பாண்டியன்ஜி
இடுகை 0049
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று...- என்ற
நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகளுக்கேற்ப தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகுந்த கெடு பிடிகளுக்கிடையே முழுதும் அமைதியாகவே நடந்தேறியிருக்கிறது. ஒரே நாளில் ஒரே நேரத்தில் துவங்கி ஒரே சமயத்தில் முடிந்த வாக்குப்பதிவில் இரண்டு மூன்று வாக்குச்சாவடிகளில் மட்டுமே விரும்பத்தகாதவை நிகழ்ந்திருக்கிறது. ஏறத்தாழ மூன்றரை கோடிக்கு மேலானஆண் வாக்காளர்களும் பெண் வாக்காளர்களும் பெருவாரியாகத் திரண்டு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு சில வாக்குச்சாவடிகளில் தாங்கள் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற எண்ணத்தை படிவம் 49 ஓ - வில் பதிவு செய்ததன் மூலம் இந்த நாட்டு மக்கள் வெரும் ஆட்டு அல்லது மாட்டு மந்தைகளோ அல்ல என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.
இப்போது இருக்கிற ஆட்சி மேலும் தொடர வேண்டுமென்றோ அல்லது இதைவிட மோசமான எந்த ஆட்சி வந்தாலும் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை என்றும் கருதியிருக்கலாம். அல்லது பெருமளவில் இரைக்கப்பட்ட பணத்துக்கும் பொருளுக்கும் வஞ்சகம் செய்யாமல் வாக்களித்தும் இருக்கலாம். தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான மிரட்டல்களும் அரசியல் தலைவர்களின் சூராவளி பரப்புரைகளும் தொலைக்காட்சிகளின் திரும்பத்திரும்ப நினைவூட்டல்களும் கூட வாக்குப்பதிவு 80 விழுக்காட்டை கடக்க உதவியிருக்கக்கூடும். எது எப்படியிருந்தாலும் வாக்களிக்கவேண்டுமென்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். எந்தவொரு சமரசத்துக்கும் இடமளிக்காமல் தேர்தல் ஆணையம் ஆற்றிய பணி வரண்டு கிடந்த இந்திய ஜனநாயகப்பயிருக்கு ஓரளவு நீர் வார்க்கப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன்.
ஒவ்வொரு அரசு இலாக்காகளிலும் நேர்மையான அரசை ஆக்குவதற்கும் இடையிலே குறுக்கிடுகிற தடைகளை தகர்த்திட தேவையான ஆயுதங்கள் சட்ட வடிவில் நிரம்பவே வழங்கப்பட்டிருக்கின்றன. எனினும் நேர்மையும் திறனும் அற்றவர்கள் இருக்கைகளில் அதிகமாக இருப்பதனாலேயே அரசின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாகவும் தடுமாற்றத்துக்குள்ளானதாகவும் இருந்திருக்கின்றன. அதிலும் பெரும்பாலான அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆயுதங்களின் கூர்மையை ( சட்டங்களை ) அறியாமலேயே காலத்தை ஓட்டியிருக்கின்றனர்.
இந்த தேர்தலைப் பொருத்தவரை இந்திய தேர்தல் ஆணையம் பெரும்பாலான ஆயுதங்களை (விதிகளை ) சுழற்றிப் பார்த்திருக்கிறது எனபதை மறுப்பதற்கில்லை. ஒருசில சமயங்களில் நாட்டு ஆயுதங்களைக்கூட
(விதிகளைத்தாண்டி ) எடுத்திருக்கலாம். பாவிகளுடன் அப்பாவிகளும் பாதிக்கப் பட்டிருக்கக்கூடும்.
மாறுபட்ட மனநிலைகளக் கொண்ட பல்வேறு அரசு ஊழியர்களை ஈடுபடுத்தி ஒரேநாளில் ஒரே சமயத்தில் இப்படியொரு வேள்வியை நிகழ்த்தும் போது இது போன்ற குறைகள் ...மிக மிக சாதாரணமானதுதான்.
அதே சமயத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பணியில் மக்களால் தேர்வு செய்யப்பெற்ற ஜனநாயகஅரசின் செயல்பாடுகளிலும் சாதாரண மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை
உரிமைகளிலும் வரம்பு மீறி மூக்கை நுழைத்திருக்கிறது என்றவொரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
பருவ காலங்கள் தொடங்கி விட்டதால் அதற்கேற்ப அரசின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் செயல்களால் தடைபட்டிருப்பதையும் எதிர்பாராத இயற்கையின் சீற்றங்கள் ஏற்படும்போது யார் பொருப்பேர்ப்பது என்ற அநுபவ அய்யங்களை தமிழக முதல்வர் எழுப்பியிருக்கிறார்.
போர்க்கால நடவடிக்கை போன்று அரசின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது முற்றிலும் சரியானதுதான்.அதே நேரத்தில் அசாதாரண நிலைகளுக்கு யார் பொருப்பேற்க முடியும்
என்பதையும் சிந்திக்க வேண்டும். மேலும் ஆணையத்தின் முடிவுகள் நேர்மையற்றபோது விளைவுகள் எத்தகயது. இது போன்ற வினாக்களுக்கு இப்போது அவசியம் ஏற்படவில்லை என்றாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது நாட்டின் உயர்ந்த அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் வரம்புகளை வரையரை செய்யவேண்டும்.
இடுகை 0049
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !