(விலகிப்போனவனின் ஒரு கடிதம் )
வில்லவன் கோதை
10 மார்ச் 2014
அன்புள்ள மணிமொழிக்கு
நீ நிரம்ப நேசிக்கிற ராஜாதான் எழுதுகிறேன்.
ஆமாம் ! ராசியில்லா ராஜாவேதான்.
கைபேசிகளின் சாம்ராஜியத்தில் பூஜ்யமாகிப்போன கடிதமா என்று யோசிக்கிறாயா. நேருக்கு
நேராக போசுகிற திறனும் பேசுதற்கான சொற்களும்
சிக்காத போது இன்னும் நமக்கு மிச்சமிருப்பது இந்த கடிதங்கள்தாம். கடிதங்களுக்கிருக்கும்
மகத்தான சக்தி இன்னும் அழிந்து போய் விட்டதாக நான் கருதவில்லை.
மணிமொழி ..
இந்த கடிதம் உன் கைகளுக்கு கிடைக்கிறபோது இந்ததேசத்தின் இன்னொரு மூலைக்கு நான்
நகர்ந்திருப்பேன். அதிர்ச்சியுற வேண்டாம். ஆழ்ந்து ஆய்ந்தெடுத்த முடிவுதான். கடந்த
காலங்களைப்போல அவசரப்பட்டு விடவில்லை .ஒருவேளை என்னை கண்டறிய நீயோ வேறு எவரோ
முயற்சித்தால் . . . வேண்டாம் ! அது தோல்வியில்தான் முடியக்கூடும்.
மணிமொழி !
நான் வாழ்ந்த வளர்ந்த வடச்சேரி வலிவலம்
கிராமத்தை ஒட்டிய ஒரு பகுதிதான். வலிவலமும் வடச்சேரியும் அரசு நிர்வாக வரைபடத்தில் இன்றும் ஒன்றாகத்தான்
இருக்கிறது.
இருந்தாலும் இரண்டும் எப்போதுமே இரு வேறு துருவங்கள் என்பதை
மறந்துவிடமுடியாது.வலிவலம் கிராமத்தின் கிழக்கு எல்லையோரம் உதிர்ந்து கிடப்பது வடச்சேரி. இரண்டுக்கும் இடையே பௌதீக அளவில்
அப்படியொன்றும் வெகுதூரமில்லை. ஆனால் இந்த மண்ணின் மறபு வழியில் ஏற்பட்டுவிட்ட
மேற் சாதி கீழ்சாதி என்ற சூத்திரத்தில் சிக்குண்டு தீண்டத்தகாத தூரத்தில் அமைந்து விட்டது. காலங்காலமாக மேற்சாதி
கீழ்ச்சாதி என்று பழகிப்போன கட்டமைப்பில் ஒருவருக்கொருவர் எப்போதும் விலகியே நின்றனர்.
குடிப்பதற்கும் குளிப்பதற்கும்கூட இவர்களுக்கு இருவேறு நீர்நிலைகள் தனித்தனியாகத்தான் இருந்தது.
இருந்தபோதும் அவர்கள் தங்கள் தங்கள் உயரங்களை வெகு நன்றாகவே
உணர்ந்திருந்தனர்.
பெரும்பாலும் அவரவர் வாழ்க்கை அவரவர் போக்கில்தான் போனது.
மேலத்தெரு ஈஸ்வரன் கோயிலில் வடச்சேரி மக்கள் நுழைய அரசு
ஒத்துக்கொண்டாலும் இவர்கள் அந்த ஈஸ்வரனை
நேருக்கு நேர் காண என்றைக்குமே முயர்ச்சித்ததில்லை.. மேலத்தெரு வாசிகள்
வரிந்துகட்டிக்கொண்டு இவர்களை தடுக்க நேர்ந்ததுமில்லை..
அதனால் வலிவலத்தின் சட்டம் ஒழுங்குக்கு இதுவரை எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லை.
ஆனால் என்ன ஆயிற்று இந்த வலிவலத்துக்கு..
இந்த இரண்டு மாதத்தில் நடக்கக்கூடாத எத்தனையோ காரியங்கள் நடந்து விட்டது.
எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் பதருகிறது.
இத்தனைக்கும் நீயும் நானும்தான் காரணமா. என்ன வேடிக்கை. வயதுக்கு வந்த ஒரு ஆணும் வயதுக்கு வந்த ஒரு பெண்ணும் இந்த மண்ணில் காதல்
புரிதல் ஆண்டுக்கு ஆண்டு காதல் தினங்கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் ஒரு
மாபாதகச் செயலா.
ஆனால் அப்படியல்லவா எடுத்துக்கொண்டார்கள்.
இந்த நாடு விடுதலையுற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐந்துக்குமேற்பட்ட
ஐந்தாண்டுத்திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றிவிட்டோம். கல்வியிலும்
பொருளாதாரத்திலும்கூட கணிசமாக முன்னேறிவிட்டதாக சொல்கிறார்கள். பின் எப்படி இந்த
வெறியாட்டம்..
நாம் பெற்ற கல்வி ஒரு நல்ல சமூகத்துக்கு வேண்டிய பண்புகளை
போதிக்கத்தவறிற்றா.
இந்த கொலைவெறிக்கு இரண்டு இளம் கன்றுகள் வேலிதாண்டி வாழ முயற்சித்தது மட்டுமே
காரணமா..
ச்சே ! மனுஷனாக பிறந்ததற்கு ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டாமா.
மணிமொழி ..
ரெண்டு வருஷத்துக்கு முன்னால் கல்லூரி இலக்கியவிழா கூட்டமொன்றில் உன்னை நான்
சந்தித்தபோது நீ வலிவலம் மேலத்தெரு பாபுத்தேவர் மகளென்று அறிந்திருக்கவில்லை. பின்னால்
நாமிருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிய நேர்ந்தபோது நம்மிடையே
எதார்த்தமாக துளிர் விட்ட நேசம் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது.
வடச்சேரியைச் சேர்ந்த மிகமிக
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த என்மேல் உனக்கேற்பட்டுவிட்ட நேசம் நமது கிராமத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்ற உறவு என்பதை நான் நன்கு அறிவேன். இதன் விளைவுகள்
பெரும் விபரீதமாகக்கூடும் என்பதையும் அப்போதே உணர்ந்திருந்தேன்.
இருந்தபோதும் நம்மிடையே ஏற்பட்டுவிட்ட இந்த காதலுணர்வு அதுமட்டுமல்லாமல் என்
இளம்வயது அறியாமை இவையெல்லாம் என் கண்களை
மறைத்துவிட்டது. தனிப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட ஒரு காதலுக்கு இந்த ஜாதீய
பிசாசுகள் ஒரு வளர்ந்து வரும் நல்ல கிராமத்தையே கசக்கி சின்னா பின்னமாக்கி விட்டனவே
..
நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது..
நாளுக்கு நாள் நம்மிடையே மலர்ந்த நேசம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தபோது வலிவலம் விழித்துக்கொண்டது.
இத்தனை நாளாக நீருபூத்த நெருப்பாக மூடிக்கிடந்த வர்கவேறுபாடு , ஜாதீய வெறி தலைதூக்கித்தாண்டவமாட நாம் காரணமாகி விட்டோம்.
நடந்தது என்ன.
சம்பிரதாயங்களின் வார்ப்படங்களாக இறுகிப்போயிருந்த இந்த மக்களின்
ஆழ்மனங்கள் சீண்டப்பட்டபோது வலிவலம் எத்தனை கொலை வெறிக்கு உள்ளாயிற்று.
இந்த மக்களிடையே உள்ளுக்குள் எத்தனை குரோதம். எத்தனை வன்மம்.
அடுத்தடுத்த கணமே அருவாளும்
கடப்பாறையும் அல்லவா அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன .பொழுது சாய்ந்தால்
சாராயக்கடையில் சங்கமம் ஆகும் மேலத்தெரு தங்கப்ப நாய்க்கரும் வடச்சேரி காத்தானும்
இன்று கோடாலியும் கடப்பாரையுமாக எதிர் கொள்ளவேண்டிய ஒரு சூழல்.
குடிக்கும் நீரிலேயே விஷத்தை கலந்தார்கள் என்றால் எப்படியொரு அகங்காரம். .
மேலத்தெருவிலும் வடச்சேரியிலும் பத்துக்குமேற்பட்ட பலிகள் நடந்ததே.
முப்பதுக்கு மேற்பட்டோர் இருக்கும் இடம் இல்லாமல் போயிற்றே..ஒரு மாதத்துக்கு மேலாக
வலிவலம் கிராமமே இரவு பகலாக போலீசாரின் பிடியில் அல்லவா முடங்கிக்கிடக்கிறது.
குழந்தை குட்டிகள் கசங்கிபோயிற்றே.ஆடு மாடுகள் சிதைந்து எம் மக்களுக்கு எத்தனை
நஷ்டம்.
. ஒன்றை நினைத்துப்பார்க்கிறேன்.
சமூக நீதி பேசுகின்ற அரசியல் இயக்கங்கள் அத்தனையுமே இன்னும் சாதிகளை மையமாக
கொண்டே இயங்குகிறது. வர்க பேதம் களைய வேறு வழியில்லாமல் அரசு கூட இன்னும் ஜாதீய
விபரங்களை பதிவு செய்வதை தவிர்த்துவிடவில்லை. அலுவலகங்களிலும் தொழிற்கூடங்களிலும்
இணைந்து இயங்கும் நாம் சுயவாழ்வென்று வரும்போது தத்தம் சாதிகளைத்தானே தேடி
ஓடுகிறோம்.
.
இலக்கியம் பேசுபவர்களும் சமூக நெறியாளர்களும் ஏன் ஆளுகிற போலீசும்கூட நம்
காதலுக்கு துணையாக நிற்கலாம். ஊடகங்கள் நாலுபேரை வைத்து நமக்கு ஆதரவாக நான்கு
நாட்களுக்கு தொடர் விவாதங்கள் நிகழ்த்தலாம்.புது கவிஞர்கள் அச்சு ஊடகங்களில் மெய்யுருக
கவி புனையலாம்.நவீன ஓவியர்கள் நம் அவலங்களை வண்ணத்தில் வடித்து காட்சிகளில்
வைக்கலாம்.
ஆனால் இவையெல்லாம் போதுமா. .
ஒரு முறை பாவேந்தரிடம் பாரதி சொன்னானாம்
‘ சுப்பு !
எனக்கொரு ஆசை. எனக்குத்தெரியாமல்
என்மகள் ஒரு அரிஜன இளைஞனை இழுத்துக்கொண்டு ஓடி ரகசியதிருமணம் செய்து கொண்ட தகவல்
எனக்கு வரவேண்டும்.
நான் சந்தோஷமாக உயர்ந்து கர்ஜிக்கவேண்டும். ஐயரு மகளே அரிஜனனோட சம்பந்தம் வைச்சிட்டாரேண்ணு எல்லா சாதியினரும்
மாறமாட்டாங்களா.. ’
ஐயா பாரதி உன் ஆசை நிறைவேற நாங்கள் இன்னும் எத்தனை தலைமுறைகளை கடந்தாக
வேண்டும்..இந்த இனம் எத்தனை பலிகளை கொடுத்தாகவேண்டும்.
தாங்காதய்யா .
. தாங்காது !
உன் ரத்தம் என் ரெத்தம் எல்லாம் ஒன்றுதான் என்று இந்த சமூகம் உணர்வதர்க்கு
கல்வி உதவும் என்றிருந்தோம்.ஆனால் சாதி
மதங்களுக்கு சாமரம் வீசுகிற பணியைத்தான் இன்றைய கல்வி செய்திருக்கிறது.
காலம் தொடர்ந்து மாறும்போது மட்டுமே காதல் ஜெயிக்கும்.
மணிமொழி !
ஒருவேளை நீயும் நானும் பொருநகரங்களில் இருந்திருப்போமேயானால் நம்முடைய காதல்
நம் குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சனையாகியிருக்கக்கூடும். இப்படியொரு தேசிய
முக்கியத்துவத்தை இன்று வலிவலம் கிராமம் பெற்றிருக்க முடியாது.
காலங்காலமாக சாதீய கட்டமைப்புகளை சுமந்து வளைந்து கொடுக்காமல் உடையக்கூடிய வார்ப்புகளாக
வாழ்ந்த உன் தந்தையை நீ இழந்திருக்க வேண்டாம்.. தான் பெற்ற மகள் தன்கண்ணெதிறே நெடுங்காலமாக
அனைத்திலும் காலடியில் கிடந்த ஒரு சமூகத்தில் சம்பந்தம் கொள்வதா..
. .என்று எல்லாருக்கும் இயல்பாக ஏற்படுகிற
மனப்பான்மைதானே அந்த உயர்ந்த மனிதரை தற்கொலைக்கு தூண்டியது .அவருக்கேற்பட்ட
அந்த வலி அவரவர்க்கு வரும்போதுதான் உணர்வர். அது கடந்தகாலங்களில் ஊட்டி வளர்த்த சிந்தனை.
காலஓட்டங்கள் மட்டுமே அழிக்ககூடியது.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து தன் உதிரத்தை உணவாக ஊட்டி வளர்த்த ஒரு
தாயின் கனவுகளை உதறிவிட்டு ஒரு நொடியில் வெகுதூரம் ஒடுவது எத்தனை துரோகம்.
மரபுகளின் குழிகளில் வார்ப்பாக வார்கப்பட்ட உன் தந்தை வெட்கமுற்று
கூனிக்குறுகி தற்கொலை செய்து கொண்ட அவலம்
தலைவிரி கோலமாக கையறு நிலையில் நின்ற உன்தாயின் தோற்றம்
இவை இரண்டுமே என்னை இன்று வெகுதூரம் விரட்டிற்று.. அவர்களை நினைத்த ஒவ்வொரு
கணமும் என் முகங்களில் யாரோ மாறிமாறி
அறைவதை உணர்கிறேன்.
இத்தனையையும் இழந்து விட்டு இந்த காதலில் நாம் எதை சாதிக்கப்போகிறோம்.
மை டியர் பிரண்ட்
நான் என்ன செய்யவேண்டுமென்பதை முடிவெடுத்து விட்டேன். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
கடந்து போனவற்றை கனவென்று கருதி மறந்துவிடு.
நாம் பெற்றிருக்கும் மனிதப்பிறவி பல்வேறு பக்கங்களை உள்ளடக்கியது. அதில் கல்வி
ஒரு முழுமையான வாழ்க்கைக்கு தேவையான பயிற்சி
! காதல் ஒரு நல்ல குடும்பத்துக்கான முயற்சி.!
இவை எல்லாமே மனிதவாழ்வில் ஒரு சில அத்தியாயங்கள்தான்.. அவை வாழும் நிலைகளை பெரும்பாலும் வசீகரமாக்கக்கூடும்.
ஆனால் அவையே வழ்க்கையின் ஆதார சூத்திரமல்ல. அவை இல்லாமலும் பயனுள்ள வாழ்வை
வாழலாம். காதலையும் கல்வியையும் கடந்து நீதி நேர்மை அன்பு பண்பு பாசம் பரிவு என்று
இன்னும் எத்தனையோ உண்டு. இந்த இளம் வயதில் அவைகளெல்லாம் நம்
கண்களுக்குப்புலப்படுவதேயில்லை. ஏன் நீ நேசிக்கும் ராஜாவே அதில் ஒரு அங்கம்தான்..
எல்லாமே நமக்கு நாமே சீராக வாழ ஏற்படுத்திக்கொண்ட வழிமுறைகள்தாம்.. ஒன்றுக்காக
நேசித்த இன்னொன்றை பிடிவாதமாக பலியிடுவது பண்பல்ல.
மணிமொழி !
நீ அடிக்கடி
சொல்லுவாயே
இந்த கிராமத்தின் சீரழிவுக்கு இனி அரசை நம்பி பயனில்லை.நான் டாக்டராகி இந்த வலிவலம் கிராமத்தை சீரழிக்கும் நோய் நொடிகளை அடியோடு ஒழிப்பதுதான் எனக்குள்ள ஆசை
அந்த நோக்கம் மட்டுமே இப்போது உனக்காக
காத்திருக்கிறது. அதுதான் மணிமொழி. . . கண்களை
மட்டுமல்ல.. மனதையும் துடைத்துக்கொண்டு காத்திருக்கும் காரியங்களை கவனி. தடைபட்ட
கல்வியில் முயன்று மருத்துவராகும் உன் அறிய கனவை நிஜமாக்கு.எஞ்சியிருக்கும் உன் தாயை
காப்பாற்று.
உன் மருத்துவத்தில் இந்த வர்கபேதம் ஒருபோதும் குறுக்கே வராது. சாதிபேதம் எந்த சங்கடத்தையும் தராது. வலிவலத்தோடு வடச்சேரி மக்களும் விலகி வாழட்டும்.
உன் மருத்துவத்தின் நெடி என் நாசிகளுக்கு எட்டும்போது நான் வருவேன்.
இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.
மணிமொழி நீ என்னை மறந்துவிடு !
அவ்ளவுதான் .
. .
ராஜா
நெடுந்தொலைவிலிருந்து . . .
________________________________________________________
கடிதச்சுவை என்ற வரியையில் வல்லமை இணைய இதழில் பிரசுரமானது . நன்றி !
இடுகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !