சனி, ஜூலை 10, 2010

அய்யூர் என்ற குக்கிராமம் ( ஒன்று

யாதும் ஊரே யாவரும் கேளிர்   என்ற கணியன் பூங்குன்றனாரின் வைரவரிகள்  என்னை பெரிதும் பாதித்தவைதொல்லையில்லா உலகம் சமைக்க இதைவிட சிறந்த வழியை வேறு யார் காட்டமுடியும்.

தொள்ளாயிரத்து நாற்பத்தியேழில் கீழ்தஞ்சை  மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு மேல் வாழும் வாய்ப்பு பெற்றவன் நான். இன்று ஒவ்வொரு நகரத்தை பற்றி பேசப்படும்போதும் என் நினைவுகள் என்னையறியாமல் பின்னோக்கி செல்வதை உணர்கிறேன். நிகழ்ந்து போன இனிமையான தருணங்களும் சங்கடமான சந்தர்ப்பங்களும் என் வாழ்வில் ஒன்றையொன்று விஞ்சி முன்னிற்கின்றன. அந்த அணிவகுப்பில் ....நான் பிறந்து வளர்ந்த அய்யூர் என்ற குக்கிரமம்

வடக்கு தெற்காக நீண்டு கிடக்கும் திருவாரூர் திருத்தருப்பூண்டி தார்ச்சாலை எனக்குத் தெரிந்து எப்போதுமே வெரிச்சோடிக்கிடக்கும். இரண்டு அல்லது மூன்று மணிக்கொரு முறையே அந்த பாதையில் பேரூந்துகள் பயணிப்பதைக் காண முடியும்.

திருவாரூரிலிருந்து திருத்தருப்பூண்டி பேரூந்தில் பயணம் செய்யும்போது கச்சனத்துக்கு அடுத்த ஒரு கிலோமீட்டரில் கொத்தங்குடி குறுக்குச்சாலையை சந்திக்க நேரிடும்.. சாலையின் கிழக்கு ஓரத்தில் காணப்பெறும் சின்னஞ்சிறு  பலசரக்குக் கடையுடன் கூடிய ஒரு ஓட்டுவீடு எங்களுக்கு எங்களூருக்கு போக இறங்கவேண்டிய இடத்தை நினைவூட்டும். அந்த பழமையான ஓட்டு வீட்டையொட்டி கிழக்கே செல்லும் குறுகிய மணற்சாலையில் அரை கிலோமீட்டர் தூரம் கடக்கும்போது கிராமம் கொத்தங்குடியை அடையலாம் .  சாலையின் இருபுரமும் விரிந்து கிடக்கும் வயல் வெளிகள் வழிநெடுக கண்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.  

கொத்தங்குடியில் எண்ணி பத்துப்பதினைந்து வீடுகளே சாலையின் ஓரங்களில் காணமுடியும். எல்லாமே செங்கல்லையும் மணற்சாந்தையும் கொண்டு கட்டப்பெற்று நாட்டு ஓடுகள் வேயப்பட்ட வீடுகள்தாம் அத்தனையுமே வயல் வெளியை நம்பி வாழும் சிறு விவசாயிகளுக்கு சொந்தமானவை.. .வீடுகளைக் கடந்து கிழக்கு நோக்கி நகரும்போது சின்னஞ்சிறிய பிள்ளையார் கோயிலையும் அதற்கருகே கண்களுக்கு விருந்தூட்டும் தாமரைக்குளம் ஒன்றையும் காணமுடியும். குளத்தின் கரையோரம் உயர்ந்து நிற்கும் அரசமரம் சலசல ஒலிகள் எழுப்பி வருவோர்க்கு வரவேற்பளிக்கும்.

இப்போது அந்த மணற்சாலை வடக்கு நோக்கி திரும்பி ஒரு பெரிய அரைவட்டம் அடித்து எங்களூர் அய்யூரை அடைகிறது. இடையிலே அது சந்திப்பதென்னவோ ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோயிலையும் சொக்கநாதன் கோயில் என்ற சிறு பகுதியையும்தாம். அந்த கிருஷ்ணன்  கோயிலும் அதன் முழு உருவம் பிரதிபலிக்கும் சின்ன நீர்நிலையும் என்னைப் பொருத்தவரை எங்களூர் தாஜ்மஹால் என்றே எண்ணி வியந்திருக்கிறேன். ஒரு சமயம் சென்னையில் அடகுக்கடையொன்றில்  15  ரூபாய்க்கு வாங்கிய கோடாக் காமராவில் அந்த கோயிலை பல்வேறு கோணங்களில் பதிவு செய்து மகிழ்ந்திருக்கிறேன்.

சொக்கநாதன் கோயில் வழியாக எங்களூருக்குச் செல்லும் குறுகிய மணற்சாலையில் பெரும்பாலும் வசதியுள்ளோர் வைத்திருக்கும் வில் என்ற கூண்டு வண்டிகளும் விவசாயத்திற்கு உபயோகப்படும் கட்டைவண்டிகளுமே எப்போதாவது செல்லுவதைக் காணமுடியும்.

கால் நடையாகச்செல்லும் அநேகர் இந்த திருப்பத்திலிருந்து  கிழக்கு நோக்கி வயல்களின் குறுக்கே ஒருகிலோமீட்டர் தூரம் கடந்து எங்களூர் அய்யூரை அடைவது வழக்கம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை  பரந்து விரிந்து கிடக்கும் வயல்வெளிகள் விளைச்சல் காலங்களில் பச்சைப்பசேலென்றும் அறுவடைக்காலங்களில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் தோன்றி  கண்களுக்கு விருந்தளிக்கும்.

விவசாயக்காலங்களில் வயல் வரப்புக்களில் நடக்கும் போது காலின் கட்டவிரலை வரப்புகளில் அழுந்த ஊன்றி அடியெடுத்து வைக்கவேண்டும். ஊருக்குள் புதிதாக வருவோர் இதையறியாமல் வரப்புகளில் சறுக்கும்போது ' என்ன ஊரப்பாயிது ! ' என்று முனகுவது இதைவிட உயர்வான ஊர்களும் இருப்பதை எனக்கு உணர்த்தும். இடையிடையே சிறிதும் பெரிதுமான நீரோடைகளைக் கடந்து ஊருக்குள் நுழையும்போது ஏதோ புதிய சாதனையை நிகழ்த்தியதைப்போன்ற உணர்வைப் பெற நேரிடும்..

நீண்ட சதுரம் போன்று அமையப்பெற்ற எங்களூரின் மேற்கே திருவாரூர் - திருத்தருப்பூண்டி நெடுஞ்சாலை செல்லுகிறது. ஊரின் தென்மேற்கு மூலையில் ஆலத்தம்பாடியும் வடமேற்கு மூலையில் கச்சனமும் இருக்கின்றன. இரண்டுமே சற்று பெரிய கிராமங்கள்தாம். ஊருக்கு வடக்கே கச்சனத்திலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் தார்ச் சாலை வலிவலம் கீவளூர் வழியாக நாகப்பட்டினத்தை அடையும். ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில். வடகிழக்கு மூலையில் கலைஞரின் திருக்குவளையும் நேர்கிழக்கே முருகன் தலம் எட்டுகுடியும் தென் கிழக்கு மூலையில் திருவாய்மூர் மற்றும் பழையன்குடியும் அமைந்திருப்பதைக்காணலாம். அனைத்தும் பாடல்பெற்ற தலங்கள்தாம்.பொதுவாகவே நாகை தஞ்சை மாவட்டங்களில் பாடல் பெற்ற தலங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காணமுடியும்.

சொக்கநாதன் கோயில் வழியாக வளைந்து நெளிந்து வரும் அந்த மணற்சாலை ஊரின் வடமேற்கு மூலையில் நுழைகிறது. நுழைவாயிலின் மேற்கு முனையில் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கும் அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயிலின் மூன்று நிலை ராஜகோபுரம் வருவோர்க்கு வரவேற்பளிக்கிறது.

கோயிலைச்சுற்றி உயர்ந்து காணப்பெரும் சுற்றுச்சவர் மதில்களும் வடக்கு மேற்கு ஓரங்களில் அகழிபோல் சூழ்ந்து காணப்பெறும் அல்லிக்குளமும் அழகுக்கு அழகு சேர்க்கிறது. ஏறகுறைய இருபது கருங்கற் படிகளில் ஏறி உயர்ந்து கணப்பெரும் பிரமாண்டமான வாயிலைக் கடக்கும்போது பெருமாளை தரிசித்து பவ்யமாக நிற்கும் கருடாழ்வாரை கணமுடியும். நீண்டு உயர்ந்து மூன்று பிரிவுகளாக அமையப்பெற்ற மண்டபத்தில் மையமண்டபத்தில் நுழையும்போது  பெருமாளின் கருவறை காட்சி தருகிறது. கருங்கல்லால் ஆன ஐந்தடி அடி உயர தம்பதி சமேதராக நின்றிருக்கும் மூலவர் பெருமாளும் ஓரடி முன்னால் காணப்பெரும் சின்னஞ்சிறிய ஐம்பொன்னால் ஆன உற்சவமூர்த்தியும் எங்களூருக்கே அச்சாணியாக இருந்திருக்கிறார்கள். எண்ணையில் எரியும் அகல் விளக்குகளின் சன்னமான விளக்கொளியில் பெருமாளின் தோற்றம் பார்ப்பதற்கு பிரமிக்கத்தக்கதாய் இருக்கும்.

கருங்கற் பாரைகளோ கருங்கற்கள் நிறைந்த குன்றுகளோ சிறிதும் கிடைக்கப்பெறாத கீழ்தஞ்சை மாவட்டத்தில் எங்களூரைப்போன்று ஏராளமான கோயில்கள் காணப்படுவது வியப்பானதுதான். மெல்லிய செங்கற்களை சுண்ணாம்புக்காரைகள் கொண்டு கட்டப்பெற்ற அகன்ற பிரகாரம் , அதனை காத்து நிற்கும் சுற்றுச்சுவர் காண்பதற்கு பிரமிப்பூட்டும். ராஜகோபுரத்தின் இருபுரமும் அமையப் பெற்ற இரு மண்டபங்கள் பெருமாளுக்கு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியாகவும் அர்சகர் குடியிருக்கும் குடிலாகவும் இருந்திருக்கிறது. காரைகளைக்கொண்டு கிருத்துவ தேவாலயங்கள் போன்று வளைவாக அமைக்கப்பெற்ற மேற்கூரைகள் அன்னாளின் கட்டிடக்கலைத்திறனை வெளிப்படுத்தும்.

        கழுத்தில் மெல்லிய வெள்ளைக்கோடுகளை உடைய ஏராளமான மணிப்புறாக்கள் குறுக்கும் நெடுக்கும் பறந்து பெருமாளோடு தங்களுக்கிருக்கும் நெருக்கத்தை பறை சாற்றும். கோபுரத்தின் இரண்டாம் நிலை மாடத்தில் இரண்டு கழுகுகள் நீண்டநாட்கள் குடியிருந்தது என் நினைவுகளில் இன்றும் பசுமையாகவே இருக்கிறது. காலை நேரங்களில் பெருமாளின் தூதுவராக எங்கோ பறந்து செல்வதும் பொழுது சாய்ந்ததும் அவைகள் எங்கிருந்தோ பெருமாளுக்கு புதிய செய்திகளுடன் திரும்புவதும் ஒவ்வொரு நாளும் காண நேரிட்டிருக்கிறது.

கோயிலின் எதிரே காணப் பெரும் சன்னதித்தெருவில் எனக்குத்தெரிந்து ஐந்து வீடுகளே இருந்திருக்கின்றன. கோயிலின் வாயிலில் வடக்கு நோக்கி காணப்பெரும் நாட்டு ஓடுகள் வேயப்பெற்ற முதல் வீடு அப்போது எங்களுடையதாய் இருந்தது. வீதி முழுதும் வரிசையாக வளற்கப்பட்ட வேம்பு மரங்கள் மாலைக்காற்றுக்கு மருத்துவமணம் வீசும். கோவிலுக்கு எதிரே கிழக்கு மேற்காக  அமையப்பெற்ற அந்த வீதியின் முனையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலும் கோயிலின் வடபுரம் பரந்து விரிந்து காணப்பெரும் சம்மன் குளமும் ஊருக்கே ஆதாரமாய் இருந்திருக்கிறது.

வருடத்தின் அத்தனை காலங்களிலும் நீர் நிறைந்து காணப்படும் சம்மன் குளமும் கரையோரத்தில் உயர்ந்து பரந்து ஓயாது ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் அரசமரமும் அய்யூர் எப்போதும் விழிப்போடு இருப்பதை உணர்த்தும்.

பிள்ளையார் கோயிலில் இருந்து தெற்கே திரும்பி கிழக்கு மேற்காக நாலய்ந்து தெருக்களுடன் விரிந்து பரந்து கிடக்கிறது அய்யூர் கிராமம். ஊரெங்கும் தென்னை , புளிய மரங்களும் ஆங்காங்கே மூங்கில் தோப்புகளும் நிறைந்து காணப்பெறும் .ஊருக்கு வெளியே வயல்வெளிகளில் ஆங்காங்கே வரிசையாக பனைமரங்கள் காட்சி கொடுக்கும்.

எனக்குத் தெரிந்து மொத்தமே இறுபத்தய்ந்து குடும்பங்கள்தாம் அந்த ஊரில் இருந்திருக்கின்றன. ஊரைச்சுற்றி இருந்த  பெரும்பாலான வயல்வெளிகள் இந்திருபத்தைந்து குடும்பங்களுள் நான்கைய்து நிலக்கிழார்களுக்கே சொந்தமாயிருந்தது. மீதியுள்ள குடும்பத்தில் பெரும்பாலோர் அந்த நான்கய்ந்து மிராசுகளை ஒண்டியே வாழ்ந்து வந்தனர். சலவைத் தொழிலாளி ஒருவரும் முடிதிருத்தும் தொ.ழிலாளி ஒருவரும் மரவேலை செய்யும் ஆசாரி ஒருவரும் அதில் அடங்குவர். அவர்களுக்கு கூலியாக நெல்மணிகளே அளக்கப்பட்டன. அந்த குடும்பங்களில் பெரும்பாலானவை தெலுங்கு கலந்த தமிழையே தங்களுக்குள் பேச நேரும் போது பயன்படுத்தி வந்தனர். விந்திய மலைக்கப்பால் செழித்தெழுந்த விஜயநகரப் பேரசு மதுரை தஞ்சையை கைப்பற்றிதன் நீட்சியே தெலுங்கு மொழியின் ஊடுருவல் என்பதை பின்னால் தெரிந்துகொண்டேன்.

ஊரைச்சுற்றி காணப்படும் வயல்வெளிகளுக்கிடையே ஆங்காங்கே காணப்படும் மணற் திட்டுகளில் குடிசைவீடுகள் காணப்படும். இந்த மிராசுகளின் நிலப்பரப்பில் பகல் முழுதும் பாடுபடும் தலித்மக்கள் இரவு நேரங்களின் ஓய்வுக்கான இடமாகவே அந்த குடிசைகள் இருந்தன.

எங்கள் வீடு உட்பட இரண்டொரு வீடுகளில் இரட்டை மாடுகள் பூட்டப்பெரும் கூண்டு வண்டிகள் இருந்திருக்கின்றன. ஆலத்தம்பாடி அம்மனூர் திருக்குவளை போன்ற பக்கத்து கிராமங்களில் இயங்கிவந்த டூரிங் தியேட்டர்களில் திரையிடப்படும் திரைப்படங்களை குடும்பத்தினர் காண்பதற்கும் புற்றடி மாரியம்மன் எட்டுகுடி பழையன்குடி கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்கும் இந்த இரட்டை மாட்டு வண்டிகள் பயன்பட்டன.

தீபாவளி பொங்கல் கார்த்திகை மற்றும் நவராத்ரி போன்ற பண்டிகைகள் மறக்காமல் கொண்டாடப்படும்.  அப்போதே பெரும்பாலான குடும்பங்களின் இளைய தலைமுறையினர் பெருநகரங்களை நோக்கி நகரத்தொடங்கியிருந்த நேரம். சுத்திகரிக்கப்பெற்ற குடிநீர்  மின்சாரம் மருத்துவசதி சாலைவசதி எதனையும் அய்யூர் அப்போது பார்த்ததில்லை. நாடு விடுதலை பெற்று பண்டிதநேரு அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை அறிவித்த சமயம்.      

ஆலத்தம்பாடி அஞ்சல் நிலையத்திலிருந்து வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது இந்த ஊருக்கு தற்காலிக ஊழியர் தாமோதரநாயுடு தபால்களைக் சுமந்து வருவார். இரண்டு கால்களால் மாறிமாறி மிதித்து அவர் சைக்கிளில் வருவது அன்று எனக்கு வியப்பாக தோன்றும். மித்திரன் கல்கி போன்ற பத்திரிக்கைகளையும் தாமோதரநாயுடுவே கொண்டு வருவது வழக்கம். அதை விட்டால் வத்தலான இரட்டைமாடுகள் பூட்டப்பெற்ற விவசாயத்திற்கான கட்டை வண்டிகள் எப்போதாவது வருவதைக் காணமுடியும்.

இந்த ஐந்தாறு மிட்டா மிரசுகளுக்கென்று தனித்தனியே குளங்களும் அய்யூரில் இருந்திருக்கின்றன. வரட்சியான காலங்களில் இந்த குளங்களில் இருந்து நீரை வெளியேற்றி மீன்கள் பிடிப்பதுண்டு.  ஒரு சமயம் ஒரு குளத்திலிருந்து நீரை அகற்ற ஆலத்தம்பாடியிலிருந்தோ திருத்தருப்பூண்டியிலிருந்தோ ஒரு டீசலில் இயங்கும் மோட்டாரை கொண்டு வந்திருந்தார்கள். குளத்திலிருந்து தண்ணீர் உறுஞ்சப்பட்டு மோட்டார் வழியாக தண்ணீர் பீரிட்டடிக்கும் காட்சி அன்று என்னை உறக்கத்திலும் வியப்பில் ஆழ்த்தியது.

விவசாய காலங்களில் இரவிலும் பகலிலும் பெரும்பாலும் விழுப்புடனே காணப்படும் அந்த கிராமம்.     மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் எங்கள் கிராமத்துக்கு வந்து சேர ஏறகுறைய இரண்டு மாதத்திற்கு மேலாகும். அதன் பிறகே வயல்வெளிகளுக்கு நீர் பாய்ச்சி ஊரில் உள்ள நீர் நிலைகள் நிரம்பவேண்டும். அறுவடைக்குப்பிறகு பெரும்பாலும் ஊருக்கே ஓய்வுதான். வரண்ட காலங்களில் நீர் நிலைகளை தூர் எடுப்பதற்கும் வாய்க்கால் வரப்புகளை சீரமைப்பதற்கும் ஊரே முடுக்கி விடப்பட்டிருக்கும்.

இவையனைத்தும் இருக்கின்ற வசதிகளை தக்கவைத்துக்கொள்ள ஊரே முயன்று செயல்படுத்தியவைதாம். பின்னர்தாம் அரசு முயற்சிகள் மெல்ல மெல்ல ஊருக்குள் நுழையத்துவங்கின.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !