செவ்வாய், மார்ச் 25, 2014

செயலற்றவன்


வில்லவன் கோதை

‘ இதாண்டா  ஒனக்கு லாஸ்ட் சான்ஸ் ! மிஸ் பண்ணிடாதே. அவனவன் பணத்த மடில கட்டிட்டு ஓயெண்டம் போஸ்ட்டுக்கு தவமா கெடக்கிறான்.
பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்ண்ணு முடிச்சி லைப்ல ஹையா செட்டிலாயிடலாம் ’
உற்சாகமாக பேசினான் வைகுண்டம்.
‘ அவன் சொல்றாண்ணு  கேக்காதே. மொதல்வேலையா எஸ்சிய பாத்து எம்மார்டி இல்ல எஸ்சஸ்ல ரீபோஸ்டிங் வாங்கிற வழிய பாரு. அப்பதான் ஒழுங்கா ரிட்டயர்டு ஆவ. இன்னிக்கு இருக்கிற நெலமல அங்கல்லாம் ஒன்னால ஒருநாளைக்கு தாக்கு புடிக்க முடியாது. ’
அவசரம் அவசரமாக குறுக்கிட்டான் மணி.
இரண்டுபேருமே என்மேல் பாசமும் நேசமும் மிக்க நண்பர்கள்தான். அவரவர் பார்வையில் பட்டவைகளைத்தான் பகிர்ந்தார்கள்.
 ஒருகாலத்தில் இந்த சமூகத்தில் ஒழுங்கீனங்களாக கருதப்பட்ட அத்தனைக்கும் எதிராக வளர்ந்தவன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த மின்வாரியத்தில் மக்கள் தொடர்பற்ற தொழில்நுணுக்கப் பிரிவுகளில் வாழ்ந்தவன் .இயல்பான என் சுபாவத்துக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற பணி.
இப்போது சற்றும் எதிர்பாராமல் எங்கள் வட்டத்திலேர்ப்பட்ட நெருக்கடியில் நான் தஞ்சை மின்வட்டத்துக்கு தள்ளப்பட்டேன். இருக்கின்ற இடத்தை தக்கவைத்துக்கொள்ள வலுவற்று படிப்படியாய் ஏறி பயனற்று தஞ்சைக்குப் பயணமானேன்.
திங்கட்கிழமை மதியம் தஞ்சை மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகத்துள் நுழைந்தபோது எனக்குள் ஒரு நம்பிக்கை ஒளி புலப்பட்டது. தற்போதைய மேற்பார்வைப்பொறியாளர் பாலகுமாரன்  எனக்கு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். முக்கியமாக என்னையும் என் நடத்தைகளையும் நன்றாக அறிந்தவர்.
எப்படியும் எனக்கேற்பட்ட இக்கட்டை களைந்துவிடமுடியும் என்ற நம்பிக்கையோடு நுழைந்து அறிமுகம் செய்துகொண்டேன். நான் இந்த வட்டத்துக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மேற்பார்வைப் பொறியாளர் தற்போதைய சூழலுக்கு வந்தார்.
‘ இப்போதைய அவசரத்தேவை ஓயெண்டம் வேக்கன்சியில் உங்களைப்போன்றவர்களை நிரப்புவதுதான். சவால்மிகுந்த மக்கள் நலப்பணிகளை எதிகொள்ள உங்களைப்போன்ற நாணயம்மிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும். மற்றபணி்கள் ஒரு பிரச்சனையே இல்லை. அவையெல்லாம் தானகவே இயங்கும்.
ஒங்கள டிஸ்ட்ரிபூஷன் செக்ஷன்ல போட்டுருக்கேன். நீங்க போய் செக்ஷன டேக்கோவர் பண்ணுங்க. . விஷ் யூ ஆல் த பெஸ்ட். ‘
ஐந்துநிமிட உரையாடலுக்குப்பின்  கண்களிலிருந்த கண்ணாடியை கழற்றி கைத்துண்டால் துடைத்தவாறே என் குழப்பங்களுக்கு பலமான முற்றுப்புள்ளியிட்டார் மேற்ப்பார்வைப் பொறியாளர்.
இப்போதெல்லாம் அரசும் ஆளும்வர்கமும்  அடிக்கடி ஏற்படுத்துகிற நெருக்கடியில் அவரும் சிக்கியிருக்கக்கூடும்.  அவர் என்ன செய்யமுடியும்.
நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் வெளியேறினேன்.

ஒரு நகரத்தின் குறைந்தபட்ச வசதிகளும் ஒரு கிராமத்தின் ரம்மியமான  அடையாளங்களும் பரவிக்கிடந்த சிற்றூரில் அந்த மின்வாரிய பிரிவு அலுவலகம் இருந்தது. ஏரத்தாழ ஐந்து பஞ்சாயத்து ஒன்றியங்கள்வரை அதனுடைய ராஜாங்கம் எட்டிக்கிடந்தது.  இருபதுக்கு மேற்பட்ட களப்பணியாளர்களும் பத்துக்கு மேற்பட்ட வருவாய் ஊழியர்களும் பணியில் இருந்தனர்.
மேற்ப்பார்வைப்பொறியாளர் குறிப்பிட்டதைப் போல அந்த பிரிவு அலுவலகம் ஒரு சவால் நிறைந்த பணியாக இருப்பதை உணர்ந்தேன். கடந்த ஒருவருடத்துக்கு மேலாக பொறியாளர் எவருமின்றி மேலதிகாரிகளின் ரிமோட் கண்ரோலிலேயே அந்த அலுவலகம் இயங்கி வந்திருக்கிறது.
கையூட்டு கொடுத்தும் கையூட்டு வாங்கியும் பழகிப்போனவர்கள். அரசின் அதிகாரங்களை  கைப்பற்றி ஆட்டம் போட்ட ஆளும் வர்கத்தினர். படியளக்கும் பணியில் பொறுப்பேதுமின்றி சுற்றித்திரியும் அதிகாரிகள்
இத்தனைக்கும் ஈடு தர வேண்டிய பதவி.
காலை வேளைகளில் அலுவலகம் எப்போதுமே பரபரப்பாயிருக்கும். மாதாந்தர மின்கட்டணம் செலுத்துவதற்கும் மின்இணைப்பு சார்ந்த சிக்கல்களை களைவதற்கும்  வாடிக்கையாளர்கள் பெருமளவில் முற்றுகையிடுவார்கள்.
அதற்கு முன்னதாகவே களப்பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அன்றைய பணியை பகிர்ந்தளித்துவிடுவேன். வருவாய் அலுவலர்களுக்கான பணி முன்னதாகவே நிர்ணயிக்கப் பட்டிருக்கும். பெரிதான குழப்பங்கள் ஏற்படுவதைத்தவிற்க பணியின்றி ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் திரண்டுநிற்பதை எப்போதுமே ஊக்கிவிப்பதில்லை.
பணம்  காசு  துட்டு  விஷயத்தில் சுத்த சைவமா இருந்து எதிர்பாராமல் வருகிற  இடுக்கண்களை எதிர்கொள்ள எப்போதுமே தயாராக இருந்தேன்.
இந்த நிர்வாகம் திருந்தவே திருந்தாது என்று எப்போதோ தலைமுழுகியவர்கள் அடுத்த ஆறுமாதங்களிலேயே என்னை புரிந்து கொண்டார்கள். இப்படியும் அரசு அதிகாரிகள் இருப்பதை அவர்கள் நம்பினார்கள்.

ழக்கம்போல் நேற்று நடந்த பணிகளையும் இன்று எதிர்கொள்ளவேண்டிய பணிகளையும் உதவிச்செயற்பொறியாளரிடம் கலந்துகொள்ள தெருமுனையிலிருந்த பாலுத்தேவர் இரும்புக்கடைக்கு கிளம்பினேன்.
அப்போதெல்லாம் இவ்வலகத்துக்கென்று தனியாக தொலைபேசி எதுவும் இருந்ததில்லை. இன்றைய கைபேசிகளின் ஊடுருவலும் அப்போது ஏற்படாமலிருந்தது. பாலுத்தேவரின் இரும்புக்கடையிலிருந்த தொலை பேசி எங்கள் அலுவலகம் சீராக இயங்க பெரிதும் துணையாக இருந்தது . மாத இறுதியில் அதற்கான கட்டணத்தை கணக்கிட்டு கொடுப்பதுண்டு. .
‘ முக்கியமான ஒர்க்ஸ் எதுவுமில்லேண்ணா களத்தூர் ஏரியா இன்ஸ்பெக்ஷன் போய் வாங்களேன்.   ’
தொலைபேசியில் யோசனை சொன்னார் உதவிச் செயற்பொறியாளர். மாதத்தின் முதல் வாரமாயிருந்ததால் அலுவலகத்தில் பரபரப்பான பணி. நான்கைந்து நாளாக அலுவலகத்திலேயே முடங்கிக்கிடந்த எனக்கும் அவர் சொன்னது சரியாகப்பட்டது .கையெழுத்துக்கு வைக்கப்பட்டிருந்த கோப்புகளை பார்த்துவிட்டு களத்தூர் கிளம்பத்தயாரானேன்.
மரவாடி நடராஜன் எதிரே நின்றார்.
‘ ஒங்க அப்ளிகேஷன் எண்ட்ரி ஆயிடுச்சி.வீணா அலைய வேண்டாம். ரெண்டு நாள்ல ஒங்களுக்கு சர்வீஸ் கெடச்சிடும். ஒங்களதாண்டி  ஒங்களுக்கு முன்னாடி யாருக்கும் சர்வீஸ் கொடுக்கமாட்டேன்.  இதுக்காக நீங்க யாரையும் பாக்கவேண்டாம். ‘
கிளி பேசுவதைப்போல இரண்டாவது முறையாக அவருக்கு நம்பிகையூட்டினேன்.
‘ சரி சார்  ! ‘
இப்போதும் திருப்தியற்றவராய் நகர்ந்தார் மரவாடி நடராஜன்.
பதினோரு மணிக்கெல்லாம் நானும் வருவாய் ஆய்வாளர் சீனுவாசனும் களத்தூர்    இன்ஸ்பெக்ஷனுக்கு சைக்கிளில் புறப்பட்டோம். ஊருக்கு மேற்கே செல்லும் தஞ்சை நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் மிதித்து வலதுபக்கம் திரும்புகிற மணற்சாலையில் இறங்கினால் களத்தூர் கண்களுக்குப்படும்.
இருபுறமும் வயல்வெளிகள். ஆங்காங்கே திட்டுதிட்டாக மக்கள் குடியிறுப்புகள். எரியாத தெருவிளக்குகளின் விபரங்களை குறித்துக்கொண்டோம். மின்சாரம் சார்ந்த குடிசை வாழ்வோர் குறைகளை கூடிய விரைவில் தீர்ப்பதாக சொன்னோம்.
வழியில் குறுக்கிட்ட பல்வேறு மின் இணைப்புகளை ஆய்ந்து விபரங்களை பதிவு செய்து கொண்டார்  சீனுவாசன்.
‘ த்தோ  தெரியுது பாருங்க சார். அதுதான் ஈஸ்ட்டர்ன் போர்ட்ஸ். இந்த டீட்டில ( d t ) ஒரே இண்டஸ்ட்ரியல் சர்வீஸ். பழம்பெரும் தேசியவாதி சீத்தாராம அய்யரோடது. ’
சீனுவாசன் சுட்டிக்காட்டிய திசையில்  பழமையான கட்டிடம் ஒன்று தென்பட்டது. நீண்டு நெளிந்து போன அந்த மணற்சாலையின் வலது புறத்தில் முன்பக்கம் கம்பிவேலி அமைத்து நொடித்துப்போன இரும்புக்கதவுகளுடன் நின்றது அந்த பழமையான காகிததொழிற்சாலை. உயரமான செங்கல் சுவரெழுப்பி சிமெண்ட் கூரை அமைத்திருந்தார்கள். அதைச்சுற்றி விரிந்து கிடந்த வயல்வெளிகள்.
துருஏறி உடைந்து தொங்கிக்கொண்டிருந்த இரும்புக்கதவை தள்ளி உள்ளே நுழைந்தோம். கரடு முரடான ஒலிகளுடன் இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருந்தது. சலசலவென நீரின் சத்தம்.
நீரில் நனைந்த நீண்ட நீண்ட அட்டைகளை ஐந்தாறு பெண் ஊழியர்கள் உள்ளேயிருந்து வரிசையாக வெளியில் உலரச்செய்து கொண்டிருந்தார்கள். தலையில் சுற்றிய முண்டாசுடன் ஒரே ஆண் தொழிலாளி இயந்திரத்தின் உச்சியில் இருந்தான்.
‘ செந்தாமர  ஏயி சார் வந்துருக்காங்க.  ஐயரு இல்லியா  ? ’
அண்ணாந்துபார்த்து பேசினார் சீனுவாசன்.
‘ இல்லிங்களே .காலேல திருவாலூரு போறதா சொன்னாரு. ! ‘
மேலேயிருந்த அந்த தொழிலாளி செந்தாமரை நிதானமாக கீழே இறங்கினான். சீனுவாசன் அவன் பதிலுக்கு காத்திராமல் தன்னுடைய பணியைத் தொடங்கினார். மின் சாதனங்களையும் மின் இணைப்பின் நேர்மையையும் தோண்டித் துருவி பதிவு செய்து கொண்டார். ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து வந்த நான் கட்டிடத்துக்கு வெளியே வந்தேன்.
கட்டிடத்துக்கு பின்புறம் ஒரு மின்கம்பமும் அதையொட்டி ஒரு  மோட்டார் அறையும்  தென்பட்டது. பின்னால் காணப்படுகிற வயல் வெளிகளுக்குறிய மின் இணைப்பாக இருக்கக்கூடும்.
அரசின் கொள்கை முடிவுப்படி விவசாய இணைப்பிற்கெல்லாம் எந்த கட்டுப்பாடும் இல்லாமலிருந்தது. அந்த அறையின் உச்சியில் எரிந்த ஒரு குண்டுபல்பு  மின்சாரம் இருப்பதையும் குழாய்  வழியே   பீரிட்டடிக்கும்  தண்ணீர் மோட்டார் இயங்கிக்கொண்டிருப்பதையும்  தெரிவித்தது.
இப்போது வயல்வெளிக்கு தண்ணீர் தேவையற்ற காலம்.
அருகில் சென்ற நான் மோட்டாருக்கான மின் இணைப்பை துண்டித்தேன்.
அதேசமயம்
‘  சார் அத நெருத்தா... ‘
மெதுவாக என்னைப்பின் தொடர்ந்த அந்த தொழிலாளி செந்தாமரை அவசரமாக ஏதோ சொல்ல வாயெடுத்து அடுத்தநொடி நிறுத்திக்கொண்டதை பார்த்தேன்
அதேசமயம் தொழிற்சாலையில் தண்ணீர் எழுப்பிய பேரொலி நின்று போயிற்று. எனக்கேற்பட்ட சந்தேகச் சிக்கல் இப்போது அவிழ்ந்தது.
விவசாயத்துக்கு கொடுக்கப்பட்ட இலவச மின்இணைப்பு அட்டைக்கம்பெனிக்கு ஆதாரமாயிற்று.
ஆழ்ந்து சோதித்து உண்மை விவரங்களை பதிவு செய்தார் சீனுவாசன். உண்மையை ஒப்புக்கொண்ட செந்தாமரை  இரண்டு சாட்சிகளுடன் கையொப்பமிட்டான்.
மின் இணைப்பை நிரந்தரமாக துண்டித்து முத்திரையிட்டேன்.
வாயிலைக்கடந்து சாலைக்கு வந்துவிட்டோம். எதிரே கனத்த சரீரத்தை சுமந்து கொண்டு சீதாராமய்யர் வந்து கொண்டிருந்தார். இரண்டு பச்சை இளனிகளுடன் ஒரு தொழிலாளி அவரை பின்தொடர்ந்து வந்தான்.
‘ சார்தான் ஏயி, சர்வீசுல ப்ராபளம் இருக்கே .. .’
என்னை அறிமுகப்படுத்திய  சீனுவாசன் இழுத்தார்.
 ‘அத பெருசு படுத்தாதீங்க. மேல எல்லாருக்கும் நன்னாவே தெரியும்..  நீங்க எளனிய சாப்பிட்டு போங்க.’
நிதானமாக எந்த சலனமுமின்றி பேசினார்  அய்யர்.
‘ பரவாயில்ல . இப்பதான் டீ சாப்டோம். வர்ரோம். ’
நேருக்கு நேர் பார்வையை தவிற்த்த நான் நகர்ந்தேன்..
‘ வாட்டர்தானே. சாப்பிட்டு போங்க சார். அதல்லாம் நான் சால்வ் பண்ணிகிறேன்  ‘
மறுபடியும் முயற்சித்தார் சீதாராமய்யர்.
‘ இல்ல. நாங்க வர்ரோம்..’
நானும் சீனுவாசனும் அந்த இடத்தைவிட்டு அகன்றோம்.
நான்குமணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தபோது மரவாடி நடராஜன் சன்னல் வழியாக வணிக ஆய்வாளரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
ஊழியர்கள் முயற்சித்தாலும் வாடிக்கையாளர்கள் அவர்களை விடப்போவதில்லை என்பதை புரிந்துகொண்டேன். கையூட்டு கலாச்சாரத்தை கைக்கெட்டியவரை விதைப்பதில் வாடிக்கையாளருக்கு பங்கு இல்லாமலில்லை.

ஒரு வாரம் கடந்து போயிற்று.
‘சார்   அந்த களத்தூர் சீத்தாராம அய்யர்கிட்ட ஒரு லெட்டர் வாங்கிகிட்டு அந்த சர்வீச ரெஸ்ட்டோர் பண்ண ஏடிஇ சொல்லச்சொன்னார்..’
தயங்கித்தயங்கி மெல்ல இழுத்தார்  ஐ ஏ சீனுவாசன்.
மெல்ல நிமிர்ந்து பார்த்தேன்.
‘அவரு எஸ்சிக்கெல்லாம் ரொம்ப வேண்டியப்பட்டவர்.  ஒங்க ஏயிகிட்ட சொல்லுய்யாண்ணு அவரப்பாக்கிற ஒவ்வொருதடவையும் சொல்றாரு ‘
‘ஆகட்டும் பார்க்கலாம்’
அவசரமாக வார்த்தைகள் எதனையும் வெளியிடவில்லை.
பழம்பெருந்தலைவர் காமராஜரைப்போல பிரச்சனைக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளியிட்டேன். இந்த ஒருமாதத்தில் சீனுவாசன் இந்த பிரச்சனையை எழுப்புவது ஐந்தாவது முறை.
களத்தூர் ஆய்வுக்கு அடுத்தநாளே விரிவான வரைவு ஒன்றைத்தயாரித்தேன். ஒருவகைக்கு கொடுக்கப்பட்ட வசதியை இன்னொருவகைக்கு பயன்படுத்தி வாரியத்துக்கேற்பட்ட  இழப்பை முன்தேதியிட்டு கணக்கிட்டு ஒருவாரத்திற்குள் செலுத்துமாறு சீத்தாராம அய்யருக்கு பதிவு அஞ்சல் செய்தேன். அதேசமயம் அதனுடைய நகல்களை மேலதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்தேன்.
இருந்தபோதும் இந்த பிரச்சனை கிணற்றில் போடப்பட்ட கல்லாயிற்று..
அய்யரோ என் மேலதிகாரிகளோ என் கடிதங்களை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
ஒருமுறை இதுபற்றி நான் ஏடியியிடம் நினைவூட்டியபோது அதை அவர் கவனித்ததாக தெரியவில்லை.  அதேசமயம் இதுபற்றி நேரடியாக எந்த யோசனையைம் அவர் தெரிவிக்கவில்லை.
சீனுவாசன் மூலமாக அதிகாரபூர்வமற்ற உத்திரவுகள் அவ்வப்போது  வந்து கொண்டிருந்தன.
நானும் என் முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
மேலதிகாரிகளின் மக்கள் விரோத கட்டளைகளுக்கு ஊழியர்கள் அடிபணியவேண்டிய அவசியம் இல்லையென்று இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் கூட பேசுகிறது. நிர்வாகத்தில் சுமுகமான உறவை விரும்பும் எத்தனை பேர்  இவற்றையெல்லாம் ஏற்கக்கூடும்.
ஒரு வயதான விதவை வீட்டுத்திண்ணையில் வயிற்றுப் பிழைப்பிற்காக பகல்வேளைகளில் தையல்மெஷினோடு போராடிய போது அவருடைய மின்இணைப்பு வணிகத்துக்குறிய வகையாக மாற்றப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த மூதாட்டியின் கட்டணவகையை வீட்டுக்குறியதாக மாற்றித்தர இவர்களுக்கு சட்டம் உடனடியாக இடம் தரவில்லை.
நேர்பார்வைக்காக கடிவாளம் அணிந்த குதிரைகளுக்கு புற்கள் இருக்குமிடம் மட்டும் கண்களுக்கு எப்படியோ தெரிகிறது.

பொதுவாக இவற்றையெல்லாம் எதிர்கொள்ள துணிவும்ஏற்ப்படுகிற  இழப்புகளை ஏற்கும் மனநிலையும் வேண்டும். என்னைப்பொறுத்தவரை  அத்தனை துணிவு எனக்கில்லாவிடினும் ஞாயமான வழிகளில் இடறுகிறபோது அதற்கான இழப்புகள் எதனையும் எளிதாய் ஏற்பவன்.
           அன்று ஞாயிற்றுக்கிழமை. அலுவலகங்களுக்கு விடுமுறைதான் என்றாலும் விளக்குகளும் மின் விசிரிகளும் இயங்கியாக வேண்டும்  தொலைக்காட்சியில் அப்போது வாரந்தோரும் ஒளிபரப்பப்பட்ட மகாபாரதம் தெரிந்தாகவேண்டும். கிடைக்கின்ற மின்சாரம் தடையின்றி கிடைக்கவேண்டும்.
எல் ஐ யும் நானும் அலுவலகத்தில் இருந்தோம்.
அப்பாவுக்கு உடல் நலமில்லையென்ற தகவலுடன் தம்பி வந்திருந்தான். இரத்த அழுத்தம் கூடியிருக்கும் .   மிச்சமிருந்த குடும்பத்தின் சொத்து.
நாற்பது கிலோமீட்டருக்கப்பாலிருந்த நகரத்தில் இருந்தது எங்கள் வீடு.
           ‘அப்ப நீங்க கெளம்புங்க சார். நான் பாத்துகிறன்.’
என்முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த எல் ஐ பேசினார்.
 தம்பியும் முழுமையான விபரங்களைச்சொல்லவில்லை.
அலுவலக பொறுப்புகளை திரும்பத்திரும்ப சொல்லி எல்ஐயிடம் முக்கியமான சாவிகளை ஒப்படைத்தேன் ஐஏவுக்கும் மற்றவர்களுக்கும் அந்த வாரத்துக்கான பணிகளை குறித்துக்கொடுத்தேன். முக்கியமாக திங்கட்கிழமை ஏடியிக்கு தகவல் தரச்சொன்னேன்.
அப்பாவின் உடல்நிலை ஒருவேளை மோசமாகியிருக்கக்கூடும். இல்லையென்றால் அழைத்துப்போகுமளவுக்கு தம்பி வந்திருக்க மாட்டான். முழுவிபரத்தை அறிவதற்கு துணிவின்றி அவனோடு அடுத்த அரைமணியில்  கிளம்பினேன்.
நான் நினைத்ததைப்போலவே அவர் உடல்நிலை பெரிதும் மோசமடைந்திருந்தது. உயர் இரத்தஅழுத்தத்தின் அடுத்த நிலைக்கு அவர் நகர்ந்திருந்தார். கழுத்துக்கு மேல் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டிருப்பதாக டாக்டர் விஜயராகவன் சொன்னாராம். இப்போதையை போல் தனியார் மருத்துவ வசதி அன்னாளில் இல்லை. அதற்கான செலவினங்களையும் ஏற்கிற பலமும் எங்களிடம் இல்லை. அம்மாவும்  தம்பிகளும் செய்வதறியாமல் கண்கலங்கி நின்றார்கள்.
நீண்ட பெஞ்சில் படுக்கையிலிருந்த அவர் கண்கள் இமைக்காமல் பார்ப்பது மட்டும் புரிகிறது.ஏதேதோ சொல்ல நினைக்கிறார் என்பதை உணருகிறேன். எதுவுமே நடக்கவில்லை. அடுத்த இரண்டு நாட்கள்தான் இருந்திருப்பார். எல்லாமே முடிந்து போயிற்று.எங்கள் துயரங்களைச்சொல்லி அழ இப்போது அப்பா இல்லாமற்போனார்.

பத்து நாட்களுக்கு மேலாயிற்று. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். பொறுப்பான பதவியிலிருந்த எனக்கு அலுவலகம் சார்ந்த நினைவுகள் அரவே இல்லாமற் போனதை உணர்கிறேன் .இயல்பாக அப்படி இருப்பவனுமல்ல.
ஒரு நாள் மதியம் ஐஏ சீனுவாசன் வந்தார்.
‘கவலப்படாதீங்க சார் ! இதான் லைப் சைக்கிள். உங்களுக்கு கடமை இருக்கு . ஒங்க பேமிலி மட்டுமில்லாம ஒங்களுக்கு கீழ நாங்களும் இருக்கோம். அடுத்த வேலைய பாருங்க.   ’
அரைமணிக்கு மேல் பேசிக்கொண்டிருந்த சீனுவாசன் கிளம்பும்போது இன்னொரு தகவலையும் சொன்னார்.
‘ நீங்க இந்த செக்ஷனுக்கு வந்து ரெண்டு வருஷம் இருக்கும்ண்ணு நெனைக்கிறேன். ஒங்கள பழயபடியே ஒங்க சர்க்கிளுக்கு அப்சார்ப் பண்ணிக போராளாம்..முந்தாநேத்து இஈ ஆபீசுக்கு ஆடர் வந்தருக்காம்.’
சலனமற்றுக்கிடந்த எனக்குள் அசைவுகள் ஏற்படுவதை உணர்ந்தேன்.
‘வாணான்ணு சொல்லிர்டா.  நீ இந்தப்பக்கம் இருக்கிறது எனக்கு செத்த ஆறுதலா இருக்கும்.’
கூடத்தில் சாய்ந்திருந்த அம்மா குறுக்கிட்டது  தெரிகிறது. எனக்கும் அப்படியொரு எண்ணம் ஏற்பட்டது.

அடுத்த கணம் மெல்ல மெல்ல அலுவலகநினைவுகள் என்னை பற்றிக்கொண்டது. திங்கட்கிழமைதான் அலுவலில் இணையவேண்டும். ஞாயிற்றுக் கிழமையே அலுவகம் கிளம்பினேன். இனியும் முடங்கிக்கிடக்க மனம் ஒப்பவில்லை. லைன் மேன் பாஸ்கரும் ஹெல்ப்பர் வீரப்பனும் விடுமுறையில் பொறுப்பில் இருந்தார்கள்.
அறையைத்திறந்து பத்து நாட்களாக சேர்ந்திருந்த  கோப்புகளை புரட்டினேன்.
.          ‘சார் அந்த களத்தூர் மேட்டர் குளோசாயிடுச்சி. அடிஷனல் சாரஜ் ஏயி கையெழுத்து போட்டு ஏடிஈ க்ளோஸ் பண்ணிட்டார்.சர்வீஸ் ரெஸ்ட்டோர் பண்ணியாச்சி.’
 நான் செயலற்றவன் ஆன கதையை   சாதாரணமாக சொல்லுகிறார் லைன்மேன் பாஸ்கரன்..
அந்த ஒரு நொடி நிலைகுலைந்து போனேன்.
இனி சீத்தாராம அய்யரை.
கோவில் கோபுரங்களில் நின்றிருக்கும் பொம்மைகள் தாங்கள்தாம் கோபுரத்தையே தாங்குவதாக எண்ணிக்கொள்ளுமாம். எண்ணிப்பார்க்கும் போதே நினைவுகள் கசந்தது. அரசு இயக்கம் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல.  இன்னொருவன் ,   இன்னும் ஒருவன் .
’ வெள்ளிக்கெழம காத்தால ரெண்டுமூட்ட அரிசியோடு அய்யரோட கட்டவண்டி கெழக்க போனத பாத்தேன்.’
நினைவுகளை கலைத்தான் ஹெல்பர் வீரப்பன்.
கோப்புகளை கவிழ்த்துவைத்துவிட்டு அறையை இழுத்துசாத்தினேன். வெட்டாற்று பாலத்தை கடந்து பத்தடி நடந்திருப்பேன்.
‘ என்னா சார் ஒங்கள தூக்கிட்டானுவளாம் ! ‘
உள்ளூர் ஒன்றியத்தலைவர் தருமையா வியப்போடு குறுக்கிட்டார். இந்தபணிக்கு வருமுன்னே இந்த மாதிரியான குட்டித்தலைவர்களைச் சொல்லித்தான் எச்சரித்தார்கள் இருந்தபோதும் என்னுடைய  வித்தியாசமான அணுகுமுறையால் எதிர்பார்த்த விபரீதம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.  ஓரளவு மதிப்பும் மரியாதையும் ஏர்ப்பட்டிருந்தது.
‘அப்டி இல்லீங்க..’
‘ நீங்கதான் சார்  எங்களுக்கு வேணும். நாளைக்கே அந்த ஆடர பீஸ் பீசா கிழிச்சிட்டு வர்ரேன்.’
உரத்தகுரலில் பேசினார் ஒன்றியம் . அந்தவலு அவருக்கு  இருப்பதாக பேசக்கேட்டிருக்கிறேன்.
‘ ரொம்ப நன்றிங்க  !  இனி அதற்கு அவசியம் இல்லீங்க.’
அவரைக்கடந்து சென்றேன்.  தருமையா  வியப்போடு திரும்பிப்பார்த்தார்.


நன்றி  !   திண்ணை    முதல்   இணைய இதழ்    10 மார்ச் 2014 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !