ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

படிப்பும் படிப்பினையும் -- ஒரு சிறுகதை


வில்லவன் கோதை
                                                                       வாங்க தாத்தா க்ரவுண்டுக்கு போவும்
தன்னைவிட சற்று உயரமான கிரிக்கெட் மட்டையை கையில் சுழற்றியவாறே விளையாட்டு திடலுக்கு அழைக்கிறான் எட்டு வயது நிரம்பாத கௌதம். அவனைவிட சற்று உயரமான சிபியும் ரமேஷும் அந்த மஞ்சள் வண்ண கிரிக்கெட் பந்தை உயரே மாறி மாறி வீசி பிடித்தவாறே நடந்து கொண்டிருந்தனர். படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை இரண்டாக மடித்து இருக்கையில் வைத்து விட்டு எழுந்து நடக்கிறேன்..
விடுமுறைக்கு  வந்த குழந்தைகளை காலையிலும் மாலையிலும் விளையாடிக்கழிக்க சற்று நேரம் பக்கத்திலிருந்த விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இதுபோன்ற  மைதானமும் இதற்கென்ற அவகாசமும் அவர்கள் இருந்த இடங்களில் இல்லாமலிருந்தது.இங்கே குறுக்கும் நெடுக்குமாக நீண்டு கிடந்த மைதானம் அவர்களுக்கு வியப்பூட்டுவதாக இருந்திருக்கக்கூடும்.
ஐந்து வயது குழந்தைகள் முதல் இருபத்தய்ந்து வயது இளைஞர்கள் வரை அத்தனை பேரும் தனித் தனி குழுக்களாக பிரிந்து ஒரே விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாகள். இப்போதெல்லாம் பச்சிளம் பாலகர் முதல் பல்போன கிழங்கள் வரை ரசித்துப்பார்க்கிற கிரிக்கெட் ஆட்டம்தான் அது.
பொழுது சாயும்வரை விளையாடிக்களித்த குழந்தைகள் வீடு திரும்பும்போது இந்த தலைமுறை மறந்துபோன பல்வேறு குணங்களை பிஞ்சு நெஞ்சங்களில் பதியுமாறு சொல்லி வருவேன்.அவர்களும் மிகுந்த ஆர்வமுடன் கேள்விகள் எழுப்பி பின் தொடர்வதுண்டு. குழந்தைகள் விளையாட்டின்றி இருக்கும் பெரும்பாலான நேரங்களை நான் இதர்க்கென்றே பயன்படுத்திக் கொண்டேன்.
 ------------------------  - -  -  --

 தாத்தா.. இண்ணைக்கு என்ன சொல்லப்போறீங்க...பேப்பர்ல என்னா சேதி.. கௌதம் மடியில் படுத்தவாறே கதை கேட்க தயாரானான். வழக்கம்  போல குழந்தைகள் இரவு சாபபாடு முடிந்து படுக்கையறையில் சூழ்ந்து கொண்டார்கள்
காலையில் செய்தித்தாளில் என் மனதை நெகிழவைத்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது.பெரும்பாலும் மனித நேயம் சார்ந்த நிகழ்வுகளை  குழந்தைகள் நினைவில் பதிந்திட நான் தவறுவதேயில்லை.
இரண்டு  மூன்று நாட்களுக்கு முன் ஆந்திராவைச்சார்ந்த ஒரு பெண்மணி  ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளையும் பத்து சவரன் தங்க நகைகளையும் சென்னை வேளாச்சேரி ஆட்டோ ஒன்றில்  தவற விட்டிருக்கிறார்.அதை எடுத்த ஆட்டோ ட்ரைவர் சென்னை போலீசார் உதவியுடன் அந்த நகையையும் பணத்தையும் அந்த பெண்மணியிடம் முழுமையாக சேர்ப்பித்தாராம்.அந்த ஆட்டோ ஓட்டுனரை பாராட்டி ஆந்திர போலீசாரும் அந்த பெண்மணியும் வெகுமதி வழங்கினார்களாம்.
எவ்ளவு நேர்மையான மனிதர் அந்த ட்ரைவர்...
என் மனதில் நின்ற அந்த நிகழ்வை குழந்தைகளிடம் பகிர்கிறேன்.
எங்க ஊர்ல ஆட்டோ ட்ரைவர்ன்னாலே மோசம்ண்ணு சொல்வாங்க. இவர் எவ்ளவு நல்லவர் தாத்தா.
சிறுவன் சிபியும் ரமேஷும் ஒன்றாக பேசுகிறார்கள். 
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் ஒவ்வொரு இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்..தவறு செய்பவர்களை தவிர்த்து அவர்கள் பின்புலத்தை தாக்குவதே நமக்கு என்றைக்கும் வாடிக்கை.
நானும் அந்த ஆட்டோ ட்ரைவரின் நற்குணத்தை குழந்தைகள் மனதில் சொறுக முயற்சிக்கிறேன்.
அடுத்த நாள் காலை குழந்தைகளுடன் நீண்ட நடைபயிர்ச்சிக்குப் பின்னர் இரண்டு கட்டு சிறு கீரையுடன் வீடு திரும்புகிறோம்.
உமாம்மா..தாத்தாவ பாரும்மா. வடை கடையில ஆளுக்கு ஒரு வட சாப்ட்டோம்மா..அப்ரம் சிபியும் ரமேஷும் ரெண்டு வட எடுத்துகிட்டாங்க..அத கவனிக்காம நாலு வடைக்கு மட்டும் காசை எடுத்துகிட்டான் கடைகாரன்..தாத்தா திரும்பிப்போயி அந்த ரெண்டு வடைக்கும் காசை கொடுத்திட்டு வர்ராங்க..சுத்த மக்கு உமாம்மா. காந்திண்ணு நெனப்பு..
முன்னதாக ஓடிவந்த கௌதம் மூச்சிறைக்க முறையிட்டான்.
வியப்போடு திரும்பிப்பாற்கிறேன்.
ஒவ்வொரு நாளும் நிழ்வுகளை ஒப்பிட்டு மனிதநேயத்தை பிஞ்சு நெஞ்சங்களில் செதுக்க முயலுகிறேன்.இருந்த போதும் சுற்றுப்புறமும் சூழலும் என்னை விஞ்சி நிற்பதை காண்கிறேன்.
நான் இன்னும் இன்னும்...  முயற்சிக்கவேண்டுமென்றே கருதுகிறேன்.

 -----------------------------------------------------------
இடுகை 0089