( மார்க்கண்டேய கட்ஜுவின் மீடியா எதிர்ப்பு )
பாண்டியன்ஜிநெடுநாட்களாக எனக்கொரு ஏக்கம் இருந்ததுண்டு.எவரேனும் இதற்கொரு வழி காண மாட்டார்களா என்றும் இந்த முறையற்ற செயல்களுக்கு விடிவு ஒன்று ஏற்படாதா என்றும் ஏங்கியதுண்டு.அன்னிய ஆதிக்கத்திலிருந்து நாடு சுதந்திரம் பெற்றதென்னவோ உண்மைதான்.
சுதந்திரமாக பேசுதல் சுதந்திரமாக எழுதுதல் சுதந்திரமாக இயங்குதல் இவற்றுக்கெல்லாம் இந்த நாட்டில் முழுசுதந்திரம் தரப்பட்டது.இவையனைத்தும் எவருடைய சுதந்திரத்துக்கும் இடையூறு ஏற்படாத வரையில் என்றும் சொல்லப்பட்டது.
காலம் சுட்டிக்காட்டியதற்கேற்ப ஒவ்வொரு அரசு துறையிலும் வரை முறைகள் வகுக்கப்பட்டு சீராக செதுக்கப்பட்டன.மக்களுக்கேற்படும் உணர்வுகளின் உச்சத்தை கட்டுப்படுத்த காவல் நிலையங்களும் நீதிமன்றங்கங்களும் தேவைப்பட்டன.கல்விக் கூடங்கள் மருத்துவ துறைகள் இன்சூரன்ஸ் வங்கித் துறைகள் ஒவ்வொன்றையும் நெறிபடுத்த தனித்தனி அமைப்புக்கள் உருவெடுத்தன.இதைப்போலவே நாட்டில் ஒவ்வொரு சேவைக்கும் கேள்வியெழுப்பும் அதிகார அமைப்புகள் தோன்றத்துவங்கின.இன்றும் கூட இந்த நாட்டின் உயர் பொருப்பிலிருக்கும் நீதியரசர்களையும் நாட்டின் பிரதமரையும் கூட இப்படி ஒரு வளையத்துக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சிகள் நடந்துவருகின்றன.
ஆனால் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக இந்த நாட்டிலில்உள்ள பத்திரிக்கை சாம்ராஜ்யமும் ஊடகத்துறையும் வரம்புகள் அற்ற சுதந்திரத்தில் சுற்றித் திரிகின்றன.அதே நேரத்தில் கண்ணியம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் நெறி பிறழாத ஊடகத்துறையினரும் இன்னும் இருப்பதை நான் மறுக்கவில்லை.
சுதந்திரம் என்பது கர்வமிக்கது என்றாலும் அடுத்தவர் உரிமையில் இடிக்காத வரையில் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.தினந்தினம் வெளியாகும் வெவ்வேறு நாளிதழ்களும் தங்கள் ஆசைகளை மக்களிடையே திணிக்க பல்வேறு உத்திகளை கையாளுவதை கண்டிருக்கலாம்.பணத்திற்காக செய்திகளை உருவாக்கவும் விற்பனைக்காக தரம் தாழவும் தயாராக இருப்பதை பார்த்திருக்கிறேன்.எப்போதுமே மக்கள் மத்தியில்
பரபரப்பை ஏற்படுத்தி குழம்பிய குட்டைகளில் இவர்கள் மீன் பிடிப்பதை அறிந்திருக்கலாம்.
சமதர்ம சமூகத்துக்கெதிராக சாதி சமயங்களை காத்திட தலைகீழாக தவம் இருப்பதையும் காணலாம்.எப்போதுமே நடுநிலை என்ற போர்வைக்குள்ளிருக்கும் இவர்கள் என்றைக்குமே நடு நிலையாய் இருந்ததில்லை என்பதை உணரவேண்டும்.நேர்மையை நெற்றியில் ஒட்டிக்கொண்டு அத்தனைபேரையும் சுட்டிக்காட்டும் இவர்களது துரோகத்தை உணர்ந்தே இருக்கிறோம்.
ஊடகங்களின் செயல்பாடுகளோ அதற்கு மேலாகவே இருக்கிறது.மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான கருத்துக்களை தவிர்த்து மக்களின் மலிவான விருப்பங்களை தூண்டுவதிலேயே முன்னிற்கிறது.சமூக வளர்ச்சிக்கு பெரிதும் தடையாயிருக்கும் மூடநம்பிக்கைகளையும் உண்மையான உழைப்புக்கு ஊறு விளைவிக்கும் ஆருட சிந்தனைகளையும் மனக்கிளர்ச்சிகளுக்கு முன்னிடம் தரும் கற்பனைத்தொடர்களையும் தினந்தினம் ஒளிபரப்பி மக்களின் மூளையை மழுங்கச் செய்கின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் சார்ந்த தகவல்களையோ பெரும்பணத்திற்கீடான தகவல்களையோ மக்களிடையே திணித்து உண்மைக்கு ஊறு விளைவிக்கின்றனர்.
பத்திரிக்கை சுதந்திரம்என்றும் ஊடக உரிமை என்றும் கத்தி கத்தி தனிமனிதர்களின் உரிமைகளையும் அவர்தம் சுதந்திரத்தையும் வெட்ட வெளியில் சிதைக்கின்றனர்.மொத்தத்தில் முன்னேற்றத்துக்கு தடையான விஷவித்துகளை நொடிக்கு நொடி விதைக்கின்றனர்.
இந்த நிலையில் ...ஒய்வு பெற்ற நீதியரசர் மதிப்பிற்குரிய மார்க்கண்டேய கட்ஜுவின் சமீபத்திய சென்னை சந்திப்பினபோது இந்த தேசத்தின் மக்களின் கடமை குறித்தும் தற்காலத்திய நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆற்றிய உரை என்னைப்போலவே பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.
அவருடைய பதவிக்காலத்தில் அவர் வாசித்த துணிவுமிக்க தீர்ப்புகள் பலவற்றையும் அறிந்திருக்கிறேன்.
ஓய்வுக்குப்பிறகு அவர் பிரஸ் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றிருப்பது மகிழ்வுக்குறிய செய்தியாகவே கருதுகிறேன்.சமீபத்தில் அவர் சிஎன்என்-அய் பிஎன் தொலைக்காட்சிக்காக செய்தியாளர் கரன் தாப்பருக்கு அளித்த மனந்திறந்த பேட்டி ஒரு ஒளிக்கீற்றை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதே சமயம் பல்வேறு ஊடக பத்திரிக்கையாளர் முகங்களில் ஏற்பட்ட காயங்களுக்கும் கனல்கக்கும் சினங்களுக்கும் காரணமாயிருந்திருக்கிறது என்பதையும் மறுப்பதிற்கிலை.அவர் வெளிப்படுத்திய ஞாயங்களை சமூக அக்கரைமிகுந்த ஒவ்வொருவரும் படித்தறியவேண்டுமென்றே நினைக்கிறேன்.
அவரது பரபரப்புமிக்க உரையாடலும் ( 2.நவ.2011 ) அடுத்து அதனைசார்ந்த விளக்கமும் (20 நவ.2011 )தமிழ் நாளிதழ் தினகரனில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான முகவரி
( http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=8082 )
இடுகை 0078
இந்த பதிவுக்கான உங்கள் கருத்துகளை வேர்கள் வரவேற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !