புதன், மார்ச் 21, 2012

காவல் கோட்டம் குத்து..வெட்டு.! ( மூன்று )

எழுத்தாளர் சு.வெங்கடேசன்
நெஞ்சை நெருடிய நாவல் ! 
   வில்லவன் கோதை

பத்தாம் நூற்றாண்டுத் துவக்கத்திலேயே பாண்டியப் பேரரசில் வாரிசுகளின் அரியணை யுத்தம் உரத்தகுரலில் ஒலித்தது.தொடர்ந்து ஆட்சிக்கு வந்த  வலுவற்ற அரசுகள் மக்கள் நலனில் நாட்டமற்று சுகபோகங்களில் மூழ்கித்திளைத்தன.  மதுரை மண் முகமதியர்களின் ஆதிக்கத்துக்கு அடிபணிய நேரிட்டது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சுல்தான்களின் ஆட்சி பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் குமார கம்பணன் காலத்தில் விஜயநகர பேரரசுக்கு கைமாறியது.
வேங்கட மலைகளுக்கு அப்பால் பரவிக்கிடந்த தெலுங்கு ஜாதி இந்த தமிழ் மண்ணில் ஆங்காங்கே வேர்பற்றி முளைத்ததெப்படி. 
தெலுங்கு மொழி பேசும் வீரபாண்டிய கட்டபொம்முவின் பூர்வீகம் என்னவாக இருக்கக்கூடும்.
அன்று தெற்கு நோக்கி நகர்ந்து வந்த நாயக்கர்கள் எப்படி இந்த மண்ணின் பெரும்பகுதியில் கால் பரப்பி நின்றார்கள்
ஏறதாழ  200 ஆண்டுகளுக்கு மேலாக வராகக்கொடி கூடல் நகரில் பட்டொளி வீசி பறந்திட  இந்த மண்ணின் மைந்தர்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டார்கள் 
மாறிமாறி சுரண்டிக்கொழுத்த கொள்ளையர்கள் நடுவில் மதுரை மக்கள் எப்படி வாழ்க்கையை நகர்த்தினார்கள்.
இன குல வழக்கங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்ட ஒரு சமூகம் ஆங்கிலேயர் வருகையில் எப்படி ஒரு நவீன கட்டமைப்புக்குள் ஒடுங்க நேரிட்டது 
அத்தனையும் ஒன்று விடாமல் விரிந்த பார்வையில் பேசுகிறது எழுத்தாளர் சு வெங்கடேசனின் காவல் கோட்டம்.
பள்ளிப்படிப்பில் தொழிற் கல்வியை விரும்பி எடுத்ததால் விருப்பத்துக்குரிய  வரலாற்று பாடங்கள் படிக்ககிடைக்காமற் போயிற்று.அன்னாளில் என்னுடைய வரலாற்று அறிவு பிற்கால சேர சோழ பாண்டியரைத்தாண்டி இந்தியதேசிய விடுதலைப் போராட்டத்தோடு முடிந்து  போயிற்று.
நான் நினைவு தெரிந்து ஓடிவிளையாடிய கிராமமே ஒரு பத்து பதினைந்து தெலுங்கு நிலக்கிழார்களின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவர்களின் இடப்பெயர்ச்சிக்கான மூலகாரணங்கள் எதுவும் எனக்கு புரிந்ததில்லை..
பின்னாளில் எழுத்தையும் பேச்சையும் நேசிக்கத் துவங்கியபோது பள்ளிக்கு வெளியே கிடைத்த வாசிப்பு என் ஐயங்களுக்கான விடையை தொட்டுக்காட்டியது.சோழனின் பாண்டியனின் மண்ணில் வராகக்கொடி பறந்த கதை புரியத்தொடங்கிற்று.நாயக்க மன்னர்களின் பண்பாடு சமூக காவல் பரவசத்துக்குள்ளாக்கிற்று.
கூடல் மாநகரம் என் கனவுக்கோட்டையாயிற்று.
என்னுடைய பணிக்காலங்களில் பத்தாண்டு இடைவெளியில் இரண்டுமுறை மதுரை நகரில் வாழுகின்ற பேறு பெற்றவன். .அப்போதெல்லாம் நா பார்த்தசாரதி எழுதிய மதுரையின்  அடையாளங்களை அசலோடு ஒவ்வொரு கணமும் ஒப்பீடு செய்து மகிழ்ந்ததுண்டு.
இந்த நாவலும் மதுரையைப்பற்றி பேசுகிறது என்று அறிந்தபோது என் நினைவுகள் பின்னோக்கி பயணித்து பூரித்தது. மதுரைக்கே மையமாக நிற்கும் மீனாட்சி திருக்கோயில்
கிழக்கே கப்பலில் வந்திறங்கிய ப்ளாக் பர்ன் விளக்குத்தூண் 
தெற்கே ஆவனியாபுரமும் ஜெய்கிந்தபுரமும்.
மேற்கே..பசுமலை ..திருப்பரங்குன்றம்
வடக்கே அடையாளமாய் நிற்கும் சிம்மக்கல்லும் அதனைத் தாண்டி குறுக்கே ஓடும் வைகை நதி... அப்ரம் அழகர் கோயில்
இன்னும் நான் வாழ்ந்த கே.புதூர்.. 
இப்படி மனதைக்கொள்ளை கொண்ட எத்தனையெத்தனை இடங்கள்...அவற்றின் கடந்தகால வடிவங்கள் எப்படி இருந்திருக்கக்கூடும் காண ஆர்வமுற்றேன்.
அதோடு மட்டுமின்றி இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவித்தபோது இணையங்களிலும் ஊடகங்களிலும் ஏற்பட்டிருந்த சர்ச்சை என் ஆர்வத்தை அளவிற்கதிகமாக உயர்த்திற்று. ஆயிரத்துக்கு அதிகமான பக்கங்களும் அதில் அச்சிடப்பட்டிருந்த விலையும் தயக்கத்தை தந்தது உண்மை.
இந்த நாவலை நான் படிக்கத்துவங்கியபோது என்னுடைய வாசிப்புத்திறன் பெரிதும் வற்றிப்போயிருந்தது. இருந்தபோதும் இந்த நூலை வாசிக்க வேண்டுமென்ற விருப்பம் அதிகரித்தே இருந்தது. அறுபதுகளில் ஆயிரம் பக்கங்கள் தாண்டிய புதினங்களை மிக சர்வசாதாரணமாக ஒரே நாளில் வாசித்து முடிக்கும் பெண்மணிகளை தஞ்சை மாவட்டத்தில் பார்த்திருக்கிறேன்.ஆனால் அன்று அவர்களுக்கு திரைப்படங்களைத்தவி பொழுதைக்கழிக்கும் வேறெந்த வழிகளும் இருந்ததில்லை.
கைபேசிகளும் தொலைக்காட்சிகளும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியபோது மக்களின் வாசிப்பு ரசனை உதிரத்துவங்கியது.  நீண்ட தொடர்களை வாசிப்பதற்கும் பக்கத்தில் நிற்கும் சகமனிதர்களை மதிப்பதற்கும் இன்று நேரமற்று போயிற்று. இந்த ஆயிரம் பக்கங்களைத்தாண்டிய புத்தகத்தை ஆர்வமுடன் வாங்கியவரில் முழுதும் வாசித்திருப்பவர்கள் மிகச்சிலரே இருக்ககூடும். அந்த அளவுக்கு மனிதனின் வாசிப்புத்திறனை புசூழல்கள் தாக்கியிருக்கின்றன.
இணையத்தில் சிலர் எச்சரித்த்து போல இந்த புத்தகம் அத்தனை சுவாரஸ்யமற்றதல்ல.இந்த நூலை எழுத வெங்கடேசனுக்கு அவர் மொழி துணை செய்யவில்லை என்று எப்படி எழுதினார்கள் என்று எனக்குத்தோன்றவில்லை.
பல்வேறு பணிகளுக்கிடையே தினமும் சிலமணிகள் படித்து  பதினோரு  நாட்களில் இந்த புதினத்தை முழுமையாக வாசித்தேன்.ஒரு நல்ல படைப்போ ஒரு நல்ல இசையோ  முடிந்தபின்னும் நினைவுகள் தொடர்ந்து அசைபோடுவதை உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்வுகளை இந்த புதினத்திலும் கிடைக்கப்பெற்றேன்.
இந்த புதினத்தின் நாயகன் நாயகி என்று எவரையும் நான் காணவில்லை. இந்த புதினத்துக்கான அடித்தளமாக இருப்பது மதுரை மண்ணே.அதுமட்டுமே இந்த நாவல் முழுதும் பவி முன்னும் பின்னும் நீண்டு கிடக்கிறது.
அந்த மண்ணுக்காக நிகழ்ந்த போரும் மத்தியில் வாழ்ந்த மக்களின் வாழ்வுமே இந்த நாவலில் பேசப்படுகின்றன. பதிமூன்றாம்  நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரைமண்ணின் வரலாற்றில் குறுக்கிடுகின்ற இந்த புதினம் தொடர்ந்து அறுநூறு ஆண்டுகள் வரலாற்றோடு பயணித்து பத்தொன்பதாம் நூற்றாண்டு முனையில் மிகுந்த கர்வத்தோடு விலகுகிறது.
வெங்கடேசன் இதற்கு முன்னால் அய்ந்தாறு கவிதைப்புத்தகங்கள் எழுதியிருப்பதாக கேள்விப்பட்டேன்.அந்த அற்புதமான அநுபவம் இந்த நூலுக்கு அடித்தளமாக நிற்பதை உணருகிறேன். எவரும் இனி எழுத விட்டுவைக்காத தகவல்கள் , நல்ல எழுத்துக்கு தேவையான பிசிரற்ற தெளிந்த மொழிப்பிரயோகம் இந்த புதினத்தில் கிடைக்கிறது.
முன்னதாக இரண்டோரு ஆய்வு நூற்களையும் படைத்த அநுபவம் இந்த வரலாற்று நூலுக்கு தூணாக நிற்பதை பார்கிறேன்.
அளவற்ற அரியப்படாத சொற்கள் நாவல் முழுதும் இரைந்து கிடக்கின்றன.அதுமட்டுமல்லாமல் அன்று வழக்கிலிருந்து இன்று மறக்கப்பட்ட  பல்வேறு சொற்கள் நாவலில் இடம்பெற்று வரலாற்று காலத்துக்கு வாசகனை கொண்டு செல்கிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் சுல்தான்களின் ஆட்சிக்கு முடிவுகட்டிய விஜயநகர அரசன் குமார கம்பணன் வராகக்கொடியை ஏற்றிவைத்தான்.அவனைத் தொடர்ந்து பதிமூன்று நாயக்க அரசர்கள் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆட்சிபுரிந்து மதுரை மக்களோடு கலந்து நின்றனர்.மதுரை மக்கள் நினைவில் வாழும் விஸ்வநாத நாயக்கர் ஆட்சியில் தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு துவக்கத்தில் மீண்டும் முகமதிய சந்தாசாகிப்பிடம் சிக்கி விஷம் குடித்த அரசி மீனாட்சி வரை ஏறதாழ 250 பக்கங்கள் நாயக்கர் பெருமையை காவல் கோட்டம் பேசுகிறது. நாயக்கர் வரலாறு இப்போது பரந்து படிக்க கிடைத்தாலும் காவல் கோட்டம் ரசித்து வாசிக்கக்கூடிய சரித்திர புத்தகமாகவே இருக்கிறது.
மதுரை மண்ணோடும் நாயக்க மன்னர்களோடும் பின்னிகிடந்த கள்ளர்களின் பூர்வீகத்தையும் இயல்பாகவே அவர்கள் கொண்டிருந்த அசாத்தியமான திறமைகளையும் வியக்க வியக்க பேசுகிறது. களவையும் காவலையும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் அழகு ஆசிரியருக்கிற மொழித்திறனையே வெளிப்படுத்துகிறது.
நாயக்கர்களின் வீழ்ச்சிக்குபிறகு ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற கட்டபொம்முவின் தீரத்தையும் கடைசிவரை போரிட்டு மடிந்த ஊமத்துரையையும் காவல் கோட்டம் நினைவு கூறுகிறது.
அதுமட்டுமின்றி ஆங்கில அரசுக்கு உட்பட்டபோது மாறிய சமூக கட்டமைப்புகள் பற்றியும் இந்த நாவல் சுவையோடு வர்ணிக்கிறது..மதுரை நகர் பிரிட்டீஷ் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வருவதையும் முதன்முதலாக புகைவண்டி மதுரைக்குள் பிரவேசிப்பதையும் நகைச்சுவையோடு எழுதி தனக்கு அதுவும் வரும் என்பதை வெங்கடேசன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மதுரையின் அடையாளங்களாக பேசப்படும் ஒவ்வொன்றின் பூர்வீகத்தையும் மறக்காமல் பேசுகிறது காவல் கோட்டம். மதுரை நகரை ஆண்டாண்டு காலமாக பிணைத்திருந்த தாதனூர் விலங்கை பிரிட்டீஷ் கும்பனி அளப்பரிய விலை கொடுத்து உடைத்தெரிந்த்தை விரிவாக பேசி  நாவல் முடிவுறுகிறது.வலிமைமிக்க குற்றப்பரம்பரை ஆயுத்ததை கையில் எடுத்த கும்பனி தாதனூர் பரம்பரைக்கு முற்றுப்புள்ளி இடுகிறது. 
களவெல்லாம் இப்பிடி கதையா போச்சேப்பா....என்ற பெருமூச்சுடன் காவல் கோட்டம் மறைகிறது. ஆனால் விடுதலை வேள்வி தொடர்கிறது.
இந்த புதினம் எதையும் விட்டு வைத்ததாக தோன்றவில்லை.
அது ஒரு பேக்காலமப்பா என்று ஆர்பாட்டமாக அமணமலை அடிவாரத்தில் கதைசொல்லத்துவங்கும் கள்ளர் இன பெரியாம்ள மாயாண்டியின் கதைகளைவிட வெங்கடேசன் அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
இந்த நாவலில் வெங்கடேசனை பேச ஏராளமான இடங்களை காண்கிறேன். இந்த நூலை கடந்தபோது என் நினைவில் வெங்கடேசனை பற்றி ஏற்பட்டிருந்த அபிப்பிராயம் உச்சத்தை எட்டியது. சகல திசைகளிலும் அவர் பெற்றிருந்த பட்டறிவு வியக்கத்தக்கதாகவே இருந்தது. மதுரை மண்ணை எட்டிநின்று பார்த்தவர்களும் வாழ்ந்து நேசித்தவர்களும் ஒருமுறை முழுமையாக வாசிக்கவேண்டும்.மதுரையைத்தாண்டி வாழ்ந்தவர்களுக்கும் துணுக்குகளை வாசித்து பழகியவர்களுக்கும் வேண்டுமானால் சிரமமும் சலிப்பும் தோன்றக்கூடும்.அது வெங்கடேசனின் குற்றமல்ல. 
----------------------------------------- 
பின் என்னதான் குறையாக படுகிறது.
ஒருபிரமிக்கதக்க வரலாற்றுக்கதையை கருப்பண்ணன் நினைவு மீண்டபோது தலையைத்தூக்கிப்பார்க்க முயன்றான் என்று ஒரு சாதாரண சிறுகதையைப்போல துவக்கியிருக்க வேண்டாம் .
விஜயநகர மன்னன் குமார கம்பணனின் பார்வையில் மதுரை நகரம் ஒரு குறுகிய நிலப்பரப்பாக காணப்பட்டாலும் மதுரையையும் மதுரையை சூழ்ந்து கிடக்கும் கதைக்களங்களையும் திசைகளை சொல்லி வாசகன் மனதில் ஆழ்ந்த அடித்தளத்தை உருவாக்கியிருக்கலாம்.கூடல் நகரை அறியதவர்களுக்கு கதையோடு பயணிக்க உதவியிருக்கும். நூலுக்கு பின்னணியில் இணைத்திருக்கும் வரைபடங்கள் படிக்கத்தக்கதாய் இல்லை.
இந்த நூலில் பரவிக்கிடக்கும் புரவிகளைப்போல இந்த புதினம் காலங்களைத் தாண்டித்தாண்டி செல்கிறது. பல இடங்களில்
நூறு வருடங்களைக்கூட சர்வசாதாரணமாக எகிறிசெல்கிறது..
நம்மில் கிடைத்த வரலாறு நிச்சயமற்ற நிலையில் இந்த நாவலில் குதிரைகள் யானைகள் எண்ணிக்கைகள் போல வரலாற்று நகர்வுகள் ஒவ்வொன்றையும் உறுதியாக அடித்து பேசுவது வெங்கடேசனுக்கு பலமா  பலவீனமா...தெரியவில்லை !
ஒரு கற்பனை புதினத்தைப்பொறுத்தவரை எப்படி அமையவேண்டுமென்பதும் எதையெதை எழுதவேண்டுமென்பதும் படைப்பாளியின் உரிமை.மற்றவை வெரும் அபிப்பிராயங்களே. அதே சமயம் வரலாற்றை ஒட்டி எழுதப்படும் புதினங்கள் வரலாறு காக்க விமர்சிக்கப்பட வேண்டியவையே.அந்தவகையில் காவல் கோட்டம் வரலாற்று விலகல்களை மறுஆய்வு செய்ய வேண்டிய நூலே.அப்போதுதான் நாயக்கர் வரலாறும் கள்ளர்கள மபும் ஞாயமாக பதிவு செய்ததாகும்.
அற்புதமான மொழிச் சொற்களை நாவல் முழுதும் கையாண்ட ஆசிரியர் சமீபகாலங்களில் பிரபலமாகி இன்றும் வழக்கில் உள்ள  பெருசு , நோக்காடு , வெண்ணை , வைச்சுகிறேன் , வெளங்குமா போன்ற சொற்களை பயன்படுத்துவானேன். அவை வாசகனை பல நூற்றாண்டுகளிலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்திடாதா.
ஐம்பதுகளில் சொல்லப்பட்ட கதைகள் கதைக்களத்துக்கே கொண்டு சென்ற சூட்சம்ம் இந்த நாவலில் ஏற்படவில்லையே. அமணமலை ஆலமரத்தடியில் அமர்ந்து வெங்கடேசனிடம் கதை கேட்கும் உணர்வே ஏற்படுகிறதே .ஏன்.
.கதை மாந்தர்கள் மூலமே  பினோக்கிய வரலாற்றை சொல்லும் யுத்தி கையாளப்படாததும் குறைவான உரையாடல்களும் ஒரு காரணமாக இருக்கலாமா.. மனதில் கவ்வும்  உரையாடல்கள் மிகுதியாக காணப்பட்டாலும் அதனையுமீறி வெங்கடேசனின் குரலே எழும்பி ஒலிக்கிறது
தேடியெடுத்த வரலாற்று தடையங்களை ஆங்காங்கே அடிக்கட்டையில் குறிப்பிட்டிருக்கலாம்..
ஒரே விதமான போர்முறையையும் தொடர்பற்ற சிறு கதைகளையும் தருவதை தவிர்த்து பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கும்போது புத்தகம் இன்னும் மிகுதியான வாசகர்களை எட்டுமல்லவா. ஒருசில முடிவுற்ற கதைகள் அடுத்த பாராவில் வேறு கதையுடன் துவங்குவது எடிட்டிங்கின் குறைபாடுகள்தானே. 
அத்தியாயங்கள் சீராக பகுக்கப்படாமல் எடிட் செய்வது நவீனமமானது  என்று கருதுகிறீர்களா. 
இவைகள் அனைத்தும் ஒரு பொருட்டே அல்ல. சரி செய்யக்கூடியதுதான்.
மொத்த்த்தில் காவல் கோட்டம் ஒரு நல்ல நூல்தான்.
சாகித்ய அகாதமி சில ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு சுவையான வரலாற்றுப்புத்தகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நிச்சியமாக பெருமை கொள்ளலாம்.
----------------------------------------------
இடுகை 0088

நாயக்கர் வரலாறு சார்ந்த என் நினைவில் நிற்கும் நூல்களை வாசகர்களின் விரிந்த பார்வைக்கு அவ்வப்போது இணைக்கிறேன்.
1 . நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும்.  ஜெகதா.- டிசம்பர் 2007               

7 கருத்துகள்:

  1. thaangalum przhaigalai kalaiya muyarchikkalaamae

    பதிலளிநீக்கு
  2. நன்றி.முயர்ச்சிக்கிறேன்.
    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
  3. எங்களைப் போல நாவலைப் படிக்க முடியாதவர்களுக்கு.. ஒரு முழு நாவலைப் படித்த திருப்தி தருகிறது.. விமர்சனம் அருமை -ரிஷ்வன்

    பதிலளிநீக்கு
  4. ayya vanakkangal pala
    thangal Indian Army il pani arriyavara; appadi yendral, ennai therindirukka vayppu undu

    anbudan
    Lt Col (Retd) RVS Mani
    09380370010

    பதிலளிநீக்கு
  5. அன்பார்ந்த சேலம் மணிக்கு
    உங்கள் பார்வைக்கு நன்றி. என்னைப்பற்றிய குறிப்புரை வலைப்பூவின் இறுதியில் இடம் பெற்றிருக்கிறது.எனது தம்பி ராஜேந்திரன் பாராசூட் பிரிவில் ஏறதாழ பதிநான்கு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி ( ஒப்பந்தம் முடிவுறும் தருவாயில் ) 76 வாக்கில் ஒரு விபத்தில் மரணமுற்றான்.நான் பணியாற்றியது தமிழ் நாடு மின் வாரியம் 68 - 04
    பாண்டியன்ஜி

    பதிலளிநீக்கு
  6. சுரேஷுக்கு
    வாசிப்பதற்கான விருப்பமிருந்தால் வாசிப்பது எவருக்கும் ஒரு பொருட்டே இல்லை.

    பதிலளிநீக்கு
  7. காவல் கோட்டம் வாசித்தேன், உங்களின் கருத்துக்களில் பலவற்றோடு எனக்கு உடன்பாடு. ஒரு நாவலை வாசித்தபிறகு நமக்குள் அதன் நினைவாக இருக்கும் அப்படிப்பட்ட நாவலின் வரிசையில் காவல் கோட்டம் இருக்கிறது. அதை வாசிக்க வசிக்க என்னுள் எழுந்த எண்ணங்களை அவ்வப்போது எனது ப்ளாக்கில் பதிவு செய்துருக்கிறேன். நேரம் கிடைத்தால் விசிட் செய்யவும் http://nirmalcb.blogspot.com/2012/04/7.html

    பதிலளிநீக்கு

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !