சனி, மே 07, 2011

பார்வையில் ஏற்பட்ட பழுது !

பாண்டியன்ஜி

திராவிட இயக்கம் சார்ந்த எல்லாருமே இரண்டு பொண்டாட்டிக்காரர்கள்தாம் என்று தன் தாத்தா கூறியதாக கிழக்கு பதிப்பகத்தைச் சார்ந்த திரு பா. ராகவன் தன் வலைப்பூவில் எழுதிய கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது.  பின்னூட்டமாக என் கருத்தை வெளிப்படுத்த முயன்ற போது வார்த்தைகள் அளவற்று போக வேர்களில் இடம் பெற நேரிட்டுவிட்டது.

திரு ராகவனின் தாத்தா தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச்சார்ந்தவராகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். ஒரு கூற்றை ஒரு சாரார் மீது பிரயோகிக்கும்போது அந்த கூற்றுக்கான காலத்தையும் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் ஒருசில விதிவிலக்குகளைத் தவிற ராகவனின் தாத்தா ஆவேசமாக குறிப்பிட்டதைப்போல இது போன்ற ஒழுங்கீனம் எந்த ஒருகட்சிக்கும் சொந்தமானதல்ல. ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்குமான அளவிகள் நாமே வகுத்துக்கொண்டவைதாம். அவை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. தேசத்துக்கு தேசம் வேறுபட்டும் நிற்கிறது.குமரி முதல் வேங்கடம் வரை இந்தியா ஒன்றானாலும் மாநிலத்துக்கு மாநிலம் திரைப்படங்களுக்கான ஒழுக்கம் சார்ந்த அளவு கோல் மாறுபட்டு நிற்பதே வலுவான சான்று. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெண்களுக்கான உடைகளில் கூட மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்பட்டு நிற்பதைக் காணலாம். .பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட பெருமளவில் விஞ்சி காணப்பட்டபோது ஒருமுறை நபிகள் பெருமான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து வாழ்வளிக்க ஆண்களுக்கு ஆணையிட்டார் என்று கேட்டிருக்கிறேன்.இது அன்நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கம். இந்த ஆண் பெண் விழுக்காட்டில் இன்றைய அரசுகூட முக்கியத்துவம் காட்டுவதைக் காணலாம் 
எப்போதோ அல்ல, 1967 லே என்று நினைக்கிறேன்.தொழில் கல்லூரி இறுதியாண்டு சுற்றுலா.முப்பது முப்பத்தய்ந்து மாணவர்களுடன் மேட்டூர் நீர்மின் நிலையத்தை பார்த்துவர சென்றிருந்தோம். ஈரோடு நகரிலிருந்து மேட்டூருக்கு பேரூந்தில் பயணிக்க நேர்ந்தது. இன்று மிகச்சாதாரணமாக , வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதப்படும் காட்சி அன்நாளில் எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வேறு ஒன்றுமில்லை.அங்காங்கே சாலையோரத்தில் பெண்கள் சைக்கிளில் சர்வ சாதாரணமாக பயணித்ததுதான். கூடைகளும் பெட்டிகளும் சுமந்து செல்லுவதை கணடோம். நடுத்தர மற்றும் இளம் வயது கொண்ட பல் வேறு பெண்கள் பெட்டிக் கடைகளிலும் பெரிய மற்றும் சிறிய உணவுக்கூடங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எங்களுக்கு பெரிதும் வியப்பைத் தந்தது.அன்நாளில் இது போன்ற காட்சிகளை தஞ்சை மண்ணில் நாங்கள் பார்க்க நேர்ந்ததில்லை.60 களில் கூட பெண்கள் பெரும்பாலும் கூண்டுக்குள்தான் நிரப்பப்பட்டிருந்தார்கள்.பருவ வயதை எட்டயிருக்கும் பெண்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதில்லை.இப்படியொரு சூழல் மாவட்டம் முழுதும் காணப்பட்டது.
காங்கிரசும் கம்யூனிஸ்டும் மட்டுமே அன்நாளில் ஆட்டம் போட்ட கட்சிகள்.ஆறுமாத விவசாயம் ஆறுமாத சோம்பேரித்தூக்கம் இப்படித்தான் பொழுதைக் கழித்தது அன்நாளைய தஞ்சை மாவட்டம்.திராவிட இயக்கங்கள தலையெடுக்காத அந்தக்காலத்திலேயே தஞ்சை மாவட்டம் முழுதும் இரண்டு ...மூன்று.. பொண்டாட்டி கலாச்சாரம் கொடிகட்டி பறந்தது மாவட்டம் முழுதும் பரவிக்கிடந்த பிற்படுத்தப்பட்ட , உயர்சாதியைச் சார்ந்த குறுநிலக்கிழார்கள் காங்கிரசின் காளைச்சின்னத்தை ஏற்றுக்கொண்டதைப் போல குறைந்தபட்சம் இரண்டு பேரையாவது பொண்டாட்டிகளாக பெற்றிருந்தார்கள்.அவர்கள் மட்டுமின்றி அடுத்த தட்டைச் சார்ந்த ஒருசிலரும்கூட இந்த ஒழுக்கச்சிக்கலில் சிக்கியதுண்டு.ஜாதி வெறி தலை விரித்தாடிய அந்த மண்ணில் இந்த ஒரு விஷயத்தில் கீழ்ஜாதி மேல் ஜாதி என்ற பாகுபாட்டை எவரும் பார்த்ததில்லை என்று அறிந்திருக்கிறேன். இந்த ஒழுங்கீனம் 60 வரை சர்வ சாதாரணமாக நீடித்ததை பார்த்திருக்கிறேன்.
திராவிட இயக்கத்தினர் தங்கள் இயக்கம் சார்ந்த பிரச்சாரங்களை மக்களிடையே எடுத்து வைக்க நாடெங்கும் பயணிக்க வேண்டியிருந்தது. கொண்ட கொள்கைகளை மக்களிடையே சேர்க்க நாடகம் திரைப்படம் போன்றவைகளில் பங்கேற்க வேண்டியிருந்தது.ஆண் பெண் இணைந்து பணியாற்றும் சூழல்களாலும் அன்நாளைய வருமை மிக்க வாழ்க்கைச் சூழல்களாலும் இம்மாதிரியான ஒழுக்கக்கேடுகள் ஆங்காங்கே ஏற்பட்டன.மேலும் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் மற்ற தாத்தாக்களைப் போலல்லாமல் மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டனர். கலைத்துறையிலும் அவர்களது பங்களிப்பு பெருமளவில் இருந்ததால் அவர்களது ஒவ்வொரு சறுக்கல்களும் மக்களால் பேசப்பட்டன.
மற்றவர்கள் ஒழுங்கீனம் அறியப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டது.
.கல்வியறிவு முற்றிலும் இல்லாமையும் அந்நாளில் பரவிக்கிடந்த ஏழ்மையும் மட்டுமே இம்மாதிரியான ஒழுக்கக்கேடுகள் நிகழ்ந்ததற்கு தலையாய கரணமாக இருக்கக்கூடும். ஏறத்தாழ 60 களிலிருந்து இன்று வரை மக்களின் பேராதரவைப் பெற்ற திரைப்படங்களையோ சிறுகதை நாவல் புதினங்களையோ திரும்பிப் பார்க்கும்போது இது போன்ற ஒழுங்கீனத்தை ஏற்படுத்தி அதற்கான ஞாயங்களையும் சொல்லியதுதான் இந்த எழுத்தாளர் வர்கம். எழுத்துக்களில் செய்யப்பட்ட இந்த வக்கிரங்களை இந்த சமூகமும் அங்கீகரித்ததுதான் வேடிக்கை. 
கட்டிய மனைவியை முழுமையாக காதலித்து நெஞ்சம் நிறைந்திருக்கும் எவரும் எத்தனை கடல் கடந்தபோதும் இன்னொரு ஏற்பாட்டுக்கு முயலுவதில்லை என்றே கருதுகிறேன்.
காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலம் மறந்து கோண்டே வருகிறது.இன்னும் ஒருசாரார் அன்நாளில் கோவணம் கட்டி நின்றதாக எழுதுவதை தவிற்க வேண்டும். நாகரீக காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.
பொதுவாக ஒழுக்கக்கேடு ஒரு பிரிவைச்சார்ந்ததல்ல. நம் பார்வையில் ஏற்பட்ட பழுது. 

இடுகை 0054

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !