திங்கள், மார்ச் 24, 2014

கணநேரத்தில் கலைந்துபோன நிஜம் !

பாண்டியன்ஜி

என்னோடு மின் வாரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஒரு சிலநண்பர்களோடு கடந்த மார்ச் 2014 15 , 16 தேதிகளில் ஏற்காடு குளிர் பிரதேசத்தில் கூடிக் களித்திருந்தேன்.அதன் பிறகு அது பற்றிய ஒரு விரிவான பதிவை இணைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள இருந்த நிலையில் , ,
என் அம்மாவின் மரணத்துக்கு பிறகு இன்னொரு இழப்பையும் ஏற்க வேண்டியதாயிற்று.
கடந்த 2014 மார்ச் 22 ஆம் தேதி  சனிக்கிழமை காலை  10 மணியளவில் எனது இரண்டாவது சம்பந்தியும் எனது இளையமகள் சவீதா மோகன் பாபுவின்  மாமனாருமான
ஆவடி   திரு என் நவநீத கிருஷ்ணன்   எங்களைவிட்டு பிரிந்தார்.
பத்தாண்டுகளாக நாங்கள் கொண்டாடிய நட்பும் உறவும் அவரைப் பொருத்தமட்டில் ஒருகணத்தில் இல்லாமற் போயிற்று.என் இளைய மகளுக்கும் மருமகனுக்கும் எனக்குப்பிறகு துணையாயிருப்பார் என்று பெரிதும் நம்பிய என் எண்ணம் சற்றும் எதிர்பாராமல் பொடிப் பொடியாயிற்று.
மத்திய அரசின் பெருமைவாய்ந்த நிறுவனமான ஆவடி இராணுவ தளவாடத் தொழிர்ச்சாலையில் மூத்த வரைவாளராக பணியாற்றி சமீபத்தில் ஒய்வுற்றவர் திரு நவநீத கிருஷ்ணன்.
நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் மிக்க திரு கிருஷ்ணன் பார்ப்பதற்கு களையான முகத்தையும் பழகுதற்கு இனிமையான குணங்களையும் பெற்றவர்.. கம்பீரத்தோற்றம் மிக்க அவருடைய சாவை எங்களைப்பொருத்தமட்டில் ஆவடியில் ஒரு மலை சரிந்தது என்றே சொல்லலாம். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளத்தோன்றும் அவர் குணம் போலவே அவருடைய மரணமும் கைக்கெட்டிய  மலரைப்பறிப்பது போல இயற்கை எளிதாக எடுத்துக்கொண்டது.
நவீன யுகத்தில் அபரிதமான பிறப்பு விகிதத்தைக்கூட தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால் கருணையற்ற சாவுகளை நம்மால் தள்ளித்தான்  போடத்தான்  முடிந்திருக்கிறது.

எதையும் ஏற்கும் இதயம் வேண்டுமென்றார் அண்ணா. இதையும் தாங்குதற்கான திடமும் மேற்கொண்டு செயல்பட வேண்டிய ஆற்றலையும் நாங்கள் பெறவேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !