிரண்டு ஆளுமைகளை மதிப்பிட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுதி அது.
அதன் முதல் கட்டுரையே பெரியார் ஈ.வே.ரா. குறித்ததுதான் (அவரை சொல்லிவிட்டுத்தானே
பிறரைப் பற்றிப் பேச முடியும்). “மலைகளையும் மரங்களையும்
வேரோடு பிய்த்து எறிந்து ராவண சேனையுடன் போரிட்ட மாருதியைப் போல, தனித்து நின்று நூற்றாண்டுகளாய்ப் புரையோடிப்போன சமூகச் சீரழிவுகளுடன்
போரிடும்” பெருவீரராக அவரைச் சித்தரித்தார் வ.ரா.
பள்ளிப்
பருவத்தில் நூலகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது திடீர்ப் பிரசன்னமாக அங்கு தோன்றி
பிரசங்கித்த வ.ரா-வின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் ராஜாஜியின்
பிரதம சீடராகவும், தமிழ் நவீன உரைநடையின் தவிர்க்கவியலா
முன்னோடிகளில் ஒருவராகவும் விளங்கிய ‘கல்கி’கிருஷ்ணமூர்த்தியும் தமிழ்ப் பேச்சாளர்களைப் பற்றி தொடர்கட்டுரை எழுதினார்.
அந்தப் பட்டியலில் இடம்பெற்ற முதல் நபர் பெரியார்தான். பெரியாரின் கொள்கைகளை,
நடவடிக்கைகளை விமர்சித்தாலும் அவரைப் பற்றி ஒரு இழிவான சொல் ‘கல்கி’கிருஷ்ணமூர்த்தி எழுதியதில்லை.
சிந்திக்க
வைத்தவர்
எதற்காக
இவர்கள் இருவரையும் குறிப்பிடுகிறேன் என்று புரிந்திருக்கும். ஆமாம், பெரியார்
தொடர்ந்து விமர்சித்த பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். ஆனால், இவர்களுக்குத் தங்கள் இனத்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும்.
நஞ்சினும் கொடிய தீண்டாமையைக் கடைப்பிடித்து, பிறருக்கு முன்மாதிரியாக
இருந்தவர்கள் அன்றைய பார்ப்பனர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான்,
சாதி வேற்றுமை களைவதற்கென்றே இயக்கம் கண்ட பெரியாரை மதித்தனர். அவர்
எவ்வளவு கொச்சையாகவும் பச்சையாகவும் பேசினாலும் அவர் பேச்சு மகாகவிக்கு, ‘நினைத்துவிட்டாலே நெஞ்சு பொறுக்க முடியாதபடி நிலைகெட்டுப்போன’ மனிதர்களைச் சிந்திக்க வைப்பதற்காகத்தான் என்பது அவர்களுக்கெல்லாம்
புரிந்திருந்தது.
நானும்
அந்தப் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனே. நான் ‘நிறப்பிரிகை’ பத்திரிகையில் 1993-ல் பெரியாரியம் குறித்த கட்டுரை
எழுதுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னதாக திராவிட இயக்கத் தோழர் ஒருவரைச்
சந்தித்தேன். என்னிடம் அவரைப் போல அன்புடன் பேசியவர்கள் வெகு சிலரே. அவர் பெயர் ராவணேஸ்வர
சாஸ்திரி. அவர் என்னிடம் சொன்னார்: “நீங்களெல்லாம் நன்கு படித்தவர்கள்.
வெள்ளைக்காரன்போல ஆங்கிலம் பேசுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவோ விஷயங்கள்
புரிகிறது. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என்கிறீர்கள்; கார்ல் மார்க்ஸ்
என்கிறீர்கள். கொஞ்சம் பெரியாரையும் படித்துப்பாருங்கள்” என்றார்.
ஒருநாள் சாப்பிடப் போனபோது, தாழ்த்தப்பட்ட இனத்தவராக அவர்
கிராமத்தில் வளர்ந்த அனுபவங்களைச் சொன்னார். என்னால் சாப்பிடவும் முடியவில்லை;
கண்ணீரைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. நானும் ஏழ்மையில்தான் வளர்ந்தேன்.
ஆனாலும், அது கலாச்சார மூலதனத்தினால் காப்புறுதி செய்யப்பட்ட
வறுமையாகவே இருந்தது. ஆனால், தோழர் அனுபவித்ததெல்லாம் வறுமை
மட்டுமல்ல; சாதிக்கொடுமை, இழிவுசெய்தல்.
அவரைப் போன்ற தோழர்களுக்கெல்லாம் சுயமரியாதையும் துணிவும் மாண்பும் கொடுத்து,
ஒரு பார்ப்பன இளைஞனை வெறுக்காமல், பக்குவமாக
அவனுக்கு சாதிக் கொடுமையின் தீவிரத்தை எடுத்துச்சொல்லும் பெருந்தன்மையையும் தந்த
ஒரு இயக்கத்தையும், அந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவரையும்
நான் தூற்றுவேனென்றால் என்னை மன்னிக்கும் சக்தியொன்று இந்த அண்டத்தில் இருக்க
முடியாது. தன்னுணர்வும் வரலாற்றுணர்வும் அறவுணர்வும் செயல்படத் தவறினால் எந்தக்
கருத்தியலும் நம்மைக் காப்பாற்றாது.
என்னிலும்
மூத்த தோழர்கள் பலரும்,
இளைஞர்கள் பலரும் பெரியார் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்
என்பதாலும், பார்ப்பனனாகிய நான் தொடர்ந்து அவர் குறித்துத்
தொடர்ந்து எழுதி, பேசிடவும் அதன்மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும்
பெறவும் அருகதையற்றவன் என்ற உணர்வாலும் வேறு சிந்தனைக் களங்களைத்
தேர்ந்தெடுத்தேனேயன்றி, பெரியாரின் மகத்துவத்தைக் குறித்துப்
பேச விஷயங்கள் இல்லாமல் கிடையாது. வரலாறு மீண்டும் நிர்ப்பந்திக்குமானால் எவ்வளவு
பெரிய மார்க்ஸிய மேதையாயிருந்தாலும், வேறு எந்த இஸ மேதையாயிருந்தாலும்,
தேசியப் பற்றாளராயிருந்தாலும், அரசியல் விமர்சகராயிருந்தாலும்
நின்று விவாதிக்கத் தயாராகவே இருக்கிறேன். விவாதம் பொறுமையாக, எந்தத் தனிநபர் தாக்குதலும், உணர்ச்சிவசப்படுதலும்
இன்றி முற்றிலும் அறிவார்த்தமாகவும் கண்ணியமாகவும் நடக்கும் என்று உத்தரவாதம் தருகிறேன்.
விவாதம் என்னுடைய ‘ஃபேஸ்புக்’திரிகளிலோ
வலைத்தளங்களிலோ பக்கக் கணக்குப் பார்க்காத ஏடுகளிலோ எங்கு நடந்தாலும் பங்கேற்கத்
தயார்.
-
தமிழ் இந்து நாளிதழ் 03 நவம்பர் 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !