(காத்திருந்தவனும் நேற்று வந்தவனும் )
நடிகையொருத்தியை விரும்பிக் காதலித்து நிச்சியமும் செய்த தொழிலதிபர் மதன் நடிகையின் இயல்பான கலைக்குடும்பச் சூழல்களைக் காண நேரும் போது பெரிதும் குழப்பமும் அய்யமும் அடைகிறான்.இதனையறிந்த நடிகை மனம் சிதறி சில நாட்கள் தனித்திருக்க விரும்பி வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற் கொள்ளுகிறாள்.இச்செயலால் தொழிலதிபருக்கு மேலும் அய்யம் வலுப்பெற வருங்கால மனைவியையே வேவு பாற்க துப்பறியும் வல்லுநர் மேஜர் ராஜமன்னாரை பின் தொடரச் செய்கிறான். வேவு பார்க்க பின்தொடர்ந்த ராஜாமன்னார் நடிகையின் வாழ்விலும் நிரந்தரமாக பின்தொடர நேர்ந்ததெப்படி என்று விவரிப்பதே மன்மதன் அம்பு
------------------------------------------------------------ தொழிலதிபர் மதனகுமாராக வரும் மாதவன், நடிகை அம்புஜாவாக தோன்றும் த்ரிஷா ,நடிகையை வேவு பாற்க பின்தொடரும் மேஜர் ராஜாமன்னாராக வரும் கமல்,த்ரிஷாவின் தோழி தீபாவாக வரும் சங்கீதா - இவர்களைச் சுற்றியே திரைப்படம் நகர்கிறது.
திரைப்படத்தின் துவக்கம் நடிகர் சூரியாவின் தடாலடி ஆட்டத்துடன் மிகுந்த சிரத்தையோடு படமாக்கப்பட்டிருக்கிறது. வெள்ளித்திரையில் ஒரு சில மணித்துளிகளே இடம் பெரும் ஒரு காட்சியை பதிவு செய்ய ஒரு கூட்டமே திரண்டு எத்தனை கட்டுப்பாட்டுடனும் எத்தனை பரபரப்புடன் இயங்கவேண்டியிருக்கிறது என்பதை பிரமிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.
படம் துவங்கி எறத்தாழ இருபது நிமிடங்களுக்குப் பிறகே திரையில் காலடிஎடுத்துவைக்கும் உலகநாயகனின் அறிமுகமும் முன்னதாக கொடைக்கானல் மலையுச்சியில் நிகழும் கார் விபத்தையும் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.அது போலவே கமலின தீரா துயரத்துக்கு காரணமான கோர விபத்தை பின்னோட்டமாக வெளிப்படுத்தி இயக்குநர் ரவிக்குமார் மனதில் இடம் பிடிக்கிறார். இதை விடுத்து திரைப்படத்தின் இதர பகுதிகள் பெரும்பாலும் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனின் கேமரா பார்த்த திசையிலேயே ஊர்ந்து ஊர்ந்து செல்லுகிறது. பெரும்பாலான காட்சிகள் அய்ரோப்பிய தேசத்தின் இட்டாலி,ரோம்,பார்சிலோனியா,வெனீஸ் போன்ற பெரு நகரங்களிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.
மாதவன்,த்ரிஷா,கமல்,சங்கீதா அத்தனைபேரும் தங்களுக்கிட்ட பணியை சிறப்புரவே செய்திருக்கின்றனர்.மற்ற துணைப்பாத்திரங்கள் தங்கள் பங்கை சிறப்புர செய்தாலும் அவையனைத்தும் கூடுதல் சேர்க்கையாகவே தோன்றுகிறது.மாதவனின் நடிப்பு கமலின்இதர படங்களின் நகைச்சுவை நடிப்பையே மிஞ்சி நிற்கிறது.நடிகையாகத் தோன்றும் த்ரிஷாவின் நடிப்பு இயல்பாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது. தன்னுடைய குரலையே இத்திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக அறிய நேர்ந்தது. இனியும்கூட தொடரலாம் என்றே நினைக்கிறேன். சங்கீதாவின் நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி காணப்படுகிறது. நடிகைகளின் நடிப்பில் மட்டுமின்றி தோற்றத்திலும் முதிர்ச்சி காணமுடிகிறதே, ஒரு வேளை ஒப்பனையின் குறைபாடாக இருக்கலாமோ. இந்த படத்தைப் பொருத்தவரையில் உலக நாயகனின் நடிப்பில் நல்ல மாற்றத்தக் காணமுடிகிறது.மிக மிக இயல்பான நடிப்பு.வழக்கமான மிகு நடிப்பைத் தவிர்த்து இயல்பாக செய்திருப்பது மிகவும் மனதை ஈர்ப்பதாக இருக்கிறது. நீலவானம் என்ற பாடலின் இசையும் அதற்கென அமைக்கப் பெற்ற யுத்தியும் மனதைக் கவ்வி இழுக்கிறது. ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனுக்கு நல்ல வருங்காலம் காத்திருப்பதை காண முடிகிறது. இருந்த போதிலும் இயக்குநர் ரவிகுமாரை முழுமையாக காண முடியாற் போனது துரதிஷ்டம்தான்.ஏறத்தாழ முப்பது கோடிக்கு மேல் செலவழித்து அன்னிய மண்ணிலும் பிரமிக்கத்தக்க கப்பற்தளத்திலும் படமாக்கப் பெற்ற இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா கடைசி வரை அணிந்துவரும் குட்டைப் பாவடையை விட மிக மிகச் சிறியதாகவே இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. மெல்லிய இழையாக ஓடும் இத்திரைக் கதையை மேலும் மேலும் இழுத்து இறுதியில் ஏதோ அவசரம் கருதி திடீரென்று முடித்து விட்டதாகவே தோன்றுகிறது.
கமலின் துயரத்துக்கு தலையாய காரணமான கொடைக்கானல் கோர விபத்து மாதவன் த்ரிஷா ஊடலினாலேயே நிகழ்ந்தது என்ற ஒன்றைத்தவிற திரைக்கதையில் மனதில் நிற்கும் மையக்கருத்து வேறு எதுவுமில்லை என்றே சொல்லவேண்டும்.திரைவசனத்திலும் ஒன்றிரண்டு உரையாடல்களைத் தவிற மற்றவை அனைத்தும் மூன்றாம் தரமே.திரைப்படத்தின் பெயருக்கான காரணத்தைப் போலவே திரைப்படத்தின் பின்பகுதி அனைத்தும் நகைச்சுவை என்ற பெயரில் அபத்தமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற உரையாடல்களை வைத்துக்கொண்டு சென்னை சபாக்களில் அமெச்சூர் நாடகம் போடலாமே தவிற ஒரு முழுமையான வெற்றி படத்தை உருவாக்க உதவாது என்பதை அய்ம்பது ஆண்டுகால அனுபவம் மிக்க கமல் ஏன் உணராமற் போனார் என்பது புரியவில்லை.அன்னிய தேசங்களின் கண்கொள்ளா காட்சிகளை நம்பி எடுக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் நட்டமின்றி ஓடினாலும் ஒரு டாக்குமென்ட்ரியின் தகுதியையே பெறக்கூடும் என்பதை ஏன் உணரவில்லை..படம் முழுதும் குட்டைப்பாவாடையோடு த்ரிஷா வலம் வந்தாலும் விரசம் வெளிப்படவில்லை என்பதை குறிப்பிடத்தான் வேண்டும்.
இன்றைய மக்களின் ரசனை பெரிதும் குறைந்தே காணப்படுகிறது.பணம் பதவி இவற்றைத் தவிர்த்து மற்றெந்த விஷயங்களிலும் எதிர்பார்ப்பு குறைவாகவே இருக்கிறது.சமரசம் செய்து கொள்வதில் முன்னிலையே வகிக்கிறார்கள்.அவர்களை எண்ணி இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வரலாம். போதுமான லாபமும் ஈட்டலாம். ஆனால் முழுமையான திரைப்பட வரிசையில் அவைகள் இடம் பெறா.
வெருமனே பொழுதைக்கழிக்க விரும்புவோர் அனைவரும் ஒருமுறை பார்க்கலாம்.
---------------------------------
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து .....
இடுகை 0035
---------------------------------
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து .....
இடுகை 0035
it is very nice to read .
பதிலளிநீக்குsibi